- வெ சுரேஷ் -
தமிழில் நல்ல பேய்க்கதைகள் மிகக்குறைவே. பி.டி. சாமியின் கதைகள் எல்லாம் ரொம்ப அமெச்சூரிஷ் ஆக இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். பேய்க்கதைகள்/ அமானுஷ்யமான கதைகள் என்றளவில், நல்ல படைப்புகள் என்று சொன்னால், ஜாவர் சீதாராமனின், ‘உடல் பொருள் ஆனந்தி’, ராஜேந்திரகுமாரின், ‘இறந்தவன் பேசுகிறேன்,’ மற்றும், ‘இன்னமும் இருக்கிறேன்,’ இரண்டும் நல்ல படைப்புகள். இவை ஆங்கில ஆக்கங்களின் தழுவலாக இருக்கலாம். சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’, மற்றும், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ இரண்டுமே அவுட்ரைட் பேய்க்கதைகள் இல்லை என்றாலும், அமானுஷ்யமான சூழலை எழுத்தில் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார். 'ஆ' எனும் தொடரும் நினைவுக்கு வருகிறது. இவை போக,குமுதத்தில் கிருஷ்ணகுமார் (அநேகமாக எஸ்.ஏ.பி. அண்ணாமலை) எழுதிய ‘கோஸ்ட்’ எனும் தொடரில் சில கதைகள் மிக நன்றாக அமைந்தன. என் நினைவில் இவைதான் உள்ளன. தீவிர இலக்கிய பரப்பில் என்றால், புதுமைப்பித்தனின் 'காஞ்சனை' ஒரு மறக்க முடியாத படைப்பு.
அதன் பிறகு வந்த பேய்/ அமானுஷ்ய கதைகள் என்றால் ஜெயமோகனின் ‘நிழல்வெளிக் கதைகள்’தான். அதில் ஒவ்வொன்றுமே மிக நன்றாக அமைந்திருக்கும் அசலான ஆக்கங்கள். ‘தம்பி’ என்ற ஒரு கதை மட்டும் சுஜாதாவின் ‘விளிம்பு’ எனும் குறுநாவலை நினைவூட்டுவதாக இருந்தது என்று அப்போது படிக்கும்போது நினைத்துக் கொண்டேன். பேய்க்கதைகள் என்றல்லாமல், அமானுஷ்ய, யதார்த்த உலகை மீறிய அனுபவங்களை கலாபூர்வமாக வெற்றிகரமாக பதிவு செய்த இன்னொரு எழுத்தாளர், யுவன் சந்திரசேகர். அவரது, ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, இவ்வகையிலான நாவல். (க.நா.சு.வின் ‘அவதூதரு’ம் நினைவுக்கு வருகிறது). ‘பகடையாட்டம்’, ‘வெளியேற்றம்’, ‘பயணக்கதை’, போன்ற நாவல்களிலும், ‘நீர்ப்பறவையின் தியானம்,’ மற்றும் பல சிறுகதைகளிலும், இந்த தன்மை உண்டு. பின் இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’ தொடர் நாவல்களிலும், வேறு சில சிறுகதைகளிலும் இந்த அமானுஷ்யமான அம்சங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழின் தீவிர இலக்கிய பரப்பில் பேய்க்கதைகள் சொற்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு இப்போது ‘ஜன்னல்’ இதழில் வெளிவந்த அவரது கதைக் கட்டுரைத் தொடரின் கதைகள், ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ எனும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது தமிழின் தீவிர இலக்கிய பரப்பில் நல்ல பேய்க்கதைகள் இல்லை எனும் குறையைப் போக்குகின்றது. பேய்க்கதைகள் வெறும் த்ரில்லையும் திகிலையும் மட்டும் உருவாக்கினால் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து கிட்டாது. அவற்றையும் இலக்கியமாக்குவது எது என்று யோசித்தால், ஒரு மனிதனின் பெளதீக இருப்பு முடிவுக்கு வந்த பின்னும், அவன் /அவள் அரூப வெளியில் இருக்கக்கூடும், அல்லது இருக்க வேண்டும் என்று நம்ப, அல்லது விழையச் செய்யும் காரணங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. அந்தக் காரணங்கள் மூலமாக, அந்தக் குறிப்பிட்ட மனிதனின் அகம் மட்டுமல்ல, அவன் இருந்த சமூகத்தின் அகமும் அதன் ஆழ்மனமும் செயலாற்றும் விதத்தை பேசுகின்றன. கூடவே, இயல்பாகவே, அறம் என்பது என்ன, அறம் அல்லாதது என்ன, எனும் கேள்விகளையும் இக்கதைகள் எழுப்புகின்றன.
நான் மேலே சொன்ன பிற எழுத்தாளர்களின் கதைகளுக்கும், ஜெயமோகனின் இந்தக் கதைகளுக்குமான குறிப்பிடத்தகுந்த வித்தியாசம், இவை ஏற்கனவே வழங்கி வந்துள்ள கதைகள். எனவே இது ஒரு retelling, மறுகூறல்தான். ஆனால், யதார்த்த உலகின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத நிகழ்வுகளைக் கொண்ட இந்தக் கதைகள் எந்த அளவுக்கு நம்பகமாக சொல்லப்பட வேண்டுமோ அந்தளவுக்கு நம்பகமாகவும், பல இடங்களில், மிகுந்த கவித்துவத்துடனும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதுவே இதன் வெற்றி.
மனிதர்கள் பேய்களாகும் கதைகள், பேய்கள் தெய்வங்களாகும் கதைகள், படிக்கும்போது நம் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் கதைகள், விதியின் வலிமையான தவிர்க்கவியலாத ஆட்டத்தில் வாழ்வைத் தொலைத்தாலும், தாபங்களையும் தாகங்களையும் இழக்க முடியாத பாவப்பட்ட ஜீவன்களின் வேதனை கதைகள், பேயாக மாறி பழி கொண்டலைந்தாலும் பாசம் வைத்துவிட்டவர்களை மட்டும் பழி தீர்த்துக் கொள்ள முடியாமல் தவித்தலையும் ஆத்மாவின் கதைகள், என்று வகை வகையாக வாசிப்புச் சுவைகளைத் தந்து, மெய்ம்மை என்பதுதான் என்ன என்று யோசிக்கவும் வைக்கும் கதைகள். சாதாரண மக்களின் மனதில் அறத்தின் பாற்பட்டு நிற்பவர்களும் தெய்வமாகிறார்கள், அக்கிரமக்காரர்களும் தெய்வமாகி வழிபடப்படுகிறார்கள் என்ற முரணையும் உணர்த்துகின்றன இக்கதைகள். இங்கு வழிபடப்படுவது அறம் மட்டுமல்ல ஆற்றலும்கூடத்தான். அந்த ஆற்றல் அறத்துக்கு எதிராகவே நின்றாலும்கூட.
கவித்துவம் மிக்க ஜெயமோகனின் எழுத்தில் தமிழக கேரள எல்லை குமரி மாவட்டம் அப்படியே உயிர்பெற்று எழுந்து கண் முன் விரிகின்றது. இது அவருடைய Home Turf, வேறு எப்படியும் இருக்க வழியில்லை. மேலும் நான் மேலாங்கோட்டு அம்மன், கள்ளியங்காட்டு நீலி போன்றோர் இருக்கும் இடங்களையெல்லாம் அண்மையில் நேரில் பார்த்து வந்ததும் இந்தக் கதைகளை நன்றாகவே ரசிக்க வைத்தன என்பதையும் சொல்ல வேண்டும். அந்த நிலப்பரப்பு குறித்து அ.கா. பெருமாள், தெய்வங்கள் முளைக்கும் நிலம் என்று ஒரு புத்தகமே எழுதியிருப்பார். தெய்வங்களுக்கு முன்னரே பேய்கள் முளைக்கும் நிலங்கள்தாம் அவை. அப்படிப்பட்ட ஒரு Other worldly ambience அந்த இடங்களுக்கு உள்ளது.
இந்தத் தொகுப்பின் குறைகளாக சில விஷயங்களை சொல்வேன். ஒன்று, தொடராக எழுதப்பட்ட தனித்தனிக் கதைகள் என்பதால், கூறியது கூறல் மிகுதியாக இருக்கிறது. உதாரணமாக, இரணியல் எனும் ஊரின் பெயர் இரணிய சிங்க நல்லூர் என்ற தகவல் அநேகமாக நூலின் மூன்று நான்கு இடங்களில் வருகின்றது. அதே போல வேறு சில வரலாறுகளும் சம்பவங்களும்கூட. கதைகள், கட்டுரைகளை நூலாக தொகுக்கும்போது ஒரு சாதாரண கூர்ந்தாய்விலேயே இது போன்ற குறைகளைக் களையலாம். இன்னொரு குறை, இந்தக் கதைகள் அவை குறித்த ஆசிரியரின் குறிப்புகள் கருத்துகளோடும் எழுதப்பட்டிருப்பதால், கதைகளை பற்றி நாம் யோசிக்கும் முன்னரே கதைகளின் முடிவில் ஆசிரியரே யோசித்து அவற்றைப் பற்றி எழுதிவிடுகிறார். பெரும்பாலும் அவை நன்றாகவே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றைத் தாண்டி நாம் இந்த கதைகள் பற்றிய நமது எண்ணங்களை தொகுத்துக் கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு இந்தக் கதைகளை நம் மனதில் இன்னும் கொஞ்ச காலம் ஊற வைத்து, அசை போட வேண்டும் என்று நினைக்கிறேன். பின், எந்த நாட்டார் சிறுதெய்வத்தை எடுத்துக் கொண்டாலும், அவை முதலில் நாட்டார் மரபில் இருந்தவை, பின் பவுத்த சமண சமயங்களால், குறிப்பாக அதிகமும் சமண சமயத்தால், உள்ளிழுக்கப்பட்டு, பின் மறைந்தபோது இந்து மதத்துக்குள் இழுக்கப்பட்டவை என்று மீண்டும் மீண்டும் கூறப்படுவது. இதற்கெல்லாம் எந்த ஆதாரத்தையும் ஜெயமோகன் தருவதில்லை. வெறும் கதைகள் என்றால் ஆதாரங்கள் அனாவசியம். ஆனால், கட்டுரைகளாகவும் இருப்பதால், ஆதாரங்கள் இருந்திருக்கலாம்.
இவை ஒரு புறம் இருந்தாலும், மும்பை நகரின் தனிமை தாங்க முடியாமல் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வீட்டில், இறந்து போன உறவினர்களுடன் இயல்பாக வாழும் அந்த முதியவரின் கதை, ஓடி எனும் மந்திரவாதி நாயைக் கண்டு பயந்து தப்பி ஓடி வரம் கிருஷ்ணப்பிள்ளையின் கதை, சாஸ்தாவின் நாய் குதிரை போல காட்சியளிக்கும் கதை, அறத்தால் வீழ்ந்த சிதம்பர நாடாரின் கதை, காதல் கொண்டவனைக் கொல்ல முடியாமல் அவனை சூழ்ந்து இருப்பவர்களைக் கொன்று பழிவாங்கும் உம்மிணிக் குட்டியின் கதை, திருவட்டாறின் ஆதிகேசவனின் கீழ் அழுந்திக் கிடக்கும் கேசி கேசிகன் கதை, இவையெல்லாம் என் நினைவில் வெகு காலம் வாழும்.
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- ஜெயமோகன்
நற்றிணை பதிப்பகம்,
அமேசான், காமன்ஃபோக்ஸ்
No comments:
Post a Comment