2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணி பதினைந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறார். அவையும் நெடுங்கட்டுரைகள் அல்ல, எல்லாம் சேர்ந்து நூறு பக்கங்கள்கூட வரவில்லை.
‘மதுரையிலிருந்து கோவைக்கு... வழி: கரூர், சேலம்,’ என்ற தலைப்பிட்ட முன்னுரையில், கோணங்கி துவங்கி சுகுமாரன் வரை, முப்பத்து ஏழு பேரை தன் படைப்பூக்கத்துக்கு உடன் அழைத்துக் கொள்கிறார். துவக்கத்திலும் முடிவிலும் வரும் இளங்கோவையும் இசையின் தொழுகைக்குரிய அவ்வையையும் சேர்த்தால் முப்பத்து ஒன்பது. 39+1, வோல்வோ பஸ் போலிருக்கிறது!
வெவ்வேறு கவிஞர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய கவிதைகள் பற்றியும் என்ன எழுதினாலும் ஒரு இடத்தில்கூட இசை அவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதில்லை- இது போன்ற தருணங்களில் மிக எளிதாக கறாரான விமரிசனத் தோரணையோ நாலுமறிந்த ஆசிரியத் தோரணையோ கைப்பற்றிக் கொள்வது எளிது, அதுதான் எப்போதும் நடப்பதும்கூட: ஆனால் இசை ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு சகாவாக, உடன் வரும் பயணியாகவே எழுதியிருக்கிறார். தான் மிகவும் வியந்தோத்தும் கல்யாண்ஜி பற்றிய கட்டுரையில்கூட விமரிசனத்தை தயக்கத்துடனே செய்கிறார், வணங்கும்போது வெளிப்படும் வினயமும் இயல்பாக அமைந்து விடுகிறது. இந்த இணக்கமான, தோளில் கை போட்டுப் பேசும் தொனி விமரிசனப் பரப்பில் மிக அபூர்வமானது. அது இசைக்கு அமைந்திருக்கிறது. எனவேதான், ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’, என்ற தலைப்பும் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்.
தன் கட்டுரைகளுக்கு இசை வைத்திருக்கும் தலைப்புக்கள் வித்தியாசமானவை. அவற்றைப் பட்டியலிடுவதும்கூட சுவாரசியமானது (இந்த நூல் அறிமுக நோக்கமும் இதனால் நிறைவேறும்): ‘மைக்ரோஸ்கோப்பில் கண்டறியப்படும் நுண்ணுயிரி’ (கடல் நினைவு – தூரன் குணா), ‘இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புக்கள் சூட்ட ஆசை’ (வான்குருவியின் கூடு – பெருமாள் முருகன்), ‘கரிசல் நிலத்தில் அனலாடும் சொற்கள்’ (நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள் – மு. சுயம்புலிங்கம்), ‘சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்குத் திணறும் எளிய மூளை...’ (காயசண்டிகை, இளங்கோ கிருஷ்ணன்), ‘புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு, ஆற்றுப்பாலம், உக்கடம் வழியே இருகூருக்கு வந்து கொண்டிருக்கிறது’ (என்று தானே சொன்னார்கள் – சாம்ராஜ்), ‘ஏரிக்கரையில் ஒலிக்கும் அம்மணனின் தனிப்பாடலும் கொஞ்சம் சேர்ந்திசையும்’ (ஏரிக் கரையில் வசிப்பவன் – ஸ்ரீ நேசன்), ‘காதல், விசித்திரம், விசித்திரங்களின் மீதான காதல்’ (மீன்கள் துள்ளும் நிசி – நிலாரசிகன்), ‘அதி அன்பின் தற்குறிப்பேற்றம் அல்லது கல்யாண்ஜி என்கிற நன்நோய்த் தொற்று’ (பூனை எழுதிய அறை – கல்யாண்ஜி), ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு...’ (முன் சென்ற காலத்தின் சுவை – எஸ். செந்தில்குமார்), ‘அதிகம் புழங்காத வழியில் ஒரு திமிரான பயணம்’ (உபரி வடைகளின் நகரம் – லிபி ஆரண்யா), ‘ஆட்டுக்குட்டி மீது ரயில் மோதி ஒன்றும் ஆகவில்லை’ (நான் ராணிதிலக் பேசுகிறேன் – ராணிதிலக்), ‘அன்பே நீ கலையாகும்போது இன்னும் அதிகமாக அரசியலாவாய்’ (வெள்ளைத் தோல் வீரர்கள் – திசேரா), ‘சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்’ (பெருந்திணைக்காரன் – கணேசகுமாரன்). இவை போக, ‘ஏன் எழுதுகிறேன்,’ என்ற சிறப்பான அறிமுகம், ‘எம்.கே.டி. சித்தத்துள் இனிக்கும் தேன்’ என்ற ஒரு சுவாரசியமான கட்டுரை, ‘எக்ஸ்க்யூஸ் மீ மகத்தான லட்சியங்களே,’ என்ற அதிசயிக்க வைக்கும் நேர்காணல்.
இசை யாரைப் பற்றி என்ன எழுதுகிறார், அவர்கள் கவிதைகள் பற்றி என்ன எழுதுகிறார் என்று பலவும் சொல்லலாம். ஆனால் இந்தத் தலைப்புகளே அவர் எப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதக்கூடும் என்பதைத் தெரிந்து கொள்ளப் போதும்- இதற்கு மேல் கருத்துகள் என்று துழாவிச் செல்ல வேண்டிய தேவையில்லை. இசை சொல்ல வரும் விஷயங்கள் அவசியமானவை, ஆனால் அவற்றை அவர் வசீகரமான மொழியில், நம்மை நிராயுதபாணியாக்கும் சிரிப்புடன் சொல்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதில் நாம் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவரது தோழமையை நிராகரிக்க முடியாது.
* * *
‘ஏன் எழுதுகிறேன்”, என்ற முன்னுரையில் இப்படி எழுதுகிறார் இசை:
“ஈழத்தில் நடைபெற்ற இன அழித்தொழிப்பின்போது 10 வரிகளை அடுக்கி கவிதை எழுத பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படி எழுதி விட முடியும்தான். அதில் சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கும்தான். ஆனால் இன்றைய எழுத்தாளன் அப்படிச் செய்யாததற்கு அவன் படைப்பு வறுமை காரணம் இல்லை என்று நான் நம்புகிறேன். அவன் தன் அந்தரங்கத்தை மிக நேர்மையாக எதிர் கொண்டதின் விளைவே இது. அவனுக்குத் தெரியும் குடித்து விட்டு விடுதி அறைகளை கண்ணீரால் மிதக்க விட்டது தவிர தான் வேறொன்றும் செய்யவில்லை என்று. வேறொன்றும் செய்ய முடியாது என்றும்”.
கவிஞர்கள், ஆணியே புடுங்க வேணாம் என்று வாளாவிருந்ததில் கவிதையின் கையாலாகாத்தனத்துக்குப் பொருத்தமான நேர்மை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டால், இது மட்டுமல்ல, சொந்தக் கதை சோகக் கதை தவிர பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுக்காரன் துக்கத்தைகூட கவிதையில் எதிர்கொள்ள எந்த முகாந்திரமும் இருக்காது. “தனியொரு...” என்று சினந்த பாரதி வேண்டாம், கூண்டிலடைபட்டுத் தவிக்கும் சிட்டுக்குருவியின் சிறகடிப்பு தாளாது இவ்வுலகே அலறுகிறது, என்று கரைந்த பிளேக்கும் சும்மனாச்சிக்குமா கவிஞன் என்று சொல்லிக் கொண்டான்? முதலில் கவிதை என்ன செய்யும் என்ற கேள்வியே விவாதத்துக்குரியது; இருக்கட்டும், அது வேறொரு நாளுக்கானது.
இந்த புத்தகத்தின் பல கட்டுரைகளில் இசை மீண்டும் மீண்டும் சொல்லும் விஷயங்கள் இரண்டு என்னைக் கவனிக்கச் செய்தன. இரண்டும் கல்யாண்ஜி பற்றிய கட்டுரையில் அடுத்தடுத்து வருகின்றன:
“எத்தனையோ விஷயங்களால் இயக்கப்பட்டாலும் ஒரு கலைஞனுக்கு தன் கலை எதைப் பேச வேண்டும் என்பதில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு தேர்வு நேர்ந்து விடுகிறது. ஏன் இதை மட்டுமே பேசுகிறாய் என்றவனை வினவுவதோ, ஏன் நீ இதைப் பேசவில்லை என்றவனை மிரட்டுவதோ அறிவுடைமை ஆகாது. இளங்கோவிற்கும், இசைக்கும் ஏனோ அவலச்சுவை மீது அப்படி ஒரு கண். இவர்கள் இருவரும் மாத்திரம் அல்ல, எழுதுகிறவர்களில் முக்கால்வாசிப் பேருக்குத் தன் எழுத்தில் கண்ணீரை ஆறாகப் பெருக்குவதில் அப்படியொரு ஆனந்தம்”.
பல கட்டுரைகளில் இந்தக் கட்டாய தேர்வு குறித்தும் தமிழ்க் கவிஞர்களின் துக்க கவிதைகள் பற்றியும் திரும்பத் திரும்ப எழுதுகிறார். நவீன கவிதை வாசிப்பவர்கள் பொருட்படுத்தத்தக்க விஷயம் இது.
கவிதை என்ன செய்யும் என்பதைவிட கவிதை எழுதிய நான் என்னத்தை கிழித்துவிடப் போகிறேன் என்ற நிதர்சன உண்மையே கழிவிரக்க, துக்கப் பார்வையைக் கட்டமைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. இச்சூழலில் சுயபகடியை இசை தேர்வு செய்திருப்பதில் ஒரு அசல்த்தன்மை இருக்கிறது:
“குடும்பம் என்கிற வலிய தாம்புக் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான். எனவேதான் நான் முழங்குவதற்கு பதில் அழுகிறேன். என் சில படைப்புகளில் குடும்பம் என்கிற தளையில் இருந்து வெளியேறத் தவிக்கிற ஒரு மனிதனின் விசும்பலைக் காதிருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்புறம், என்னைப் போன்றவர்களுக்காகத்தான் சே குவேரா டி-சர்ட்டுகளை மலிவு விலையில் ரோட்டில் விற்கிறார்கள்.”
தன்னை ஒரு போர் வீரன் என்று கற்பனை செய்த மறு கணமே தன் கத்தியின் கூர் முனை தன் நெஞ்சை நோக்கியே நிற்பதைக் கண்டு விக்கித்தவனின் சொற்கள் இவை. வேறெப்படியும் இருக்க முடியாது. முழக்கங்கள் வேண்டுமென்றால், உன்னதங்கள் தொடப்பட்டு கடந்து செல்லப்பட வேண்டுமென்றால், அந்தக் கத்தியில் மீண்டும் மீண்டும் மோதுபடவும் அதனால் குற்றுயிரும் குலையுயிருமாய்ச் சிதையுறவும் துணிந்து, அதற்கு பலியாகும் கவிஞர்கள் நமக்கு வேண்டும். அந்தச் சாபத்தை அளிக்க நம்மில் யாருக்கு உரமிருக்கிறது?
இசை கவிதை பற்றி எழுதுவது, கவிதை எழுதுவதற்கான காரணங்கள், வெவ்வேறு கவிதை, கவிஞர்களின் தனித்தன்மைகள் என்று எழுதுவது எல்லாமே படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேல் நேற்று வீட்டுக்கு வந்த சற்று நேரத்தில்
தேவதாசகம்
நாளுக்கு நூறு முறை
அபத்தங்களை அப்டேட் கவிதைகளாக்கி
லைக்குகளை அள்ளும் நீ
உன் ஆன்ம தனிமையை, உலகின் அர்த்தமின்மையை,
நீள்கவி புனைவதிலும் லைக்க
எனக்கு என்ன ஒரு இது இருக்க வேண்டும்!
என்றும்,
எகத்தாளம்
சாக்லேட் உறை போர்த்த பெண்
தன் சொல்லெல்லாம் தித்திப்பு
என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறாள்
சுற்றியுள்ளவர்கள் சிரிக்கிறார்கள்
ஊர் சிரிக்கிறது
உலகம் சிரிக்கிறது
புவனங்களைப் படைத்த பிரமன் சிரிக்கிறான்
பாரளந்த பெருமாள் சிரிக்கிறான்
பரமன் சிரிக்கிறான் பார்வதியும் சிரிக்கிறாள்
என்றும் ஒரே நாளில் அடுத்தடுத்து எழுதத் தோன்றிற்று.
எதையோ விரட்டிச் செல்கிறோம், எதிலிருந்தோ தப்பி ஓடுகிறோம், அந்த அவசரத்தில் எதையும் கண்கொண்டு பாராமல் தவற விடுகிறோம். நம் வாழ்வு மொக்கைதான், நம் பார்வை மொக்கைதான், நம் மொழி மொக்கைதான், ஆனால் ஒரு நல்ல கவிதையால், ஒரு நல்ல கவிஞனால் அனைத்தும் நொடிப்பொழுது கூர் கொள்கின்றன. கவிதை என்ன செய்கிறதோ இல்லையோ, அன்றாட கணங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கொடுக்கிறது- ஆக, பொருள் கொள்ளும் கவி மன நிலையே கவிஞன் நமக்கு அருள்வது. இசையின் கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தபின் அது ஒரு அரை மணி நேரத்துக்காவது சாத்தியமாகிறது.
அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை,
முதற்பதிப்பு – 2013,
விலை ரூ.75,
சந்தியா பதிப்பகம், சென்னை – 83
04424896979
இணையத்தில் பெற: காமன்போக்ஸ், சந்தியா பதிப்பகம்
No comments:
Post a Comment