கதிர் என்ற தனிமனிதனின் கதை வழி கிழக்கும் மேற்கும் இணையும் காத்திரமான ஒரு படைப்பு ‘கொமோரா’, லட்சுமி சரவணகுமார் அவர்கள் ‘பேர் சொல்ல ஒரு பிள்ளை’, ‘கானகன்’, புதினத்தின் பலமாக இருந்த நிகழ்த்திக் காட்டும் அம்சம் ‘கொமோரா’வில் மெருகேறி இருக்கிறது. பல்வேறு நிலக்காட்சிகளின் ஊடே கதிர் என்ற மையக் கதாப்பாத்திரனின் மனவெளி தெளிவாக பதிவாகி இருக்கிறது. மையக் கதையின் வீச்சும், கிளைக் கதைகள் ஏற்படுத்தும் தாக்கமும் இந்த நாவலை ரத்தமும் சதையும் கொண்ட உயிரோட்டமான படைப்பாக மாற்றுகின்றன. சிறைச்சாலை மன்னிப்பும் நன்னடத்தையும் விற்கப்படும் இடமாகவும், "தொழில்" பழகும் கேந்திரமாகவும் மாறியுள்ள அவலச் சித்திரம் நாவலை வாசிக்கையில் கிடைக்கிறது.
கைவிட்ட தந்தை, அரவணைப்பில்லாத பால்யம், பாலியல் வன்முறைகள், சாதிப் பாகுபாடு, பொருளாதார நெருக்கடி என பல்முனைகளில் அநாதரவான நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு தனிமனிதனின் அகத்தேடலுக்கான விடையாக உள்ளது இந்தப் புதினம். அந்தத் தனிமனிதனை கைவிடாது தொடர்ந்து வழிகாட்டும் உள்ளுறையும் ஆற்றல், தொடர்ந்து அவனுக்கு உதவிக்கொண்டே இருக்கும் சகமனிதர்களின் அன்பும் அரவணைப்பும், ஒன்றை ஒன்று உந்தி புதினத்தின் முடிவில் அவனது தீராத கேள்விகளுக்கு விடை தர முயல்கின்றன. "தகப்பன்" என்ற கருத்தாக்கம், "தகப்பன்" என்கிற ஸ்தானம் மரபின் தொடர்ச்சியாக, காலத்தின் கனிந்த ஞானமாக, அன்பின் வழியாக, வெற்று வீம்பாக, அப்பட்டமான சுயநலமாக என பல பரிமாணங்களில் தன் அடுத்தத் தலைமுறையான கதிர் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
இங்குதான் கிழக்கும் மேற்கும் என்று பரவலாக சொல்லப்படுகிற இருமையை ஒரு வாசகன் பொருத்திப் பார்க்க இயல்கிறது. மேற்கின், ஸ்திரமாக நம்பப்படுகிற தகப்பன் குறித்த ஓடிபஸ் மற்றும் பிராய்ட் கோட்பாடுகள், கிழக்கில் போதுமானவையா என்பது இன்றைய தலைமுறை வாசகன் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. இறுதியில் கதிர் எடுக்கும் முடிவு, ஒரு இருத்தலிய நாடகத்தின் முடிவுப் பகுதியாக, ஒரு நவீன ஐரோப்பிய சினிமாவின் இறுதிக் காட்சியாக முதல் வாசிப்பிற்கு தெரிந்தாலும், ஏற்கனவே மரபின், கூட்டான மனசாட்சியின் நீட்சியாக வழி வழி வந்த நடைமுறை மூலம் எடுக்கப்பட்ட முடிவு என்றே கருத இயல்கிறது. இறுதியில் வெறுப்பின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இறுதிக்குச் சற்று முன் அன்பின் பிரவாகமாக நிகழும் காட்சிகள் இந்த இருமையை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
ஏகாதிபத்தியத்தின் வழி ஏற்பட்ட பூடகமான ஒரு சுயநலப் போக்கும், அது விதைத்த அன்பற்ற, ஊதியக் கணக்கிற்கும் லாபக் கணக்கிற்குமான போட்டியை நிராகரிக்கும் நிலைப்பாடும் கொண்ட ஆளுமையாக இந்த நாவலின் நாயகன் கதிரை நாம் உருவகப்படுத்தலாம், பயணமும் துறவு எண்ணமும் அவன் மனவெளியில் இடையறாது ஓடிக் கொண்டே இருக்கின்றன. கதிரின் வெறுப்பு அவசரத்தினாலோ மடமையினாலோ கையாலாத்தனத்தினாலோ விளைந்த ஒன்று அல்ல, மனிதன் தொடர் போராட்டத்தின் வழி அடைந்த பக்குவத்தின் அணையா கனல் இந்த வெறுப்பு. தன்னிடம் உள்ள வெறுப்பின் இருப்பை, அதன் நியாயத்தை, முடிந்தவரை புரிந்து கொள்ள கதிர் முயல்கிறான். கதிர் எடுக்கும் முடிவு ஏற்கனவே வாசகன் மனதளவில் உணர்ந்தே இருக்கும் இந்த விஷயத்தை மரபின் தொடர்ச்சியாகவும், ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வந்து கொண்டிருக்கும் அறத்தின் குரலாகவும் வாசகன் கருதுவான்.
எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் துருக்கி பற்றிய கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்
“துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். …”
எந்த ஒரு புதிய தத்துவமும் அதுவரை இருந்த சித்திரத்தை அழித்து புதிய ஒன்றை வரைய முற்படும்போது ஏற்படும் பேரழிவை நாவலின் கம்போடியா பக்கங்கள் நமக்கு சொல்லுகின்றன . எந்த ஒரு முன்னெடுப்பும் ஏற்கனவே உள்ள ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக இருக்க வேண்டியதன் நியாயத்தை நமக்கு உணர்த்துகின்றன.
நாவலில் அழகர்சாமி கடைசி வரை தன்னை மட்டுமே தன் சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்பவன், இது எதேச்சையாக வார்க்கப்பட்ட குணாதிசயம் அல்ல - ஏகாதிபத்தியத்தின் விளைவில் ஏற்பட்ட தீவிர தன்முனைப்பும் சுயநலமும் கலங்கிய ஒரு குணவார்ப்பாக நாம் அழகர்சாமியை உருவகப்படுத்தலாம். அழகர்சாமி போன்ற தனிமனிதனின் சுயநலமும், மரபான கூட்டு வாழ்க்கையில் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும், கதிர் போன்றவர்களின் வெறுப்பும் சந்திக்கும் இடம் கொமோரா. முன்னது ஏகாதிபத்தியத்தின் குழந்தை. பின்னது ஆயிரம் ஆண்டு கூட்டு வாழ்க்கை கொடுத்த பக்குவதின் கனல்.
‘டுன்கிர்க்’ திரைப்படம் இந்த நாவலுடன் இணைத்து பார்க்கச் சிறப்பு - தனித்து விடப்பட்டோம் என்று உணரும் தனி மனிதன் - இதை கடலுக்கும், தீவில் அகப்பட்ட வீரர்களுக்கும் இணையாக கருதலாம் - அந்த தனி மனிதன் தன் கற்பனா சக்தி வழியும் உள்ளார்ந்த ஆற்றல் வழியும் சக மனிதர்களின் உதவி வழியும் கரை சேர்கிறான் - கற்பனைக்கும் ஆற்றலுக்கும் இணையாக விமானப் படையையும் வீரர்களின் போராட்டத்தையும் பாலத்தையும் இணையாக உணரலாம். கதிரின் வாழ்க்கையும் ஒரு வகை சாராம்சத்தில் இதையே உணர்த்துகிறது.
லக்ஷ்மி சரவணகுமார், கிழக்கு பதிப்பகம்
418 பக்கங்கள், ரூ.350
இணையத்தில் வாங்க- Amazon, CommonFolks, Puthinam Books
No comments:
Post a Comment