- வெ சுரேஷ் -
1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோற்று வி.பி. சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி இடது மற்றும் வலதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. அந்த அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்குவதாக அறிவித்தது. வட மாநிலங்கள் எங்கும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில்தான் நாடெங்கும் இட ஒதுக்கீடு என்பது சலுகையா, உரிமையா, தகுதி என்றால் என்ன, அது சிலருக்கு மட்டுமே உரித்தானதா என்பது போன்ற பல கேள்விகள் பொதுவெளிகளில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான நிகழ்வுகளும் விவாதங்களும் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இங்கு முற்பட்ட வகுப்பினர் எனப்படும் சாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இரண்டு, தமிழகத்தில் சமூக ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியமான சாதிகள் அனைத்தும் 70களின் இறுதியிருலிருந்தே, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தைப் பெற்று இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றிருந்தன. இங்கு மண்டல் குழு பரிந்துரைத்த அளவுக்கு மேலேயே பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அதனால் மண்டல் பரிந்துரைகள் பெரிதாக தமிழகத்தின் சமூக அரசியல் தளங்களில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.
அதே 1989ம் ஆண்டு, ஒரே ஒரு கிராமத்திலே என்று ஒரு தமிழ் படம் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. ஒரு பிராமணப் பெண் தலித் என பொய்யான சாதிச் சான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டின் மூலம் கலெக்டர் ஆவதும் பின் அது வெளிப்பட்டு, அதனால் உண்டாகும் சிக்கல்களும் என்ற கதையுள்ள படம். கவிஞர் வாலிதான் அதன் கதை வசனகர்த்தா. அதன் இறுதிக் காட்சிகளில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றன. தமிழ்நாட்டில் அந்தப் படம் வெளியாக முடியாதபடி எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதைய திமுக அரசு, படம் வெளியானால் உருவாகும் சட்ட ஒழுங்குப் பிரச்னையை காரணம் காட்டி படத்தைத் தடை செய்தது. பின் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் படம் வெளியானது. அதற்கு அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது வழங்கப்பட்டதும், அதனைக் கண்டித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு எதிராக, "வெங்கட்ராமையருக்கு நன்றி", என்று திகவினர் சுவரொட்டிகள் அடித்ததாகவும் நினைவு.
மேலே குறிப்பிட்டிருக்கும் அதே காலகட்டத்திலும், அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் கதைதான் பா. ராகவனின் 'புவியிலோரிடம்'. இதிலும் இட ஒதுக்கீடும், இட ஒதுக்கீட்டிற்காக சாதி மாற்றிச் சான்றிதழ் வாங்குவதும் மையப் பிரச்னைகள்.
தமிழகத்தின் பரவலான பொதுபுத்தி புரிதலுக்கு மாறாக, பிராமண சாதியிலும் சராசரிக்கும் கீழே இருக்கக்கூடிய புத்திசாலித்தனத்துடன் விளங்கும் குடும்பங்களும் அதன் பிள்ளைகளும் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் புவியில் ஓரிடம் கதையின் நாயகன் வாசுவின் குடும்பம்.
ஆறேழு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் ஒருவராவது பட்டதாரியாக வேண்டும் என்று ஏங்கும், பாரம்பரிய பற்றுள்ள அய்யங்கார் தந்தை. அவருக்கு அடங்கின, ஆதர்ச மனைவி. வெகு சுமாரான படிப்புத் திறனையே கொண்டிருக்கும் ஐந்து பிள்ளைகள் கொண்ட கீழ் மத்திய வர்க்க கூட்டுக் குடும்பம். இவர்களில் கடைசி பிள்ளையான வாசுதேவன் தட்டுத்தடுமாறி மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விடுகிறான். அவனை எப்படியாவது கல்லூரியில் சேர்த்து ஒரு பபட்டதாரியாக்கிவிட வேண்டும் என்ற தந்தையின் கனவை நினைவாக்க ஸ்ரீரங்கத்தில் மடத்தில் வேலை செய்யும் மூத்த அண்ணன் வரதன், வாசுவிற்கு நாடார் சாதிச் சான்றிதழ் வாங்கி ஒரு நாடார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறான்.
அங்கே சேர்ந்து படிக்கும் வாசு கொள்ளும் மனச்சஞ்சலங்களும் அவன் போடும் இரட்டை வேஷத்தின் காரணமான தவிப்பும், பின் அவன் அதை உதறி வெளியேறி, தன் வாழ்க்கையைத் தானே தன் திறமை மற்றும் தனித்தன்மையன்றி வேறு எந்த அடையாளங்களும் இல்லாமல் அமைத்துக் கொள்ள பாடுபடுவதும் அதில் வெற்றி பெறுவதுமே கதை.
இந்தக் களம் ராகவனின் ஹோம் பிட்ச் என்றே சொல்ல வேண்டும். அய்யங்கார் உரையாடல்களிலும், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறக்க நேரிட்ட தமிழக பிராமண இளைஞர்களின் தடுமாற்றங்களையும், ஒரு கீழ் மத்திய வர்க்க வைணவ குடும்பச் சூழலைச் சித்தரிப்பதிலும் ஒரு அச்சு அசலானத் தன்மையை கொண்டு வந்துவிடுகிறார் ராகவன். தவிர கூட்டுக் குடும்பங்களுக்கேயான தனிப்பட்ட பிரச்னைகளையும் கண் முன்னே நிறுத்துகிறார். உரையாடல்கள் சில இடங்களில் சற்றே சுஜாதாவை நினைவூட்டினாலும் மிக இயல்பாகவும் லேசான நகைச்சுவையுடனும் தனித்தன்மையுடன் அமைந்துள்ளன. குறிப்பாக, மண்டல் கமிஷன் பரிதுரைகள் குறித்த வாசுவுக்கும் அவன் வேலை செய்யும் வட இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிக்குமான உரையாடல்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன.
வாசுவின் பாத்திரமே பிரதானமாக படைக்கப்பட்டிருந்தபோதிலும், அவனது தந்தை, தாய், பெரியண்ணா, மன்னி, வரதன், டூரிஸ்ட் கைடாகப் பணியாற்றும் அண்ணா என்ற பல பாத்திரங்களையும் மிக சுருக்கமான வரிகளிலேயே நிறைவாகப் படைத்து விடுகிறார் பா.ரா. நாவலின் ஊடே வரும் ஜீயர் பாத்திரமும் அவரது நிலையும், அவருக்கும் எளிய வைணவக் குடும்பங்களுக்கும் இருக்கக்கூடிய உறவும் ஒரு சிறு காட்சியிலேயே மிகச் சிறப்பாக பதிவாகியுள்ளது. வாசுவின் அகவுலகம், அவனது குடும்பச்சூழலைச் நாவலின் துவக்கப் பகுதிகள் சித்தரிக்கின்றன. இந்தப் பகுதிகளில் புறச்சூழல் பற்றிய குறிப்புகளே இல்லை எனலாம். சொல்லப்போனால், வாசு தில்லி சென்றபின்தான் பிற மனிதர்களே கதைக்குள் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட்ட ஒரு கதை தன்மை ஒருமையில் விவரிக்கப்பட்டிருந்தால் இன்னமும் ஆழமாக அமைந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.
இட ஒதுக்கீடு, மண்டல் பரிந்துரைகள் ஆகியவற்றைப் பேச இந்த நாவல் எடுத்துக்கொண்ட காலகட்டத்திலேயே நிகழும் இன்னொரு பெரிய நிகழ்வான, மந்திர்-மஸ்ஜித் பிரச்னை இதில் கண்டுகொள்ளப்படவில்லை என்பது சற்று வியப்புக்குரிய ஒன்று. என்றாலும், நாவல் எடுத்துக் கொண்ட பிரச்னையை தெளிவாகவும், அனாவசியமான கவனச் சிதறல்கள் இல்லாமலும் கச்சிதமாகவும் முன்வைத்து விடுகிறது. அந்த வகையில் இது ஒரு நிறைவான வாசிப்பனுவத்தை தந்துவிடுகிறது.
இந்த நாவல் தமிழ்ச்சூழலில் அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. இதைப் போலவே பா.ராவின் அலகிலா விளளையாட்டு நாவலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விட்டது. இதை விட இன்னும் ஆழமான அந்த நாவல் பற்றியும் தனியாக் எழுத வேண்டும். இந்த நாவல்கள் தமக்குரிய நியாயமான கவனம் பெறாமைக்கு, சுஜாதாவைப் போலவே பா.ராவின் எழுத்தும் இப்படியென்று வரையறுக்க முடியாத வகையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
புவியிலோரிடம், பா. ராகவன்,
ராஜேஸ்வரி புத்தகாலயம், 8, முத்துகிருஷ்ணன் தெரு, த.பெ.எண் 8856, பாண்டிபஜார், சென்னை - 17
விலை ரூ.90
இணையத்தில் வாங்க - உடுமலை, என்ஹெச்எம்
No comments:
Post a Comment