“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’
- எர்னெஸ்ட் ஹெமிங்வே (கிழவனும் கடலும்)
ஆம்னிபஸ் நண்பர்களுக்குள் அவ்வப்போது முளைக்கும் சில விவாதங்கள் சுவாரசியமானவை. ஒரு நண்பர் வுட்ஹவுஸ் சந்தித்த அவருடைய ஆதர்ச எழுத்தாளர்களை பற்றி கேட்டுக்கொண்டிருந்த போது ஹெமிங்வே பற்றிய பேச்சு வந்தது. “தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை இருக்காது என்பதுதான் இவரிடம் விசேஷம். பெரும்பாலும் மாறி மாறி பேசிக்கொள்வதுதான் கதை. ஆனால், வர்ணனைகள் இருக்கும் இடங்கள் பிரமாதமா இருக்கும். அழகா எழுதத் தெரியாதவரல்ல. நீட்டி முழக்கி கதை சொல்வதைப் பெண்மைன்னு நினைச்சார். எல்லாத்திலும் ஆண்மைதான் வேண்டும் - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்றது ஆண்மை. Macho என்பதை வழிபட்டவர். எழுத்துன்னா வீர்யமா இருக்கணும்.” என்று ஹெமிங்வேயின் எழுது முறை பற்றி மற்றொரு நண்பர் விவரித்தார். ஹெமிங்வேயை வாசிக்க கிழவனும் கடலும் மிகசரியான தொடக்கம் என்றார்..
