ஜெட் ரூபன்ஃபெல்ட் எழுதிய இந்த நாவலின் அடிப்படைக் கருத்து சுவையானது. உளப்பகுப்பாய்வுத்துறையில் புதிய திறப்புகளையளித்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்து வரும் சிக்மண்ட் ப்ராய்ட் தன் சகாக்கள் கார்ல் யூங் மற்றும் பலருடன் ந்யூ யார்க் வருகிறார். அவர் அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் நாளில், பணக்கார அபார்ட்மென்ட் ஒன்றின் பெண்ட்ஹவுஸில் ஒரு இளம் நடிகை கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரிக்கும்படி ந்யூ யார்க் நகர மேயர் கொரோனரிடம் கேட்டுக் கொள்கிறார். அடுத்த நாள், நோரா ஆக்டன் என்ற இன்னொரு பெண்ணும் அதே போல் கட்டி வைத்து கடுமையாக தாக்கப்படுகிறாள். கொலைகாரன் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவள் பெருங்குரலெடுத்து அலறுகிறாள். இதனால் பதட்டமடைந்து அவளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடி விடுகிறான் கொலைகாரன்.
இந்தக் கொலை முயற்சி நோராவை விசித்திரமான வகையில் பாதிக்கிறது. அவளால் பேச முடியாமல் போகிறது. நடந்தவை அனைத்தையும் அவள் மறந்தும் போகிறாள்.
இந்தக் கதையின் நாயகனான டாக்டர் ஸ்டரதாம் யங்கர் ந்யூ யார்க் வரும் ப்ராய்டை வரவேற்று, அவருக்கும் அவரது சகாக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து அவர்களை கவனித்துக் கொள்பவர். இவர் ந்யூ யார்க் மேயரை ஒரு பால்ரூம் நிகழ்வில் சந்திக்க நேர்கிறது. அப்போது, நகர மேயர் இந்தப் பெண்ணின் விசித்திரமான வழக்கை மருத்துவர் யங்கரிடம் கூறுகிறார். ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு முறை நோராவுக்கு உதவக்கூடும் என்று கூறுகிறார் யங்கர். எனவே ப்ராய்டிடம் இந்த வழக்கை ஒப்படைக்க முடிவு செய்கிறார் மேயர். ஆனால் பிராய்ட் நேரடியாக அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்க மறுத்து விடுகிறார். மாறாக, யங்கர் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டால், தான் தேவைப்படும் உதவிகளைச் செய்வதாக உறுதியளிக்கிறார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் கரோனர், முதல் கொலையில் பலியான பெண்ணின் பிரேதம் பிணக்கிடங்கில் இருந்து காணாமல் போய்விட்டதை அறிய வருகிறார். அவர் டிடெக்டிவ் லிட்டில்மோரிடம் வழக்கை ஒப்படைக்கிறார், இருவரும் துப்புத் துலக்கத் துவங்குகிறார்கள். ஆக, கதையில் இவை இருவேறு திரிகள். நோரா ஆக்டனை குணப்படுத்த முயற்சி செய்யும் மருத்துவர் யங்கர் ஒரு திரி, கொலையாளி யார் என்று துப்புத் துலக்கும் டிடெக்டிவ் மற்றொரு திரி. இவ்விரண்டு திரிகளும் இணைகோட்டில் பயணிக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம், இதில் உண்மையான நபர்களும் புனைவுப் பாத்திரங்களும் ஒருசேர இடம் பெற்றிருப்பதுதான். வழக்கமான கொலைக் கதை போல் இல்லாமல் பிராய்டு, கார்ல் யூங், மேயர் மெக்க்ளல்லான், ஆபிரகாம் பிரில், சான்டோர் ஃபேரென்க்ஸி முதலான நிஜ மனிதர்கள் இதன் பக்கங்களை நிறைக்கின்றனர். அதே போல் நியூ யார்க்கில் கோல்டன் பிரிட்ஜின் கட்டுமானப் பணிகள் போன்ற நிஜ நிகழ்வுகளையும் புனையப்பட்ட நிகழ்வுகளையும் ஒன்று கலந்திருக்கிறார் ரூபன்ஃபெல்ட். மற்ற கொலைக்கதைகளிடமிருந்து இது இந்தப் புத்தகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. புத்தகத்தின் பிற்சேர்க்கையில் இவர், நிஜ நிகழ்வுகள் நடந்த காலக்கிரமத்தை மாற்றி கதையின் சுவை கூட்டியது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த ந்யூ யார்க் நகரை ஜெட் ரூபன்ஃபெல்ட் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார். ந்யூ யார்க் சென்றிருப்பவர்கள் இந்தப் பகுதிகளை ரசித்துப் படிப்பார்கள். ந்யூ யார்க் நகரின் செல்வம், அதிகாரப் போட்டி, அதன் கேளிக்கை விருந்துகள் கதையில் சுவையாய் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொலைக் குற்றம் குறித்த துப்பறிதலில் பிராய்டின் பங்களிப்பும் அருமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. நோரா ஆக்டனுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர் யங்குக்கு பிராய்ட் தேவைப்படும் ஆலோசனைகளைத் தக்க சமயத்தில் வழங்குவதோடல்லாமல், என்ன நடந்திருக்கும் என்பது குறித்து துப்புகளும் கொடுக்கிறார்.
ஆனால் கதையில் தொய்வு ஏற்படுத்தக்கூடிய பகுதி பிராய்ட் சம்பந்தப்பட்டவை. பிராய்ட், யூங், பிரில், யங்கர் ஆகியோருக்கிடையே நிகழும் உரையாடல்கள் வாசகர்களுக்கு அலுப்பாகவும் இருக்கக் கூடும். பிராய்டுக்கும் யூங்குக்கும் இடையிலுள்ள கருத்து மோதலுக்கு ஏராளமான கவனம் அளிக்கப்படுகிறது. அதே போல், பிராய்டுடன் சேர்ந்து யங்கர் ஹாம்லெட் பற்றி உளப்பகுப்பாய்வு செய்வதற்கும் மிகையான இடம் கதையில் அளிக்கப்படுகிறது. இந்த விஷயங்களில் ஆர்வமில்லாத வாசகர்கள் இதெல்லாம் என்ன என்று கேட்கலாம். நல்ல வேளை, இதையெல்லாம் வாசிக்காமல் தாண்டிச் செல்வதால் கதையின் சுவாரசியம் கெடுவதில்லை.
கொலை வழக்குக்கு வந்தால், முதலில் கொலை நடப்பதும் அதன் பின் நடக்கும் வேறொரு கொலை முயற்சியும் பரபரப்பான சூழலை உருவாக்கி விவரிக்கப்பட்டுள்ளன. பல்வகைப்பட்ட பாத்திரங்கள் கதையை சுவாரசியமாக வைத்திருக்கின்றன. துப்பறியும் முறையும் விறுவிறுப்பாகச் சொல்லப்படுகிறது. முடிவு ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது, ஆனால் இது கொஞ்சம் பழக்கப்பட்ட முடிவுதான்.
கதையில் முக்கியமில்லாத விஷயங்களை முக்கியமான துப்புகள் போல் விவரித்திருக்கிறார் ரூபன்ஃபெல்ட், இதை அதிக இடங்களில் செய்வதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இது கதையில் நாம் செலுத்தவேண்டிய கவனத்தைக் குலைக்கிறது, கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. முடிவில் எல்லா முடிச்சுகளும் சரியான வகையில் அவிழ்க்கப்படுகின்றன என்றாலும் வேண்டுமென்றே இவர் நம்மை திசை திருப்பிக் கொண்டு சென்றார் என்ற கோபத்தைத் தவிர்க்க முடியவில்லை. தன் கதையில் இவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்று தோன்ற வைக்கிறது, இத்தகைய செயல்கள்.
மொத்தமாகச் சொன்னால் இந்நூலுக்கு இருவகை வாசகர்கள் இருக்கலாம். உளப்பகுப்பாய்விலும் வரலாற்றுப் பாத்திரங்களிலும் ஆர்வம் இல்லாதவர்கள் இப்புத்தகத்தின் சில பகுதிகளைப் படிக்காமல் பக்கங்களைப் புரட்டிச் செல்வார்கள். இதனால் முழுமையான வாசிப்பு அனுபவம் அவர்களுக்குத் இல்லாமல் போகலாம். ஆனால் வரலாறு மற்றும் இலக்கியத் துறைகளின் கருத்துருவாக்கச் சிக்கல்களில் ஆர்வம் இருப்பவர்களும் கதையில் தொய்வளிக்கும் பகுதிகளைப் படிக்காமல் கடந்து செல்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களும் இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடிப்பது உறுதி.
The Interpretation of Murder,
by Jed Rubenfeld,
Paperback, 533 pages
Published 2007 by Headline Review (first published 2006)
இணையத்தில் வாங்க - Infibeam
by Jed Rubenfeld,
Paperback, 533 pages
Published 2007 by Headline Review (first published 2006)
இணையத்தில் வாங்க - Infibeam
No comments:
Post a Comment