A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

19 Aug 2014

திரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண


வரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா  நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா  கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ஆவரண எனும் இந்த கன்னட நாவல். 

பைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம்.

பைரப்பாவின் பருவம் மற்றும் வம்சவ்ருக்ஷா ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ஆவரணவில் கிடைக்கிறது. பருவம் மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். வம்சவ்ருக்ஷா ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ஆவரண அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே அவரது விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட இடம் கொடுக்கிறது.

அப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில்? உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன? அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா? இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும்  பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ஆவரண, அதாவது திரை.



இதன் கதையை இப்படி சுருக்கிக் கூறலாம். ரஜியா என்ற லக்ஷ்மியும் அவரது காதல் கணவர் அமீரும் ஹம்பியில் ஒரு ஆவணப் படம் எடுக்கும் காட்சியோடு துவங்குகிறது நாவல். இருவருமே இடதுசாரி முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெரும்பான்மை இந்து- முஸ்லிம் திருமணங்களில் நடப்பது போலவே இந்துவான லக்ஷ்மியே ரஜியாவாக மாறுகிறாள். மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு வாழ்வதாகச் சொன்னாலும் காதலுக்காகவும் தன பெற்றோருக்காகவும் மதமாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி அமீரின் வலியுறுத்தலின் பேரில் லக்ஷ்மி எடுக்கும் முடிவு இது.

இடதுசாரி கலைஞர்கள் இருவரும் மத்திய அரசின் சார்பில்   ஆவணப் படங்கள் எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள். ஹம்பியில் காணப்படும் சிதைந்த கோவில்கள் லக்ஷ்மியின் மனதை நெருடுகின்றன. சிதிலங்களைக் கண்டு ஆழமான பாதிப்புக்கு உள்ளாகும் லக்ஷ்மி தன் தந்தை சொன்னதை நினைத்துக் கொள்கிறாள். நம் கோவில்களை இடிப்பதைப் புனிதமாக நினைக்கும் ஒரு மகனை நீ பெற்றுக் கொள்வதை நான் விரும்பவில்லை, என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஹம்பியின் இடிபாடுகள் குறித்த அமீரின் வழக்கமான முற்போக்கு இடதுசாரி முகாம் விளக்கங்கள் லக்ஷ்மிக்கு திருப்தியளிப்பதில்லை. மேலும் தாங்கள் எடுக்கும் அந்த ஆவணப்படத்தில் கோவில்கள் சிதைந்திருப்பதற்கான உண்மையான காரணங்களும் கூறப்படப் போவதில்லை- ஏனென்றால் அது மதவாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்ற வழக்கமான சிந்தனைப் போக்கால் முக்கியமான காரணங்கள் பூசி மெழுகப்பட்டு, சைவ- வைணவப் பூசல்கள்கூட ஒரு காரணமாகச் சொல்லப்படலாம் என்பது அவளை மேலும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அந்த சமயத்தில்தான் தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு தன கிராமத்துக்குச் செல்கிறாள் லக்ஷ்மி.

அங்கு எதிர்பாராவிதமாக தன் தந்தையின் நூலகத்திலுள்ள புத்தகங்களும், இந்திய வரலாறு, அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு குறித்து நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் அவர் எழுதி வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளையும் ஆழ்ந்து படிக்கிறாள். அந்த வாசிப்பு அவளை ஔரங்கசீபின் ஆட்சிக்காலத்தைக் குறித்த ஒரு நாவலை எழுதத் தூண்டுகிறது. அதன்பின் பைரப்பாவின் நாவலில் லக்ஷ்மி எழுதும் நாவலும் அவளது வாழ்வும் மாறி மாறி சொல்லப்படுகிறது.

நாவலுக்குள் வரும் நாவல் ஔரங்கசீப்பின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு முஸ்லிமாக மாற்றப்பட்டு, பின் திருநங்கையாக்கப்படும் ராஜஸ்தானத்து இளவரசன் ஒருவனின் கதை. அக்கதையின் வழியே ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடிக்கும் சம்பவம் மிக விரிவாக பதிவு செய்யப்படுகிறது. கூடவே அவளது கணவன் லக்ஷ்மியின் உண்மைத் தேட்டத்தால் அவளிடமிருந்து விலகி அவளுக்கு தலாக் கொடுப்பதையும் (இஸ்லாமிய முறைப்படி) இன்னொரு பெண்ணை மணப்பதும் அவர்களின் மகன் -அமெரிக்காவில் படித்து சவூதியில் வேலை செய்பவன்-, இஸ்லாமிய மத அடிப்படைவாத நம்பிக்கைகளுடன் இந்தியா திரும்புவதும் சொல்லப்படுகிறது.

ராஜபுதன இளவரசன் காயடிக்கப்பட்டு திருநங்கையாக மாற்றப்படுவதையே இந்த நாவலின் மையப்பார்வையாகச் சொல்லலாம். இந்திய நாகரிகத்துக்கு இஸ்லாம் செய்த தலையாய தீச்செயலின் குறியீடு என்றே இதை இந்நாவல் முன்னிறுத்துகிறது (இந்த இடத்தில் நைபாலின் புத்தகத் தலைப்பான India - A Wounded Civilization தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது). மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்திய நாகரிகத்துக்கு பெரும் ஊறு விளைவித்தவர்களை தற்கால இந்திய அறிவுஜீவிகள் நாயகர்களாகக் கொண்டாடுவதையும் (உதாரணத்துக்கு ஔரங்கசீப்பின்  பெயரால் தில்லியில் உள்ள ஒரு பாதை), இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது.

எல்லாவற்றையும்விட அதிக சர்ச்சைக்குள்ளானது இதில் வரும் சாஸ்திரி என்ற இடதுசாரி முற்போக்கு அறிவிஜீவி பேராசிரியர் ஒருவரின் பாத்திரப் படைப்பு. தோற்றத்தை வர்ணிப்பதிலிருந்து செயல்பாடுகள் வரை சந்தேகத்துக்கிடமின்றி இப்பாத்திரம் யு. ஆர் அனந்தமூர்த்தியை அப்படியே நினைவுபடுத்துகிறது. மிகத் தெளிவாக அந்தப் பாத்திரத்தை ஒரு போலி மதச்சார்பின்மைவாதியாக முன்னிருத்துகிறது.

திட்டவட்டமான ஒரு பார்வையையும் முடிவையும் முன்வைத்து எழுதப்பட்டது என்று வெளிப்படையாகவே தெரியும் இந்நாவலை வழக்கமான இலக்கிய அழகியல் அளவுகோல்களை வைத்து  எடைபோடுவது சாத்தியமேயில்லை. இதை நாவல் என்பதைவிட திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு விவாதக் களம் என்பதே அதிகம் பொருந்தும்.

இந்நாவல் மூன்று முக்கிய விவாதப் புள்ளிகளை கொண்டுள்ளது. ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்தகாலத்தை பூசி மெழுகாமல் வெளிப்படையாகக் காட்டுவதன் மூலம் அது உலகின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என்று எச்சரிப்பது (இதன் வரலாற்று சான்றாவணங்கள் நிச்சயமாக சர்ச்சைக்குரிய ஒன்று என்றாலும், லக்ஷ்மி எழுதும் நாவலுக்கான பின் இணைப்புத் தரவுகளைக் கொண்டு பைரப்பா இதன் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்).

இரண்டு, கிறிஸ்துவத்திலும் இந்து மதத்திலும் உருவான சீர்திருத்த இயக்கங்கள் போலல்லாமல் இஸ்லாமிய சீர்திருத்த முயற்சிகள் அதை மேலும் மேலும் அடிப்படைவாதத்தை நோக்கியே செலுத்துவதையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது.

இந்த நாவலின் மூன்றாவது விவாதப்புள்ளிக்கு, நாம் மீண்டும் முதலில் எழுப்பிய வரலாறு குறித்த கேள்விக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்கும் நோக்கம் உண்டா என்பதே அது. இந்த நாவலின், அல்லது ஆசிரியரின் பார்வையில் இந்தியாவின் மதியகால வரலாறு என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும் பயங்கரவாதத்தாலும் இந்து நாகரிகம் சிதைக்கப்பட்டதேயாகும். இதை நாம் ஏன் மறைத்தும் திரித்தும் திரை போட்டு மூடவும் வேண்டும் என்பதே இந்நாவலில் எழுப்பும் முக்கிய வினா என்பதை அதன் ஆசிரியரே கூறுகிறார். இந்த மறைத்தலும் திரித்தலும் திரை போட்டு மூடுதலும் சமூக ஒற்றுமைக்கு எந்த அளவாவது உதவியிருக்கிறதா என்பதும் அவர் முன் வைக்கும் கேள்வி.

இந்த மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லைதான். இந்நாவல் எழுப்பும் முதலிரண்டு விவாதப் புள்ளிகள் இன்று ISIS போன்ற அமைப்புகள் உருவாகி வருவதை வைத்துப் பார்க்கும்போது மேலும் அதிக முக்கியத்துவம்  பெறுகின்றன. ஆனால் அந்த மூன்றாவது புள்ளியான, வரலாற்றைப் பூசி மெழுகாமல் அப்பட்டமான உண்மையாகவே வைப்பது, என்ற வாதம் சிக்கலானது.

இங்கு என்னைப் பொறுத்தவரையில் நம் மனம் இருகூறாகப் பிரிந்து வேறு வேறு நிலைகளே எடுக்கின்றன. நாம் என்னதான் நம்மைச் சாதி மத ரீதியான விஷயங்களில் நடுநிலைமையானவர்கள் என்று நினைத்துக் கொண்டாலும் சில சம்பவங்களில் நம் மன ஆழத்திலிருந்து வரும் உணர்ச்சிகள் நம்மையே வியப்பில் ஆழ்த்துபவை. சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வை நான் சந்தித்தேன்.

என் நெடுநாளைய நண்பரின் மனைவி நீண்ட நாட்களாக கிறித்துவ பெந்தெகொஸ்தே பிரிவு வழிபாட்டு முறையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். நண்பர் அவரது மனைவி இருவருமே இந்துக்கள்தான். கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் மத விஷயங்களில் நம்பிக்கையற்றவர். ஆனால் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன் ஒரு வியப்பான காட்சியை கண்டேன். எங்கள் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலிலிருந்து நண்பரின் மனைவி நெற்றி நிறைய திருநீறு குங்குமம் மற்றும் கையில் அர்ச்சனைத் தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை அந்தக் கோலத்தில் கண்டவுடன் என் மனதில் உடனடியாக வியப்பு கலந்த மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

உடனேயே இன்னொரு மனம் ஏன் எனக்கு அதில் மகிழ்ச்சி என்ற வினாவை எழுப்பியது. உண்மையிலேயே நண்பர் மனைவியின் மன(த) மாற்றம் எனக்கு ஏன் மகிழ்ச்சியை தரவேண்டும்? நான் என்னைப் பற்றி இதுவரை மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த ஒரு விஷயம் என் மனதில் ஒரு கணம் மகிழ்ச்சியளித்தது எனக்கே பெரும்  வியப்பாகத்தான் இருந்தது. மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் என் மதம் பிறர் மதம் என்னும் பேதம் சாகாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் அடுத்த கணம் என்  பகுத்தறியும் மனம் அந்த மகிழ் உணர்வைக் கண்டித்து உதறித் தள்ளியதும் உண்மை.

இது போலவே ஹம்பியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பழைய இடிக்கப்பட்ட கோவில்களைப் பார்க்கும்போதும் அம்மாதிரியான செயல்களைப் பற்றி படிக்கும்போதும் நம் மனதில் கண நேரமேனும் பிறமதத்தார் மேல் ஒரு வெறுப்பு உண்டாவதே  உண்மை. ஆனால் அதை நீடிக்க விடாமல் செய்யும் பகுத்தறிவு நமக்கு வேண்டும் என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் வரலாற்றுச் சம்பவங்களின் மூலம் உண்டாகும் வெறுப்புணர்வுக்கு ஆட்படுவது நிச்சயம் பழிவாங்கும் உணர்வு வளர்வதற்கே வழி கோலும் என்பதையும், அப்படி ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்பதையுமே வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டுகிறது.
  
இந்த இடத்தில் இரு வேறு மன்னர்களின் ஒரே மாதிரியான செயல்கள் அவர்களின் மதம் சார்ந்து நம் மனதில் வேறுவேறு உணர்வுகளைத் தொற்றுவிப்பதையும் குறிப்பிட வேண்டும். முகமது கோரி இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளின்மீது படையெடுத்து பெரும் அழிவை ஏற்படுத்திய நேரத்தில்தான் ராஜேந்திர சோழன் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகள் மீது படையெடுத்து பெரும் அழிவுகளை உண்டாக்கி கங்கை நீர் கொண்டுவந்து தான் கட்டும் ஆலயத்தின் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்திருக்கிறான். ஆனால் இன்றைய இந்தியாவில் கோரி ஒரு வில்லன். ராஜேந்திர சோழன் பட்டமேற்ற ஆயிரமாவது ஆண்டு சில தினங்களுக்கு முன்னர்தான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதை எப்படி எடுத்துக் கொள்வது?

பக்கச்சார்புகளின் பெருமிதங்களோடும் கண்டனங்களோடும் வரலாறு அணுகப்பட்டு, அதன் உணர்வுகள் படிப்பினைகளாகி நடப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியச் சமூக பின்னணியில், வரலாற்றை பூசி மெழுகாமல் அப்பட்டமாக முன்வைக்க வேண்டும் என்ற பைரப்பாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில், அறிவியல் ஆய்வுகளில் இருக்கும் தீர்மானமின்மை புனைவுகளில் சாத்தியமில்லை. நாவலை முடிக்குமிடத்து வெறுப்புணர்வு மனதில் சற்றே எழுந்தாலும் 'கண்ணுக்கு கண் எனும் கொள்கை உலகை முற்றும் குருடாக்கும்,' என்ற காந்தியின் வரியும், 'பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்,' என்ற வள்ளுவ வாக்குமே நமக்கு என்றும் வழிகாட்டக்கூடியவை என்றே தோன்றுகிறது.

ஆனால், மேலை நாட்டின் வரலாற்று ஆய்வுமுறை அறிவியல்பூர்வமானது என்றும், அத்தகைய ஆய்வு முடிபுகள் உண்மையை நிறுவுகின்றன என்றும் ஆகிவிட்ட இந்நாட்களில், அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் தொடரும் அறிவியல் உண்மைத் தேடலைப் போல், வரலாற்று உண்மைத் தேடலையும் யாரும் கைவிடப் போவதில்லை. இந்நிலையில், வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்குமான நோக்கம் எதுவாக இருப்பினும் நிச்சயமாக பழிக்குப் பழி என்ற உணர்வுக்கும் படுகொலைகளுக்கும் வழியமைத்து விடுவதாக மொழிபுகள் (narratives) இருந்துவிடக் கூடாது என்பதே முக்கியம். இந்த உணர்வு வரலாற்றாய்வாளர்களுக்கும் வரலாற்றைச் சுட்டி விவாதக்களத்தைக் கட்டமைக்கும் அறிவுஜீவிகளுக்கும்,  படைப்பிலக்கியவாதிகளுக்குமேகூட இருப்பது அவசியமாகிறது.

மீண்டும் நைபாலின் காயம்பட்ட நாகரிகம் என்ற கருத்துருவாக்கம் நினைவுக்கு வருகிறது. புலி தன் காயத்தை நக்கி நக்கி, அதை ஆறாத ரணமாக்கி, தனக்கும் ரத்த வெறியேற்றிக் கொள்ளும் என்று சொல்லப்படுவதுண்டு. தொல்பெருமைகளைக் கொண்டாடும்போதும் சரி, அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு பலியாகி காயடிக்கப்பட்ட, தோற்ற தேசம் என்று தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும்போதும் சரி, ஒரு தேசம் அமைதி காண்பதோ ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டடைவதோ எளிதல்ல.

Aavarana : The Veil (English)
Author: S. L. Bhyrappa, translated by Sandeep Balakrishna
Rs. 375

Image Credit : Flipkart

1 comment:

  1. வணக்கம் சுரேஷ்.நீங்கள் தான் சொல்வனத்தில் k .v .மகாதேவன் இசையை குறித்த கட்டுரைகள் எழுதுபவர் என்று அறிந்து கொண்டேன்.
    உங்கள் கட்டுரைகளை படித்து மிகவும் ரசித்திருக்கிறேன்.நானும் மாமா வின் பெரிய விசிறி தற்போது நீங்கள் என் கட்டுரையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கேள்வியும் கருத்தும் ஞயாயமானதே

    இந்தப் பதிவு அந்த நாவலை படித்து முடித்தவுடன் ஒரு gut feeling ஆக உணர்ந்ததே.அதை புற வயமாக காரண காரியங்களோடு நிருவவது என்பது கடினம்தான். நீங்களும் சொல்வது போல் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் முடிவு சொல்வது அவ்வளவு எளிதல்ல என்றே நினைக்கிறேன்.
    .
    எனினும் இன்னும் விளக்கிச் சொல்வதென்றால் ,இப்படி சொல்லலாம்.வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வதைத் தடுக்கச் சொல்லலை, அதைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால் வரலாற்றாய்வு அகாடெமிக் சூழலில் பல ifs and butsஉடன்தன் முடிவுகளைச் சொல்கிறது, அது நிறுவும் விஷயங்களைவிட முன்வைக்கும் விஷயங்கள்தான் அதிகம். அப்படியே நிறுவப்பட்ட வரலாற்றாய்வு முடிவுகளும் எப்போ வேண்டுமானலும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்படக்கூடியவை என்று அவங்களுக்கு தெரியும்.

    ஆனால் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புனைவை எழுதும்போது, சில உண்மைகளை மட்டும்தான் தேர்ந்தெடுத்தாகணும். அப்பத்தான் கதைக்கும் பாத்திரத்துக்கும் ஒரு character and cogency இருக்கும். இந்த நிலையில் இப்படிதான் நடந்தது என்று நினைக்க வைக்கும் வகையில் புனைவை எழுதலாமா? அதுவும் இந்த மாதிரி சென்சிடிவ் விஷயங்களில்? வரலாற்று ஆய்வில் இல்லாத finalityயும் emotional contentம் புனைவில் சேரும்போது, அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?
    நீங்கள் இந்த நாவலைப் படித்தால் நான் சொல்ல வருவது இன்னும் கொஞ்சம் தெளிவாகும் என்று நம்புகிறேன்.
    ஒரு உதாரணம் வேண்டுமானால் தருகிறேன். கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் புலிகேசி எம்ஜியார் படத்தில் வரும் நம்பியார் போல சித்தரிக்கப் பட்டிருப்பார். ஆனால் உண்மையில் புலிகேசி இந்தியாவின் முக்கியமான பெருமை மிகு மன்னர் என்பதே பாட நூல் வரலாறு அதற்காகத்தான் நான் முகமது கோரி, ராஜேந்திர சோழன் உதாரணமும் தந்திருந்தேன்.

    நன்றி . மீண்டும் உரையாடுவோம்.

    சுரேஷ்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...