யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மாற்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.
கவாபட்டாவின் நாவல் எழுப்பும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது- “மனிதனின் பார்வையில் எது வெற்றி?”. ஷிங்கோ தன்னை தோற்றுப் போனவனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரது குழந்தைகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அவர்களின் குறைகளுக்கு தன்னையே காரணமாக்கி நொந்து கொள்கிறார் அவர். ஷிங்கோ தன் மகனை நேசிக்கிறார், மகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவில்லை. அவள் தன் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவரைத்தான் பொறுப்பாக்குகிறாள். அவளது கணவன் உண்மையில் போதை மருந்துகளை வாங்கி விற்பவன், அவனை விவாக ரத்து செய்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. மகள் நிலைமை இப்படி இருக்க, ஷிங்கோ தன் மருமகள் மீது பாசமாய் இருந்தாலும் மகனிடம் கள்ளத் தொடர்பை முறித்துக் கொள்ளச் சொல்லும் துணிச்சல் அவருக்கு இல்லை. அவர் பிரச்சினைகளுக்கு வேறு வழியில் தீர்வு காண முயற்சி செய்கிறார், ஆனால் அந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் தோற்றுத்தான் போகிறார்.
இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொருவரையும் உயிரோட்டத்துடன் படைத்திருப்பதுதான் கவாபட்டாவின் வெற்றி. இந்திய திரைப்படங்களில் வருவது போல் மருமகள் திகட்டத் திகட்ட தித்திக்குமளவு இனிமையானவளாக இருக்கிறாளே என்று முதலில் சந்தேகிக்கிறீர்கள். ஆமாம், அவள் உண்மையில் அந்த அளவு நல்லவள்தான், ஆனால் அவள் சுயமரியாதை உள்ளவள். தன் மாமனாருக்கும் மாமியாருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, திடீரென்று அவளது பாத்திரத்தின் தன்மைக்கு மிக அருமையாக ஒளியூட்டுகிறது. அவள் மட்டுமல்ல, பிற பாத்திரங்களுடனும் நாம் ஒன்றிவிடும் வகையில் கவாபட்டா இந்த நாவலை எழுதியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவு இந்தக் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் காரியதரிசி ஏய்க்கோவும் இவர்களில் ஒருத்தி.
‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’ முதுமை மற்றும் மரணத்தின் மீதான தியானமும்கூட. ஷிங்கோ தன் வீட்டு வேலைக்காரியின் பெயரை நினைவுக்கு கொண்டு வர தடுமாறிக் கொண்டிருக்கும்போது மலையின் முழக்கம் கேட்பதாய் கதை துவங்குகிறது. தன் வாழ்வில் உள்ள வெவ்வேறு நபர்களைப் பற்றி வினோதமான கனவுகள் மீண்டும் மீண்டும் அவருக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. இந்தக் கனவுகள் ஷிங்கோவின் இதயத்துக்கு நம்மைக் கொண்டு செல்லும் திறவுகோல்கள். அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக இறக்கத் துவங்குகிறார்கள், ஷிங்கோ மரணம் குறித்து அதிகம் சிந்திக்கத் துவங்குகிறார். அவரது நண்பர்களில் ஒருவர், புற்றுநோயால் செத்துக் கொண்டிருப்பவர், பொட்டாசியம் சயனைட் கொடுக்கக்கூடிய வேறொரு நண்பரைத் தொடர்பு கொள்ளும்படி அவரிடம் இறைஞ்சுகிறார். புற்று நோயின் வலி தாளாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார் அந்த நண்பர். “முதுமையை எப்படி எதிர்கொள்வது?”, “ஒரு நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் மறைந்த பின்னும் அதன் நினைவு வாழ முடியுமா?” என்பது போன்ற கேள்விகளுடன் மரணம், முதுமை குறித்த கேள்விகளும் நாவலில் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இவற்றில் சில கேள்விகள் நமக்கும் வாதையாக இருக்கின்றன.
வேறொரு தளத்தில் இந்த நாவல், நினைவு பற்றியது. தான் தன் மனைவின் சகோதரி குறித்து பிரமிப்பு கொண்டிருந்ததும் அவள் மீது உள்ளூர காதல் கொண்டிருந்ததும் ஷிங்கோவின் நினைவை விட்டு அகல மறுக்கின்றன. அவரது மனைவியின் சகோதரி, அழகானவள், அவளுக்கேற்ற அழகு கொண்ட ஒருவனை மணந்தபின் இளமையிலேயே இறந்து போனவள். அறுபது வயது கடந்தபின்னும் ஷிங்கோவால் அந்த கணவன் முன் தான் எவ்வளவு போதாமையாக உணர்ந்தோம் என்பதை மறக்க முடியவில்லை. ஷிங்கோவின் கனவுகளும் துர்ஸ்வப்னங்களும்கூட நினைவு குறித்தே. சில நினைவுகள் ஏன் விழிப்பு நிலைக்கு உயர்ந்து வருகின்றன, மறந்தே போன ஒருவர் ஏன் தன் கனவில் உயிர் பெற்று எழுகிறார் என்ற கேள்விகள் அவருக்கு விடை காண முடியாத புதிராய் இருக்கின்றன.
நாவலில் மறைந்திருக்கும் கருப்பொருட்களில் போர் நினைவுகளும் ஒன்று. ஷியூச்சி தொடர்பு வைத்திருக்கும் பெண் போரில் இறந்த ராணுவ வீரனின் விதவை. தன் கணவனை இளம் வயதிலேயே பலி கொண்ட போர் தனக்கு அநீதி இழைத்திருப்பதாக அந்தப் பெண் நினைக்கிறாள். அக்காலத்தில் போர்க் கைம்பெண்கள் எதிர்கொண்ட சவால்களை நாவல் சுட்டுகிறது. தன் கணவனின் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும், தன் பெற்றோரிடம் திரும்பவும் அவள் மறுத்து விடுகிறாள். மாறாய், சுதந்திரமாய் இருப்பதென்று முடிவு செய்கிறாள், தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேலைக்கும் போகிறாள். அவள் கதையில் சிறிது காலம்தான் இருக்கிறாள். இருந்தாலும் அவளது குணம் என்ன என்பதும் அவளது மனநிலையும் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. கவபாட்டா அவ்வளவு சிறப்பாய் அவளது பாத்திரத்தைச் சித்தரித்திருக்கிறார்.
நாவல் சீரான வேகத்தில் நகர்கிறது. அதன் பெரும்பாலான பொழுதுகள் வீட்டு விவகாரங்களைப் பேசுவதில், செய்தித்தாள் வாசிப்பதில், பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதில் என்று கழிகின்றன. ஆனால், கவபாட்டா எதையும் வீணாக்குவதில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு பொருளும் நோக்கமும் இருக்கிறது, பார்ப்பதற்கு சராசரியான உறவாடல்கள் போல் தெரிவதும்கூட ஆழத்தில் அர்த்தம் பொதிந்திருக்கின்றன. அவ்வப்போது பெருநிகழ்வுகள் நடக்கின்றன, ஆனால் அவை எதையும் கவபாட்டா பூமியைப் புரட்டிப் போடும் விஷயங்களாக விவரிப்பதில்லை. மாறாய், கவபாட்டா கதையைக் கொண்டு செல்லும் வேகத்துக்கு அவையும் சமனப்பட்டு கூடி வருகின்றன.
இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவல். பருவநிலையை அறிய முடிகிறது, மரங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கிறோம், காற்றின் ஓசையைக் கேட்கிறோம். இவற்றில் பலவற்றுக்கும் குறியீட்டு மதிப்புண்டு, ஆனால் குறியீட்டு பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்கூட நீங்கள் இந்த விவரணைகளை வர்ணனைகளாகவே வாசித்து மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
நான் வாசித்த புத்தகம் பெங்குவின் பதிப்பித்தது. ஆங்கில மொழியாக்கம் செய்திருப்பவர் எட்வர்ட். ஜி. செய்ன்டென்ஸ்டிக்கர். மிக அருமையான மொழியாக்கம். காமகுராவின் தனிச்சூழலை சிறப்பான வகையில் கைப்பற்றுகிறது. ஜப்பானின் பழக்க வழக்கங்களையும் அன்றாட வாழ்வில் அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறை ஒழுக்கங்களையும் நன்றாகவே கொண்டு தருகிறது, கவபாட்டாவின் நடை துல்லியமாக இருக்கிறது, மினிமலிச இயல்பு கொண்டது என்பதை முன்னமே சொல்லிவிட்டேன்.
இருநூற்றுச் சொச்ச பக்கங்கள்தான் என்றாலும் அதில் அடர்த்தியான சிந்தனைகளும் பண்பாட்டுச் சிக்கல்களும் பொதிந்திருப்பதால் சிக்கலான நாவல்தான். நோபல் பரிசு பெற்ற ஒருவரிடம் நாம் இத்தகைய நாவல்களையே எதிர்பார்க்கிறோம், இந்த நாவல் நம்மை ஏமாற்றவில்லை.
The Sound of the Mountain, Yasunari Kawabata,
Penguin Classics, 1970
Flipkart, Amazon
ஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா
(மொழியாக்க உதவி – நட்பாஸ்)
No comments:
Post a Comment