ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால், எது ஒரு உருவாக்கத்தை படைப்பாக மாற்றுகிறது என்பதைக் கூர்ந்து அவதானித்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். "யாதுமாகி" தேவி - உள்ளபடியே மனதில் நிறைந்துவிட்டிருக்கிறார் . வாசிக்குந்தோறும் தனது பாட்டியை, தாயை, சகோதரிகளை எண்ணாமல் எவராலும் புத்தகத்தை மூடிவிட இயலாது. நேரடியாகப் பார்த்து உடன் வளர்ந்த விதத்தால் இந்தக் கதைசொல்லிக்குக் கிடைத்திருக்கும் ஒரு கதைப்போக்கு படைப்புக்கு வலுவூட்டுகிறது. தான் கடந்து வந்த வாழ்க்கையின் மொத்தத்தையும் முழுப்பார்வையாக பார்க்க முடிந்தவனின் லௌகீக விவேகம் அவனது வார்த்தைகளுக்கு மந்திரம் போன்ற கனத்தைக் கூட்ட முடியும். அப்படி ஒரு வாழ்க்கையை விளக்கிய விதத்தில் "யாதுமாகி" தன்னை ஒரு படைப்பாக நிறுவிக் கொள்கிறது.
இன்று வரை அறிவில் உயர்ந்த சமூகம் என்ற கருதுகோளை விடாப்பிடியாக கையில் வைத்திருக்கும் ஒரு சாதியில்தான் பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்தன. உடல் ரீதியிலான வன்முறை என்பதைவிடக் கொடிய ஒன்று பிராமண சாதியின் விதவை பெண்களுக்கு சுமத்தப்பட்டிருந்தது. எந்த பிராமணப் பெண்ணுக்கும் தனது சுயம் அறிந்து ஒழுகுவது என்பது அனுமதிக்கப்பட்டதேயில்லை. சுயம் அறிவது என்பதே பாபமான ஒரு கருத்தாக அச்சமூகப் பெண்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதிலும் வைதவ்ய கோலம் பூண்டவர்களுக்கோ வாழும் நாள் ஒவ்வொன்றும் நரகம் என்றே எண்ணத்தக்க அளவு மனதின் சிறகுகள் முறிக்கப்பட்டிருந்தன . இவை எதுவும் வெகு காலத்திற்கு முன்பு நடந்த வரலாறுகள் அல்ல. கடந்த 75, 100 வருட காலங்களில் நடைமுறையில் இருந்த, இன்றும் அதன் சாட்சிகள் மிச்சமிருக்கின்ற ஒரு சமகால நிகழ்வுதான்.
ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் இந்த நிலை மாற்றம் அடைந்த விதத்தை தாண்டுதல் என்று சொல்வதைக் காட்டிலும் பெரும் பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும். பூச்சியத்திலிருந்து 360 பாகைக்குத் திரும்பும் வேகத்தில் இன்றைய மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது. கடந்த தலைமுறையில் பிறந்தவர்களுக்கு விதவைக் கோல கொடுமைகள் அசோகரின் ஆட்சியைப் போன்ற ஒரு வரலாற்று சம்பவம் மட்டுமே. மாற்றத்திற்கான கருவியாக ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் எவற்றைக் கைக்கொள்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. மாற்றத்தின் விளைவுகளைப் பொறுத்தவரையில் அக்காரணிகள் இன்னும் அதிக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த விதத்தில் பிராமண பெண் சமூகம் தனது மாற்றத்துக்கான கருவியாகக் கைக்கொண்டது கல்வியை. கூண்டு திறக்கப்பட்ட சிறுத்தையின் வேகத்தில் அந்தச் சமூகப் பெண்கள் படிப்பு என்பதைப் பற்றிக்கொண்டார்கள். அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருந்த அனைத்துத் தளைகளையும் அவர்கள் கல்வியால், அது தரும் வாய்ப்புகளால் அகற்றும் விதத்தை இன்றுவரை காணமுடியும்.
இந்தப் பாய்ச்சலின் நீளம் அளவுக்கே ஆழமானது இதை சாத்தியமாகத் துணிந்த முதல் தலைமுறை பெண்களின் போராட்டங்களும் , அவற்றுக்குத் துணை நின்றவர்களின் மன உறுதியும். இந்திய அளவில் 1800களின் இறுதியில் இந்த மாற்றத்தை ஒலித்த அறியப்பட்ட குரலாக விவேகானந்தர், ராஜா ராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோரைக் காண்கிறோம். தமிழக அளவில் இந்தக் குரலை எதிரொலித்தவர்கள் பாரதியும், அ.மாதவையாவும். ஆனால் இதை சாத்தியப்படுத்தத் துணிந்த பெண்களின் நிலை பெருமளவில் பேசப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சகோதரி சுப்புலட்சுமி குறித்து நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம். மாதவையாவின் மகள் மீனாட்சி குறித்து இன்னும் குறைவாகவே தெரியும்.
அறியப்படாத அந்த முன்னோடிகளை நமக்கு இந்தப் படைப்பு அறிமுகம் செய்வதோடு மட்டுமன்றி அவர்களை நமக்கு மிக நெருக்கமானவர்களாக, மதிப்பிற்குரியவர்களாக நெருங்கச் செய்கிறது . இப்படி வட்டத்திற்கு வெளியே வந்து நின்று போராடிய பெண்மணிகள் இவர்கள் என்றால் வட்டத்திற்கு உள்ளேயே நின்று போராடிய பெண்களை எவரும் அறியவே இயலாது. படைப்பில் வரும் அன்னம்மா அவ்வாறான அனைத்துப் பெண்களின் ஒரே வடிவம். கணவன் இறந்து, சொத்துகளை பிறர் வசம் தந்துவிட்டு, அவரிடமே பணம் வாங்கா கூலியாக உழைத்து, தனது குழந்தைகளின் அடிப்படை தேவைகளைக்கூட கேட்கக் கூசி நிற்கும் அன்னம்மாதான் தனது பால்ய விவாக பெண்ணின் படிப்புக்கு தன்னால் இயன்ற, தனக்குத் தெரிந்த ஒவ்வொரு வழியிலும் முயன்றுகொண்டே இருக்கிறாள். "கம்மனாட்டி படிச்சு கலெக்டராகப் போறாளா?" எனும் கேள்விக்கு பூமியின் பொறுமையுடன் ஆனால் பாறையின் உறுதியுடன் பணிந்து பதில் பேசுகிறாள். அவளது போராட்டம், அதன் முறைகள் வேறானவை. சகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி போன்றோர் வரலாற்றில் எவ்வளவு உண்மையோ அந்த அளவு உண்மை பேரறியா அன்னம்மாக்களும். சகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி ஆகியோரைப் பேசிய அதே விதத்தில் அன்னம்மாவையும் பேசி இப்போராட்டத்தில் அன்னம்மாக்களின் பங்கினையும் படைப்பு நமக்குக் காட்டுகிறது.
மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் இரு வேறு புள்ளிகளில் நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் எந்தப் புள்ளியை சார்ந்து முடிவெடுப்பது என்ற சிக்கல் இந்த காலக்கட்டத்தில் சில ஆண்களுக்குரியவை. கூட்டத்தில் தனித்து விடப்பட்ட அவர்கள், தம் குடும்பத்தின் பொருட்டு அக்கூட்டத்தை சார்ந்தும் இருக்க வேண்டியவர்கள். மாற்றத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் அவர்களது இடமும் தேவியின் தந்தை உருவில் நமக்குக் காட்டப்படுகிறது. கல்வியே மாற்றத்திற்கான கருவி என்பதை சதாசிவம் தனது மகளுக்கு தினமும் சைக்கிளில் வந்து கற்றுத் தரும் இடத்தில் நம்மால் உணரமுடிகிறது.
காலமாற்றம் கதையின் போக்கில் முன், பின்னாக நகர்ந்து வருவதை சரியாகக் காட்சிப்படுத்தியிருந்தாலும் அவற்றுக்கு இடையே இருக்கும் ஒரு தொடர் இழை வெகு பூடகமாக இருக்கிறது. வெறும் தற்புகழ்ச்சி சுயசரிதையாக முடிந்து போய்விடும் சாத்தியங்கள் கொண்ட கதை இது. ஆனால், சராசரி மானுட உணர்வுகள் கொண்ட பெண்ணாகவே தேவி சித்தரிக்கப்பட்டிருப்பதும், உணர்வு ரீதியிலான அவரது குழப்பங்கள் சொல்லப்பட்டிருப்பதும் படைப்பினை நம்பகத்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறது.
நாவலின் மையமாகிய தேவி சமுதாயக் கட்டுப்பாடு எனும் விலங்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வானத்தில் உயரப் பறந்தவரில்லை. ஆனால் இன்று மிக இயல்பான ஒன்றாக இருக்கும் ஒன்றைச் சாத்தியப்படுத்த அவர் சந்திக்க நேர்ந்த சவால்கள், தடைகள் ஆகியவை நாம் அவதானிக்க வேண்டியவை. படைப்பு இந்த இடங்களை இன்னும் அழுத்தமாகக் காட்டவில்லை என்று உணர்கிறேன். லேசாகக் கோடிட்டுக் காட்டுவதோடு அவ்வாறான இடங்களைப் படைப்பு கடந்து சென்று விடுகிறது. தேவியின் மனஓட்டம், அகக் குமுறல்கள், அவற்றை தேவி சிந்திக்கும் விதம் போன்ற எவையும் படைப்பில் வெளிப்படுத்தப்படவில்லை. படைப்பில் பேசப்பட்ட தேவியின் செயல்களின் வழியே மட்டுமே நாம் அவரது கருத்துகளை யோசிக்க முடிகிறது. காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடங்களை படைப்பு தாவிக் கடந்து சென்று விடுகிறது அல்லது ஒரு உரையாடல் வழியே குறிப்புணர்த்தி நகர்கிறது. துணைப் பாத்திரங்களின் இடம் சற்று குறுக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. தேவியின் சாதனை அளவுக்கே உணர்த்தப்பட்டிருக்க வேண்டிய அவரது ராணுவத் துறை கணவர், அவர் தேவியை ஏற்றுக் கொண்ட விதம், படைப்பில் ஒரு புகை படிந்த சித்திரமாய், மாயக் கனவுக் காட்சியாய் மின்னி மறைந்து விடுகிறது. ஒருவேளை, படைப்பின் மையமான தேவியிலிருந்து விலகி விடுவோமோ என்று எழுத்தாளர் ஐயம் கொண்டிருக்கலாம் போலும். தேவி தன்னை உருவாக்கிக்கொண்ட விதத்தை விட, அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தையே "யாதுமாகி" பேசுவதாக நினைக்கிறேன்.
இருப்பினும், இத்தகைய விடுபடல்களை படைப்பின் வடிவமைப்பும், செய்நேர்த்தியும் ஈடுசெய்கின்றன. படைப்பின் இடையே தரப்பட்டிருக்கும் உண்மையான ஒளிப்படங்கள், தேவி மற்றும் துணைப் பாத்திரங்களின் உண்மை உருவங்கள், அவை காட்டும் சூழல் ஆகியன படைப்பு சொல்லாமல் விலகிச் சென்ற இடங்களை நமக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த வடிவமைப்பை படைப்பிற்கு கொண்டுவந்த வம்சி பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு தலைமுறை மாற்றம் என்பது பட்டுப் புழு கூடு உரிப்பது போல எத்தனை வலிந்த பிரயாசைகளைக் கொண்டிருக்கிறது. ஒற்றையடிப்பாதையை உருவாக்கியவன்தான் தார்சாலை இட்டவனை விடவும் பாராட்டப்பட வேண்டியவன் இல்லையா? ஆனால், ஒற்றையடிப் பாதையை முதலில் கண்டறிந்து உருவாக்கியவன் எவனும் கல்வெட்டு வைத்துக் கொள்ளவில்லை. ஏதுமற்ற பரந்த பூமியில் அவன் உருவாக்கியதை காலம் விரிவாக்குகிறது. இன்றைய சாலைகள் அனைத்துமே பேரறியா ஒருவன் என்றோ உருவாக்கிய ஒற்றையடித் தடம்தானே . தேவி தனது காலத்திற்குப் பின்பு வாழும் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்கான ஒற்றையடிப்பாதையை உருவாக்கியவர். ஒற்றையடிப்பாதைகளை உருவாக்கிய எல்லோரையும் போல தேவியும் தான் காலத்தால் முன்னகர்ந்து போவதை, ஏதுமற்ற வெளியில் பாதை கட்டுவதை தன்னியல்பாகத்தான் செய்கிறார். அதில் பெருமிதங்கள் ஏதுமற்ற தன்னியல்பான கடமை உணர்வில்தான் அவர் இருக்கிறார். படைப்பு அதை சரியாகக் காட்டியிருப்பதாகவே எண்ணுகிறேன்.
சாலைகளுக்குத்தான் போக்குவரத்து விதிமுறைகளும், காவலர்களும். ஒற்றையடிப் பாதைக்கு முள்ளும், விஷ ஜந்துக்களும், பேய்கள், கள்வர்கள் குறித்த அச்சங்களும் தான். ஆனால் ஒற்றையடிப்பாதை மீதுதானே இன்றைய சாலைகள் அனைத்தும். அவ்விதத்தில் ஒற்றையடிப்பாதையை உருவாக்கி நடக்கத் துணிந்த "யாதுமாகி" தேவி வாசித்து நினைவுகூரப்படவேண்டியவரே.
யாதுமாகி, எம்.ஏ. சுசீலா,வம்சி பதிப்பகம்,இணையத்தில் வாங்க - நூல் உலகம், உடுமலை
No comments:
Post a Comment