இயற்கைக்கும்
மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு,
போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே. அவ்வகையில்
சாயாவனம் மிக நுட்பமான விவரங்கள் கொண்ட நாவல். சுதந்திரத்திற்கு முன்பான தமிழக
கிராமங்களில் இருந்த வாழ்வு முறைகள், சாதிய கட்டமைப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு . வாசிப்பவரை
கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்நு கொள்ள வைக்கும் அற்புத
அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி. ஆசிரியரின்
குரல் ஒலிக்காமல்
வாசிப்பவரின் மனதில் கதைக்களம் விரிந்து ஒட்டுமொத்த தரிசனத்தைப் பெறுவது நல்ல
இலக்கிய அனுபவம்.
மிகச்சிறிய
வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும்
கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில்
புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர
வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று. கானகமும்
செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது.
தஞ்சையின்
ஒரு சிறு ஊரான சாயாவனத்திற்கு இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் , அவ்வூரின்
ஒரு வனத்தை கொஞ்சங் கொஞ்சமாக அழித்து கரும்பாலை ஒன்று கட்டுவதே கதைக்களம். சிதம்பரத்தின்
அம்மாவின் சொந்த ஊர் அது என்றாலும் அவன் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவன் என்பதால்
அனைத்து பழக்கங்களும் மனிதர்களும் அவனுக்கு விநோதமாகவே தெரிகின்றனர்.
