குறிப்பு: காலச்சுவடின் புதிய வெளியீடான அருந்ததி ராயின் ‘காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை’ என்னும் நூலின் முன்னுரை. பதிப்பகத்தார் மூலம் ஆம்னிபஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் போர் நிகழ்ந்துவருகிறது. அதற்கு 70,000 பேர் பலியாகியுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்குச் சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.’ பல்லாயிரக்கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினர் 5 லட்சம் பேர் காவல் புரிகிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய படைமயப்பட்ட பகுதி காஷ்மீரே. (அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை 1,65,000.) காஷ்மீர் தீவிரவாதத்தைத் தாங்கள் பெரிதும் அடக்கிவிட்டதாக இந்தியப் படையினர் இப்போது வலியுறுத்துகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் படைபல ஆதிக்கம் வெற்றி ஆகுமா?