‘வாரச்சந்தை’ எனும் கவிதை மூலமே நான் கண்டராதித்தனின் உலகுக்குள் முதலில் நுழைந்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ரசிக்கத்தக்க கவிதையோடு உள்ளே நுழைவது தொடக்கத்திலேயே கவிஞனின் அக உலகத்தை நமக்குத் திறந்து வைத்துவிடுகிறது. விக்ரமாதித்தன் கதையில் வரும் ஓவியன் சிறு நகத்திலிருந்து பெண்ணைத் தத்ரூபமாக வரைவது போலத்தான் கவி உலகும். சிறு படிமத்தை நாம் அறிந்த காட்சியில் பொருந்திக் காட்டியதும் நமக்கான வாசல் திறந்துவிடுகிறது.
வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்.
நாலும் நாலுதிசையை
வாங்கித்தர கைகாட்டின.
அவள் குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.
பொடிசுகள் பின்னேவர
பொரியுருண்டை கீழே விழுந்து
பாதாளத்தில் உருண்டது.
ஏமாந்த குடும்பம் எட்டிப்பார்க்க
பாதாளபைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி
நல்லசுவை நல்லசுவை என
நன்றி சொன்னது.
இது கிட்டத்தட்ட இசையின் உலகை எட்டிப் பார்க்கும் காட்சியைக் கொண்டிருக்கிறது. கடைசி நான்கு வரிகளில் கிடைக்கும் சித்திரம் நமது கற்பனையை சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்கு இட்டுச் செல்கிறது. பாதாளபைரவி கூட வறியவளாக இருக்கும் நிலை. நாலு திசையைக் கைக்காட்டிய குழந்தைகளுக்கு பொரி உருண்டையை மட்டுமே வாங்கித் தர முடிந்த சித்திரம் கன்னத்தைக் கிள்ளும் பாதாளபைரவிக்குத் தெரியாது. தெரிந்தாலும் அவள் அலட்டிக் கொள்ள மாட்டாள். ந.ஜயபாஸ்கரன் கவிதையில் வரும் மதுரை மீனாட்சி கோயில் சிற்ப மோகினி வெறுமையான அகப்பையை நீட்டும் சித்திரத்தை மீறும் ஒரு அவலம் இங்குண்டு.
இந்தச் சித்திரத்திலிருந்து வேறொன்றைத் தொடும் பயணத்தை தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார். ரப்பர் பந்தை இலவசமாகக் கேட்டவளுக்கு அந்தரத்துக்கும் அந்தரத்துக்கும் இடையே குதிக்கும் பந்தைத் தந்துவிட்டு விலகும் இடம் பெரிய கனவு நனவாகும் இடம். பாதாளபைரவி இருக்கும் அதே ஊரில்தான் பந்து விற்பவனும் ஊராரின் கனவுகளை சாத்தியமாக்கிவிட்டுப் போகிறான். இப்படி நம்பிக்கை கொடுக்கும் சித்திரம் ஒரு சில கவிதைகளில் மட்டுமே வெளிப்படுகிறது.
இவரது முந்தைய தொகுப்பான ‘சீதமண்டல’த்தில் இல்லாத வகையில் ‘திருச்சாழல்’ தொகுப்பில் மரபிலிருந்து சுட்டும் வரிகள் சரியான இடத்தில் பொருந்திப் போயுள்ளன.
உலகினில் பொருட்களுக்கு விலையுண்டு. தக்க விலை. வாங்குபவர் தீர்மானிக்கிறாரா? தொடர்ந்து அதையே வாங்குபவர் தனது தகுதியை நிலைநாட்டி விடுகிறார். பிழையான அரசியலை அரவணைப்பதும் அதுபோலத்தான் என்கிறார் கண்டராதித்தன். திடுமென வந்து நிற்கிறது ஒரு வரி-
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.
கடைசி வரி இரணிய வதைப்படலத்தில் வருவது. மன்னவன் என்றும் பிழையானவன் அல்ல, மக்களின் பிழையே தவறான மன்னனை அரியணையில் உட்காரவைக்கிறது எனும் பொருள் வரும்படியான இடத்தில் வரும் வரி. கம்பனிலிருந்து ஒரு நேர்க்கோடு இட்டுக் காட்டுகிறார்.
கண்டராதித்தனின் மொழி படிமங்களால் ஆனது. அதை அவர் அன்றாட வாழ்விலிருந்து எடுத்துக் கொண்டாலும் எங்கோ ஓர் அழைப்பு அவரது கவிதையை மரபின் ஒலி நயத்துக்குள்ளும், தொன்ம காட்சியினோடும் ஒடுங்க வைக்கிறது. அதனால், இயல்பாக யதார்த்த தளத்தில் இருக்கும் கவிதைகள்கூட பாடும்படியான ஒலி அழகோடு அமைந்திருக்கிறது. இன்று கவிதைகளைச் உரக்கச் சொல்லிக் காட்டுவது வழக்கொழிந்து போன மரபு என்றாலும், கவிதை ஒரு மந்திரத்தொனியை அடைவதற்கு ஓசை நயம் அவசியமானது.
..
சொல்வது சொல்
சொன்னது சொல்
சொல்
சொல்
கண்டராதித்தனின் கவிதைகளில் சில பகடியை மிக இயல்பாகக் கடத்துகின்றன. தொன்ம நிகழ்வுகளோடு இணைக்கும் சரடை இழக்கும்போது அவரது கவிதைகள் அன்றாடத்தனத்துக்குள் புகுந்துவிடுகின்றன. உயர் தளத்திலிருந்து கீழே இறங்கும் இது போன்ற கவிதைகளை மென்மையான பகடி மூலம் அவர் சமன் செய்கிறார்.
‘இன்று அரசியலற்றவன் யாரும் கிடையாது’ எனும் பின்நவீனத்துவப் போக்கை சீண்டிப் பார்க்கும் கவிதை ஒன்று. அரசியல் என்பது காகிதத்தில் எழுதிப் பார்க்க மட்டுமாகவும், பாவனை அறமாகவும் ஆகிப்போன இச்சூழலில் தனிமனித சுதந்திரம் என்பது இழப்பதற்காக மட்டுமே என்பதைச் சொல்லும் கவிதை.
அரசியல் பிடிக்காதென்பதே
அரசியல்தானென்றார்
..
மரவட்டையைத் தள்ளுவது போலத்
தள்ளிவிட்டார்
பண்பட்டவர்தான்
பண்பட்டவரென்றால்
எந்நேரமும்
பண்பட்டேயிருக்க முடியுமா?
கம்பனிடம் அரசியல் இல்லை எனச்சொல்லிவிடமுடியாது. கம்பனின் அன்றாட வாழ்வின் விழுமியங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் பதில் தேடும் விதமாக ராம காதையையும், தொன்மப் படிமங்களையும் இணைத்துப் பார்க்க அவர் எடுத்துக் கொண்டது ராமாயணம் எனும் இதிகாசம். சிறந்த உதாரணம் அதில் வரும் பிரகலாதன் கதை. நேரடியாக ராமாயணத்துக்குத் தொடர்பில்லாத சரடு. பக்தியை முன்னிறுத்தி இணைக்கப்பட்டது. கம்பரின் காலத்தைக் கணக்கில் வைத்தால் அன்றைய நிகழ்ச்சிகளையும், மரபையும் இணைத்துக் காட்டிய கவிதைகள் என்றே சொல்லலாம்.
நிழல் விளையாட்டு போல சிறு படிமமும் பெரும் உருவம் கொள்ளும் காவிய காலத்திலிருந்து, பெரிய சித்திரங்கள் சிறு விளையாட்டுகளாக மாறும் களம் கண்டராதித்தனின் கவிதைகள். அவ்வுருவங்களுக்கு காரண காரிய தொடர்பு கிடையாது. மரபில் அவர்களது இடம் பெரியது. பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்குக் காரணமாக இருப்பது. இவரது கவிதைகளில் அவை சுட்டிச் செல்லும், எட்ட நின்று பார்க்கும் வடிவங்கள் மட்டுமே. மரபிலிருந்து விலகி கண்டராதித்தன் கவிதைகள் இன்றைய காலத்துக்கு இவ்வழியே பொருந்திப் போகிறது. இது ஒரு வழிப்பாதையல்ல.
வெளிச்சங்கள்
குச்சி மிட்டாய் சுவைக்காக
அழுது கொண்டிருக்கிறது குழந்தை
கழுநீர்ப்பானைக்குள் தலைவிட்டுக்
குடிக்கிறது தெருநாய்
மணியோசைக்கு முன்னும் பின்னும்
இருந்துகொண்டிருக்கிறது மரணம்
சாரையும் கருவிழையானும்
இழைய எழுகிறது மகுடியோசை
கல்லறைக்குள்ளிருந்தபடியே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
திரிபுவனச் சக்கரவர்த்திகள்
மகுடியோசை, குச்சிமிட்டாய் கிடைக்காமல் அழுது கொண்டிருக்கும் குழந்தை எனப் பெரிய சித்திரங்களை எட்டிப் பார்க்கும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஆபத்பாந்தவர்கள் அல்லர். கல்லறைக்குள்ளிலிருந்து எட்டிப் பார்ப்பவர்கள் மட்டுமே. இன்றைக்கான விமர்சனம்.
‘சாழல்’ என்பது சொல்விளையாட்டுப் பாடல் என்பதையும் தாண்டி அது புராணக் கதையையும தத்துவத்தையும் ஒன்றாகத் திரட்டிப் பெரியதாகக் காட்டும் ஒரு கேள்வி-பதில் / உரையாடல் வடிவம் என்றும் சொல்லலாம். ஒரு பெண் சிவனின் பெளதிக உடலை கேலி செய்வதும், மற்றொருவள் அதற்கு தத்துவ விளக்கம் அளிப்பதுமாக அமைந்த பாணியிலிருந்து தொடர்ந்து தனக்கும் உலகுக்குமான உரையாடலாக கண்டராதித்தன் கவிதை மாறியிருக்கிறது.
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
(திருவாசகம், திருச்சாழல், 2)
கண்டராதித்தன் கவிதைகளில் வரும் தெய்வங்கள் நின்று கொல்வதுமில்லை, வரம் தருவதுமில்லை. நம்மைத் தனியே விட்டுச் சென்ற உலகினுள் அவர்களும் இப்போது விருந்தாளியாக வந்து ஏமாற்றமும், தரித்திரமும் பிடுங்கித் தின்னும் சிலரது வாழ்வைக் களிக்கிறார்கள். அவல நிலையில் இருக்கும் வாழ்வை கடத்துபவர்களான நம்மால் இந்த நிலைக்கான காரணத்தை விளக்க முடியாது. சிறு புன்னகையை வாயோரம் தேக்கி வைத்திருக்கும் தெய்வங்கள் நம் இயலாமையையும் தரிசனம் செய்கின்றன.
திருச்சாழல் (கவிதைகள்)
ஆசிரியர் - கண்டராதித்தன்
பதிப்பு - டிசம்பர் 2018
வெளியீடு - வியன்புலம்
இணையத்தில் - Common folks
No comments:
Post a Comment