சிறப்பு பதிவு- கடலூர் சீனு
கொண்ட கலைக்கும், அதன் கலைஞர்களுக்குமான உறவை, அதன் முரண் இயக்கங்களை கருப்பொருளாக கொண்ட கதைகள் என்றுமே முக்கிய எழுத்தாளர்களின் அகம் குவியும் களம்.
தமிழில் உடனடியாக நினைவில் எழுவது இரு துருவங்களின் பிரதிநிதியாக, அசோகமித்திரனின் புலிக் கலைஞன் மற்றும் ஜெயமோகனின் லங்கா தகனம். இன்றைய உலக இலக்கிய வரிசையில் இக் கருப்பொருளுடன், மனித அக விசித்திரங்களின், புரிந்துகொள்ள இயலா மர்ம இயல்புகளின், கலை வெளிப்பாடாக வெளிவந்திருக்கும், சித்தரிப்பின் செறிவும், உணர்சிகரத்தின் ஆழமும் கூடிய துருக்கிதேச குறுநாவல் 'அஸீஸ் பே சம்பவம் '.
அவமதிப்பின் துயரைச் சுமந்தபடி, ஆறுதல் அளிக்க ஒருவருமற்ற துக்கத்துடன், தனது அறைக்குள் சென்று முடங்கும் வயோதிக தம்புராக் கலைஞனின் நினைவில் எழுகிறது அவன் கடந்துவந்த வாழ்வின் தகிக்கும் பாலைகள், குளிர்விக்கும் பாலை நிலச் சோலைகள்.
பே யின் தாத்தா ஒரு தம்புராக்கலைஞர். பேவின் பால்யத்தில், அவனது விளையாட்டுத் தோழனாக , ஒரு உயிர்த் துடிப்புள்ள பறவை போல, அவனது கைகளுக்கு அவரது வாத்தியம் வந்து சேர்கிறது. பேவுடன் அவனது இசை மேதமையும் இணைந்து வளர்கிறது.
பேவின் அப்பா கண்டிப்பும், ஒழுங்கு - ஒழுக்கம் மீது தீவிர பிடிமானமும் கொண்டவர். அவரது மனைவியவும்,பேவையும் இக் குணங்களால் அதிகமும் தொந்தரவிற்கு ஆளாக்குகிறார். அம்மா ஒரு போதும் பேவின் உணர்வுகளுக்குள் பதியாதவகையில் விசித்திர ஆளுமையாக வளருகிறான் பே. நாவலில் அவனைப் பற்றிய கூற்று, கல் போன்று இறுகி, குளிர்ந்த ஆளுமை, விட்டேற்றியான குண நலன்.
அவனது பதின்பருவம் துவங்கி இளம் பெண்கள், தன்னியல்பாய் அவன் வசம் வீழ்கிறார்கள். அதன் மறுதலையாய் அவன் பெண்களை சுகித்துத் கடக்கும் ஒன்றாக, அதற்குமேல் ஏதுமற்ற ஒன்றாகவே கருதி அவ்வாறே தொடர்கிறான்.
மனம் தாவித் தாவி எதன் மீதெல்லாம் படிகிறதோ அந்த வேலை எல்லாம் பார்க்கிறான், சலிக்கும்போது அதை உதறி, அடுத்ததில் மனம் படியும் வரை விட்டேற்றியாகத் திரிகிறான் . ஆனால் அவனுக்கு தனது இசை வல்லமையை வெளிக்காட்டும் வாய்ப்பு வருகையில், அவன் வேறு ஆளுமை. அவன் கூர்ந்த நாசி சற்றே அன்னாந்தவாரு நிற்கும் பணியாத முகம். அப்போது அவன் கலைஞன். அந்த பீடத்திலிருந்தெ பிறரை நோக்குபவன்.
அவனது இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. நாடே வேலையில்லா சூழலில் சிக்கி சிதறும் நிலை. பேவின் இந்த நிலையற்ற சம்பாத்தியமும், வேசைகளிடமும், மதுவிலும் பணத்தைத் தொலைக்கும் ஊதாரித் தனமும், தான் கலைஞன் எனும் நிலையின் வெளிப்பாட்டு ஆணவமும், பேவுக்கும் அவனது தந்தைக்குமான பிளவை அதிகரிக்கச் செய்கிறது.
இத் தகு சூழலில் மரியாவை சந்திக்கிறான்.அவனது ஆளுமையை உலுக்கிய முதல் பெண். காதலில் விழுகிறான். அவளோ மீன் குஞ்சுபோல கண் தீண்டத் தெரிந்து,கைதீண்ட துள்ளி மறைபவளாக இருந்து பேவை பித்தம் கொள்ள வைக்கிறாள்.
மரியாவின் குடும்பம் வறுமை சூழ, பெய்ரூட் புலம் பெயர, பே தத்தளித்து, தவித்து மனம் சிதைகிறான். வேலையே இழக்கிறான். பண சிக்கல் உச்சம் பெற பேவின் தந்தையுடன் வாக்குவாதம் முற்றி, அம்மா அறைக்குள் இருந்து பதற பதற, மரியாவின் முகம் மட்டுமே மனதிற்குள் எரிய, பே வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
மரியத்தை தேடி பெய்ரூட்டுக்கு கப்பல் ஏறுகிறான். தெரியாத ஊர், புரியாத பாஷை, பணமற்ற பை, பசித்த வயிறு. தெருத் தெருவாக மரியம் இறுதியாக கடிதம் இட்ட முகவரியைத் தேடி அலைகிறான். இறுதியாக மரியமை கண்டடைகிறான். அவளோ 'சரி என்ன இப்போ' எனும் பாவனையில் அவனை முத்தமிட்டு விட்டு மறைந்து போகிறாள். மறைந்தே போகிறாள். முற்றிலும் கைவிடப் பட்ட பேவின் துயரம் மீறும், வாத்திய இசையில் கவரப்பட்டு டோரோஸ் அவனை வந்தடைகிறான். அவனை இடறில் இருந்து காக்கிறான். ஒரு மதுபான இரவு விடுதி ஒன்றினில் இசை விருந்து அளிக்கும் பணியை,பேவுக்கு வாங்கித் தருகிறான். நாட்கள் கடக்க, குடிகாரர்கள் முன் வெறும் காசுக்காக இசைக்கப்படும், தனது இசையை, அந்த அவமதிப்பை, அந்த ஊரில் பிழைத்துக் கிடக்கவும், என்றேனும் மரியம் கண்ணில் பட்டுவிடுவாள் எனும் நம்பிக்கயிலும் சுமக்கிறான்.
ஒரு சோர்வான, துல்லியமான கணம் ஒன்றினில் தெளிவடைகிறான். டோரோஸ் வசம் விடை பெற்று மீண்டும் இஸ்தான்புல் திரும்புகிறான். வீட்டில் அப்பா அவனை சேர்க்க மறுக்கிறார். அவன் வெளியேறிய அன்று அவனது அம்மா, இதயத் தாக்குதல் கண்டு இறந்த தகவலை அறிகிறான் தந்தைக்கும் மகனுக்குமான கசப்பு, வன்மமாக வளருகிறது. நிலையற்ற வருமானம், வாழ்வு, இளமையின் எல்லை, விரக்தி. அனைத்தையும் தந்தையின் காலடியில் போட்டு, சரணடைந்துவிட எண்ணியபடி மீண்டும் வீடு செல்கிறான். அப்பா அனாதையாக இறந்து கிடப்பதைக் காண்கிறான்.
தனிமையும் வறுமையும் துரத்த, இடையில் உஸ்லாத் எனும் அழகில் குறைந்த தையல் பெண் பேவுக்கு அறிமுகம் ஆக. தொடர்பு திருமணத்தில் முடிகிறது. அவனது கலை வாழ்வில் சற்றே உயர்வான காலம், இசைத்து தள்ளுகிறான். சம்பாத்தித்தது அத்தனையும் ஊதாரித்தனமாக செலவழிக்கிறான். அவனது இசைக்கு செகி போல, நிரந்தர ரசிகர்கள் கிடைக்கிறார்கள். பேவுக்கு பிறந்த ஒரே குழந்தை காய்ச்சலில் இறக்கிறது. முதுமை வந்து பேவைத் தீண்ட, உஸ்லாத்தும் ஒரு நாள் காய்ச்சல் கண்டு இறக்கிறாள்.
ஆறுதல் சொல்லும் செகி, பேவுக்கு தனது விடுதியில் ஒரு கௌரவ இசை அமைப்பாளர் பதவி அளித்து, தந்தை போல அவரை பராமரிப்பதாக வாக்களிக்கிறான். பே அனைத்து இழப்புகளையும் மறக்க விழைகிறான். மீண்டும் தனது இசை சிம்மாசனம் ஏறுகிறான். காசுக்காக அன்றி ஆராதகர்களுக்காக இசைக்கிறான். வெளியில் சூழல் மாறுகிறது நாட்டின் நிலையால் ஒவ்வொரு விடுதியாக மூடப் படுகிறது.
செகியின் விடுதிக்கு வரும் சொற்ப வாடிக்கையாளர்கள் கேட்கும் இசையை வாசிக்காமல், பே தனது விருப்பத்தையே வாசிக்கிறார். விடுதிக்கு வாடிக்கையாளர் வரவு குறைகிறது. செகி உள்ளுக்குள் குமுறுகிறான். ஒரு நாள் செகி பேவை விலக்கிவிட்டு, வாடிக்கையாளர் விரும்பும் இசையமைப்பாளரை நியமிக்கிறான். வந்துபார்க்கும் பே அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் மேடை ஏறி, புதியவனை தவிர்த்து, தனது இசையை துவங்குகிறார்.
வாடிக்கையாளர்கள் அதிருப்தி கூச்சல் எழுப்ப, செகியின் கோபம் எல்லை மீறுகிறது. பே என்ற இசைக் கலைஞனை, தந்தை போல் பார்த்துக் கொள்கிறேன் என வாக்களிக்கப்பட்ட, முதியவரை, வேசி மகனே என கோபத்தில் கொந்தளித்து ஏசி, அடித்து வெளியே தூக்கி எறிகிறான். சேற்றில் விழும் கிழவன் தட்டுத்தடுமாறி எழுந்து, செகியின் கையில் உள்ள, தனது சட்டையின் கிழிந்த கைப்பகுதியை யாசகம் போல கேட்கிறான். செகி தூக்கி முகத்தில் எரியும் அதை, ஏந்தியபடி இருள் அடையும் தெருவுக்குள் இறங்கி மறைகிறான் பே. அன்று அவன் அணிந்து வந்த சட்டை அவன் மனைவி உஸ்லாத் அவனுக்காக காதல் மீதூர தைத்தது.
மனிதர்களின் பார்வைக் கோணங்களிலும், சம்பவத்தைத் துண்டாடியும், காலத்தைப் பகுத்தும் அனைத்தையும் வசீகரமாகக் கலைத்து அடுக்கி சொல்லப்பட்ட ஒரு கலைஞனின் வீழ்ச்சியின் சித்திரம். நாடகீயத் தருணங்கள் கூடிய ஆழமான கதை.
சிற்சில சொற்களில் அனைத்தும் செறிவாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. பேவுக்கும் அவன் தந்தைக்குமான உறவு, அதன் முரணை ஆசிரியர் ''பிடிவாதம் கொண்டு இரு கழைக் கூத்தாடிகள், ஒரே கயிற்றில் நடக்க முனைவது போல, அவர்களிக்கிடையே உறவு நீடித்தது ''எனும் ஒரே வாக்கியத்தில் வகுத்து நிறுத்தி விடுகிறார்.
இன் நாவலில் வரும் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல் ஏதும் இன்றி, பேவின் நோக்கில், முற்றிலும் தனித்துவம் கொண்ட மூன்று வெவ்வேறு ஆளுமைகளாக துலங்கி நாவலின் போக்கில், வளருகிறார்கள்.
ஐபர் டுன்ஷ், இன் நாவலின் ஆசிரியர் பெண். ஆனால் இன் நாவலின் அனைத்து பாத்திரங்களுக்குள்ளும் கூடு விட்டு கூடு பாய்ந்து, அத்தனை பேரையும், அவர்களின் மன அவகாசத்துடன் உயிர்ச்சித்திரங்களாக நிறுவி உள்ளார். இந்த ஆளுமை வழியே, படைப்புத் திறன் எனும் தனித்தன்மைக்கு ஆண், பெண் பால் பேதமில்லை என்பது மற்றொருமுறை நிறுவப்பட்டுள்ளது.
பேவின் பருவத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேவின் மனம் கொள்ளும் மாற்றம், அதன் கதியில் துல்லியமாக உருவாகி, வளர்ந்து வரும் சித்திரம் இன் நாவலின் கலை வெற்றிக்கு சான்று. பெய்ரூட்டில் காதலியின் நினைவில் எறிந்து, தகித்து தெருவில் திரிகிறான். மரியம் வேறு ஒருவனுடன் திரியும் காட்சி ஒன்று அவனுக்கு கிடைத்தால் கூட போதும். அக்காட்சி அளிக்கும் வெறுப்பையே மீட்சியாகக் கொண்டு அவன் இஸ்தான்புல் திரும்பிவிட முடியும். அல்லது எங்கிருந்தோ அவள் திடீரென்று முளைத்துவந்து அவனை கட்டிப்பிடித்து இந்த நரகத்தில் இருந்து மீட்கும் அவனது பகல் கனவு பலித்தால் கூட பொதும். ஆனால் எதுவுமே நிகழவில்லை போனவள் போனவள்தான்.
தாயை வதைக்கும் அப்பா. பே அவனது மனைவி இறந்தபின் தன்னை ஆடியில் காண்கிறான். அதிர்ச்சி அடைகிறான். ஆம் இப்போது அவன் அப்பா. அதே குண நலனுடன், அவன் வாழ்நாளெலாம் வெருத்தலைந்த பிம்பம். இக்காட்சி நாவலின் உச்ச தருணங்களில் ஒன்று.
இஸ்தான்புல்லின் சமாத்யா, பெய்ரூட், இந்த நிலங்கலெலாம் பேவின் பார்வைக் கோணத்தில், அவன் இளமைக்குரிய உத்வேகத்துடனும், காதலின் தகிப்பின் உச்சத்துடனும், இறுதியில் அவன் அறை, புறக்கணிப்பின் ஒடுங்குதலுடனும் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் சுவை.
ஒருநிலப் பரப்பு, பல்வேறு மனிதமனங்கள், இவற்றுடன் ஒரு இசைக் கலைஞனின் வாழ்வு ஆகியவற்றுடன் ஒரு ஆயுள் வாழ்ந்து, தீர்த்ததுபோல ஆயாசமும் விலகலும் தருவதே இன் நாவலின் பிரதிதரும் இன்பம் எனக் கொள்ளலாம். அனைத்தையும் மறந்து, தன்னை புத்துருவாக்கம் செய்துகொள்ள, அனைத்தும் இழந்தபின்னும் தன்னுடன் இன்னுமிருக்கும் இசையின் துணை கொண்டு தன்னை பே மீட்டுக்கொள்ள முனைகிறான். ஆனால் அவன் வாழ்வில் முதல் முறையாக, அவன் ஆளுமை அவனுக்கு அவமானம் தேடித் தருகிறது. அவனது கலை அவனைக்கைவிடுகிறது. கிழிந்த சட்டைக் கை தெரு சேற்றில் புரள, பே துயரத்துடனும் தனிமையுடனும் நடந்து இருளுக்குள் கரையும் சித்திரம், எந்த வாசகனுக்கும் அவனது அக உலகின் நீங்காத படிமமாக உறையும் ஒன்று.
இன் நாவலின் சாரம் நாவலுக்குள்ளேயே ஒரு வரியாக வருகிறது "அவன் சூரியன் மெல்ல இறங்கி, அந்தி சரிந்து, இரவின் நிழலுக்குள் மறைவதுபோல, இனிமையின், மகிழ்ச்சியின் தருணத்திலிருந்து துயருக்குள் கரைந்தான் ''.
வாசகர்கள் தவிர்க்கக் கூடாத நாவல் .
# அஸீஸ் பே சம்பவம் # ஐபர் டூன்ஷ் #
தமிழில் சுகுமாரன் # [காலச் சுவடு பதிப்பகம் ].
-கடலூர் சீனு
No comments:
Post a Comment