செல்வேந்திரன் எழுதிய பாலை நிலப்பயணம் நூல் ரெண்டு வாரங்களுக்கும் குறைவான பயணத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்டது. ராஜஸ்தான், குஜராத் வழியே பெரும்பாலும் பாலை நிலத்தில் நண்பர்களுடன் கழித்த நாட்களைப் பற்றியவை. இந்திய நிலத்தில் சிறு பயணம்கூட எப்படியோ நம்முள்ளே செல்லும் நெடும்பயணமாக மாறும் வாய்ப்பை உள்ளடக்கியது. அதுவும், வெறும் ஐநூறு கிமீ பயணத்தில் வேறொரு நிலப்பரப்பும், உணவுப் பாரம்பரியமும், மொழியும் சகஜமாகப் புழங்கும் இடத்தில் சட்டென ஒரு விலகலும் நெருக்கமும் நம்முள் உருவாகிவிடும். அத்தன்மையை சிறிதும் விட்டுவிடாமல் எழுதப்பட்ட சிறு குறிப்புகளின் தொகையே இந்த நூல்.
செல்ஃபிக்களும், கேளிக்கைகளும் மட்டுமே நிறைந்த பயணங்களை மீறி இந்திய நிலத்தின் அறிய முடியாத தடங்களைத் தேடிச் செல்வது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஜெயமோகனும் அவரது நண்பர்களும் அப்படி ஒரு பயணக்குழுவாக இந்தியா முழுவதும் சென்றிருக்கிறார்கள். பாலை நிலங்களைக் கடந்து செல்வது என்பது வடமேற்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கிமீகள் பயணம் செய்வதாகும். ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் பயணத்தில் செல்லுமிடமெல்லாம் நினைவுகளும் வளர்ந்த ஊரின் சூழலும் கூடவே வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 250 கிலோமீட்டர்கள் பயணம். சாலைவழியாகச் செல்லும் ஒவ்வொரு நாளும் நிலக்காட்சி நம்முன்னே மாறிக்கொண்டே வரும் சித்திரம் புத்தகத்திலும் கிடைக்கிறது. வழியில் தெரியும் பல கிலோமீட்டர்கள் நீளும் மண் மேடுகள், கானுயிர்கள், தொல்லியல் இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் என நம்முன்னே நிறைத்துக் கொண்டே இருக்கிறார் செல்வேந்திரன். அதையும் அவருடைய வழக்கமான சுவாரஸ்ய நடையில் செல்வேந்திரன் எழுதியிருப்பது வாசிப்பை இனிமையாக்குகிறது.
இந்திரன் குறித்த தகவல்களையும், தொல்லியல் தடங்களையும் தேடுவது தனது கனவுகளில் ஒன்றெனச் சொல்லும்போது அந்த ஆர்வம் நமக்கு தொற்றிக் கொள்கிறது. பொதுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் பயணம் செல்வதோடு இதுபோல் வரலாற்றுச் சின்னங்களையும், மறைந்துபோன பண்பாட்டு ஆவணங்களையும் தேடுவது பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
ஜெய்ப்பூரிலிருந்து ஓசியான் செல்லும் வழியில் சண்டி கி மாதா ஆலயம் ஜெயமோகனின் ‘அருகர்களின் பாதை’யில் விரிவான அறிமுகத்தை அளித்திருந்தது. அதனுடன் வறண்ட நிலமும், முள்ளுச்செடிகளும் கூடிய பயணம் தூத்துக்குடி மாவட்டத்தினூடான பயணம் போல இருப்பதாக நினைவு படுத்திக் கொள்கிறார் செல்வேந்திரன். ஐநிலங்கள் திரிபடைந்து பாலை ஆவதை ஆவணப்படுத்தியிருந்த சங்கப்பாடல்களில் படித்த பாலைப் பயணங்களும், கடவுளர்களும் நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே விலங்குகளும். நீல்கே மான்களைப் பற்றிய குறிப்புகளும் பயணக்குறிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
செல்வேந்திரனின் எழுத்தில் பயணத்துக்கு இணையாக நண்பர்களுடனான உரையாடல்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளார்ந்த நட்புக்கு இலக்கணமான கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள். நெருக்கமான உள் குழுமக் குறிப்புகள் இருந்தாலும் அவையும் பேசுபவர் பற்றி மேலதிகத் தகவல்களாக வந்துள்ளன. பின்னிரவில் அவர்களுக்கிடையேயான விளையாட்டுகளும், பழைய ஞாபக அலசல்களும் நம் நண்பர்களுடன் இப்படியான பயணம் செல்லத் தூண்டுபவை.
"சிதம்பரம் நடராஜரை தரிசித்தவன் மூர்த்தி கபே இட்லி கொத்சுவை உண்ணாமல் முக்தி உண்டா" - இது போல் தேடித் தின்பதற்கு இப்படிப்பட்ட பயணங்களில் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஆனால், உணவை ருசிக்காமல் ஒரு ஊரின் பயணம் முழுமையடையாது என்பதால் முடிந்தவரை அந்தந்த ஊரின் சிறப்பு உணவுகளை சுவைக்கும் முயற்சிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. எந்த உணவின் சுவையும் அவர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், நண்பர்களிடையே நடக்கும் சிரிப்பும் கேளிக்கையும் பயணத்தை சுவாரஸ்யமாக்கியதை உணர முடிகிறது.
அருகர்களின் பாதையைத் தொடர்ந்து செல்லும் பயணம் என்பதால் ஜெயமோகன் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் நினைவுக்கு வராமல் இல்லை. வணிக நகரான ஓசியான் பற்றிக் கூறும்போது அவ்வூரின் வணிகர்கள் எழுப்பிய சாஷி மாதா ஆலயத்தின் நம்பமுடியாத கலை நுட்பங்களையும் விவரித்துள்ளார். நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்களையும், கோபுரங்களையும் பின்னர் இணையத்தில் தேடிப்பார்த்தபோது பேளூர், ஹலபேடு போன்ற கலை நுட்பங்களுக்கு இணையானது என ஆசிரியர் சொல்வதோடு ஒத்துப்போகமுடிந்தது. ஜைன நகரமான ஓசியான் பற்றிய குறிப்புகள் வரலாற்றின் சில பக்கங்களை நம்முன் கொண்டு வருகின்றன.
ஒரு உரையில் ஜெயமோகன், பாலை நிலம் அதிகம் உள்ள தமிழ்நிலத்தில் எழுந்த கம்ப ராமாயணத்தில் பாலை தொடர்பான குறிப்புகள் கிட்டத்தட்ட இல்லை எனக் குறிப்பிடுகிறார். சங்கப்பாடல்களுக்குப் பிறகு பாலை பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே நம் இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாலை நிலப்பகுதி வழியே செல்லும்போது அங்கு தென்படும் சிங்காரா மான்கள், பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பயணம் செல்லும் நோக்கத்தில் நான் பயணக் குறிப்புகளைப் படிப்பதில்லை. இருக்கும் இடத்தை விட்டு நகராமலேயே ஒரு அகப்பயணம் செல்லக்கூடிய சாத்தியங்களை இப்படிப்பட்ட குறிப்புகள் அளிக்கின்றன. அங்குள்ள நிலத்துடன் விலங்குகளும், பறவை இனங்களும், உணவுகள், மக்களும் நெடிய பண்பாட்டுத் தகவல்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன.
சாம் டூன்ஸ் பகுதி பற்றி எழுதிய குறிப்பு தனித்துவம் மிக்கது. மணலில் தடுமாறி விழுந்து விளையாடியதை மனமும் உடலும் ஒருசேர இளமைக்குள் திரும்பிய அனுபவம் என்கிறார். இது ஒரு விதத்தில் பயணத்தை மறக்க முடியாத வகையில் மாற்றுகிறது. நம் தாய், ஊர், இளமைக்கால நினைவு போன்றவற்றைத் தூண்டக்கூடிய அனுபவங்கள் நாம் கடந்து வந்த காலத்தை மீண்டும் வாழ வைக்கின்றன. கருவறைக்குத் திரும்பிச் செல்லும் பயணம் போன்றது. நம் பயணத்தில் ஒரு இடத்திலேனும் இப்படி ஓர் அனுபவம் வாய்த்தால் அது மறக்க முடியாததாகிவிடும். இருள் கவியும் மாலை நேரத்தில் பாலைவனத்தில் தன்னை மறந்து பிரமிள் கவிதைக்குள் மூழ்கி, தனது மனைவி குழந்தையின் நினைவை மீட்டு, சொல்லவியலா சிறு வயது நினைவுகளால் மனம் சிக்குண்டு ஓரிடத்தில் முட்டி நிற்கும் அனுபவம் உணர்வுபூர்வமானது. இப்படிப்பட்ட அனுபவங்களை அவர் தொடர்ந்து எழுத்தில் பதிய வேண்டும் எனும் ஆவல் உருவாகிறது.
பார்மர் நிலக்காட்சிகள் மிகவும் நிதானத்தோடு எழுதப்பட்டுள்ளன. பல நூறு கிலோமீட்டர்கள் பாலை நிலத்தில் பயணம் என்பது சாகசக்காரர்களுக்கானது. அவ்வப்போது எதிர்படும் கிராமங்கள், விலங்குகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. அப்போது அந்தந்த ஊரின் அமைப்பு, உணவு முறைகள், இசை போன்றவை மட்டுமே இவர்களுக்கானத் துணை. பூகம்ப நகரான பூஜ் பற்றிய சித்திரம் கொண்டாட்டங்களையும், சுவையான உணவைப் பற்றியதுமாக இருக்கிறது. ஹிம்சார் ஏரிக்கு அருகே இருக்கும் சட்டார்டி அதிகம் பிரபலமில்லாத இடம். அங்கிருக்கும் சிற்பங்களும், தூண்களும் மிகப்பழைய பண்பாட்டின் எச்சங்கள்.
கானமயில், மண்ணுள்ளி, கிரேட் இந்திய பஸ்டாட் எனப் பலவற்றைப் பார்த்துச் செல்வதோடு கிச்சானில் அங்குள்ள ஊர்ச் சிறுவர்களுடன் விளையாடிய கிரிக்கெட், உணவு கிடைக்காமல் ஒரு சாராயக்கடையில் சாப்பிட்டது, நண்பர்களுடனான அதிகாலை வரையிலான பாட்டுக் கச்சேரி, வெண்மணல்களில் கால் புதைய நடந்தபடி தன்வயம் இழக்கும் தருணங்கள் என மிகவும் கலவையான அனுபவத்தை இந்த நூல் வழங்குகிறது. சிறு நூலானாலும் கட்டாயம் வாசிக்க வேண்டிய பயண நூல்.
தலைப்பு - பாலை நிலப்பயணம், செல்வேந்திரன்
நூல் சுட்டி - amazon
Welcome to JamBase casino and get a $500 sign-up bonus
ReplyDeleteJamBase casino is available 문경 출장샵 in the United 서울특별 출장샵 States. We are 경주 출장샵 a 계룡 출장샵 fully 제주도 출장마사지 licensed online gambling site. We're here to provide you with the latest