நாற்பதுகளின் ரெண்டாம் பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி பதினாறு வயது தன்னையே சந்திப்பதும் உரையாடுவதுமாக அலி ஸ்மித்தின் ஒரு சிறுகதை உண்டு. அலி ஸ்மித்தின் கதைகளில் என்ன வேண்டுமானாலும் நிகழும். 30 வருடங்களில் நம் ஆளுமையில் ஏற்படும் மாற்றம், நாம் இப்போது என்னவாக ஆகியிருக்கிறோமோ அதனை நாம் சிறுவயதில் எவ்வளவு வெறுத்திருப்போம் என்பதை, நினைவிலிருந்து தப்பிச் சென்றிருக்க கூடிய விஷயங்கள், சின்ன விசயங்களில் கூட மாறியிருப்பதை ஸ்மித்தின் கதை பேசுகிறது. ஜூலியன் பார்ன்ஸின் The Sense of an Ending இதை இன்னும் ஒரு புதினத்துக்கே உரிய விரிவான பார்வையிலிருந்து அணுகுகிறது.
11 நாவல்கள் எழதியிருந்த பார்ன்ஸ் 1984லிருந்து 3 முறை புக்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அவர் புக்கர் விருதை வெறும் posh bingo என்று வர்ணித்தார், பின் 2011ல் இந்நாவலுக்காக அவருக்கு புக்கர் வழங்கப்பட்டது. அப்படியும் விருது பற்றிய கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
பார்ன்ஸின் Silence எனக்கு மிகப்பிடித்த சிறுகதைகளில் ஒன்று என்றாலும், அவர் நாவல்களை படிக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. வணிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்ற பொது கருத்தே காரணமாக இருக்கலாம். இதை ஏன் படிக்கத் தொடங்கினேன் என்று ஞாபகமில்லை.
நாவல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. முதல் பகுதி ஆன்டணி வெப்ஸ்டரின் பதின்மத்தை பற்றியது. அவன், அவனது நண்பர்கள் இருவரும் தத்துவங்கள், புதினங்கள் என்று விவாதிக்துக் கொண்டிருக்கிறார்கள். பின் புதிதாக பள்ளிக்கு வரும் அட்ரியனும் இவர்களோடு சேருகிறான். இவர்களை விட அட்ரியன் புத்திசாலியாகவும் இருக்கிறான். வரலாறு என்பது என்ன என்ற ஆசிரியரின் கேள்விக்கு இவர்களின் பதில்கள் சுவாரஸ்யமாகவும் அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. அட்ரியனின் பதில்,
'நினைவின் குறைபாடுகளும், ஆவணங்களின் போதாமையும் சந்திக்கும் புள்ளியில் உருவாகும் நிச்சயத்தன்மையே வரலாறு'
பின் கல்லூரி, வெப்ஸ்டர் -வெரோனிகாவின் காதல்... வெரோனிகாவின் வீட்டுக்கு செல்லும் வெப்ஸ்டர், வெரோனிகா அட்ரியனை காதலிக்க தொடங்குவது என அவ்வளவு நேர தத்துவ விவாதங்களுக்கு மாற்றாக பல சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. முதல் பகுதி அட்ரியன் தற்கொலை செய்துகொள்வதோடு முடிந்து விடுகிறது.
இரண்டாம் பாகம், தன் ஐம்பதுகளில் இருக்கும் வெப்ஸ்டரிடமிருந்து தொடங்குகிறது. தன் திருமணம், விவாகரத்து, மகள் என இடையிலான சம்பவங்களை சில வரிகளில் சொல்லிவிட்டு அவை இந்த கதைக்கு தேவையில்லையென கடந்துவிடுகிறார். பின் வெரோனிகாவின் அம்மா தனது உயிலில் கொஞ்சம் பணத்தையும், அட்ரியனின் டயரியையும் வெப்ஸ்டருக்காக எழுதி வைக்கிறார். வெரோனிகாவோ டயரியை தர மறுக்கிறார். காரணங்கள் மற்றும் தொடரும் சம்பவங்களே கதை.
படித்து முடித்த உடன் திருப்பங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாக, வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக திணிக்கப்பட்டதாக தோன்றியது. ஆனால் படித்து சில நாட்கள் கழித்து யோசிக்கும்போது இந்த கருத்து நிறையவே மாறியிருக்கிறது. நாவலின் மையமும் காலம் நமக்கு ஏற்படுத்தும் மாற்றங்கள், சில விசயங்களை மீண்டும் அணுகும்போது ஏற்படும் புதிய புரிதல்களை பற்றியே. அட்ரியனின் தற்கொலை பற்றி இளம் வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஏட்டுத் தத்துவங்களாக பேசி ஹீரோயிக்காக கருதும் வெப்ஸ்டர் பின் உண்மையான சூழலை அறியும்போது ஏற்படும் மாற்றம், குற்ற உணர்ச்சி இவை முக்கியமானவை. முதலில் வெப்ஸ்டர் சொல்லும் கதையும் பின் சில விசயங்களை அறிந்தபின் அவர் நினைவுபடுத்தி சொல்லும் விட்டுப்போன விசயங்கள், இளவயதில் எழுதிய கடிதத்தை திரும்ப படிக்கையில் ஏற்படும் உணர்வுகள் அட்ரியன் சொன்ன நினைவுகளின் போதாமையை நினைவுபடுத்துகின்றன. மேலும் வெப்ஸ்டர் தனது வாழ்க்கையின் பல சம்பவங்களை இந்த கதைக்கு தேவையில்லை என கடந்துவிடுகிறார், பின் வெப்ஸ்டரின் காலம் பற்றிய பார்வைகளோடு சேர்த்து யோசிக்கையில் ஒரு வாழ்க்கை என்பது பல கதைகள், பலரின் பார்வைகள் என்ற ப்ரம்மாண்ட உணர்வு ஏற்படுகிறது. ஒரு வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் சொல்லாமலேயே அதைப் பற்றிய ஒரு பெரிய சித்திரத்தை நம் மனதில் உருவாக்குவதே இதை நெடுங்கதையிலிருந்து புதினமாக மாற்றுவதாக உணர்கிறேன்.
சில விசயங்கள் இப்போதும் வெறும் வணிக உத்திகளாகவே தோன்றுகின்றன, அதாவது வாசகரை அதிர்ச்சியூட்டும் ஒரே நோக்கை கொண்டவையாக என்றாலும் யார் கண்டது 50 வருடங்கள் கழித்து இந்த பார்வை மாறலாம் அதற்குள் காலம் எந்த படைப்புக்கும் தன் தீர்ப்பை அளித்திருக்கும். காலத்தில் நம் பார்வைகள், கருத்துக்கள் சில அடிப்படை குணங்களைத் தவிர யாவும் மாறவே செய்கின்றன மேவே சொன்ன அலி ஸ்மித் கதை பேசுவதும் அதையே. அப்படியிருக்க இளவயதின் குறும்புத்தனமான செயல்கள் அதுவும் பிறருக்கு மோசமான மன உளைச்சலை அளித்திருப்பதை அறியும்போது ஏற்படும் குற்ற உணர்ச்சி தன்னளவில் தவிர்க்க முடியாததே என்றாலும், அது வளர்ந்த ஒரு மனிதனின் பார்வையிலிருந்து பதின்மத்தில் இருக்கும் சிறுவனைப் பற்றிய மதிப்பீடே. எனவே ஒரு படைப்பாக இந்நாவல் அதைப்பேசும்போது வார்த்தைகளோடு கவனமாயிருங்கள் என்பதுபோன்ற அடிப்படையான மாரல்களை முன்வைப்பதாக தோன்றியது.
மற்றபடி 150 பக்கங்கள் மட்டுமே அவையும் விரைவாக படிக்கும் வகையிலேயே இருக்கின்றன. வணிக நாவல்களின் விரைவு வாசிப்புக்கு பழகியவர்களுக்கு முதல் 30 பக்கங்களை தாண்டும்வரையில் அலுப்பாக இருக்கலாம், ஆனால் அதை தாண்டிவிட்டால் ஒரே அமர்வில் வாசித்துவிட முடியும் மீண்டும் வாசிக்கவும் தோன்றும்.
இந்த இடத்தில் பார்ன்ஸின் silence சிறுகதையை பற்றியும் சொல்லவேண்டும், இசை வெளியே சத்தங்கள், சத்தங்கள் என்று பலவேறான சத்தங்களின் ஆழத்தில் இருப்பது பேரமைதி என்பதைப் பற்றி உலகின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராான கடைசிவரை தன் எட்டாவது சிம்பனியை எழுதாத/ வெளியிடாத சிபெலியஸின் வாழ்க்கையின் கடைசி கணங்களிலிருந்து சொல்வது. இந்த கதையை தமிழில் ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த சிறுகதைத் தொகுப்பில் படித்திருக்கிறேன். பார்ன்ஸ் எழுதிய மூல வடிவம் இங்கிருக்கிறது.
No comments:
Post a Comment