காலத்தால் மறக்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்கள் பட்டியலில் தன் கோபால்
முகர்ஜியைச் சேர்க்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்தவரையில் பலருக்கு
அவரைத் தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல், இணையத்தில் எதையோ தேடிக் கொண்டு போய்,
கடைசியில் தன் கோபால் முகர்ஜியைச் சென்றடைந்தேன். அவர் யானைகளை வைத்து இரண்டு புத்தகங்கள்
எழுதியிருக்கிறார் என்பது காரணமாக இருக்கலாம். தன் கோபால் முகர்ஜி, சிறுவர்களுக்கான
எழுத்தாளர் மட்டுமல்ல. அவருடைய படைப்புகள் சிறுவர் கதைகள், புனைவுகள், கவிதைகள், அபுனைவுகள்
என்று பல வடிவங்களைக் கொண்டவை. சிறுவர்களுக்கான புத்தகங்களின் பேசுபொருள் மனிதர்களுக்கும்
மிருகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தங்கள் தான்.
மேற்கு வங்காளத்தில் 1890ல் பிறந்து, அங்கிருந்து ஜப்பானுக்குச்
சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். முகர்ஜியின் வாழ்க்கைச் சரித்திரம்
கொஞ்சம் குழப்பமானது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தேடினால் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம்.
இவருடைய சகோதரர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.
அவர் கைது செய்யப்பட்ட பின், தானும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று தன் கோபால், கொல்கத்தாவிலிருந்து ஜப்பானுக்கு
தப்பிப் போனதாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் சிறிது காலம் கல்வி பயின்றபின், அங்கிருந்து
அமெரிக்காவுக்குப் பெயர்ந்திருக்கிறார். ஆனால், ஏன், எப்படிப் போனார் என்பதும் இங்கே
கொஞ்சம் குழப்பம் தான். ஆனால், இரண்டு இடங்களிலும் அவர் இந்தியாவில் நடந்து வந்த அன்னிய
ஆட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஜவஹர்லால் நேருவிடமும் அவருக்கு
பழக்கம் இருந்திருக்கிறது. எழுத்தைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு
இருந்ததாகத் தெரிகிறது. சிறுவர் இலக்கியத்திற்கான விருதான, நியூபெர்ரி மெடல் 1928ல்
கே-நெக் நாவலுக்காக பெற்றார். பின்னர் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால், 1936ல்
தற்கொலை செய்து கொண்டார்.
~
கே-நெக் ஒரு புறாவின் கதை. புறாவை வளர்க்கும் சிறுவனின் (தன்
கோபால்) பார்வையிலும் புறாவின் பார்வையிலும் மாறி மாறிக் கதை சொல்லப்படுகிறது. ஒரு
பத்து பதினைந்து பக்கங்கள் தாண்டும் போதே முகர்ஜி எவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்பதை
உணர முடியும். புறாக்கள் எப்படிப் பறக்கின்றன என்றும், தங்களுடைய எதிரிகளிடமிருந்து
புறாக்கள் எப்படித் தப்பிக்கின்றன என்பதையும் மனிதனுடைய பார்வையிலும் புறாவினுடைய பார்வையிலும்
எழுதும் போது, ஆச்சரியம் அள்ளிக்கொண்டு போகிறது. பறக்கும் போது இந்தப் பறவைகள் செய்யும்
சாகசங்கள் பற்றியெல்லாம் இப்போது தான் படிக்கிறேன். இந்தக் காட்சிகளில் வெளிப்படும்
விறுவிறுப்பு, ஒரு சிறந்த எழுத்தாளரால் மட்டுமே கொண்டு வரக்கூடியது.
இயற்கையைப் பற்றி குறிப்பாக காடுகளைப் பற்றியும் அங்கிருக்கும்
விலங்குகளைப் பற்றியும் முகர்ஜிக்கு இருக்கும் ஞானமும் அனுபவமும் அளப்பெரியது. அதை
அப்படியே தன்னுடைய கதையில் கொண்டு வந்திருக்கிறார். ஒரு கழுகு தன்னுடைய கூட்டிலிருந்து
பறக்கும் போது, அந்தப் பகுதியிலிருக்கும் அனைத்து பூச்சிகளும், சிறுவிலங்குகளும் ஏற்படுத்தும்
நிசப்தத்தை கச்சிதமாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அரவிந்த் குப்தா முன்னுரையில்
சொல்வது போல் ஒரு புனைவு என்பது அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அது
கதையாக மட்டும் இல்லாமல், நிறைய தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். கதையோடு தகவல்கள் சொல்லப்படும்
போது அவை வாசகர்களை, இங்கே குறிப்பாக சிறுவர்களை எளிதில் சென்றடையும். இந்தக் கதையில்
புறாக்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகின்றன, அவை எப்படிப் பறக்கின்றன, அவை எப்படி
இனப்பெருக்கும் செய்கின்றன, அவற்றின் கண்களில் இருக்கும் பாதுகாப்புத் திரை, அவற்றின்
எதிரிகள் யார் யார் என்று பல விஷயங்களை – இதுவரை அறியாதவை – தெரிந்து கொள்ளமுடிகிறது.
கானுயிர் வாரத்தின் போது Animals at War என்ற புத்தகத்தைப் பற்றி பைராகி எழுதியிருந்தார். உலகப்போர்களில் விலங்குகள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்பட்டன என்பதைச் சொல்லும் புத்தகம் அது. இங்கேயும், கே-நெக் போரில் இந்தியப் படைகளுக்கு வேலை செய்கிறது. தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது தான் அதன் வேலை. பெரும்பாலும் ராணுவ ரகசியங்களையே இப்புறாக்கள் கொண்டு செல்வதால், எதிரிகளின் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவு தான். எதிரியின் பதுங்கு குழியைக் கண்டு கொண்டு பறந்து செல்லும் போது, கே-நெக் விமானங்களால் தாக்கப்படுகிறது. வால் இழந்து, சிறகை இழந்து, கால் ஓடிந்து கடைசியில் தன்னுடைய இலக்கை அடைகிறது. மீண்டும் பறக்க அது முயற்சிப்பதே இல்லை. அதிர்ச்சியும் பயமும் அப்புறாவை ஆட்கொண்டு விடுகிறது.
மனிதர்களோடு நெருங்கிப் பழகும் விலங்குகள் (பூனையைத் தவிர), மனிதனைப் போலவே எதைச் செய்தாலும் சப்தம் எழுப்பிக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார், எழுத்தாளர். இந்தக் கதையில் மையப்புள்ளி அல்லது moral என்று பார்த்தால். அது இது தான்.
“Whatever we think and feel will colour what we say or do. He who fears, even unconsciously, or has his least little dream tainted with hate, will inevitably, sooner or later, translate these two qualities into his action. Therefore, my brothers, live courage, breathe courage and give courage. Think and feel love so that you will be able to pour out of yourselves peace and serenity as naturally as a flower giver forth fragrance."
பயமும் வெறுப்பும் ஒரு மனிதனையோ விலங்கையோ, மற்றவர்கள் மீது தாக்குதல் செய்யத் தூண்டுகிறது. பயமில்லாதவனுக்கு யார் மீதும் கோபம் இல்லை; யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாக Shawshank Redemption படத்தின் டேக்லைன் “Fear can hold you prisoner. Hope can set you free.”
இந்தக் கதை எழுதப்பட்டு எண்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது;
இன்றைய சிறுவர்களுக்கு இந்தக் கதை எந்தளவுக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், புறாக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் சிறந்த ஒன்று.
இந்த புத்தகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம், Boris Artzybasheffன் கருப்பு வெள்ளைப் வரைபடங்கள். இதைப் பற்றி ஓவியம் தெரிந்த ஒருவர் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். இந்த தளத்தில் கே-நெக் புத்தகத்திற்கு அவர் வரைந்த சில ஓவியங்கள் இருக்கின்றன. (http://shadowsonstone.blogspot.in/2011/01/sculpture-and-boris-artzybasheff-2.html)
Gay-Neck:The Story of a Pigeon | Dhan Gopal Mukerji | Illustrated by Boris Artzybasheff | National Book Trust, India | 148 Pages | Rs. 35
மேலும் தொடர்புடைய சுட்டிகள்:
1. Gay Neck இணையத்தில் படிக்க
2. தன் கோபால் முகர்ஜியின் மற்ற படைப்புகள் Archive.org Project Gutenberg
3. தன் கோபால் முகர்ஜியின் சுயசரிதை Caste and Outcast
No comments:
Post a Comment