ஜெயகாந்தன் எழுதிய இந்த தொடர்கதை 1965 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதனால்தானோ என்னமோ கதையும் எல்லா திசைகளிலும் சிதறிச் செல்கிறது. பாதிக்கு மேல் காதல் கதை பாணியில் ஓர் ஒருமை கூடிவிடுவது என்னமோ நிஜம்தான் என்றாலும் நாவலாக இதைக் கருதமுடியாது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இதை மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன? சாதுர்யமான கதைசொல்லல் என்பதாலா? அல்லது அவரது தனிப்பார்வைகள் அக்காலத்தில் புரட்சிகரமானவை என்பதாலா? பழமைவாதத்தை மீறி புது உலகைச் சந்திக்கத் துடிக்கும் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பு என்பதனால் இது முக்கியமாகிறது.
சுதந்தரம் கிடைப்பதற்காக தன் மண்ணுக்குரிய விழுமியங்களைப் பற்றிக்கொண்டிருந்த சமூகம் கிடைத்த விடுதலையைத் தொடர்ந்து தனது அடுத்த அடியை எப்பக்கம் வைப்பது என்ற தீர்மானமின்றி நின்றுகொண்டிருந்த தருணம். அழகியல் வகைப்பாட்டுக்காக அதை நவீனத்துவம் எனக் குறிப்பிடலாம். மிக முக்கியமான இந்த காலகட்டத்தை சரியானபடி திசைகாட்டும் சுய சிந்தனையாளர்கள் அரிதாகவே இருந்ததால், மேற்குலகை நகல் செய்யும் ‘வெஸ்டர்ன்’ சமூகம்தான் நவீனம் என சுலபமான பாதையைப் பலரும் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. விஞ்ஞானம், சுயதொழில்கள், விவசாயம், கலை வெளிப்பாடு என சகலமும் இப்பாதையை எடுத்துக்கொண்டது எனலாம். அதாவது நூற்றாண்டுகளாக செழித்த சமூகத்தை வேரிலிருந்து மேல் நோக்கி பராமரிக்கத் தெரிந்த அறிவை உதாசீனம் செய்து நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான அறிவை கேள்வி கேட்காமல் பலன் சார்ந்து உபயோகிக்கிறோம். ஸ்லோகங்களில் வரும் பலஸ்ருதிகூட சில பாடல்கள்தான் வரும், ஆனால் நமது அறிவு தேடல் முழுமையும் பலன் சார்ந்ததாக மாறியது.
உலகளாவிய அறிவுத் தேடல்கள் வந்து சேர்ந்த சமூகத்தில் இயல்பாகவே ஒப்பீடுகள் அதிகமாகும். மரபார்ந்த வேளாண் முறையா? ரசாயனம் சார்ந்த முறையா? சிறுதொழில் லைசன்ஸ் நன்மையா? கூட்டுறவு அமைப்புகள் நல்லதா? மேற்கிசையா? இந்திய செவ்வியல் இசையா?- என ஒவ்வோர் துறையிலும் இப்படிப்பட்ட ஒப்பீடுகள் நடந்த சம்யம். எடுத்த முடிவுகளையும், பலன்களையும் இங்கு பேசப்போவதில்லை என்றாலும், உலகளாவிய ஓர் அறிவுப்பெட்டகம் நம்முன் கிடந்தது என்பதும் நம்மில் பலரால் அதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது எனும் பின்புலமும் மிக முக்கியம். இக்கதையும் அதைப் பற்றியதுதான். நவீன விழுமியங்களை கைப்பற்றத் துடிக்கும் புது தலைமுறையினருக்கும், மரபை விடாமல் காத்துக்கொடுக்கவும், குடும்பம் எனும் அமைப்பின் விதியை மீறாமல் இருக்க முயலும் முந்தைய தலைமுறையினருக்கும் நடக்கும் விவாதம்தான்.
`ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்` கதையும் இதைப் பற்றியதுதான் என்றாலும் பாரீஸுக்குப் போ! தலைமுறை மற்றும் சமூக விழுமியங்களைக் கேள்வி கேட்கும் தனிமனிதனின் பார்வையைக் கொண்டது. `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்` ஹென்றி நம்நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவனது பப்பாவின் வளர்ப்பினால் தமிழ் சமூகங்களிலிருந்தும் கீழ்மைகளிலிருந்தும் அந்நியனாக இருப்பவன். முதல்முறை தமிழ்நாட்டுக்கு வருவதோடு மட்டுமல்லாது சமூகக் கீழ்மைகளையும் ஆர்வமாகப் பார்க்கிறான், அவனது பப்பா சொன்ன உலகத்திலிருக்கும் மக்களை தனதாக ஏற்றுக்கொள்கிறவன். `பாரீஸுக்குப் போ!` சாரங்கன் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா வருபவனாக இருந்தாலும் தனது நைனாவின் கடிதங்கள் வழியாக இந்திய விழுமியங்களையும், சமூக இடுக்குகளையும் அறிந்துகொண்டவன்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலங்காலமாக நடந்துவருபவை என்றாலும், பண்டைய சமூகங்களிலிருந்து மனித மனம் புது கலாச்சாரங்களை கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே எதிர்கொண்டுவருகிறது. மனிதனுக்கு வரும் உடல் உபாதையைப் எதிர்கொள்வது போல முதலில் அதிர்ச்சி, பின்னர் நம்பமுடியாத்தனம், தொடர்ந்து ஏற்றுக்கொள்ளுதல் எனும் பரிணாமக்கட்டங்கள் ஒரு புது கலாச்சார விழுமியத்தை சந்திக்கும்போது ஏற்படுகின்றன. சிலர் பரிசோதனை முயற்சியாக எல்லா கட்டங்களையும் கடந்துவந்து இயல்பாக புது சமூகத்தில் ஐக்கியமாவார்கள், ஹென்றியைப் போல். சமூக/ வாழ்வாதாரக் காரணங்களுக்காக ஐக்கியமானவர்களும் உண்டு.
பாரீஸுக்குப் போ! நாவலில் ஆரம்பப் பகுதி முதல் சாரங்கனை இந்திய சமூகம் வெளியே மட்டுமே நிறுத்திவைக்கிறது. ஒரு மேலை நாட்டு இசைக்கலைஞனாக நாற்பதாவது வயதில் இந்தியாவுக்கு வந்திருக்கும் சாரங்கனை ஈர்க்கும் விசைகள் பெரிதாக எதுவும் இல்லை. மேற்கிசையின் தனித்துவங்களைக் கொண்டு புதிய பரிமாணங்களை இந்திய இசையில் ஏற்படுத்தவேண்டும் எனும் முனைப்பு மட்டும் உள்ளது. அதைச் சாத்தியப்படுத்தக்கூடிய திட்டங்கள் பெரிதாக அவனது மனதில் உருவாகவில்லை. என்னைப் பொருத்தவரை அப்படி ஒரு திட்டவரைவு உருவாகும் வகையில் இந்திய சமூகத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் அவன் இறங்கவேயில்லை. லேடிஸ் கிளப் செகரட்டரி மற்றும் எழுத்தாளர் லலிதாவுடனான நட்பு கிடைத்தாலும் மிக மேலோட்டமாக வாழும் போலி மனிதர்களை மட்டுமே சாரங்கன் சந்திக்கிறான். இந்திய இசையில் செய்யவேண்டிய சாதனைகளையும், கடக்கவேண்டிய தூரங்களையும் ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்கிறான். இருவித இசை பாணியையும் ஒப்பிட்டு பேசத்தொடங்கும்போது இந்திய இசையை பக்திபாவ இசை மட்டுமே எனக்கூறி அவனது அப்பாவின் கோபத்துக்கு ஆளாகிறான். கர்னாடக சங்கீத மேதையாகத் திகழந்த அப்பாவுடன் நேரடியாகப் பேசி ஒரு விவாதத்தரப்பை உருவாக்குவதற்கு சாரங்கன் தயாராக இல்லை. தந்தையைப் பொருத்தவரை சாரங்கள் தோல்வியடைந்த இசைக்கலைஞன். ஏதோ பாரீஸ் லண்டன் என இசைக்கலைஞனாக இருந்துவந்தாலும் எந்த ஒரு ஆன்மிக ஆழத்துக்கும் போகாமலும், வாழ்க்கைக்குத் தேவையான தனக்கல்வியும் கற்காமலும், தொழில் எதுவும் செய்யத் தெரியாமலும் இந்தியா திரும்பியிருக்கும் ஒரு தோல்வியின் பிரதிநிதி.
சிறுவயதில் தனது நண்பனின் குடும்பத்துடன் சாரங்கனை லண்டனுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது அப்பா வைத்தியநாதன். லண்டனில் படித்து முடித்து பாரீஸில் மேற்கிசைக் கலைஞராக வாழ்ந்தவன் சாரங்கன். இடையே ஒரு காதலும் கல்யாணமும் விவாகரத்தும் வந்துபோயின என்றாலும் அவனது தந்தைக்கு எப்போதும் கடிதம் எழுதிக்கொண்டு தொடர்பில் இருப்பதால் அவன் முழுவதுமாக அந்நியனாகவில்லை. இந்திய கலாச்சாரத்தின் ஒருபகுதியோடு தொடர்பிருந்தாலும், ஆழ்மனதில் சாரங்கன் ஒரு ஐரோப்பியனே. மணவாழ்க்கையின் கசப்பைப் போக்குவதற்கு இந்திய இசை பரிமாணங்களை அறிந்துகொள்வது மருந்தாக இருக்கும் என எண்ணி இந்தியா வருபவனுக்கு லலிதா வழியாக ஒரு நட்பு கிடைக்கிறது.
எழுத்தாளரான லலிதா வயதான ஒருவர் அளித்த வாழ்க்கையில் பிழைத்துக்கிடப்பவள். அவரது எல்லையில்லா அன்பில் தன்னை மறந்து வாழ்ந்து வருபவள். வைத்தியின் குடும்ப நண்பரான லலிதாவுக்கும் சாரங்கனுக்கும் இடையே நட்பு காதலாக மாறுகிறது. வாழ்வளித்தவர் மனது புண்படாதவாறு நடப்பது எப்படி? உண்மையான காதலுக்கு எது சரியான சமர்ப்பணம்? காதலில் இணைவதா அல்லது சேர்வதா எனும் குழப்பம் மீதி கதை. உண்மையில், கதையில் எனக்குப் பிடித்த பகுதியும் இதுதான். அப்பாவுக்கும் சாரங்கனுக்குமான சிக்கலும், இந்திய இசையை நவீனப்படுத்தும் முயல்வதும் ஏனோ சரியான சாரத்தை நோக்கிய பயணமாக அமையவில்லை. ஆனால் லலிதாவுக்கும் சாரங்கனுக்கும் உண்டாகும் சிக்கல் கதைக்கு நல்ல முடிச்சாக அமைந்திருந்தது. முடிவு வரை படிக்கவைத்ததும் ஆசிரியர் இச்சிக்கலின் பல பரிமாணங்களைக் காட்டுவதினால் மட்டுமே. முடிவில் வங்காளத்தில் சாந்திநிகேதன் தாகூர் இசைப்பள்ளியில் வேலை செய்யும் சுந்தரம் என்பவரது அழைப்பின்பேரில் பாரீஸுக்குப் போகாமல் கல்கத்தாவுக்குப் பயணம் செய்கிறான் சாரங்கன். முடிக்கவேண்டுமே என அவசர அவசரமாகத் தொடர்கதையை முடித்தது நன்றாகவே தெரிகிறது. இதை முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது என்றுதான் சொல்லவேண்டும். அடையாளச்சிக்கலை மையப்படுத்தி, யாரும் ஏற்கத்தயாராக இருக்கும் அந்நியன் எப்படி மெல்ல தன் சுயத்தை இழந்து அதிருப்தி கொள்கிறான் எனும் முதல்பகுதி முழுமையாகக் கைகூடவில்லை. தொடர்கதையாக ஆனந்த விகடனில் வெளியானதால் நாவலுக்குத் தேவையான விரித்துச்செல்லும் கட்டங்கள் கிட்டத்தட்ட எதுவுமில்லாமல் போய்விட்டது. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலில் மிக எதார்த்தமாக புது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ஹென்றி ஒளிகூட்டும் பாத்திரப்படைப்பு. அவனது அப்பா வழியாக ஹென்றியை அடைந்த சகல மேன்மைகளும், கீழ்மைகளும் ஒரே உயர்வை எட்டியுள்ளன. அதனாலேயே எவ்விதமான முன்முடிவுகளும் இல்லாமல் அவனால் புது சமூகத்தோடு இயைந்துவாழ முடிந்தது. புது உறவுகள் கிடைத்தன; அவனது அப்பாவின் வீடு கிடைக்கிறது; எதிரிகள் நண்பராயினர். ஆனால் சாரங்கனின் கதாபாத்திரம் எதிர்மறையானது மட்டுமல்ல, அது தரிசனமற்றதும்கூட.
ஒளிப்பட உதவி- வல்லினம்
No comments:
Post a Comment