சிறப்பு பதிவர் : அஜய்
பெருமாள் முருகன் நாவல்களின் அமைப்பை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் - ஒன்று, அதன் களம், சூழல் சார்ந்து. விளைநிலங்கள் விற்கப்படுவதாகட்டும், மாதாரிகளின் வாழ்நிலமாகட்டும், திரையரங்காகட்டும், அதன் களம் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். இரண்டாவது, மனிதர்கள், உறவு சார்ந்து - மனித உறவுகளில் உள்ள பாசமும் பிணைப்பும், அதற்கு நேர்மாறாக, அவற்றில் உள்ள வன்முறையும் பொறாமையும்; காலம் மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் உறவுகளில் ஏற்படும் இயல்பான நெருக்கங்களும் விலகல்களும். இவை ஒன்றாக இணைவதையே பெருமாள் முருகனின் நாவலாக பார்க்கிறேன், அவருடைய சமீபத்திய நாவலான ஆளண்டாப் பட்சி வரை.
