தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அடையாளத்தை இறுகப் பேணி தற்காத்துக்கொள்ளப் போராடுவது மற்றொரு வகை. முந்தைய எழுத்திற்கு மிகச்சிறந்த பிரதிநிதி அ. முத்துலிங்கம். இரண்டாம் போக்கை பிரதிநிதிப்படுத்தும் எழுத்தே மிகக் குறைவு. தெளிவத்தை ஜோசப்பை முன்னோடியாக கொண்டால், சீ. முத்துசாமி இவ்வரிசையில் அவருக்கு அடுத்த இடத்தை அடைபவர்.
2006 ஆம் ஆண்டு மலேசியாவில் நிகழ்ந்த நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற நாவல் இது. முத்துசாமி 1970 களிலிருந்தே எழுதி வந்தாலும், ஏறத்தாழ இருபது வருடங்கள் இடைவெளிக்கு பிறகு எழுதிய நாவல். இவ்வகையிலும் கூட தெளிவத்தையுடன் ஒப்புமை உள்ளவரே. அவரும் சில ஆண்டுகள் எழுதாமல் மீண்டும் எழுத வந்தார்.
மண்புழுக்கள் நாவலின் முன்னுரையில் இதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்- “இம்மலை நாட்டில், நம் இனத்தின் வேர்கள் என்பது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ள, ரப்பர் காடுகள் சூழ்ந்த நம் தோட்டப்புறங்கள்தான். அதனைத் துறந்து, நமக்கொரு வரலாறு இல்லை. மிகத் துரிதமாக மாறி வரும் இன்றைய உலகமயமாக்கல் மாயையில் சிக்குண்டு, நமது வேர்கள் மறக்கப்படவும், மறைக்கப்படவும் ஆன சாத்தியங்கள் அனந்தம். ஒரு பொறுப்புள்ள தலைமுறை அதனைப் பதிவு செய்வதன் வழி, அதனைப் பாதுகாப்புடன் அடுத்து வரும் தலைமுறைகளின் கைகளில் கொண்டு சேர்க்க இயலும். அதன் வழி, தன்னை அடையாளம் கண்டுகொள்ளவும், தன் தனித்தன்மையை நிலைநாட்டிக் கொள்ளவும், பன்முகம் கொண்ட நம் சமுதாய அமைப்பில் சுயமிழந்து கரைந்து காணாமல் போய்விடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், ஒரு நூற்றாண்டுக் கால, இந்த வேர்களின் வாழ்வியல் வரலாறு, வரப்போகும் நமது சந்ததியினருக்கு துணைபுரியும் என்பது என் திடமான நம்பிக்கை.”
சீ. முத்துசாமி |
தெளிவத்தையின் படைப்புலகத்துடன் நெருக்கமான தொடர்புடையது முத்துசாமியின் படைப்புலகம். தமிழகத்திலிருந்து பண்ணை அடிமைகளாக ஆங்கிலேய தோட்டங்களுக்கு சென்றவர்கள்தான் இருவரின் கதைமாந்தர்களும். லயம் வீடுகள், ரப்பர் காடுகள், கங்காணிகள், ஆங்கிலேய தொரைகள் என ஏறத்தாழ ஒரே உலகத்தை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆனால் தெளிவத்தைக்கும் முத்துசாமிக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடாக நான் எண்ணுவது தெளிவத்தையிடம் இருக்கும் வருங்காலத்தைப் பற்றிய நேர்மறை நம்பிக்கை மற்றும் கதைகளில் இழையோடும் மெல்லிய அங்கதம். முத்துசாமி இறுக்கமாக இருண்மையைத்தான் காட்டுகிறார். அவருடைய மிக முக்கியமான பலமென்பது எளிய சொற்கள் மூலம் சூழலை காட்சிப்படுத்திவிட முடிகிறது என்பதே. நாவலின் பாதிக்குப் பாதி சூழல் விவரணைகள்தான். அதை மிகச் சிறப்பாகவும் செய்கிறார்.
அறுபது, எழுபதுகளின் மலேசிய ரப்பர் தோட்டத்தை களமாக கொண்டது இந்நாவல். ஒப்பந்தக் கூலிகளாக (சஞ்சி கூலிகள் எனும் சொல்லையே முத்துசாமி பயன்படுத்துகிறார்) ரப்பர் தோட்டங்களில் உழலும் பூர்வீக தமிழர்களைப் பற்றிய கதை. தொர, மேலாளர், கங்காணி, தண்டல் என உருவாகி நிலைபெற்று தொழிலாளிகளைச் சுரண்டும் அமைப்பை, அதன் ஒடுக்குமுறைகளை விவரிக்கிறது. பிழைக்கச் சென்ற அந்நிய தேசத்தில்கூட மேலகுச்சி கீழகுச்சி என சாதி ரீதியாக பிரிந்து கிடப்பதையும் சொல்கிறது. நாவலின் ஒரு பகுதியில் வெளிப்படையாக வன்னிய கவுண்டருக்கும் வெள்ளாள கவுண்டருக்கும் இடையிலான அரசியலைப் பதிவு செய்கிறார். மலம் அல்லும் வாசக்கூட்டி அம்மாசியின் கதையை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார். அந்நிய சூழலில் மக்கள் எதிர்கொண்ட இடர்களை இவரது எழுத்து பதிவு செய்கிறது. மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஒருபுறம், ஓல குப்பான், ராஜநாகம் என விஷப் பிராணிகள் மறுபுறம், காட்டுப்பன்றிகள், அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள், பெருமழை, ராணுவங்கள்,போர்கள் என தொடர்ந்து நசுக்கப்பட்டச் சித்திரத்தை அளிக்கிறது. இத்தனைக்கும் நடுவில் திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று,கோவில் திருவிழாக்கள் கொண்டாடி, கூத்து நாடகங்களைப் பார்த்து, ஒன்றாகச் சேர்ந்து ஆற்றில் மீன் பிடித்து என தங்களுக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள்.
நாவலில் ஆட்டுக்காரர் நினைவின் ஊடாக அவரின் தந்தையின் வாழ்வு சொல்லப்படுகிறது. நாட்டில் தருமபுரிக்கு அருகே விட்டு வந்த முதல் மனைவியின் கதை போல அநேகமாக பல கதைகளை நாம் கேட்டிருப்போம். புட்டுக்காரர் ஈரோட்டுக்கு அருகிருந்து ஆங்கிலேயர்களை நம்பிப் பிழைக்க வந்த கதையைச் சொல்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் மலேயாவை வென்று சில ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிருந்த அடக்குமுறையையும் சூழலையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறார். சியாம் தாத்தா ஜப்பான் காரர்கள் தமிழகக் கூலிகளை அள்ளிச்சென்று இருப்புப் பாதை போடுவதற்காகச் செய்த கொடுமைகளை பதிவு செய்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் சிங்காரம் இப்பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்நாவலில் வெகு சில பக்கங்களையே இவை ஆக்கிரமித்தாலும் முக்கியமான வரலாற்று பதிவாக எஞ்சுகிறது. நாவலின் இறுதியில் கம்யூனிச எழுச்சி பற்றிய கனவையும் சொல்கிறது. ஜின் பண்டி (காட்டுப் பன்றி) கடி, செம்போத்து குருவிக் கூடுக்கான தேடல், ராக்காசி கொசுக் கடி, கொள்ளிவாய் பிசாசின் நடமாட்டம், சாமி கெடா என அம்மக்களின் அன்றாட வாழ்வின் சிறு சிறு சுவாரசியங்களை நாவல் பதிவு செய்கிறது.
நாவலில் அனேக பாத்திரங்கள் இருந்தாலும் கூட ஆட்டுக்கார சின்னக்கருப்பன், அவருடைய மகள் சின்னப்புள்ள, அவளை வன்புணர்ந்து கொல்லும் கசியடி முனியப்பன், புட்டுக்கார கிழவன் போன்ற சில பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. நாவல் ஆட்டுக்காரனின் கதையைச் சொல்வதாகத்தான் துவங்குகிறது. புட்டுக்காரர், சியாம் தாத்தா, மாட்டுக்காரர், பழனியம்மா, கசியடி முனியப்பன் என பல கதைசொல்லிகள் நாவலுக்குள் வருகிறார்கள். அனைவரின் குரலும் ஒன்று போலவே ஒலிக்கிறது. ஒரே அத்தியாயத்தில் பல்வேறு கதை சொல்லிகள் வருகிறார்கள். கவனமாக வாசிக்கவில்லை என்றால் இந்த மாற்றம் பிடிபடாமல் போகக்கூடும்.
நாவல் இரண்டு பாத்திரங்களின் எழுச்சி வீழ்ச்சி வழியாக பயணிக்கிறது. ஆட்டுக்காரன் இழந்த காதலைப் பற்றி ஏக்கத்துடன் இருந்தாலும்கூட எளிமையான இனிமையான வாழ்க்கை வாழ்பவனாகவே இருக்கிறான். மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும், கோட்டில் நிறைய ‘ஈத்தும் பேத்துமாக’ ஆடுகளும் என நிம்மதியாக வாழ்கிறான். தந்தையின் சாதிப் பிடிவாதத்தால் தற்கொலை செய்துகொண்டு ஆவியாகச் சுற்றும் தங்கை அஞ்சலையைப் பற்றிய பகுதிகள், தந்தையுடன் சேர்ந்து ரெட்டமல காட்டுக்குள் சென்று ஆற்றின் ஊற்றை கண்டு வருதல், புதுத்துணி எடுக்க அவருடன் பட்டணத்திற்குச் செல்லுதல் என அவனுடைய பார்வையிலேயே நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. கங்காணியிடம் கசியடி முனியப்பன் மற்றும் அவனுடைய கோஷ்டி ஆங்கிலேயர்களின் நடனத்தை ஒளிந்து பார்த்ததாக போட்டுக் கொடுக்கிறான். முனியப்பன் சிறுவனாக இருந்தபோது அவனுடைய தந்தை அவனை வதைக்கிறார். தாயின் அரவணைப்பில் வளர்கிறான். ஆனால் தந்தையின் கொடுமை தாங்காமல் அவள் இறக்கிறாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கொள்கிறான். ஆடுகளுக்கு கசியடிக்கும்போது (காயடித்தல்) அவை அலறும் ஒலி அவனை இன்புறச் செய்கிறது. அதையே தொழிலாக செய்கிறான். இளம் மனைவியைக்கூட எப்போதும் கடித்து குதறுகிறான். ஆட்டுக்காரனை பழிவாங்க அவனது பதினைந்து வயது மகளான சின்னப்புள்ளயை வன்புணர்ந்து கொல்கிறான். அதற்காக சிறை செல்கிறான். சிறையில் சீன கம்யுனிச கேப்டன் ஒருவனோடு நட்பு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்குப்பின் அவர்களோடு சேர்ந்து சிறையிலிருந்து தப்பி அவனை மிதித்து அவமதித்த டன்லப் தொரையை சுட்டுக் கொல்கிறான். அவனுடைய துணிவின் பொருட்டு நாவலின் முடிவில் பெருவீரனாக புகழப்படுகிறான். மகளை இழந்து, ஒரு காலும் முடமாகி, மனைவியின் அன்பையும் இழந்து, வெறுமை சூழ்ந்த பயனற்ற மனிதனாக உணர்கிறான் ஆட்டுக்காரன். இரண்டாம் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறாள். நாவலின் இறுதியில் தன்னை மாய்த்துக் கொள்கிறான். ஆட்டுக்காரர் எளிய நேர்மறை பாத்திரம்தான், ஆனால் கசியடி முனியப்பன் போன்ற ஒரு சிக்கலான பாத்திர வார்ப்பைக் கையாண்டிருப்பது முத்துசாமியின் படைப்பூக்கத்திற்கு சான்று என்றே சொல்லலாம்.
நாவலின் துவக்கத்தில் கித்தா காட்டில் கண்ட ராஜநாகத்தைப் பற்றிய விவரணை வருகிறது. ராஜ நாகத்தின் அச்சுறுத்தும் வசீகரம், அதன் விரிந்த பத்தி, மினுங்கும் தோல். என அவன் ஒரு முறை கண்ட அனுபவத்தை விவரிக்கிறான் பாம்பு பாலா. “ராஜநாகம் மாதிரி ஒரு புள்ள பொறக்கணும்னு ரொம்ப நாளா ஆசண்ணே... இந்தத் தோட்டத்துல அப்படியொரு மனுஷன் பொறக்கணும்ணே... அவனைப் பாத்த வாக்குல இந்த வெள்ளத்தோலு தொர, இங்கிலீஷ் பேசுற கிராணிங்க, நம்மள வேலக்காட்டுல ஓட ஓட தொரத்துர கங்காணிங்க அத்தன பெரும் சிலுவாரோட ஒண்ணுக்குப் போவனும்ணே”. நாவலின் இறுதியில் கசியடி முனியப்பன் தொரையைச் சுட்டுக் கொன்றதும் அவனைப் பற்றி ஊரார் பேசிக் கொள்கிறார்கள். “நம்ம மலக்காடுல சுத்துற ராஜநாகம்டா அவன்... ரெட்ட மல காட்டுல சுத்தற புலிடா அவன்... சாமிக்கு நாலு கெடா வெட்டி நாளைக்கே விருந்து போடணும்டா”. மண்புழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்திலிருந்து நூறு வருடங்களில் அபூர்வமாக பத்தி விரித்து எழுகிறது ஒரு ராஜநாகம்.
நாவலில் சில கவனமின்மைகள் காலப்பிழைகள் சட்டெனப் புலப்படுகின்றன. நாவலின் துவக்கத்தில் ஆட்டுக்காரர் சாலபலத்தானை மரியாதையுடன் அணுகுகிறார். சாலபலத்தான் மூத்தவர் போலவும் ஆட்டுக்காரர் இளையவர் போலவும் தோற்றம் கொண்டுள்ள உரையாடல்கள் நாவலின் இறுதியில் தலைகீழாகிறது. ஆட்டுக்காரரின் தந்தை மற்றும் கசியடி முனியப்பன் போன்றவர்களின் பாத்திரப்படைப்புகளில் கூட சில ஏற்றத்தாழ்வுகள், குழப்பங்கள் உள்ளன.
நாவல் முழுக்க பேச்சு மொழியில் இருப்பதால் துவக்கத்தில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. மேலும் அத்தியாயங்கள்தோறும் புதிய கதாபாத்திரங்கள் புகுந்து புறப்பட்டு பக்கங்களை நிறைக்கிறார்கள். மண்ணில் மறைந்த தம் மனிதர்களை காலத்துற்கு அப்பால் நிறுவ வேண்டும், அவர்களுடைய வாழ்வை ஆவணப்படுத்தியாக வேண்டும் எனும் ஆவேசத்தோடு இயங்குகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நினைவுச்சரட்டைப் பற்றியபடி செல்வதால் அத்தியாயங்கள் ஒழுங்கின்றி கட்டற்ற நினைவுப்பெருக்காக திகழ்கின்றன. நாவல் என்பதைக் காட்டிலும் நினைவுத் தொகை என கூறலாம்.
சீ. முத்துசாமிக்கு தனது படைப்புலகத்தின் எல்லைகள் புரியாமல் இல்லை. “இன்றைய எனது படைப்புலகம் என்பது, புனைவுக்குள் ஆங்காங்கே கலையின் தெறிப்புகளைக் கொண்டு வரும் சிறு முயற்சிகளே. இச்சிறு முயற்சியிலும், கவனச் சிதறல் தவிர்க்க இயலாமல் போய், சில வேளைகளில், படைப்பின் முழுமைக்குத் தேவையான பிற உறுப்புகள் முடமாகும் விபத்தும் நேர்ந்து விடுகிறது,” என நாவலின் முன்னுரையில் தெளிவாக எழுதுகிறார்.
பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துற்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” மண்புழுக்கள் கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. வாழ்ந்து மண்ணை வளமாக்கி எவரும் அறியாமல் மண்ணுக்கு உரமாகி சாகின்றன. இந்த ரப்பர் தோட்டங்கள், தேயிலை தோட்டங்கள் என கண்காணா நாடுகளில் ஒப்பந்தக் கூலிகளாக பிழைக்கச் சென்ற மக்களுக்கு அந்நாடேகூட ஒரு பெரும் வெகுமக்கள் சவக்குழிதான் என எனக்குத் தோன்றியது. புழுக்களைப் போல் அடையாளமிழந்து மொத்தமாக மண்ணுக்கடியில் மரித்தவர்களின் சிலரின் நினைவுகளை, வாழ்வின் அடையாளங்களை காலத்துக்கு அப்பால் நிறுத்துவதற்கான முயற்சியே இந்நாவல். அனைத்திற்கும் அப்பால் அம்முயற்சியில் முத்துசாமி வெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதினை பெரும் எழுத்தாளர் சீ. முத்துச்சாமி அவர்களுக்கு வணக்கங்கள்.
மண்புழுக்கள்
தமிழினி வெளியீடு
-சுகி
No comments:
Post a Comment