A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

18 May 2016

Why Be Happy When You Could Be Normal? - Jeanette Winterson



(ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சிறு தொழில்முனைவர். முதல் நாவல் மற்றும் பி.பி.சி. தொடர் ’Oranges Are Not The Only Fruit’ தனது 25 வயதில் எழுதினார். Officer of the Order of the British Empire உட்பட பல சம்மானங்களயும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பார்க்க: விக்கிபீடியா )

முன்னாள் பி.பி.சி. தொலைக்காட்சி நடத்துனர் ஆலன் யெந்தோபின் (Alan Yentob) ஆவணப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்த சமீபகால கலாச்சார நிகழ்வுகளுள் ஒன்று. அவற்றின் மூலமாக பல சமகாலக் கலை-இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு படத்தில் ஜியனெட் வின்டர்சன் 2011ல்  எழுதிய சுய-சரிதை ‘Why Be Happy When You Could Be Normal?’ என்ற புத்தகத்தை ஒட்டி, ஆசிரியை பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் தொழிற்கூடமான மான்சென்ஸ்டரின் வட்டாரங்களும், அதற்கு நேர்மாறாக அவர் படித்து வெற்றி பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையும், அவரது நெருங்கிய நண்பர்களின் நேர்காணலும் தொலைகாட்சியில் சித்தரிக்கப்பட்டன


அவற்றினூடாக சட்டென்று பதிந்தது ஜியனெட்டின் அசாதாரணமான ஆளுமை. அவரது நடை, உடை, பாவனை அனைத்திலும் எழுத்துலக ஆளுமைகளிடம் அதிகம் காணக் கிடைக்காத ஒரு குதூகலமான வெளிப்படைத்தன்மை இருந்தது, அதே சமயம் ஒரு அரங்கேற்றத்தன்மையும் கூட. யெந்தோப் ஜியனெட்டை உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச்செல்கிறார். அங்கு ‘அழகைத் தேடி' என்ற பலகையேந்திய விக்டோரிய கலைக்கூடத்தினுள் நுழைகின்றனர். காலனிய வருமானத்தின் வளமையில் கனிந்து அழுகும் கலாசாரத்தின் சித்திரங்கள்: சித்திரப் பீங்கான் பாண்டங்கள், ஆலச பாவனையில் பெண்ணுடல்களின் எண்ணைச் சித்திரங்கள், தங்க முலாம் பூசி தந்தமிழைத்த மரப் பொருட்கள். ஜியனெட் வீறிட்டுச் சிரித்தபடி வியக்கிறார், “விக்டோரியர்கள் உண்மையிலேயே அழகின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர்; அதை அழிக்கத் தம்மாலான அனைத்தையும் செய்தனர்...” என்று வெகு இலகுவாக சரித்திரத்தைப் பகடி செய்தபடி நகர்கிறார். தொடர்வது அலங்காரப் பொருளாக சித்தரிக்கப்படும் பெண்ணுடல்களின் சித்திர வரிசை - மயிற்பீலிகளின் நடுவில் பவள உதடுகளைப் பிதுக்கியபடி, புலித்தோல் மேல் ஆயாசமாக சாய்ந்தபடி, ஒரு பெண்ணின் கண்ணீர் கூட அவளது ஆப்பிள் கன்னங்களை அலங்கரிக்கவென்று சிந்தத் துடிக்கிறது.

முந்தைய நூற்றாண்டின் திருப்பத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக நானும் ஒரு பயங்கரவாத suffragistஆக இருந்திருப்பேன். 1913ல் இதே மான்செஸ்டரின் Pankhurst சகோதரிகள் (மற்றும் உழைக்கும் வர்க்க பெண்ணியப் போராளிகள்) இந்த அருங்காட்சியகத்தின் சில கலைப்பொருட்களை சிதிலப்படுத்தனர்...அவர்களது வெளிப்பாட்டின் ஒரு அம்சம் பெண்களைப் பற்றிய இந்தப் பொய்யான சித்தரிப்பை, இந்த செயற்கை பிம்பத்தைத் தாக்கித் தகர்ப்பதாக இருந்தது... இந்தக் கலைப்பொருட்களை நேசிக்கும் நான் அப்படிச் செய்திருப்பேனா?” ஒரு சிறிய அமைதி. யெந்தோப் உந்துகிறார், “செய்திருப்பீர்களா?”

செய்திருப்பேன் என்று தான் நினைக்கிறேன். அது எப்படியென்றால் சிலருக்குத் தன்னால் ஒருபோதும் கொலை செய்ய முடியாதென்று நன்றாகத் தெரியும், ஆனால் அந்த சிலரில் நான் அடங்க மாட்டேன் என்றும் எனக்குத் தெரியும்,” ஜியனெட் தன் ஐம்பது வயது முகத்தின் கண்ணோர சுருக்கங்கள் இறுக புன்னகைத்தார்.

எந்த ஒப்பனையுமற்ற தெளிவான முகம். கழுத்துவரை வெட்டப்பட்ட அடங்காத சுருள்முடி, சுறுசுறுப்பான சிறிய உடல். சாதாரணமான ஆனால் நுணுக்கமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர உடைகள். “உலகமயமாக்கலின் பண்டிதர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லக்கூடும், ஆனால் நீ எங்கு பிறந்தாய், எந்த சூழலுக்குள் பிறந்தாய், அந்த இடம், அந்த இடத்தின் சரித்திரம், அந்த சரித்திரம் உன் சரித்திரத்தோடு புணர்தல், அவையே உன் சுய அடையாளத்தின் முத்திரையாய்ப் பதிந்து விடுகின்றன.” மெல்லிய மான்செஸ்டர் வழக்கு கலந்த அவரது தெளிவான ஆங்கிலத்தில் இந்த மேலுரை திரையின் பின் ஒலித்தது. அப்பொழுது இந்த எழுத்தாளர்மேல் உதித்த ஆர்வம் இரண்டு வருடங்கள் கழித்து எதேச்சையாக அவரது அதே புத்தகத்தை ஒரு நண்பர் அன்பளிப்பாகத் தந்ததும் படிக்கக் கிடைத்தது.

அதன் அட்டை முழுவதும் பரவியிருந்தப் புகழ்-வாசகங்களில் ‘தைரியம்' என்ற சொல் மட்டும் மீண்டும் மீண்டும் தட்டுப்பட்டபடியே இருந்தது. புத்தகத்தைப் படிக்குமுன்னரே அதன் பின்புலமான மான்செஸ்டர் மற்றும் அக்ரிங்டன் புறநகர்களின் காணொலியைக் கண்டு விட்டிருந்தேன். தீப்பெட்டி பொட்டலங்களைப் போன்று ஒன்றோடொன்று ஒட்டி நின்ற சின்னஞ்சிறு சேரி வீடுகளில் ஒன்றைக் காட்டி, ‘அதில் தான் என் தத்துத் தாய் திருமதி. வின்டர்சனுடன் நான் வளர்ந்தேன். அவர் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றும் நாட்களில் நான் இந்தப் படிக்கட்டில்தான் அமர்ந்து மனதுக்குள் கட்டுக்கதைகளைக் புனைந்து நேரத்தைக் கழிப்பேன்' என்றதும், யெந்தோப் ஆச்சரியமும் அவநம்பிக்கையுமாய் அந்தச் சின்னஞ்சிறு ஒற்றைப் படிக்கல்லை வெறித்துப் பார்த்தார். “வசதியாகவே இருக்கும், இப்பொழுதும் கூட என் உடல் அடக்கமாகப் பொருந்தும்" என்றபடி ஐந்தடி இரண்டகுல ஜியனெட் தன் கால்களைச் சுவற்றில் தூக்கிச்சாய்த்தபடி அந்த இரண்டடி படிக்கட்டின் மேல் உடலை இரண்டாக மடித்து அமர்ந்துகொண்டு தன் கதையைத் தொடர்ந்தார்.

சட்டென்று ஒரு செர்பிய எழுத்தாளர் சொன்ன வாசகம் நினைவிற்கு வந்தது: எழுத்தாளனாக வேண்டுமென்றால் பின்வரும் இரண்டில் ஒன்றாவது அவசியம் வேண்டும் - அசாதாரணமான வெற்றிப்பசி, இல்லையென்றால் வெறுமையை நோக்கியேனும் கூவுமளவு கடினமான வாழ்க்கை, இரகசியத் துயரொன்றை ஒப்புகொள்ளும் நிர்பந்தம். தனது சுயசரிதையில் ஜியனெட் இவ்விரு உந்துதல்களையும் ஆராய்கிறார், இரு நிர்பந்தங்களுக்கும் தன் நன்றிக்கடனையும் தெரிவிக்கிறார்; அதுவே மிகப் பெரிய தைரியமான கொடையாகப் பட்டது.

1960ல் மான்செஸ்டர் அருகேயான அக்ரிங்டன் புறநகரில், சுமார் ஆறு மாதக் கைக்குழந்தையான ஜியனெட், திருமதி.வின்டர்சனின் (தி.வி.) அடைக்கலத்திற்குக் கைமாறினார். திருமதி.வின்டர்சன்  ஆறடி உயர, பருமனான பெண்மணி, தன் நிழலடியில் தன் கணவரையும் தத்துக் குழந்தையையும் வளர்த்த கதை புத்தகத்தின் மூன்றில் முதல் இரு பாகங்களாக விரிகிறது. தி.வி. தன் மேஜை டிராயரில் குண்டு திணிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பார். உள்ளூர் பெந்தெகொஸ்தல் சர்ச்சின் உறுப்பினார அவர் விவிலியத்தைத் தவிர எந்த புத்தகத்தையும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு முறை ஜியனெட்டின் இரகசியப் புத்தகப் புதையலை மெத்தைக்கடியில் கண்டுபிடித்ததுமே, ஒரு புத்தகம் விடாமல் அனைத்தையும் நெருப்பேற்றிக் கொளுத்திவிட்டார். அவரது செல்ல வாசகம், “புத்தகங்களின் பிரச்சனை என்னவென்றால், ஒரு புத்தகத்திற்குள் என்ன இருக்கிறதென்று தெரியுமுன் மிகவும் காலம் கழிந்திருக்கும்.” அதே சமயம், சிறுமியான ஜியனெட்டை அவரே பொதுநூலகத்திற்கு அனுப்பி கொலை-மர்ம நாவல்களைப் பை நிறைய இரவல் வாங்கி வரச் சொல்லி ஏவுவார். கேட்டால், “இறுதியில் ஒரு சவம் வரப்போவது முன்கூட்டியியே தெரிந்திருந்தால் பங்கமில்லை” என்று விடையளிப்பார்.  அவரது வாழ்க்கையின் ஒரே வெறிபிடித்த நோக்கம் விவிலியம் கணிக்கும் மாபெரும் பிரளயத்திற்காகத் தயாராகக் காத்திருப்பது. அந்நோக்கத்திற்காகவே அவர் ஜியனெட்டையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் ஜியனெட்டின் பிஞ்சு மனம் வாழ்வை நோக்கி ஏங்கித் துடித்தது. புத்தகங்கள் அவளுக்கு உயிரூட்டமான ஒரு பிரபஞ்சத்தின் துவாரங்களாயின. தினமும் திருமதி  வின்டர்சன் இறைவனிடம் தனக்கு மரணத்தைப் பரிசளிக்குமாறு வேண்டிக்கொண்டிருக்கும்போது ஜியனெட் இரகசியமாக புத்தகங்களின் வாழ்வில் புதைந்திருப்பார். அவர்களது ஏழ்மையான வாழ்வில் அது எப்படி சாத்தியப்பட்டது என்பதையும் சேர்த்துச் சொல்லும்போதுதான் ஜியனெட்டின் சுயசரிதை அவரது சுயத்தை மீறிய சரித்திரப் படிவமாகிறது. அவர் வாழ்ந்த அக்ரிங்டன் உலகின் எல்லாச் சேரிகளைப் போலவும் அசலில் ஒரு தன்னடக்கமான சிறிய கிராமம். கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒரே வருமானம், ஒரே மாதிரியான தொழிற்சாலை அலுவல். மூக்குச் சளி வழியும் குழந்தைகள் விளையாடும் தெருச்சந்துகள், சாக்கடைகள், பல வீடுகள் பகிர்ந்து கொண்ட வெளிப்புற கழிப்பறைகள், வம்புகள், சண்டைகள், உதவிகள். இவற்றை இணைக்கும் சமூக மையம் - அக்ரிங்டன் பெந்தெகொஸ்தல் தேவாலயம் மற்றும் நகராட்சிப் பொது நூலகம்.

கிறித்தவ சமயம் இம்மக்களின் ஏழ்மையை இலகுவாக்கும் ஒரு எளிய கலாச்சார வங்கியாக இருந்தது. ஒரு நாள் திடீரென்று மழை பெய்து துணிமணிகளை நனைத்துவிட்டால், துணிகளின் சொந்தக்காரர் வீடு வீடாய்ச் சென்று துணிகள் காய வேண்டி ஜெபிக்குமாறு கோரிக்கையிடுவார். வானொலி சரியாக ஒலிக்கவில்லையென்றால் கூட, அதைப் பிடித்த சாத்தானை விரட்ட அதன் டிரான்ஸிஸ்டரைக் கழற்றி தேவாலயத்தில் மந்திரித்து வருவது மரபாக இருந்தது. இந்தச் சூழலில் ஜியனெட்டின் தேர்வு விக்டோரிய-கால சமூக நல திட்டங்களின் நன்கொடையான பொதுநூலகம் தான். அதே சமயம் அவர் தேவாலயத்தின் நடப்புகளிலும் தனது பொழுதுபோக்கைப் பெற்றுக்கொண்டார். அதன் மாதாந்திர தீர்த்தயாத்திரைகளை மிகவும் எதிர்நோக்கிக் கலந்துகொள்வார். அக்ரிங்டனின் மக்கள் பல மைல் தூரம் சைக்கிள்களை மிதித்துக் கூட்டம் கூட்டமாக அடுத்த கிராமத்து தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். வழியில் தங்கள் டெண்டுக் கொட்டாரங்களை விரித்து பொது சமையல் செய்து இரவைக் கழிப்பது ஜியனெட்டிற்கு மிகவும் பிடித்த பகுதி. அப்பொழுது வழிப்போக்கப் பாடப்படும் பக்திப்பாடல்களை அவர் தன் பின்னாட்களிலும் பாடுவதுண்டு; அதே தேவாலயம் அவரைத் தன் பாலியல் சார்பிற்காக அவமதித்து, அவர் தன் வீட்டை விட்டு வெளியேறிய பல வருடங்கள் கழித்தும்.

தன் பதினாறாம் வயதில் ஜியனெட்டின் சுயபாலியல் சார்பைக் கண்டுபிடித்ததும் தி.வி. தானே தேவாலயத்தில் ஜனெட்டின் பொதுமன்னிப்புக்காகவும், மீறினால் தண்டனைக்காகவும் பேயோட்டத்திற்காகவும் ஏற்பாடு செய்தார். அதைத்தொடர்ந்து ஜியனெட் வீட்டை விட்டு வெளியேறி, கடனாய்க் கிடைத்த ஒரு சிறிய ஆஸ்டின் மினி மோட்டர் காரில் வாழ ஆரம்பித்தார். அப்பொழுதுதான் இங்கிலாந்தின் அதிமேல்தட்டு மக்களுக்கே அதிகம் வாய்ப்புக் கிடைக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்குத் தேர்வானார். முதல் வகுப்பிலேயே அவர்களது நடத்துனர் இவரை ‘உழைக்கும் வர்க்கப் பரிசோதனை’ என்று முத்திரை குத்தினார், கூடவே ஒரு ஆஃபிரிக்கமூலப் பெண்ணையும் ‘கருப்புப் பரிசோதனை’ என்ற நமுட்டுச் சுட்டியோடு அவர்களது பாடங்கள் தொடங்கின. அந்த இரு சோஷியலிசப் ‘பரிசோதனைகளும்' நண்பர்களாயினர்; அதிகம் ஆண் மாணவர்களே அடங்கிய அந்த மேட்டிமைவாதச் சூழலை நன்றாகவே தாக்குப்பிடித்து, சாதனையாளர்களாகவும் உருப்பெற்றனர். அது அப்பரிசோதனைக்கூடத்தின் வெற்றியும் கூட.

ஜியனெட்டின் முதல் நாவலே பி.பி.சி. தொலைகாட்சியில் அவரது சொந்தத் திரைக்கதையில் படத்தொடராக ஒளிபரப்பானது. பிறகு விருதுகள், விழாக்கள். இதன்பின் தொடர்வது பல பத்தாண்டுகள் தாண்டி அவரது அகவாழ்க்கை; காதல் முறிவுகள், மன அழுத்தம், தாயின் நினைவுகள், வளர்ப்புத்தாயுடன் மானசீக சமாதானம், நிஜத் தாயை நோக்கிய தேடல், இறுதியில் நிறைவு, நகர்வு. இந்த நூலின் தலைப்புக் கேள்வி தி.வி.யின் கேள்வி, ஜியனெட்டின் விடை அவரது வாழ்க்கை சரிதை.

மன அழுத்தம் என்ற திமிங்கலத்தின் வயிற்றில் அமர்ந்து கொண்டு, வெறும் சொற்களால் தன் கத்திகளையும், தக்கைகளையும், தப்பிக்கும் எல்லா சாதனங்களையும் உருவாக்கிக்கொண்டு கரையேறிய ஒருவரின் சரித்திரம் இது. மிகக் கூர்மையான சிறிய சிறிய வரிகள், இருத்தலின் பல ஏடுகளை ஒரே நேரத்தில் ஊடுருவிச் சென்று மனதில் தைக்கின்றன. தன் மனவோட்டங்களோடு தொன்மங்களையும், சரித்திரங்களையும், இலக்கியங்களையும் அனாயசமாகக் கோர்த்து ஒரு மூதாட்டியின் வக்கணையோடு, ஒரு விதூஷகனின் ஹாஸ்யத்தோடு தன் கதையையே சொல்கிறார். அவரால் மான்செஸ்டர் நகரின் சரித்திரத்தைத் தன் குடும்பக்கதை போல சொல்ல முடிகிறது, தன்னை நீக்கிய தேவாலயத்தை ஒன்றுமற்ற ஏழை மக்களுக்கு “வலிமையின் திமிரிற்கும் செல்வத்தின் மாயைக்கும் எதிரான அன்பின் அறைகூவலாக" காண முடிகிறது, மார்கரெட் தாச்சரின் ‘பணையம் வைத்துப் பயன் பெறும்' (Risk and Reward) திட்டத்தால் ஆரம்பத்தில் ஊக்கம் பெற்று, முடிவில் அடைந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தன் வாழ்க்கையின் அனுபவமாகப் பகிர முடிகிறது.

அகவாழ்வை விஸ்தரிக்கும் சுயசரிதைகள் மேல் எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் இருக்கும்; ஆனால் ஒரு சுயசரிதை, எழுதுபவருக்கு மருந்தாகவும் படிப்பவருக்கு இலக்கியமாகவும் மாறும் ரசவாதம் மிகவும் அபூர்வமானது. தேவதைக்கதைகளில் ஒளிந்திருக்கும் அந்த ரசவாதத்தை ஜியனெட்டின் எழுத்தில் உணர முடிந்தது. அவர் எழுதுகிறார், “எழுத்தில் இரண்டு வகைகள் இருப்பதை உணர எனக்கு வெகு காலம் பிடித்துவிட்டது; ஒன்று நீ எழுதுவது, மற்றொன்று உன்னை எழுதுவது. உன்னை எழுதும் ரகம் ஆபத்தானது. நீ செல்ல விரும்பாத இடங்களுக்கு இட்டுச் செல்லும். நீ காண விரும்பாதவற்றைக் காண நேரும்.”

புத்தகத்தைப் படித்தபின்தான் நினைவில் வந்தது, அந்த ஆவணப்படத்தில் ஜியனெட் விவரித்த பல விஷயங்கள், வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் அவரது புத்தகத்திலிருந்த அதே வாசகங்கள். ஆனால், அது ஏமாற்றத்தை அளிக்கவில்லை; மாறாக ஆச்சரியத்தை அளித்தது.

சரிதையில் ஒரு வரி: “ கடினமான வாழ்க்கைக்குத் தேவை கடினமான மொழி- அதுதான் கவிதை. அதைத்தான் இலக்கியம் அளிக்கிறது- இருப்பதைச் சொல்லத் தேவைப்படும் வலிமையுள்ள மொழி. அது ஒளியும் இடமல்ல. கண்டடையும் இடம்.”

ஒருவேளை அவரது ஒவ்வொரு வரியும் கவிதையின் கச்சிதமான இறுக்கத்தையும் விரிவையும் அடைந்துவிட்டதாலோ என்னவோ, அவர் அதே வரிகளை ஆவணப்படத்தில் மீண்டும் மீண்டும் ஒரு நடிகையைப் போல இயல்பாகச் சொல்லும் போதும் அது கண்டடைதல்களை உள்ளடக்கியே ஒலிக்கிறது. பல வரிகள் மனதில் பதிந்தும் விடுகின்றன, ஒரு நாட்டுப்புறப் பாடலின் வரிகளைப் போல, எங்கோ கேட்ட மந்திர உச்சாரணைகளைப் போல, பழமொழிகளைப் போல.

Why Be Happy When You Could Be Normal, Jeanette Winterson,
Random House
Flipkart, Amazon

ஒளிப்பட உதவி - Jeanette Winterson




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...