அனோஜன் பாலகிருஷ்ணன் பற்றி பதாகையில் சுனில் கிருஷ்ணன் எழுதிய விமர்சனம் மற்றும் எடுத்த பேட்டி மூலமாக முதல் முறை அறிந்தேன். அதற்கு முன்னரே ஜெயமோகன் தளத்தில் அவரது படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் படித்திருந்தாலும் சுனில் கிருஷ்ணன் எழுதிய அறிமுகம் வழியாகத்தான் அனோஜனின் கதைகள் பற்றி ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது. புதுக்குரல்கள் எனும் தொடரின் வழியாகத் தெரிந்த அவரது கதையுலகம் கதைகளைப் படிப்பதன் வழி பெரியதாகத் தொடங்கியது. “சதைகள்” அவரது முதல் தொகுப்பு. பதாகை பேட்டியில் அவரது ரெண்டாவது தொகுப்பான “பச்சை நரம்பு” சிறுகதையின் வாசலைத் தட்டுவதற்கானத் தனிப்பட்ட குரலை உடையது எனக் குறிப்பிட்டார்.
சதைகள் தொகுப்பில் பெரும்பாலானக் கதைகள் ஒரேமாதிரியானக் கட்டமைப்பில் அடங்காதவை. ஒரு அறிமுக எழுத்தாளரின் கரடுமுரடான முயற்சிகள் என்றே அதைச் சொல்லலாம். அனோஜனும் அப்படித்தான் அதைப் பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். என் வாசிப்பில் மிக முதிர்ந்த வகை இலக்கிய எழுத்தைப் போலச் செய்வதை விட இப்படிப்பட்ட தொடக்க எழுத்தில் கலாபூர்வமான கீற்றுகள் ஜோலிக்கும். எவ்விதமான பூடகமும், இலக்கிய வகைமைக்குள் அடக்கவேண்டிய கட்டாயமும் அல்லாது எழுதப்பட்ட ஒரு தொகுப்பாக இதைப் பார்க்கிறேன்.இதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம்.
தொகுப்பின் முதல் கதையான வேறையாக்கள் கதை ஒரு பையனின் முறிந்த காதலைப் பற்றிய விவரணையாகச் சம்பிரதாயமாகத் தொடங்குகிறது. நேரடியாகச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் ஒருவருக்குள்ளும் கிடந்த காதலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் வீட்டில் சொல்ல நேர்கிறது. இருவேறு ஜாதி ஆட்களாக இருப்பதால் சந்திப்பதும் கூடத் தடையாகப்போகும்போது காதலைப் பரிமாறிக்கொள்ளாமலேயே இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சொந்தத்துக்குள் செய்துகொள்ளும் திருமணத்தில் பிறக்கும் குழந்தைக்கு உடல் ஊனத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனும் முடிவை நோக்கிக் கதையை நகர்த்தியிருந்தாலும் கடைசி வரி இதை மேம்பட்ட கதையாக மாற்றியிருக்கிறது. என் பிள்ளை ஊனமாகப் பிறந்துவிட்டது எனும் வரி அதுவரை இல்லாத ஒரு நெருக்கத்தை நமக்கு அவர்களோடு உருவாக்கிவிடுகிறது. எவ்விதமான ஆட்களையும் ஆட்டிப்படைக்கும் மானுட கரிசனத்தைத் தொட்டுக்காட்டும் வரி. வேறையாக்களாக எப்படி ஆவர்?
தலைப்புக் கதையான சதைகள் மிகவும் சம்பிரதாயமான கதைக் கருவைக் கொண்டது. மனதின் சாயலுக்கேற்ப ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை எழும்பும். அதுவே, பெண்களைத் தமக்கையாகவும், தாயாகவும், மனைவியாகவும் நம் மனதைப் பலவிதப் பிளவுகளாக ஆக்கிக்கொண்டு சமூகத்தில் இயங்கச் செய்கிறது. நிர்தாட்சிண்யமாக நாம் அப்பிரிவுகளை ஏற்றுக்கொண்டு, சமூகம் அங்கீகரித்த கோட்டுக்குள் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு குலவிதிக்குக் கட்டுப்படும் அமைப்பின்படி நடப்பவர்கள் ஆகிறோம். சதைகள் நாயகன் நம்மைப் போல சராசரியானவன். வேலை விஷயமாக கொழும்புக்குப் பயணம் செய்பவன் அங்கு ஒரு விபச்சாரியிடம் செல்கிறான். அவனது காம ஆசைக்குக் கட்டுப்படும் பெண்களைத் தேடுவதில் அவனுக்கு எந்த மனத்தடையும் இல்லை. எல்லாரும் செய்வதை தானும் செய்தால் என்ன? அதுவும் அவன் குடும்பத்துக்கு இது தெரியப்போகிறதா எனும் இலேசான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மனதைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ஒரு வேளை இந்த வேலைக்கு வரப்போவதற்கு முன்பே அவனது திட்டமாக இது இருக்கலாம். விபச்சாரி மார்பில் “மாமிசத்தின் மீது பாயும் புலி போல” பாய்கிறான். அவனது வேட்கை தீர்ந்தபின் அறைக்குத் திரும்புகிறான். அதுவரை பெண் உடலினால் எழுச்சி அடைந்தவன் பிற பெண்களைப் பார்த்து சலிப்படைகிறான். பர்ஸை அங்கேயே விட்டு வந்தவன் மீண்டும் அவளது அறைக்குச் செல்லும்போது அவளது முலைக்காம்பில் ஒரு குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டுப்போகிறான். மீண்டும் அறைக்குத் திரும்புபவனின் மனம் சதைகளின் மீதான அசூயையை அடைகிறது. கைவிடப்பட்ட மூதாட்டிகள், பிச்சை எடுப்பவர்கள், தொய்வடைந்த சதைகள் கொண்டவர்கள் என அவனது பார்வை நிஜத்தின் மீது படிகிறது. ஆனால் இதுவும் மாயை தான். பின்னர் வீடு திரும்பும் பயணத்தில் கச்சிதமான உடலைக் கொண்ட பிற சிங்களப் பெண்களைப் பார்த்து மனக்கிளர்ச்சி அடைகிறான். ஆனால் இம்முறை அவனே இந்த மன ஊசலாட்டத்தை வெறுக்கிறான். சதை என்பது வெறும் திரட்சியின் தொகையல்ல. அது எங்கோ மனதின் ஆழத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. கூர்நோக்கியைக் கொண்டு பார்க்கும்போது சதையில் திளைக்கும் வெண்புழுக்கள் அருவருப்பூட்டுபவை. வீட்டுக்குத் திரும்பியபோது அவனது ரெண்டு வயது மகன் முலைப்பால் குடிப்பதைப் பார்க்கிறான். அலைபாயும் சிறுவனின் கண்களை அவன் காண மறுக்கிறான். குற்ற உணர்ச்சியினால் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
இக்கதையுடன் அனோஜனின் அடுத்த தொகுப்பில் வெளியான பச்சை நரம்பு கதையைச் சேர்த்து படிக்க முடியும். மனதின் பலவிதமான போலச்செய்யும் மாறுவேஷங்களை ஆண் பெண் தேக உறவின் பிணைப்பு வழியாகக் காட்டுகிறார். சதை திரட்சி என்பது ஒருவிதத்தில் மனதில் வெறி கொண்டு நிற்கும் காமத்தின் புற உருவம். பசித்தவனுக்குச் சோறு போல இது மனதின் தேவையைப்பூர்த்தி செய்யும். அதனால் மனதின் வேகத்தை உடலுக்குக் கொடுக்கிறது. மனம் பலவித சமாதானங்களின் வழி அந்த வேட்கையைத் தணித்துக்கொள்ளப்பார்க்கிறது. சதைகளின் நாயகன் அடுத்த பயணத்தின் போதும் இதே வரிசையில் நிகழ்வுகளை எவ்விதமான குற்ற உணர்ச்சிக்கும் ஆட்படாமல் செய்துவிடுவான் என்பது எந்த சந்தேகமும் இல்லை. மனிதன் என்றென்றும் ஆட்கொள்ளும் வலை இது. அதனாலேயே அன்றைய புதுமைப்பித்தன் முதல் இன்றைக்கு அனோஜன் வரை எல்லாரும் ஒருமுறையேனும் எழுதித்தீர்க்கும் கருப்பொருளாக இது அமைந்துவிடுகிறது.
ஃபேஸ்புக் காதலி - எளிமையானக் கதையாக இது இருந்தாலும் ஆண் பெண் உறவுகளுக்குப் பின்னால் இருக்கும் உரிமை கோரல், பொறாமை மற்றும் ஆசை பற்றிய நல்லதொரு சித்திரம் அமைந்திருக்கிறது. திருமணமான தம்பதிகள் தங்களது திருமணமாகாத நண்பர்களைச் சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. ஓரிரு வருட திருமண வாழ்விலேயே பல காலங்கள் கடந்து எங்கோ வந்துவிட்ட உணர்வும், சுதந்திரம் மீதான ஏக்கமும் நிறைந்திருக்கும். இதில் பழைய காதலியோட சாட் செய்யத் தொடங்கும் கணவன் மீது பொறாமை கொள்ளும் மனைவியைப் பார்க்கும் அதே வேளையில், அவனது இயல்பான சந்தோஷங்களையும் குறும்புகளையும் விட்டுத்தர இயலா மனைவி இயல்பாக ஒரு செல்லக் கோபத்துடன் தான் உடைத்த மடிக்கணினியைச் சீர் செய்து கொடுப்பதும் மிகவும் நுட்பமான இடம். தங்களுக்குள் இருக்கும் உறவு சாகக்கூடாது என்பதற்காகவும், ஏதோ பறிபோனதாகக் கிடந்த கணவனின் உணர்வுகளை மீட்கவும் அவள் ஒரு எல்லைக் கோட்டைத் தாண்டி அவனை அனுமதிக்க சம்மதிக்கிறாள். நாளை இதுவே கூட அவர்களது உறவுக்குப் பாதகமாக அமையலாம். ஆண் பெண் உறவில் இருக்கும் சிறு சிறு ஊடல்கள் வெயிலில் உணரும் நிழலின் அருமை போல கூடலின் அருமையைக் காட்டிவிடும். இதற்காக பெண் தனது சுதந்திரக்கயிறை சிறிது தளர்த்திக்கொள்ள தயாராவாள் - அவனது குதூகலத்துக்காக அல்ல அது, அவர்களிடையே இருந்த உறவின் உயிர்ப்பை கையகப்படுத்தும் அவளது சுயநலத்தின் காரணமாக. இது ஒரு ரிஸ்கியான பயணம் என்றாலும் கூட பெண் மனம் அந்த ஆழத்தைத் தொட்டுப்பார்க்கத் தயங்குவதில்லை. அனோஜன் இதை மிக சுலபமாகக் கையாண்டுள்ளார்.
அண்ணா - சிறுகதை இந்தத் தொகுப்பில் யுத்த காலத்தை நினைவூட்டும் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. தனது விமர்சனத்தில் சுனில் கிருஷ்ணன் குறிப்பிட்டது போல இலங்கை யுத்தத்தை மையக் கருப்பொருளாகக் கொண்டு எழுதும் பெரும்பாலான இலங்கை எழுத்தாளர்களில் அனோஜன் தனித்து இருக்கிறார். இதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். அவரது வயதும், வளர்ப்பும், ஊரில் பார்த்த சம்பவங்களும் யுத்தத்திலிருந்து விலகலான மனோபாவத்தை அவருக்குத் தந்திருக்கலாம். இந்தக் கதை அப்படிப்பட்ட யூகங்களைத் தகர்க்கிறது. யுத்த காலத்திலேயே நேரடியாக இயங்கி, கேள்விப்படும் கதைகள், பார்த்த சம்பவங்கள் குறித்து எழுதுவது ஒரு வகை. எல்லாம் முடிந்த பிறகு நிதானமாக யோசித்து யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பாதிப்புகளைக் குறித்து எழுதுவது ரெண்டாவது வகை. அனோஜன் இதில் ரெண்டாம் வகையிலான கதையை இதில் எழுதியிருக்கிறார். அண்ணனின் வரவை நோக்கிக் காத்திருக்கும் பெண். தனியாக வெள்ளவத்தையில் வேலை செய்கிறார். கார் ஓட்டுகிறார். கணினி வேலையில் இருக்கிறார். தனது அப்பார்ட்மெண்டிலும் தனியாகத் தங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சித்திரமே கூட பின் யுத்த காலத்திய உணர்வை கனமாக நமக்குக் கடத்திவிடுகிறது. அவள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் அல்ல. அவள் தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டவள். ஏனோ அவளுக்குத் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிய விலகல் இருக்கிறது. அதற்கான காரணங்களை ஒரு பூ இதழைப் பிரிப்பது போல கதாசிரியர் கையாண்டிருக்கிறார். வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு திரும்ப வரும் அண்ணனை வரவேற்கத் தயாராகிறாள். ஐரினுடன் அவள் நடத்தும் உரையாடல் கதையின் மையத்தை நோக்கி நகர்த்துகிறது. தனியாக வாழும் அப்பா ஏன் விலகி இருக்கிறார் எனும் காரணங்கள் அம்மாவின் சாவில் எழுந்த குற்ற உணர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. தன்னால் அம்மா இறக்க நேர்ந்தது எனும் குற்ற உணர்வு. அப்பாவுக்குத் தன்மீது உருவான கோபம் என பல அடுக்குகளில் யுத்தத்தின் கோரம் ஓரிரு பத்திகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றையும் சேர்க்கும் கேள்வி ள்வி- அவள் ஏன் தன் குற்ற உணர்வை பிறர் மீதான கோபமாக மாற்றிக்கொள்ளவில்லை? நம் அன்றாட உலகிலேயே இது சாத்தியமாகும்போது யுத்தத்தில் எதிரிகளை நாமே கற்பனையிலோ, நனவிலோ உருவாக்கிக்கொள்வது சுலபம் தான். இலங்கை யுத்தம் இதை போராளிகளின் மீதான கோபமாக தங்கள் இயலாமைகளை மாற்ற விடவில்லை. ஏனென்றால் அம்மாவைக் கொன்றது பிற அண்ணாமார்கள் தான் என அவள் சொல்லும் இடம் யுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முழுமையான எதிரிகளைச் சுலபமாக உருவாக்கிச் சாடிவிட முடியாது எனும் உண்மையை சட்டெனக் காட்டிவிடுகிறது.
ஜூட் - காதலின் மலர்தல் மற்றும் உதிர்தல் பற்றிய கதை. வேறையாக்கள் கதையைப் போல் மற்றொரு கதை. பலருக்கும் இந்த கதை பிடிக்கும்படியான கூறுமுறை இதில் உள்ளது. ஆனால் வேறையாக்கள் கதையில் இருக்கும் மானுட கரிசனம் இதில் இல்லை என்பது என் வாசிப்பு.
சிவப்புமழை ஒரு விஞ்ஞானக் கதை. 2049ஆம் ஆண்டு நடக்கும் கதை என்றாலும் சம்பவங்களும் அறிவியலும் இன்றைக்கு நாம் அறிந்த உலகைச் சுற்றி இருப்பதால் எதிர்கால சமூகத்தைப் பற்றிக் கூறுவதாக நமக்குக் கடத்தப்படுவதில்லை. அவ்வகையில் இது மேலும் அதிக கற்பனையையும் மொழி மூலம் உருவாக்கும் சித்திரங்களையும் கைக்கொள்ள வேண்டிய நிலையில் எளிமையான சிறு கதையாக நின்றுவிட்டது.
அனோஜனின் கதைகளில் சிங்களவர்களும் தமிழர்களும் மிகச் சகஜமாக வலம் வருகிறார்கள். நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ அல்ல. மனிதர்களாக. சந்தர்ப்பச் சூழ்நிலை அவர்களை வெவ்வேறு தரமான வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது என்றாலும் அவர்களது குழப்பங்களும் மனச்சஞ்சலங்களும் பெருவாரியாக வித்தியாசப்படவில்லை. மனிதர்களாக அவர்களது உணர்வுகளைப் படம் பிடித்திருப்பதில் அனோஜன் வெற்றி பெற்றுள்ளார். சம்பவங்களைக் கதையாக்குவதில் அவருக்கு ஒரு பாணி தெரிகிறது. ரெண்டாவது தொகுப்பான பச்சை நரம்பில் கதைகள் ஒரு கட்டுக்கோப்பான மொழியில் அமைந்திருந்தாலும், முதல் தொகுப்பான சதைகளில் கலைத்தன்மை அதிகம் கூடியுள்ளது. கதைக்கருப்பொருளின் பெறுமதியால் இயல்பாக உருவகங்களும் படிமங்களும் இவரது எழுத்தில் உருவாகிவிடுகிறது. வேறெந்த தன் முனைப்பும் இல்லாது இப்படி உருவாவதை அவர் இலக்கிய நயத்துக்காகக் கைவிடக்கூடாது. எந்த ஒரு பாணிக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், புதுப் புது களங்களில் இயல்பான கற்பனையையும், ஸ்பார்க்கையும் அவர் கைவிடாமல் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.
தலைப்பு - சதைகள்
சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு - புதியசொல், யாழ்ப்பாணம்
puthiyasol@gmail.com
கிடைக்குமிடம் - கிண்டில் அமேசான்.
கிடைக்குமிடம் - கிண்டில் அமேசான்.
No comments:
Post a Comment