-செமிகோலன்-
அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுத்த படத்திற்கு முதலில் மக்களிடையே சொல்லிக் கொள்ளுமளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதை மதுரையில் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர் படத்தின் இரண்டாம் பகுதியை முதலிலும், ஆரம்பத்தை இடைவேளைக்கு பிறகும் வருமாறு ரீல்களை மாற்ற படம் அதிகமாக மக்களைக் கவர்ந்தது. தமிழ் திரையுலகின் முதல்/ ஒரே பின்-முன் நவீனத்துவ படைப்பாக இருக்கக்கூடிய அந்தத் திரைப்படம் 'மெல்லத் திறந்தது கதவு'.
அதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, எம்.எஸ்.விக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்க வேண்டுமென்றும், அதற்கு எம்.எஸ்.வியையே இசையமைக்கச் சொல்லலாமென்றும் அந்த நிறுவனத்தை அணுகினார் இளையராஜா என்பது. தன் முன்னோடிக்கு உதவ வேண்டும், அதே நேரம் அவருடைய சுயமரியாதைக்குச் சிறிதும் பங்கம் வரக்கூடாது என்பதிலும் ராஜா கவனமாக இருந்துள்ளார்.
இந்த இரண்டு செய்திகளும் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி ஏ.வி.எம். சரவணன் தினத்தந்தியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்திருக்கும் 'நானும் சினிமாவும்' நூலில் கிடைக்கிறது.
வாரமொரு முறை தொடராக வந்தபோது சுவாரஸ்யமாக இருந்திருக்கக்கூடிய அத்தியாயங்கள், ஒரு படத்தின் துவக்கம், தயாரிப்பின்போது ஏற்பட்ட சிக்கல், அதை எதிர்கொண்ட விதம் என்று மீண்டும் மீண்டும் வருவதால் புத்தகமாக படிக்கும்போது நூறு பக்கங்களுக்குள் சலிப்பு தட்டத் தொடங்குகிறது. அது போக, யாரைப் பற்றியும் எதிர்மறையாக எதுவும் கூறிவிடக் கூடாது என்ற கவனத்துடன் எழுதியிருக்கிறார் சரவணன்.
இந்த நூலைக் கொண்டு ஏ.வி.எம். என்ற நிறுவனத்தை புரிந்து கொள்ள இரு விஷயங்கள் உள்ளன. முதலாவது, தாங்கள் தயாரிக்கும் படத்தின் அனைத்து அம்சங்கள் மீதும் அவர்கள் செலுத்திய ஆதிக்கம். பாதி படம் எடுத்து முடித்த பின், ரஷ் பார்த்து விட்டு அதை ஏ.வி.எம். மெய்யப்பன் கைவிடச் சொல்கிறார், மொத்த படப்பிடிப்பும் முடிந்தபின் இறுதி காட்சியை மாற்றுகிறார்கள், அல்லது புதிய பாத்திரங்களை சேர்க்கிறார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா பாத்திரம் ஷூட் முடிந்த பின் சரவணன் சொல்லி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி சொல்லப்படும் மாற்றங்கள் இதற்கு முன் வெற்றிப் படங்களாக முடிந்திருக்கின்றன என்பதால் இயக்குனர்களும் இவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏ.வி.எம்.மிற்கு இயக்குனரைவிட தன் விருப்பப்படி செயல்படுத்துபவர் தான் தேவைப்பட்டிருக்கிறார். இதை முற்றிலும் எதிர்மறையாக பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால் இந்த மாற்றங்கள் படத்திற்கான செலவை அதிகரிக்கத்தான் செய்கின்றன என்பதால் இதில் ரிஸ்க்கும் உள்ளது. ஆனால் படம் வெற்றியடைய அதில் வேறு விஷயம் தேவை என்று நினைத்தால் அதைக் கொண்டு வருவதில் எந்த சுணக்கமும் ஏ.வி.எம். காட்டுவதில்லை.
பலரின் ஆலோசனைகளைக் கொண்டு படமியக்குவது எளிதும் அல்ல. ஓடாத ஹிந்தி திரைப்படத்தை பார்க்கும் சரவணன், அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் ரசித்து, அதை அப்போது தாங்கள் தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் உபயோகப்படுத்த முடியுமா என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்கிறார். வேறொரு கதையின் இறுதி சண்டைக் காட்சிகளை, மற்றொரு படத்தில் எப்படி பொருத்த முடியும்? ஆனால் இதை முத்துராமன் சாதித்து காட்டுகிறார். குறிப்பிட்ட நாட்களுக்குள், முடிந்த வரை குறைந்த செலவில் படத்தை எடுத்துக் கொடுப்பது, திடீரென கேட்கப்படும் மாற்றங்களை கச்சிதமாக படத்தினுள் கொண்டு வருவது என இயங்கும் முத்துராமனே ஏ.வி.எம். நிறுவன இயக்குனர்களின் வகைமாதிரி எனலாம். படைப்பாளியின் சுதந்திரம் என்றெல்லாம் பேசலாம், ஆனால் ஏ.வி.எம்.மிற்கு இது தொழில், ஒரே தோல்வியில் நகுஷன் போல் அதல பாதாளத்திற்கு செல்லக்கூடிய பரமபத ஆட்டம், அதில் வெற்றியடைய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்.
பல மாற்றுமொழி படங்களை முறையாக உரிமை பெற்று ரீமேக் செய்யும் ஏ.வி.எம். அது இயலாதபோது 'போலச் செய்தலுக்கு' தயங்குவதில்லை. ஒரு வங்காளப் படத்தை பார்த்துவிட்டு ரீமேக் செய்ய எண்ணும் சரவணன், மொழிமாற்ற உரிமைக்கு கேட்கப்படும் தொகை அதிகம் என்றும் நினைக்கிறார். அப்போது அவர் நிறுவன ஊழியரொருவர், வங்காள படத்தை தழுவி மாற்றங்கள் செய்து 'புதிய' கதையை தயார் செய்து விடலாம் என்று கூற அப்படியே செய்கிறார்கள். ஒரு படத்திற்கு போடப்பட்ட செட் கதைக்கு பொருந்தாது என்பதால் அதை வேறு இடத்தில் படம் பிடிக்கிறார்கள். ஆனால் போட்ட செட்டும் வீணாகக் கூடாது. எனவே, மர்மக் கதைக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, பல ஹிந்தி மர்மப் படங்களைப் பார்த்து அவற்றைக் கலந்து கட்டி ஒரு வாரத்தில் 'அதே கண்கள்' படத்தின் கதையை தயார் செய்தோம் என்று சொல்கிறார்.
மற்ற படைப்புக்களிலிருந்து உரிமையின்றி எடுத்துக் கொள்வதை சரவணன் வெளிப்படையாக கூறுவதற்கும் 'தொழில்' தான் காரணம். அறிவுச் சொத்து குறித்தெல்லாம் அவரோ/ ஏ.வி.எம்.மோ கவலைப்படுவதில்லை. எல்லா உணவு விடுதிகளிலும் இட்லி, தோசை கிடைப்பது போல்தான் திரைப்படங்களையும் அணுகுகிறார்கள். வங்காள படம் ஒரு நுகர்வுப் பண்டம், அங்கு நன்றாக விற்கிறது, எனவே தமிழிலும் அதே பண்டம் தயார் செய்து விற்க வேண்டும், அவ்வளவே.
‘உயர்ந்த மனிதன்’ படத்தில், சிறிய பாத்திரமென்றாலும், நாயகனுக்கு இணையான சோகமும், வலுவும் கொண்ட, அசோகன் ஏற்ற பாத்திரத்தில்தான் சிவாஜி நடிக்க விரும்பினார் என்று சரவணன் சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார். நமக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்பும் சிவாஜி என்ற நடிகரின் சித்திரம் கிடைக்கிறது, ஆனால் சரவணனுக்கோ சிவாஜி ஹீரோ, எனவே அவர்தான் முதன்மை பாத்திரமாக இருக்க வேண்டும். இப்படி தாங்கள் ஈடுபட்டிருப்பது கலை அல்ல தொழில் என்பதில் ஏ.வி.எம். தெளிவாக இருந்ததும் விரிவான திட்டமிடுதலுடன் படத்தை ஆரம்பித்தாலும், எந்நேரமும் மாற்றங்களுக்கு அவர்கள் தயாராக இருந்ததும், வெற்றி தோல்வியை உறுதியாக கணிக்க முடியாத இந்தத் துறையில் அவர்கள் குறிப்பிடத்தக்க சதவீத வெற்றியை பெற காரணமாக இருந்திருக்கின்றன.
'நானும் சினிமாவும்' - ஏ.வி.எம். சரவணன்,
தினத்தந்தி வெளியீடு.
அமேசான், காமன் ஃபோக்ஸ்
விமர்சனம் அருமை!!!
ReplyDelete