வொன் ரூல்ஃபோவின் உலகப் புகழ்பெற்ற 'பெத்ரு பாராமொ' நினைவுகளின் புத்தகம்.
அதன் துவக்கத்தில், மரணப்படுக்கையில் இருக்கும் தொலோரெஸ் என்ற பெண், தன்
மகன் வொன்னிடம் கொமாலா என்ற ஊருக்குச் சென்று அவன் தன் தந்தை பெத்ரு
பாராமொவைச் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறாள். வொன் தன் பயணத்தைத் துவக்கி,
வெறிச்சோடிக் கிடக்கும் கொமாலா சென்று சேர்கிறான். வாழ்பவர்கள்,
இறந்தவர்கள் என்று இருவகைப்பட்ட பலரின் நினைவுகளைக் கொண்டும் தன் தந்தையை
அறிந்து கொள்கிறான்.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.
கொமாலாவின் ஒவ்வொரு நிகழ்வாகச் சொல்லி நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பெத்ரு பாராமொவையும் கொமாலா நகரையும் தன் விவரணைகளைக் கொண்டு சித்தரித்திருக்கிறார் ரூல்ஃபோ. இவர் இதைக் கதையாகச் சொல்லும் பாணியில் ஒரு மாயத்தன்மை இருக்கிறது: ஊமைகள் பேசுகின்றனர், இறந்தவர்கள் வாழ்பவர்களோடு உரையாடுகின்றனர், ஆவிகள் தம் காதலிகளைச் சந்திக்கின்றன, இடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள் தம் கல்லறைகளில் பேசிக் கொள்கிறார்கள். காண்பதெல்லாம் உண்மையில்லை என்பது போலவும் எதுவும் சாத்தியம் என்பது போலவும் இருக்கிறது இந்தக் கதை. மாயத்தன்மை கொண்ட, நினைவுகளால் உள்ளத்தை நிறைக்கும் கலவையான சூழலை உருவாக்கி, அதன் பின்னணியில் பெத்ரு பாராமொவின் கதையைச் சொல்லியிருக்கிறார் ரூல்ஃபோ.
பெத்ரு பாராமொ போன்ற சர்வாதிகாரிகளை நாம் அறிந்திருக்கிறோம்: இதயமற்றவன், தான் நினைப்பதைச் சாதித்துக் கொள்ள மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்பவன், வசீகரமானவன். அவன் தன் வசீகரத்தைக் கொண்டு பெண்களை ஈர்க்கிறான். தன் கவர்ச்சிக்கு வசப்படாத பெண்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கிறான். இரக்கமில்லாமல் தன் எதிரிகளைக் கொல்கிறான், கொமாலாவின் அனைத்து அதிகாரங்களும் கொண்டவனாக தன்னை நிலைநிறுவிக் கொள்கிறான். பெத்ரு பாராமொவின் குணச்சித்திரம் தீமையின் வடிவம். அதன் கவர்ச்சிகளையும் ஒவ்வாமைகளையும் பிரதிபலிக்கிறான் அவன்.
அதிகாரத்தில் உள்ளவர்கள்பால் நம்மில் சிலருக்கு உள்ள ஈர்ப்பை, வேறு சிலருக்கு உள்ள விலகலை, மற்றும் பலருக்கும் உள்ள கையறு நிலையை ரூல்ஃபோ விவரிக்கிறார். தனி மனிதன் ஒருவன் எப்படி ஒரு பெரும்கூட்டத்தைத் தன் விருப்பப்படி ஆளும் நிலையை அடைகிறான் என்பது இன்றும் ஒரு கேள்வியாகதான் இருக்கிறது. இந்தப் புதிருக்கு விடை காண பல எழுத்தாளர்களும் தங்களால் இயன்ற அளவு முயன்றுள்ளனர்.
இந்தப் புத்தகத்தின் ஒரு முக்கியமான பகுதி, சர்ச் தீமைக்கு எதிராகப் போராடுவதை விவரிக்கிறது. தீமையைத் தோற்கடித்து சாதாரண மனிதர்களைக் காக்கும் அற அதிகாரம் சமயங்களுக்கு உரியது என்று எப்போதும் உணரப்பட்டிருக்கிறது. இது உண்மை போல் தோற்றம் தந்தாலும் நடைமுறை உண்மை வேறு மாதிரி இருக்கிறது என்பதே வரலாறு. சமயங்கள் எப்போதும் தீமைக்கு எதிராக நிற்பதில்லை. சிலமுறை அது அதிகாரத்தோடு முரண்பட்டிருந்தாலும் பல முறை அது ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. கொமாலா விஷயத்தில், சர்ச் அதிகாரத்தை நிராகரிப்பதுமில்லை, அதனுடன் இணைந்து இயங்குவதுமில்லை. சர்ச்சின் விழுமியங்களைக் கட்டிக் காக்கும் பதவியில் இருப்பவர் ஆற்றலற்று இருப்பதால் சர்ச்சும் அங்கே ஆற்றலின்றி இருக்கிறது.
பாதர் த்ரென்தரியா கொமாலாவில் உள்ள சர்ச்சில் இருக்கிறார். அவருக்கு பெத்ரு பாராமொவை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை - பெத்ருவின் செயல்கள் அவருக்கு நெருக்கமான சொந்தங்களைப் பாதிக்கின்றன என்றபோதும் அவர் எதுவும் செய்வதில்லை. சர்ச்சின் செயல்பாடுகளுக்குத் தேவையான பணத்தை பெத்ருவிடம் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது, அதே சமயம் தன் நிலை குறித்து அவருக்கு கோபமும் இருக்கிறது. சமய நிறுவனங்கள் அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக ஏன் இயங்க இயலுவதில்லை என்பதையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான இடத்தில் சமய அமைப்புகள் ஏன் இருக்கின்றன என்பதையும் பிரதிபலிப்பதாக இது இருக்கிறது. இங்கே த்ரென்தரியா தன் மனப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடம் ஆறுதல் தேடிச் செல்கிறார். த்ரென்தரியா தன் கடமைகளைச் சரிவர செய்வதில்லை என்று காரணம் சொல்லி அவருக்கு பாவமன்னிப்பு அளிக்க அந்தப் பாதிரியார் மறுத்து விடுகிறார்.
கொமாலாவில் நடப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், சர்ச்சின் அற அதிகாரத்தை அங்கு நிறுவவும் இயலாத தன் நிலையைச் சகித்துக் கொள்ள முடியாமல் பாதர் த்ரென்தாரியா புரட்சியில் இணைகிறார். உயிரைக் கொடுப்பது, ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும் அறப்போரைவிடக் எளிதான செயலாக இருக்கிறது. சமயங்களின் அற அதிகாரம், அதைக் கட்டிக் காப்பதை ஒரு கடமையாக ஏற்றுக் கொண்டு அதன் நிறுவன அங்கத்தினர்களாக பொறுப்பு வகிப்பவர்களைச் சார்ந்துள்ளது.
இந்த நாவல் அதிகாரத்தையும் சமய உணர்வையும் பேசினாலும், நான் முன்னர் சொன்னது போல், இது நினைவுகளின் புத்தகம். பெத்ரு, மக்களைத் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவன் - அவன் தன் சொத்துகள் அனைத்தையும் இழக்கும் நிலையிலிருந்து தப்ப ஒரு பணக்காரப் பெண்ணை மயக்கி மணம் செய்து கோள்கிறான். தனக்கு வலது கையாக இருப்பவனைக் கொன்றுவிட்டு, தன்னையும் கொலை செய்ய வரும் புரட்சிக்காரர்களுக்கு பணம் கொடுத்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவனாக இருக்கிறான். ஆனால் அவனால், தான் உண்மையாகவே நேசிக்கும் அந்த ஒரு பெண்ணின் நினைவுகளை எதுவும் செய்ய முடிவதில்லை.
சூசன்னாவுடன் தான் கழித்த இளமைக் காலத்தை அவனால் மறக்க முடிவதில்லை. அவள் ஊர் திரும்பும்போது அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறான். அவளது தந்தையை ஆள் வைத்து கொன்றுவிட்டு, ஆதரவற்ற சூசன்னாவைத் தன் பார்வையில் வைத்துக் கொள்கிறான். தன் இளமைக்கால நினைவுகளை உயிர்ப்பிக்க நினைக்கிறான்: அவனை நீங்காத நினைவுகள் அவை, சூசன்னாவின் நினைவுகள் அவனில் இன்றும் ஒரு ஏக்கத்தைக் கிளர்த்துகின்றன.
பெத்ருவை சூசன்னாவின் நினைவுகள்தான் இறுதியில் தோற்கடிக்கின்றன. சூசன்னாவிற்கு பெத்ருவைப் பற்றிய எண்ணமெல்லாம் இல்லை. அவளுக்கு அவளுடைய இளம் பிராயத்தைப் பற்றியோ பெத்ருவைப் பற்றியோ இனிய நினைவுகள் யாதொன்றும் இல்லை. அவள், ஆழமாக நேசித்து பின்னர் தொலைத்துவிட்ட காதலனின் நினைவில் தொலைந்து போய் இருக்கிறாள். தான் விரும்பிய, தன்னை மகிழ்வித்த காதலனின் நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. இன்றும் அவள் அவனையும் அவனது உடலையும் கனவுகளில் சந்திக்கிறாள் - அவனோடு இருந்தபோது அவளது புலன்கள் அடைந்த கிளர்ச்சியை மறக்க முடியாதவளாய் இருக்கிறாள். இளம் பருவத்து காதல் நினைவுகள் அவளைப் பித்தாக்குகின்றன.
பெத்ரு பழைய நினைவுகளை உயிர்ப்பித்து அவளை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறான். அவள் தன் காதலை மறப்பாள் பொறுமையாகக் காத்திருக்கிறான் அவன். ஆனால் அவள் எப்போதும் அவன் நினைவாகவே இருந்து பெத்ருவை கணப்பொழுதும் நினைத்துப் பார்க்காமல் இறந்து போகிறாள். அவளது மரணம், அவள் பற்றிக்கொண்டிருந்த அவனது நினைவுகள், இவை பெத்ருவைத் தோற்கடிக்கின்றன. முடிவில் பெத்ரு, தன் உடல் மரிக்கும்முன் தான் மரணிக்கிறான் (உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஜேம்ஸ் ஜாய்ஸின் 'Dead' என்ற கதையும் நினைவைப் பற்றியதுதான். அதை ஒரு குறுநாவல் என்றுகூட சொல்லலாம். ஜாய்ஸும் ரூல்ஃபோவும் தேர்ந்த கதைசொல்லிகள் - பலரையும் நினைவுகளே கொல்கின்றன என்பதை அறிந்திருந்தார்கள்).
பெத்ரு பாராமொ தென் அமெரிக்க இலக்கிய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மாய யதார்த்தத்தின் முன்னோடிகளில் ஒருவர் ரூல்ஃபோ என்றும் சொல்கிறார்கள். ஒளிரும் எழுத்து இவருக்குரியது, பல இடங்களில் மாயங்களை நிகழ்த்துகிறது. மார்க்வெஸ் இதை மனப்பாடமாக அறிந்திருந்தாராம் - அந்த அளவுக்கு அவரை வசீகரித்த நாவல் இது. போர்ஹெஸ், தான் வாசித்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று என்று பெத்ரு பாராமொவைச் சொல்லியிருக்கிறார். இதை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். உண்மையில், பெத்ரு பாராமொ போன்ற உயர் தரத்தில் உள்ள ஒரு நூலை நீங்கள் மிக அபூர்வமாகவே அறிவீர்கள்.
Pedro Paramo | Juan Rulfo | Various Publications | 128 Pages | Amazon.in
No comments:
Post a Comment