A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Jun 2014

ஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்


ஜாரட் டைமண்டின்  ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி  நிகழ்வுகளில்,  மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.

ஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந்தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது,  அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.

நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.

பின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின்  பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.

முதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல  அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும்  பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம்  அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.

இந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான  புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.

ஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.


அறுபதுகளில் மையம் கொள்ளும் கதை. சீன அரசின் கீழ்  இருக்கும் மங்கோலியாவின் ஒலான்புலாக் சமவெளி. அச் சமவெளியின் மேய்ச்சல் குல மக்களுக்கு தந்தை போல விளங்கும் தலைவர் முதியவர் பில்ஜி. வேட்டை சமூகத்தை சேர்ந்தவர். செங்கிஸ்கான் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.  மகன் பட்டு, மருமகள் கஸ்மாய், துடிப்பான பேரன் பாயர்.  அரசுக்கு சொந்தமான ராணுவக் குதிரைகள், உணவுக்கான ஆடு மாடு, இவைகளை சமவெளியின் அடிப்படை ஜீவனான ஓநாய்கள் வசமிருந்து காத்து அரசிடம் கையளிக்கவேண்டியது அவர் மேற்பார்வையில் இயங்கும் குழுவுக்கான பணி. பணியின் சிறப்பு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, அக் குழுவுக்கும், அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசு புள்ளிகள் வழங்கும். உல்ஜி, இந்த சமநிலத்துக்கான நிர்வாக மற்றும் காவல் அதிகாரி. பாவோ இந்தச் சமவெளிக்கு மைய அரசால் அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி. இவற்றைக் கடந்து இச்சமவெளி வேட்டை வாழ்வின் வழியே கிடைக்கும், மான், மர்மட், மற்றும் ஓநாய்களின் தோல், அவற்றுக்கு பெரிய சந்தை இருப்பதால், அது  இக் குழுவுக்கான உபரி வருமானம்.

பெய்ஜிங்கிலிருந்து ஜென் எனும் மாணவன் அவனது சக மாணவர்களான  மூன்று நண்பர்களுடன் அரசால் இந்தச் சமவெளி வேட்டை சமூக மக்களுக்கு, மூடநம்பிக்கைகளை களையும், மாவோயிஸ சித்தாந்தங்களைக் கற்பித்து, அவர்களைக் கலாச்சார மேன்மை செய்யும் நோக்குடன், அனுப்பப்படுகிறான். அவனும் தனது வாழ்வாதாரத்துக்கு மேய்ச்சல் வாழ்வையே கைக்கொள்ள வேண்டும். ஜென் முதியவர் பில்ஜி உடன் நட்பாகிறான். சீனனாக இருந்தாலும்,ஜென்னின் ஓநாய்கள் மீதான ஈடுபாடு, ஓநாய்களை தனது தெய்வமாக மதிக்கும் மங்கோலியர் பில்ஜியை அவனுடன் நெருங்கச் செய்கிறது. பில்ஜி வசமிருந்து ஜென்னும், அவனது நண்பன் யாங் இருவரும் வேட்டை சமூக வாழ்வு எப்படி இயற்கையுடன் இணைந்து தகவமைக்கிறது, இதன் மொத்த வலைக்கும், ஓநாய்கள் எப்படி மையமான கண்ணியாக விளங்குகின்றன,  என்பதை அவரது உரையாடல், மற்றும் சில நேரடி அனுபவங்கள் வாயிலாக அறிந்து, அந்த வாழ்முறை மீது மிகுந்த நாட்டம் கொள்கிறார்கள். வந்ததுமுதல் இரண்டே வருடங்களில், அவர்களுக்கும் பில்ஜி குடும்பத்தினருக்குமான நெருக்கம் அதிகரிக்கிறது.

முதன்முறையாக ஒரு வேனிற்காலத்தில், இந்த ஒலான்புலாக் புல்வெளி நிலம்  வழியே வலசை செல்லும் மான் கூட்டம் ஒன்றினை, ஓநாய்க் கூட்டம் ஒன்று வேட்டையாடும் தருணத்தை, பில்ஜி ஜென்னுக்கு காட்டி, ஓநாய்களின் வேட்டை முறையை விளக்குகிறார். வேட்டை முடிந்ததும், ஓநாய்களை விலக்கிவிட்டு, பில்ஜி தனது குழுவுடன், கைவிடப்பட்ட மான் உடல்களை சேகரிக்கிறார், உயிருடன் சிக்கிய மான்களை, விடுவித்து அனுப்புகிறார், அனைத்துக்கும் மேலாக, கணிசமான மான்களை  ஓநாய்களுக்காக விட்டு வைக்கிறார்.

அரசின் கூட்டுறவு சந்தையில், இந்த இளமான்களின் தோலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதிகாரிகளில் ஒருவன் இக் குழுவில் ஒருவனுக்கு கையூட்டு அளித்து, எங்கே வேட்டை நடந்தது என்று அறிந்துகொள்கிறான். இரவோடு இரவாக அங்கே, ஓநாய்களுக்காக விடப்பட்ட மான்கள் அனைத்தையும் சேகரித்து  செல்கிறான். மற்றொரு அரசுப் படை, வேறொரு வேட்டைக்குழு உதவியுடன், தோலுக்காக ஓநாயக்குட்டிகளை சூறையாடிச் செல்கிறது.

சில தினங்களில், சேகரித்த உணவைக் காணாத, குட்டிகளை இழந்த ஓநாய்கள் ஒன்று திரண்டு சமவெளியில் நுழைந்து, ராணுவ குதிரைகள் மொத்தத்தையும் கபளீகரம் செய்கின்றன. அவற்றை எதிர்த்து பட்டு ஒருவனாகப் போராடித் தோற்கிறான். அரசுக்கு எதிரான இந்த வேட்டைச் சமூக சதியை, அரசு விசாரணை நிகழ்த்தி, உல்ஜிக்கு பதவி இறக்கம் அளிக்கிறது. பட்டு பில்ஜியின் வாதத்திறனால் தண்டனை இன்றி தப்பிக்கிறான்.

அரசு பாவோவை பணிக்க, ஓநாய்களுக்கு எதிரான போர் துவங்குகிறது. கடைசி ஓநாயும் உயிர் விட்ட பிறகே, இப் பணி நிறைவடையும் என்று பாவோ அறிவிக்கிறான். சமர் துவங்குகிறது. ஜென்னின் ஓநாயக்காதலும் கட்டு மீறுகிறது. நண்பனுடன் மலைச் சரிவுகளில் திரிந்து, உயிரைப் பணயம் வைத்து ஒரு ஓநாயக்குட்டியை தான் வளர்ப்பதற்காக எடுத்து வருகிறான்.

ஓநாய்களை குலதெய்வமாக மதிக்கும் பில்ஜிக்கு இந்த செயல் கடும் மன வருத்தத்தை அளிக்கிறது, ஆடுகள், மாடுகள், குதிரைகள் மேய்க்கும் சமூகத்துக்குள், ஒரு ஓநாய்க்குட்டியின் வருகை அவர்களின் இருப்பை, பாதுகாப்பை பலவீனமாக்குகிறது, பாவோ இது அரசுக்கு எதிரான சதியா என விசாரிக்கிறார். ஜென் அவரிடம், குழுவில் ஓநாயை எதிர்க்க பல நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன, ஒரு ஓநாயை நாயுடன் இணை சேர்த்து, வலிமையான வேட்டை நாய் இனம் ஒன்றினை உருவாக்க இயலுமா என அறிவியல்பூர்வமாக முயற்சி செய்து வருகிறேன் என பதில் சொல்லி தப்பிக்கிறான்.

ஜென்னின் ஓநாயும், பாவோவின் ஓநாய் ஒழிப்பு நடவடிக்கையும் வேகமாக வளர்கிறது. பருவம் மாற, புதிய நிலம் கண்டு, பில்ஜி குழு நகர்கிறது, மனிதர்கள் காலடி படாத அன்னப்பறவைகளின் நீர்வெளி, விரிந்த நிலம். இவ்வளவு பெரிய நிலம், பயிர் செய்யாமல் கிடப்பது அரசுக்கு இழப்பு என்ற போதத்தால் உந்தப்பட்டு பாவோ, அரசுக்கு அறிவித்து குடியிருப்புகள் உருவாக ஆவன செய்கிறார். வரும் பணியாளர்களுக்கு, [ஆடு, மாடு, அரசு கணக்கு] கணக்குக்கு வெளியில் இருக்கும், அன்னங்களும் பிற உயிர்களும் உணவாகின்றன.

இம்முறை ஓநாய்கள் தாக்குதலில், கிட்டத்தட்ட அரசின் அனைத்து செல்வங்களும் காலி எனும் நிலை. பாவோ வெடி மருந்துகள், ரசாயன விஷங்கள், துப்பாக்கிகள், ஜீப்புகள் அவற்றுக்கான நிபுணர்கள் என அனைத்தையும் தருவித்து கடைசி ஓநாயையும் கொன்று குவிக்கிறார். தவிர்க்க இயலாத சூழலில் தன் ஜென் குருதிச் சொந்தமாக மதித்த, தான் வளர்த்த ஓநாயை தானே தன் கையால் கொல்கிறான். இறந்த மங்கோலியன் உடல், அவனது குலதெய்வமான ஓநாய்க்கு தரப்பட வேண்டும். ஓநாய் அவனது உடலை உண்பதன் வழியே அவனது ஆத்மா, சுவர்க்கத்தில் வாழும் கடவுளான டெண்ஜர் வசம் போகும். ஓநாயில் இருப்பது டெண்ஜரின் ஆன்மா. தான் மரித்தபின்  டெண்ஜர் வசம் செல்லமுடியாது எனும் துயரத்தில் ஒடுங்குகிறார் பில்ஜி. பல வருடம் கழித்து முற்றிலும் பாலைநிலமாக மாறிப்போன ஒலான்புலாக் புல்சமவெளியை வந்துபார்க்கிறான் ஜென். மலைச் சரிவில் சிரமப்பட்டு தேடி, தான் கண்டெடுத்த குட்டி ஓநாய் இருந்த குகையைக் கண்டடைகிறான். குகை வாசலில், தனது இளமை அனுபவங்களை கொண்டு தான் எழுதிய நாவலின் பிரதியை வைத்து மண்டி இட்டு வணங்குகிறான், நாவலின் பெயர் ‘’ஓநாய் குலச்சின்னம்’’

பொதுவாக ஒரு வல்லமைமிக்க எழுத்தாளர், தனது வாழ்வனுபவங்களை, தான் நெருங்கிக் கண்டவற்றை புனைவாகவோ, நினைவோட்டமாகவோ எழுதும்போது  அதன் வீச்சும் ஆழமும், இணையற்ற ஒன்றாக இருப்பதை வாசகர்கள் அவதானிக்கலாம். புனைவுகளில் இந்திய அளவில் சிறந்த உதாரணமாக விபூதி பூஷனின் ‘’வனவாசி’’ நாவலைச் சொல்லலாம். அதன் நாயகனின் சரிபாதி விபூதி பூஷன்தான் என நாவலை வாசிக்கும் யாரும் உணரலாம். ‘’வனவாசி’’ எட்டிய உயரமும் ஆழமும் அதன் பின்னுள்ள சுயஅனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. நினைவோட்டம் எனும் வகைமையில் தமிழில் சு ரா எழுதிய ‘’ஜி. நாகராஜன்’’ குறித்த நூலை சொல்லலாம். ஓநாய் குலச்சின்னம் நாவலின் கதைசொல்லி ஜென், ஜியாங் ரோங்தான். ஜியாங் என்பது புனைப்பெயர். ஜியாங் எங்கும் எதற்கும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது நூலின் பின்னுரையில் இருக்கும் தகவல். இதன் பின்னுள்ளது தன்னடக்கமா, அல்லது ஒரு சீனனாக ஜியாங்கின் அரசியல் பயமா, என ஏதும் சொல்லப்படாதது நாவல் முன்வைக்கும் மௌன விமர்சனத்திற்கு ஆழத்தைக் கூட்டுகிறது.

வடிவத்தால் இப்புனைவு பின்நவீனத்துவத்தின் அழகியல் கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. முதல் புள்ளியில்  ஒடுக்கப்படும் ஓநாய்கள் மேல் கவனம் குவிக்கிறது, அடுத்த சுற்றில் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் விரிகிறது, பரந்த பார்வையில் மனிதர்களால் சிதைக்கப்படும்  இயற்கையின் பக்கம், ஒடுக்கப்படும் பரந்த புல்வெளி நிலத்தின் பக்கம் நோக்கி தார்மீகம் விரிகிறது. இறுதியில் வீழ்ச்சியின் காவிய சோகத்தை உடைத்து, முடிப்பு எனும் பகுதி வாசக மனதை துணுக்குறச் செய்யும் வகையில்  தரை தளத்தில் இறக்குவது முற்றிலும் பின்நவீனத்துவ பிரதிகளுக்கு மட்டுமே கூடிவரும் அழகு.

நாவலுக்குள் பில்ஜி தனது வேட்டை சமூக மெய்யறிவை ஜென்னுக்கு சொல்கிறார், ‘’இந்த நிலம் பெரிய உயிர், கொசு முதல், ஓநாய், நீ நான், அனைவரும் அந்த பெரிய உயிரை அண்டி வாழும் சிறிய உயிர். இந்த சிறிய உயிர்களில், அவற்றுக்குள் நிலவும் எந்த சமநிலைக் குலைவும் பெரிய உயிரை அழித்து, சிறிய உயிர்களுக்கு இனி இடமே இல்லை எனும் நிலைக்கு கொண்டு வந்து விடும்’’ இப் புனைவின் வடிவபோதமும், உட்கூறுகளும் இந்த மெய்யறிவின் ஸ்தூலமாக உருவாகிவந்திருக்கின்றன.

இப் புனைவை இலக்கியத்திற்குள் நுழைய விரும்பும் எந்த ஆரம்பக்கட்ட வாசகருக்கும் பரிந்துரைக்கலாம்,அந்த அளவு நேரடியான [கிட்டத்தட்ட அனைத்தையும் சொல்லிவிடுகிற] கூறுமுறை. அதே சமயம் இப்புனைவின் கற்பனை ஒழுங்கினை உருவாக்கும் வர்ணனைகளும் சித்தரிப்புகளும், ஒரு வேட்டைக்காரனின் அகத்தின் நிறையும் பொறுமையும், கவனத்தையும், தீவிரத்தையும் கோருகிறது இந்த அம்சம் தீவிரஇலக்கிய வாசிப்புக்கு உவப்பானது.

ஓநாய்க்குட்டியை வளர்க்க விரும்புவதாக தெரிவிக்கும் ஜென் வசம் பில்ஜி கோபத்துடன் கூறுகிறார் ‘’ நாய்தான் மனிதர்களிடம் பணியும், தேவையெனில் உயிர்வாழ மனித மலத்தையும் தின்னும். இது ஓநாய். உயிரே போனாலும், தனது சுதந்திரத்தை இழக்க விரும்பாது, இதில் உறைவது டெண்ஜரின் ஆன்மா’’ மொத்த நாவலின் உணர்வுநிலையைக் கட்டிவைக்கும் மைய நரம்பு இதுதான்.

அறுநூறு பக்க நாவலில் முதல் பக்கம் துவங்கி, பக்கம் புரளப் புரள பில்ஜியின் சொற்களின் வழியே ஓநாய்களின் குணமேன்மை இதழ் இதழாக பூத்து விரிந்து செல்கிறது. காலில் சுடப்பட்ட ஓநாய் ஒன்றினை. அதன் குருதித்தடம் கொண்டு பின் தொடர்கிறார்கள். ஒரு இடத்தில் காயம்பட்ட கால் மட்டும் துண்டாகிக் கிடக்கிறது. பில்ஜி சொல்கிறார் தேவையற்ற சுமைகளை ஓநாய்கள் சுமந்து திரியாது. ஆம் காயம்பட்ட காலை கடித்து துண்டித்து அகற்றிவிட்டு தப்பிவிடுகிறது அந்த ஓநாய்.

ஓநாய்கள் கூட்டத்திடமிருந்து தப்பிக்க, மந்தையைச் சுற்றி மதில் எழுப்பப்படுகிறது. அந்த அரனை உடைக்கும் ஓநாய்களின் சாமர்த்தியம், அது வேட்டைக் குடியில் விதந்தோதப்படும் விதம், அந்த அரண் உடைப்பில் செயல்படும் தர்க்கம், ஒரு துப்பறியும் நாவல் போல வாசிப்பின்பம் கூடிய பல பகுதிகள் நாவலுக்குள் வருகின்றன.

ஒரு ஓநாய், மர்மட் ஒன்றினை வேட்டையாடும் சித்திரம் வருகிறது. மர்மட் பெரிய அளவு அணில் போன்ற மிருகம். வளை தோண்டி வாழும். மிகுந்த கவனமும், சுறுசுறுப்பும் வேகமும் வாய்ந்தது. ஒரு சிறிய தந்திரத்தின் மூலம் ஓநாய், மர்மட்டைப் பதற வைக்கிறது. பதறி ஓடும் மர்மட்டை, அதன் வளை வாயிலில் வைத்துக் கௌவிப் பிடிக்கிறது.

ராணுவக் குதிரைகளைப் பாதுகாக்க, ஓநாய் மொத்தத்தையும் ஒழிக்க பாவோ முடிவு செய்கிறார். பில்ஜி துயரத்துடன் ஜென் வசம் சொல்கிறார், ‘’இவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். நூறு குதிரை வளர்த்தால் இந்த சமவெளியில் ஓநாய்களின் தாக்குதலால் நாற்பது மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் இவர்களுக்குப் புரியாதது இப்படி எஞ்சும் நாற்பது மட்டுமே வலிமை பொருந்தி ராணுவத்திற்குப் பலனளிப்பது. இந்த சமவெளிக் குதிரைகளின் சோர்வே அற்ற ஆற்றலுக்குக் காரணம், அவை தங்களது இருப்பை ஓநாய்களுடன் சமர்புரிந்தே தக்க வைத்துக் கொள்கின்றன. அந்தத் திறனே அவற்றை வலிவு கொண்டதாக மாற்றுகிறது. மாறாக பாதுகாக்கப்பட்ட வெளியில் வளரும் குதிரை வெறும் கறிக்கு மட்டுமே லாயக்காகும்’’.

பெரும்பாலான இரவுகளில் அவ்வப்போது பில்ஜி செங்கிஸ் கான் குறித்து உரையாடுகிறார். செங்கிஸ்கானின் பலம் இந்தக் குதிரைகள், அவனது பெரிய பலம் ஓநாய்கள், அவன் தனது ராணுவ யுக்தி அனைத்தையும் ஓநாய்கள் வசமிருந்தே கற்றுக்கொண்டான். ஓநாய் ஒரு முறை செய்த யுக்தி, மற்றும் பிழையை மறுமுறை செய்யாது. எப்போதும் தருணத்துக்கு ஏற்ப வியூகங்களை வகுக்கும் மாற்றும். அதன் குழுவில் அதன் தலைவனை எந்த நிலையிலும் மற்றவை பின்பற்றும், தலைவன் குட்டி முதல், வயதான ஓநாய் வரை அனைத்துக்கும் பொறுப்பேற்றுப் பாதுகாக்கும். இவற்றை கான் ஓநாய் வசமிருந்து கற்றான். ஓடும் குதிரை மீதிருந்து, துள்ளி ஓடும் மர்மேட்டுகள் மீது அம்பு எய்து தனது வீரர்களுக்கு பயிற்சி அளித்தான். ஒரு ஓநாயைக் கொல்ல முடியும், வெல்ல முடியாது ஏனெனில் அவற்றில் உறைவது டெண்ஜரின் ஆன்மா, அதுதான் கானை வழி நடத்தியது. [மங்கோல் திரைப்படத்தில் சிறைமீண்ட கான், சமவெளியில் மண்டி இட்டு, வான் நோக்கி டெண்ஜர் வசம் வலிமை வேண்டி தொழுகிறான். அவனை தூரத்திலிருந்து ஒரு ஓநாய் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சித் துணுக்கு புல்லரிக்க வைக்கும் ஒன்று].

இதை நேரடியாக உணரும் வாய்ப்பு ஜென்னுக்கு வாய்க்கிறது. ஒருமுறை வேட்டையில் ஒரு தாய் ஓநாய் நகர வழி இன்றி, தனது குகைக்குள் சிக்கிக் கொள்கிறது, கிட்டத்தட்ட பிடிபடப்போகும் கணம், நம்பவே இயலா வண்ணம் அது  தற்கொலை செய்துகொள்கிறது. அதில் துவங்கிய பித்து ஜென்னுக்கு ஓநாய்க்குட்டி வளர்ப்பது எனும் ஆசைவரை கொண்டு செல்கிறது. நாவலின் பலமான பகுதி, ஜென் வசம் அக் குட்டி ஓநாய் வளர்ந்து, சமரசமே இன்றி வாழ்ந்து, மரிக்கும் பகுதி. குழுவுக்குள் ஓநாயக்குட்டியின் வீழ்ச்சியும், வெளியே ஓநாய்க் கூட்டத்தின் வீழ்ச்சியும் ஓடும் பாவுமாக பின்னி விரிகிறது.

ஒலான்புலாக் சமவெளியின்  காலை மதியம் இரவு, மூன்று பருவகாலங்கள் என அனைத்தின் கீழும் அதில் வாழும் கொசு துவங்கி புல் தொடர்ந்து மனிதர்கள் வரை அனைத்தின் வாழ்முறையும் சூழல்களும் சொல்லபடுகிறது. பெரும்பாலும் ஜென்னின் கேள்விகள் வழியே நாவல் நகர்வதால், இதில் நிகழும் அனைத்தும் விளக்கப்பட்டு விடுவது இன் நாவலின் அழகியலுக்கு வளம் செய்வதாகவே அமைகிறது.

மனம் பொங்கச் செய்யும் உக்கிரமான தருணங்களால் மட்டுமே நிறைந்த நாவல். ஓநாய் மோப்பம் தவிர்க்க, வாசமற்ற நஞ்சை ஆட்டுத்தசைக்குள் செலுத்தி அவற்றை தூண்டிலாகக் கொண்டு ஓநாயைப் பிடிப்பது [ஓநாய்த் தோலுக்கு சந்தையில் கூடுதல் மதிப்பு] அவற்றில் ஒன்று.

புதிய வந்தேறிகள் அன்னங்களைக் கொன்று குவிக்கிறார்கள். அதன் முட்டைகளை சூறையாடுகிறார்கள் [அடுத்த தலைமுறையைக்  கொல்வது அரசுப் படையால் பெரிதும் பாராட்டப்படுகிறது. நாளைய பணி மிச்சம் அல்லவா?] தந்தை அன்னம் சுடப்பட, துப்பாக்கி ஒலியால் தாய் அன்னம் பறந்துவிடுகிறது. யான் அவனிடம் பேரம்பேசி அந்த அன்னத்தின் முட்டைகளை மீண்டும் அதன் கூட்டில் சேர்க்கிறான். இப்போது வேட்டையர்களுக்கு இன்னும் வசதி, தப்பிச் சென்ற தாய் அன்னம் முட்டை தேடி வர, அந்த அன்னமும்  இப்போது பலி ஆகிறது.

ஓநாய்கள் ஒழிந்துவிட இப்பொது, வேட்டை நாய்களின் பராமரிப்பு தேவையற்ற ஒன்றாகி விட, [நாவலில் வரும் எர்லாங் எனும் வேட்டை நாய் அதன் ஆளுமை மிகுந்த தனித்தன்மையுடன் உருவாகி வந்த ஒன்று] அரசு நாய்களை ஒழிக்க உத்தரவிடுகிறது.

வழக்கம்போல் குட்டிகள் முதலில் கொன்று வீசப்படுகின்றன. தாய் நாய்கள், புதைத்த இடத்தில் தோண்டி குட்டிகளை வாயில் காவியபடி வந்து தம் எஜமானர்கள் முன் நிலை புரியாமல் ஊளையிட்டு அழும் சித்திரம் வாசிக்கும் எவரையும் தூக்கம் தொலைக்க வைக்கும்.

நாவலுக்குள் அதன் உச்சம், பாவோ வேட்டையில் இறங்கும் தருணத்தில் நிகழ்கிறது. அதிகாரம் கொண்ட  மனிதன் ஆழத்தில் எத்தனை கொடூரமானவன், என்பது துலங்கும் கட்டம். கொலை கேளிக்கையாக மாறும் கட்டம். ஓநாயின் பிடிவாதமும், சாமர்த்தியமும், அடங்கிப்போகாத குணமும், பாவோவை, அவனது தன்முனைப்பை அறுக்கிறது, இறுதியாக வேட்டையில் தலைமை ஓநாய் பாவோ வசம் சிக்குகிறது. ஒளிய இடம் இல்லை, சமவெளி, கையில் துப்பாக்கி வைத்திருக்கும் பாவோ உத்தரவிடுகிறான். ஜீப் ஓநாயை துரத்துகிறது, துரத்தல், துரத்தல் மிக நீண்ட துரத்தல். இறுதியில் ஓநாயின் ஓட்டம், வேக நடையாக மாறுகிறது, இப்பொது ஜீப் மெல்ல நகர்கிறது, நடந்து, தவழ்ந்து சரிந்து விழுகிறது ஓநாய். இறங்கி அதன் நெற்றியில் சுடுகிறான் பாவோ.

இறுதியில் வளமான சமவெளி தூர்ந்து, இயற்கையின் சட்டம் உடைபட்டு பெய்ஜிங் தொடர்ந்து மணல் புயலால் தாக்கப்படுகிறது. இது ஏனென்று அறிய அறிஞர்கள் கூடி காகிதங்களைக் கிழிக்கும் வாதங்களை முன்னெடுக்கும் தருணத்தில் நாவல் நிறைகிறது.

இந்நாவல் வேட்டை சமூகத்தை விதந்தோதவில்லை, சமகாலத்தில் குடித்தே அழியும் அவர்களின் மடமையும் நாவல் சேர்த்தே சொல்கிறது. இருப்பினும் ஒரு வேட்டை சமூக குடும்பமொன்றினில் சிலகாலம் வசித்து, பில்ஜிக்கு ஆறுதல் சொல்ல வகை இல்லாமல், பிரியும் கையறு நிலையை ஒவ்வொரு வாசகனுக்கும் கடத்தியதில் இந்நாவல் என்றென்றைக்கும் முக்கியமான ஒரு நாவலாக மாறுகிறது.

இந்த ஆங்கிலத்தில் நாவலை வாசித்த இயக்குனர் வெற்றிமாறன். இது தமிழில் வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. எனவே தமிழில் வாசிக்கக் கிடைக்கும் எதுவும் எனக்கு தமிழ் நாவலே. இது சி. மோகன் அவர்களின் பெயர் சொல்லும் இனிய முயற்சி. என்னளவில் எனக்கு சி. மோகன்தான் இதன் படைப்பாளி. தக்கார்க்கள் கூடி தக்கார்களுக்கு இட்ட எச்சம் ‘ஓநாய் குலச்சின்னம்’.

[ஓநாய் குலச்சின்னம்.  ==  ஜியாங் ரோங் == ஆங்கிலம் வழி தமிழில் சி.மோகன். == அதிர்வு பதிப்பகம்    38 இரண்டாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை.600093]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...