- வெ சுரேஷ் -
ஜி. கார்ல் மார்க்ஸ் நான் ரசிக்கும் முகநூல் பதிவர்களில் ஒருவர். எந்த விஷயமானாலும், அழகாகவும் தெளிவாகவும், பக்கச் சார்பின்றியும் பேசக் கூடியவர். என்ன, அப்பப்ப கெட்ட வார்த்தைகள் சில ஏதாவது எழுதிவிடுவார். அதை மட்டும் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது இப்போது கொஞ்சம் ட்ரெண்ட் ஆகிவிட்டதால் அவரும் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். அவரது கதைகள் சிலவற்றை சில இதழ்களில் படித்திருக்கிறேன். ஆனால், அவர் பெயரோடு பொருத்திப் பார்த்த நினைவில்லை. அவரது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றின் காணொளி காட்சியில்தான் அந்தக் கதைகள் அவர் எழுதியது என்று தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் அவற்றை அளித்த விதமும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பின்னரே அவரது இரு சிறுகதை தொகுதிகளான ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும், ‘ராக்கெட் தாதா’, இரண்டையும் படிக்க வேண்டும் என எடுத்து படித்து முடித்தேன். ஒருவரைப் பற்றிய அபிப்ராயம் ஏற்பட்ட பின்னர் அவரது முதல் படைப்புகளை வாசிப்பது, ஒரு வகையில் தவறான ஒன்றும்கூட. ஆனால், வாசித்து முடிந்தபின் அந்த முடிவில் தவறில்லை என்று தெரிந்தது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதும் கார்ல் மார்க்ஸும், இந்தக் கதைகளை எழுதியுள்ள கார்ல் மார்க்ஸும் வேறு வேறு ஆசாமிகள் என்பதை இந்தக் கதைத் தொகுதிகள் காட்டுகின்றன.
இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து, கதைகள் பல்வேறு களங்களில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நினைவேக்கம் மட்டுமோ இளம்பருவத்து காதல் மட்டுமோ இல்லாமல், ஏழ்மை, இன்றைய சமூகத்தின் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், மணவாழ்வின் சிக்கல்கள், பெருநகர இளைஞர்களின் வாழ்க்கை முறை, ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுவுதாகவும், மனிதர்களின் ஒளியும் இருளும் நிறைந்த ஆழங்களை அலசுகின்ற ஒன்றாகவும், இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. இவ்வளவு வெரைட்டியை அண்மையில் நான் படித்த எந்த இளம்/ புதிய சிறுகதையாசிரியரும் தரவில்லை.
ஒப்புநோக்க முதல் தொகுதியான, 'வருவதற்கு முன்பிருந்த வெயில்' ஆழமான கதைகளை கொண்டதாக இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள, ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ (இந்த தலைப்பு, சற்றே குழப்பமாகவும், புரியாததாகவும் இருந்தாலும்) ‘காட்டாமணக்கு’, ‘உப்புச் சுவை’, ‘மகிழம்பூ’, எல்லாமே, மிக தீவிரமான உணர்வு நிலைகளை, சம்பவங்களை, சொல்லும் கதைகள். அதிலும் ‘உப்புச் சுவை’ மிகச் சிறந்த ஒன்று. மற்ற கதைகளில் ‘ஆட்டம்’, ஒரு வித்தியாசமான கதை. அதில் ஒரு சிறப்பு, கதையின் மையம் என்று நாம் நினைக்கும் ஒன்றிலிருந்து கதைசொல்லி வெகு இயல்பாக விலகி வேறொன்றில் கவனத்தைக் குவித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறார். அதே சமயம், கதையின் துவக்கத்தில் போடும் முடிச்சு, அப்படியே அவிழாமல் இருக்கிறதே என்ற ஏமாற்றமும் ஏற்படுகிறது. ஆனால், மொத்தத்தில் திருப்திகரமான படைப்புதான்.
ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் ‘சிவப்பு ஓணான்’ எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை என் நினைவுக்கு கொண்டு வந்தது. இந்தக் கதை அளித்த உந்துதலால், ஒரு சிறுகதை எழுதிவிடலாமா என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இதுவரை குறிப்பிட்ட கதைகள் அளவுக்கு, ‘டிராகன் டாட்டூ’வும் ’கட்டுத் தரை’யும் எனக்கு ரசிக்கவில்லை. இதிலும், முதலாவது, நகர்ப்புறத்தின் அதிநவீன வாழ்க்கையை காட்டும் கதை, இன்னொன்று கிராமிய பின்னணியில், ஒரு சம்பிரதாயமான மெல்லுணர்ச்சிக் கதை. கணவனை விட்டுப் பிரிந்து வீட்டுக்கு வந்துவிட்ட மகளை கணவன் வீட்டில் கொண்டு விடும் 'அப்போது அது வேறாக இருந்தது' கதை கொள்ளும் திருப்பமும், மீண்டும் எதிர்பாராத வகையிலும், மிக திருப்திகரமுமாகவே அமைந்திருக்கிறது. ஒரு இளம் படைப்பாளியிடமிருந்து இந்தக் கதை வந்திருப்பதும் ஒரு ஆச்சர்யம்.
ஒரு எழுத்தாளன் தனது சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அதன் பாதிப்புகளிலிருந்து படைப்புகளைச் சமைப்பது முக்கியமானதும் அவசியமானதும்கூட. உடனடியாக பத்திரிகைச் செய்தி கவிதை மாதிரியா என்று நினைக்க வேண்டாம். அன்றாட அனுபவத்தில் துவங்கி என்றுமுள்ள பெரும் சிக்கலான கேள்விகளுக்குப் போவது நுட்பமான கலை. ‘ராக்கெட் தாதா’ தொகுப்பில், அப்படியான இரு முயற்சிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில், பெற்ற பிள்ளைகளை பசியிலிருந்து காக்க முடியாமல், கிணற்றில் எறிந்து கொல்லும் நல்ல தங்காள் கதை ஒரு அதிர்ச்சியளிக்கும் சோக காவியம். ஆனால், அண்மைக் காலத்தில், பெற்ற பிள்ளைகளை அவர்களின் அன்னைகளே கொல்லும் செய்திகளை அடிக்கடி காண நேர்கிறது. ‘ராக்கெட் தாதா’ தொகுதியில், ‘லட்டு’, மற்றும் ‘சுமை’ எனுமிரு கதைகளிலும் கரு இதுதான். ‘லட்டு’ சிறுகதையில், பிள்ளையின் இறப்புக்கு தாய் மட்டுமே அல்லாமல், தந்தையும் காரணமாகிறார். மேலும், அது ஒரு விபத்து என்று வாசிப்பதற்கும் இடம் இருக்கிறது. ஆனால், அந்த தாயின் மனநிலை, நாம் கண்டிருக்கும், மரபான ஒரு தாயின், மனநிலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது போலில்லாமல், ‘சுமை’ எனும் இன்னொரு கதையில், தாய் மட்டுமே பிள்ளை இறக்க காரணமாகிறார். ‘சுமை’யில் அதற்கான பின்னணியும் அந்த தாயின் செயலில் இருக்கக்கூடிய நியாயமும் தர்க்கமும் மிக நுட்பமாகவும் நம்பகமாகவும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ‘லட்டு’ கதையில் அது கைகூடி வரவில்லை. தவிர, அதில், ஆசிரியரின் எள்ளல் மிகுந்த இடையீடு ரசிக்கும்படியாக இருந்தாலும், கதையின் கனத்தை குறைத்து விடுகிறது. 'சுமை' சமகாலத்தில் எழுதப்பட்ட அபாரமான, மிகச் சிறந்த கதைகளில் ஒன்று.
‘ராக்கெட் தாதா’ தொகுப்பில் ‘சுமை’க்கு அடுத்த சிறந்த கதைகள் என்று, ‘சுமித்ரா’, ‘படுகை’, ‘ராக்கெட் தாதா’, மூன்றையும் சொல்லலாம். ‘சுமித்ரா’ அபூர்வமான ஒரு கதை. இங்கும் நாம் நினைத்திருக்கும் முடிவுக்கு மாறான ஒரு முடிவினை அளிக்கிறார் காரல் மார்க்ஸ். அது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘ராக்கெட் தாதா’, பிரிவின் துயரை மிக இலகுவான முறையில் விளையாட்டாகச் சொல்கிறது. ஆனாலும், அதன் அடிப்படை உணர்வை வாசகனுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறது. ஒரு புன்னகையின்றி முடிக்க முடியாத கதை இது. 'படுகை' உயிர்மையில் வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போதுதான் இவருடையது என்று தெரிந்தது. மனதை உலுக்கும் ஒரு கதையிது. குறிப்பாக ஒரு வன்புணர்விலிருந்து அந்தப் பெண் தன்னை காத்த்துக் கொள்ளும் இடமும் விதமும் தமிழ் சிறுகதைகளில் வந்திராத ஒன்று. அதற்குப் பின் ‘கற்படிகள்’, ‘நிழல்’, ஆகியவை, ஒரு தளத்திலும், ‘கா’ஃபி ஷாப்’ எனும் கதை வேறொரு தளத்திலும் இருக்கின்றன. மொழியழகு மிக்க ‘பிரார்த்தனை’ எனும் கதை பகடியா என்று எனக்கு புரியவில்லை. ‘நிழல்’, ஏதோ ஒரு வகையில், யதார்த்தமாக, நம்பும்படி அமையவில்லை.
இந்த தொகுப்பிலும் கதைகள் எல்லாவற்றிலுமே கூறுமுறை, மொழி, நடை, வார்த்தை வளம், ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. (இதில் ‘நிழல்’ எனும் கதையில் பிராமண பேச்சு வழக்கு முழுமையாக கைவரவில்லை என்று சொல்ல வேண்டும்.) ஆனால், ‘சுமித்ரா’, ‘சுமை’, ‘படுகை’, ‘லட்டு’ இந்த நான்கு கதைகளைத் தவிர, மீதிக்கதைகளின் பேசுபொருள் கனமாக இல்லை என்பதை குறையாக காண்கிறேன். இக் கதைகள் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. கதையில் புறத் தகவல்கள் (Detailing and Cataloguing), பாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், எல்லாமே மிக அருமையாக கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இக்கதைகள் முடியும்போது இதற்குத்தானா இவ்வளவும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனோ ஒரு அற்ப விஷயத்துக்கு இவ்வளவு அழகையும் உழைப்பையும் கொடுத்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றுகிறது. இதைச் சொல்லும்போதே இது ஒரு அகவயமான உணர்வு என்பதை உணர்கிறேன். எனக்கு முக்கியமில்லாததாக தோன்றும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு முக்கியமாக தோன்றலாம். சொல்முறையும் நேர்த்தியும் கைகூடி வருவதே முக்கியமானதும் அரிதானதுமாகும். அது இந்த இரு தொகுதிகளிலுமே மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
அதுவே, இன்னும் தொடர்ந்து பல சீரிய படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. முகநூலில் பல துறைகளைப் பற்றியும், மிகத் தீவிரமாக உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ். அதை தாண்டி, அதனையும் உள்ளீடாக்கி, வருங்காலத்தில் ஒரு படைப்பாளியாக அவர் எப்படித் தொடர்ந்து செயல்படப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஜி. கார்ல் மார்க்ஸ் கணபதி-
வருவதற்கு முன்பிருந்த வெயில், எதிர் வெளியீடு
அமேசான், மரீனா புக்ஸ்
ராக்கெட் தாதா, எதிர் வெளியீடு
பனுவல், காமன் ஃபோக்ஸ்
No comments:
Post a Comment