பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்களின் கற்பனையைத் தூண்டும் இரு கருப்பொருட்களை ஒருசேர எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகேட்டு’ பேசுகிறது: பருவமெய்துதல், குடும்பம் சிதைதல்- இந்தக் கதையில் ஒரு கூட்டுக் குடும்பம் அழிகிறது (‘நாலுகெட்டு’ என்ற தலைப்பு பாரம்பரிய கேரள வீட்டினைச் சுட்டுகிறது). பள்ளி செல்லும் சிறுவன் அப்புண்ணி கதையின் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்து முடிவில் முழு ஆடவனாகிறான். கதை பெரும்பாலும் அவன் பார்வையில் சொல்லப்படுகிறது.
துவக்கத்தில் கதை ‘நாலுக்கட்டு’ பற்றியது என்பது நமக்கு தெரிவதில்லை. அப்புண்ணியும் அவனது தாயும் எதிர்கொள்ளும் சோதனைகளை நாவலின் துவக்க பகுதிகள் விவரிக்கின்றன. அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும் அப்புண்ணி எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்பதில் அவனது அம்மா உறுதியாய் இருக்கிறார். அப்புண்ணிக்கு அப்பா இல்லை. அவருடன் இணைந்து தொழில் செய்தவர் விஷம் வைத்து அவரைக் கொன்றிருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. முறைப்படி முடிவான மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளாமல் தான் விரும்பிய காதலனோடு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பாவத்துக்காக அப்புண்ணியின் அம்மாவை அவரது குடும்பம் விலக்கி வைத்திருக்கிறது (போதாக்குறைக்கு, அப்புண்ணியின் அப்பா ஒரு சூதாடியும்கூட). எனவே அப்புண்ணியின் அம்மா பலர் வீட்டுக்குப் போய் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கிறாள், படாத பாடுபட்டு அப்புண்ணியை ஆளாக்கி அவன் கல்வி கற்க வசதியும் செய்து கொடுக்கிறாள்.
சங்கரன் நாயருடன் தன் அம்மாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அப்புண்ணியின் மனதில் எழும்போது கதை ‘நாலுக்கட்டு’ வீட்டுக்கு நகர்கிறது. சங்கரன் நாயர் இரக்க உள்ளம் கொண்ட மனிதர். பணக்கார வீட்டில் குழந்தையாய் வளர்ந்த காலத்திலேயே அப்புண்ணியின் அம்மாவை அவருக்கு தெரியும். அவள் வேலைக்காரியாய் இருப்பதைப் பார்க்க அவர் மனம் சங்கடப்படுகிறது. தன்னால் முடிந்த வகையில் அவர் உதவி செய்வது ஊர் வாய்க்கு அவலாகி இறுதியில் அப்புண்ணியின் மனதில் தன் அம்மா மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. அவன் அம்மாவைப் பிரிந்து தன் பாட்டியின் ‘நாலுக்கட்டு’ வீட்டுக்குப் போகிறான். அங்குதான் அவனது அம்மா உள்ளே நுழையக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கிறது, அங்கிருந்துதான் அவனும் விரட்டப்பட்டிருந்தான். இப்போது, ஒரு மாமாவின் ஆதரவோடு அவன் அந்த வீட்டில் வசிக்கச் செல்கிறான். ஆனால் அவனுக்கு அங்கு ஒரு கூட்டுக் குடும்பம் சிதைவதைப் பார்க்கத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.
எம். டி. வாசுதேவன் நாயர் கதையை எளிமையான மொழியில் நேரடியாகச் சொல்கிறார். பாம்பு திருவிழாவாகட்டும் அப்புண்ணி அம்மாவின் வீட்டை விழுங்கும் வெள்ளமாகட்டும் நிகழ்வுகளை விறுவிறுப்பாகச் சித்தரிக்கிறார். அப்புண்ணி தன் உறவுக்கார பெண்ணுடன் கொள்ளும் உறவு கிட்டத்தட்ட கலவி நிலைக்குச் செல்வது கவித்துவ மொழியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பு சுவாரசியமாக விவரிக்கப்படுகிறது, அதனுள் நிகழும் அதிகார மோதல்களும் சிறப்பாக வெளிப்படுகின்றன.
உள்விவகாரங்கள் காரணமாகவே இங்கு குடும்ப அமைப்பு சிதறுகிறது. அப்புண்ணியின் வருகையால் மனம் வெதும்பும் அவனது மாமா ஒருவரின் வெறுப்பை வெளிக்காட்ட முடியாத வன்மத்தால் ‘நாலுக்கட்டு’ குடும்பம் சிதையத் துவங்குகிறது. இந்த அழிவில் புறச்சூழலுக்கு எந்த பங்குமில்லை, அப்புண்ணி வீட்டை விட்டு வெளியேற ஊர் வம்பு காரணமாக இருந்தது என்பதை வேண்டுமானால் ஒரு மறைமுக காரணமாய்ச் சொல்லலாம். குடும்ப அமைப்பினுள் நிலவும் அதிகாரச் சமநிலையின்மை அதன் அழிவுக்கு காரணமாவது மிகச் சிறப்பாய் விவரிக்கப்பட்டுள்ளது, நடப்பது அனைத்தும் தவிர்க்க முடியாதவை என்று நம்பச் செய்கிறது.
அப்புண்ணியின் அப்பாவைக் கொன்றவர் என்று சொல்லப்படுபவருக்கும் அப்புண்ணிக்கும் இடையேயுள்ள உறவு தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அப்புண்ணிக்கு உதவவும் செய்கிறார். முதலில் அவரைப் பழி வாங்க வேண்டுமென்று அப்புண்ணி நினைத்தாலும், இறுதியில் அவர் உதவியை அவன் நாடுகிறான். அவர்தான் அப்புண்ணிக்கு வேலை வாங்கித் தருகிறார். அவர் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று நாம் நினைக்கும் தருணத்தில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இந்த தெளிவின்மை கதையில் உள்ள மானுட உணர்வுகளின் சிக்கல்களில் மேலும் ஒரு சிடுக்கைச் சேர்க்கிறது.
இருந்தாலும் நாவலில் ஓரிரு விஷயங்கள் திருப்தியாக இல்லை. அப்புண்ணி அம்மாவின் கதை பாதியிலேயே கைவிடப்படுவது ஒரு விஷயம். நாவலின் துவக்கத்தில் அவர்தான் பிரதான பாத்திரமாக இருக்கிறார், கதை அவரது போராட்டங்களைச் சுற்றியே பின்னப்படுகிறது, ஆனால் கதை ‘நாலுக்கட்டு’க்கு நகர்ந்ததும் அவர் கிட்டத்தட்ட மறக்கப்படுகிறார். இரண்டாவது, நாவலின் இறுதி கட்டம். அதன் அவசர முடிவில் ஒரு சினிமாத்தனமே வந்துவிடுகிறது. அதுவரை கூட்டுக் குடும்பத்தின் சித்தரிப்பாகவும் அந்த அமைப்பினுள் நிலவும் மௌன அடக்குமுறையின் பதிவாகவும் இருக்கும் நாவல் திடீரென்று பழிவாங்கும் நாடகக் கதையாக மாறுகிறது. இது நாவலின் தொனிக்கு பொருந்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட சில நெருடல்கள் தவிர ‘நாலுகெட்டு’ நாவல் வாசிப்பதற்கு நன்றாகவே இருக்கிறது.
நான் இதன் தமிழாக்கம் வாசித்தேன். காலச்சுவடு பதிப்பு. எனக்கு மலையாளம் தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பின் தரம் குறித்து ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் தன் தமிழாக்கத்தில் கேரள மண்ணின் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபினை கண் முன் கொண்டு வருவதில் குளச்சல் யூசுப் வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில் வாசித்து அசை போடத்தக்க புத்தகம்.
மலையாள நாவலான 'மணியன் பிள்ளையுட ஆத்ம கதா' என்ற மலையாள நாவலை `திருடன் மணியன்பிள்ளை’ என தமிழாக்கம் செய்ததற்காக குளச்சல் யூசுப்புக்கு சிறந்த தமிழாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருது இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. விருது பெறும் குளச்சல் யூசுப்புக்கு வாழ்த்துகள்.
நாலுகெட்டு,
எம்.டி. வாசுதேவன்நாயர்,
தமிழாக்கம் குளச்சல் யூசுப்,
காலச்சுவடு பதிப்பகம்.
உடுமலை, புதினம் புக்ஸ்
(மொழியாக்க உதவி – நட்பாஸ்)
No comments:
Post a Comment