பதிவர் - வெ. சுரேஷ்
1999 அல்லது 2000ம் வருடம் என்று நினைக்கிறேன்.வழக்கம் போல விஜயா பதிப்பகம் சென்று சில வழக்கமான சிறு பத்திரிக்கைகள் வாங்கிவிட்டு வேறு ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டதில் அரண்யம் என்ற பளபளப்பான ஒரு பத்திரிக்கையை பார்த்தேன் முதல் இதழ் என்று தெரிந்து புரட்டியதில் பரிச்சயமான சில எழுத்தாளர்கள் பெயர் இருந்ததால் வாங்கினேன். அதில்தான் யுவன் சந்திரசேகர் என்ற பெயர் அறிமுகமாகியது. 23 காதல் கதைகள் என்ற சிறுகதையா குறுநாவலா என்று சொல்லமுடியாத ஒரு ஆக்கத்தைப் படித்தேன். சற்றே காமச்சுவை தூக்கலாக இருந்தபோதிலும் பதின்ம பருவத்தின் மனநிலையும் மனித வாழ்வில் சிறியதாகத் தோன்றும் எளிய தற்செயல் நிகழ்வுகளின் நீடித்த தீர்மானகரமானத் தாக்கங்களும், மனித சுபாவத்தின் எளிதில் அனுமானிக்க முடியாத தன்மைகளும் அழகாகப் பதிவாயிருந்தன. யுவன் சந்திரசேகர் என்ற பெயரை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரேதான் எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர் என்றும் தெரியவந்தது.
பிறகு அவரது குள்ளச்சித்தன் சரித்திரம் படித்தேன். தமிழின் யதார்த்தவாத, இயல்புவாத நாவல்களையே ஒரு 15 வருடங்களாகப் படித்து வந்திருந்த எனக்கு அது ஒரு பெரிய மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வில் நடக்கும் இயல்புக்கு மீறிய சம்பவங்களை இயல்பான, குறும்பும் குதூகலமும் கொப்பளிக்கும் நடையில் கூறிய மிக சுவாரசியமான நாவல் அது. க.நா.சுவின் அவதூதர் நாவலுக்குப் பிறகு தமிழில் நான் படித்த நல்ல மீயதார்த்த படைப்பும் அதுவே. இதிலும் வாழ்வின் மீது எதிர்பாராத தற்செயலாக நிகழும் சிறு நிகழ்வுகள் ஏற்படுத்தும் நீடித்தத் தாக்கங்களும், மனித மனத்தின் முன்ஊகிக்க முடியாத புதிர்த் தன்மைகளும் மாற்று மெய்ம்மை என்று அவர் சொல்லும் யதார்த்தத்தை மீறிய நிகழ்வுகளும் பெரும்பங்கு வகித்தன. இத்தன்மைகள் யுவனின் signature அம்சங்கள் என்று சொல்லலாம்.