“வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது." - காஸ்டன் பாஷெலார்ட், இடவெளிகளின் கவித்துவம்.*
பள்ளிப் பருவத்தில் எதேச்சையாக ஒரு முறை தூர்தர்ஷனில் பாலு மஹேந்திராவின் ‘வீடு' படம் பார்க்க நேர்ந்தது. அப்போது வீட்டு மாடியில் இன்னொரு வீடு கட்டிகொண்டிருந்தார்கள். அந்த சூழலில் பார்த்ததோ என்னவோ, படம் தந்த பயமும் மனத்தளர்ச்சியும் இன்றும் நினைவிலிருக்கிறது. மீண்டும் அதைப் பார்க்கவும் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு நடுத்தர வர்க்க சம்பளக்காரருக்கு வீடு கட்டுவதென்பது சென்ற தலைமுறை வரை எவ்வளவு பெரிய பிரம்மயத்தனம்! கடன்கள், கட்டுமானத்தைப் பற்றிய முழு அறியாமையினால் ஏற்படும் பின்னடைவுகள், மனித உறவுகளில் சிக்கல்கள், முன்பின் அறிந்திராத புதிய சிறு- குடும்ப முறையின் பரிச்சயமற்ற தேவைகள், ஆசைகள்; ஒரு வகையில் எந்த வழிகாட்டுதலுமற்ற அசம்பவப் பாதை போன்றது அந்த முயற்சி. பிள்ளைகள் முதன்முதலில் அவர்களது பெற்றோர்களின் சாமர்த்தியமின்மையைக் கணித்து வருந்த ஆரம்பிக்கும் சில வாழ்க்கை நொடிகளில் வீடு கட்டும் படலமும் அடங்கும். இந்த அனுபவங்களிருக்க ‘திரு.பிஸ்வாஸிற்கு ஒரு வீடு' என்ற தலைப்பே ஒரு வகையில் பரிச்சயமாக ஒலித்தது. பெயரும் இந்தியப் பெயர். எழுதிய நைபால், இப்புத்தகத்தை எழுதிய பல வருடங்கள் கழித்துத் தான் இந்தியாவை முதன்முதலில் பார்த்தார் என்பதையே மறக்கச்செய்யுமளவு இந்திய அனுபவத்தை நினைவூட்டும் தலைப்பு. நாவலும் அவ்வளவு நெருக்கமான அனுபவமாகப் படிந்தது; எங்கோ மரகத அட்லாண்டிக் கடலில் மிதக்கும் கரீபியத் தீவுகளின் சாகசக் கதையாகவல்ல.
திரு.பிஸ்வாஸின் கதை அவருக்கு முன்னும்பின்னுமான இரு தலைமுறைகளின் கதைகளையும் அடக்கியது. பிரிட்டானியக் காலனியான ட்றினிடாட் நாட்டின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த-அடிமைகளாகவும், கணக்கு வேலைகளுக்காகவும் குடியேற்றம் செய்யப் பட்ட பற்பல இனத்தவருள் இந்தியரும் இருந்தனர். அவர்களின் வழிவந்த நைபால் ஓக்ஸ்ஃபோர்டு பல்கலைக்குத் தேர்வாகிப் பட்டதாரியானதும் இங்கிலாந்தில் எழுதிய முதல் பெரும் நாவல் இது; தன்னுடைய குடும்ப-சரிதையைப் புனைந்து எழுதியதால் இது அவரது மிக உருக்கமான படைப்பும்கூட. தன் தந்தையை ஒட்டிப் படைக்கப் பட்ட திரு.மோஹன் பிஸ்வாஸ், நாவலின் முதல் பக்கங்களிலிருந்தே ‘திரு' என்ற அடைமொழியை ஏந்தியே குறிக்கப் படுகிறார்.
ட்றினிடாட் தேசத்தில் இந்திய மக்களின் தொகை சிறுபான்மையே. ஆனாலும் அவர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இந்தியாவைத் தனது அரைகுறை மொழியிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும், இனப்பெருக்கப் பழக்கங்களிலும் அடமாகப் பிடித்துப் பிழைத்திருந்தனர். புலம்பெயர்ந்த தேசத்துள்ளும் ஒரு தனி தேசமாய் ஒதுங்கி வாழ்ந்த அந்த இரட்டிப்பு விலக்கம் திரு.பிஸ்வாஸின் அடையாளத்தை ஆரம்பத்திலிருந்தே பிழிய ஆரம்பித்து விடுகிறது. அவர் பிறந்ததுமே உள்ளூர் ஜோசியர் இப்பிள்ளை தன் தாய் தந்தையை விழுங்கப் போகிறான், இவனுக்குத் தண்ணீரில் கண்டம் என்று கணித்து விடுகிறார். எனவே அந்தத் தீவு தேசத்தின் குளம் குட்டைகளின் அருகில் கூட அண்ட விடாமல் அவரை காத்து வளர்த்தனர்.
அதைத் தொடர்ந்து திரு.பிஸ்வாஸின் தேடல்கள் செயலிழந்துவிட்ட பாரம்பரிய சமூகக்கட்டுமானத்தின் போதாமைகளிலிருந்து தப்பித்து நவீனத்துவம் தரும் தனிமனித சுதந்திரம் நோக்கிய போராட்டங்களாக விரிகின்றன. முதலில் அவரைப் புரோகிதத் தொழிலில் செலுத்த வேண்டி மற்றொரு புரோகிதர் வீட்டில் சிஷ்யனாக அனுப்புகிறார் தாயார். ஆனால் அதிலும் அசம்பவம். தப்பித்துப் போய் ஒரு விளம்பரப் பலகைகள் தயாரிக்கும் சித்திரக்காரராக தொழில் ஆரம்பிக்கிறார். அதிலும் வருவாய் மிகக் குறைவே. வயதும் சிறியது; ஆனால் ஒரு காதல் கடிதம் எழுதி எப்படியோ ஒரு நல்ல பெயருள்ள பெரிய வீட்டிற்குள் மாப்பிளையாக அகப்பட்டுக் கொள்ள நேர்ந்து விடுகிறது. முகப்பில் ஹனுமார் சிலை வைத்த அந்த மச்சு வீடுதான் அவர் குடிபுகும் ‘துளசி' குடும்பம்: தலைவி திருமதி துளசி, இரண்டு மகன்கள், ஒன்பது மகள்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தாய் மாமன். மகன்களைத் தவிர எவருக்கும் கல்வியில்லை, தேன்கூட்டின் உழைப்பாளித் தேனீக்கள் போல துளசி சொத்துக்களான வயல்களிலும், கடைகளிலும், சமையற்கட்டிலும் உழல வேண்டும். மகன்களின் வேலை படிப்பது, மற்றவரால் புண்படுவது, இறுதியில் இலண்டன் சென்று பட்டதாரியாவது. இந்தக் கூட்டில் அடைபட விரும்பாமல் தன் ‘சொந்தத் தோணியை’ செலுத்த ஆசைப்படும் ஒரே மருமகன் திரு.பிஸ்வாஸ். எல்லா எதிர்ப்புகளையும், சிறுமைப்படுத்தல்களையும், ஏழ்மைகளையும் தாண்டி எப்படி ஒரு ஓட்டைக் கடை வைத்து, ஆர்ய சமாஜில் கால் நனைத்து, கத்துக்குட்டிகளுடன் இலக்கியம் பேசி, இரண்டு முறை தனி வீடு கட்ட முயன்று தோற்றுப் போய், இறுதியில் ஒரு நாளிதழில் ஒரு பத்திரிகையாளர் பணியிலிருந்து கொண்டு, கடனில் வீட்டைப் பெற்று, தனது மகனுக்கும் மகளுக்கும் தன் கனவுகளைப் படிப்பு என்ற கொடையின் மூலம் செலுத்தி வாழ்வைத் தாண்டுகிறார் என்று விரிகிறது.
திரு.பிஸ்வாஸின் கதையின் முடிவை சம்பிரதாயமான பார்வையில் ’சுபம்' என்று சொல்லிவிடமுடியாது. ஏதோ உத்வேகத்தில் பெருங்கடனில் பழுதுகள் மண்டிக்கிடக்கும் ஒரு வீட்டைத்தான் ஏமாந்து போய் வாங்குகிறார்; அந்த வீட்டில் வெகு நாள் வாழும் பாக்கியமும் கிடைக்கவில்லை. ஆனால், திடீரென்று அவரது குடும்பத்தை ஒரு யுகக்கணக்கில் சட்டென்று முன்னகர்த்தி விடுகிறார். கூட்டுக் குடும்பத்தின் யுகத்திலிருந்து தனிக்குடும்பத்தின் யுகத்திற்கு, பட்டிமன்றங்களின் தீர்ப்புகளை மீறிய வெற்றி அவரது பிள்ளைகளுடையது. எல்லா கவனமும் அவர்களது, குறிப்பாக மகன் ஆனந்தின் படிப்பின் மீது செலுத்தப் படுகிறது, அவன் தான் திரு.பிஸ்வாஸின் இறுதி வெற்றி. ஒண்டுக் குடுத்தனத்தில் கிடைக்கப்பெறாத பாலும், கொட்டைப் பருப்பும் தரப்பட்டு, தந்தையின் சொந்தப் பேனாவும் கவனமும் தரப்பட்டு, இறுதித்தேர்வுகளை பதைபதைப்போடு கடந்து, கடல் கடந்து, பாரம்பரியம் கடந்து, ஒரு மனிதனாக, வெற்றி பெற்றவனாக, சுதந்திரமானவனாக உருவாகும் ஆனந்தே தந்தை பிஸ்வாஸின் இறுதி அத்தியாயம்; மகனும் தந்தையும் ஒருவருகொருவர் ஆற்றும் இந்த உதவியே வள்ளுவர் காலத்திலிருந்து செயலிழக்காத ஒரே பாரம்பரியச் சரடு. உடைந்து கிடக்கும் சமூகங்களின் ஒரே ஒளியாக இன்று மிளிரும் இந்த கல்வி எப்படி எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு தந்தையின் வாயிலாக மகனுக்குக் கடத்தப் படுகிறது, எப்படி ஒரு தலைமுறையை சேர்ந்த மனிதர்கள் தங்களது எல்லா கலாசார ஏழ்மைகளையும் கடந்து தன் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு வலுவான பாலமாக அமைகின்றனர் என்பதைப் படிக்கும்போது ஒரு பெருவியப்புப் பற்றிக் கொண்டது. சில கனவுகளை நிஜமாக்க ஒரு தலைமுறை பத்துவதில்லை. ஒரு காலத்தில் ப்ரைவேட் ட்யூஷன், கோச்சிங் கிளாசுகளுக்கு முன் தவமிருக்கும் பெற்றோரை நினைத்து சோர்வாகவும் சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும். இப்பொழுது அது வேறு ஒளியில் புலப்படுகிறது. அண்டார்ட்டிகாவின் பெங்குவின்கள் அடைகாத்து குஞ்சு பொறிப்பதைப் பற்றிய ஒரு ஆவணப்படம் நினைவில் வருகிறது. ஐந்தாறு மாதங்கள் பட்டினியாய், பூஜ்யத்திற்கு எண்பது டிகிரிக்கள் கீழே, வீசும் பனிப் புயல்களின் நடுவில், அசாத்தியமாகத் திகழும் ஒரு படைப்புத் தொழிலை ஏன், எப்படி, எவ்விதம் இவ்வினோதப் பறவைகள் ஆண்டுதோறும் உயிரைப் பணயம் வைத்து செய்கின்றன என்ற அதே அதிசயமும், அந்த தியாகத்தை நினைத்து நன்றியுணர்வும் ஏற்பட்டது.
அதே சமயம் ‘சர். விதியா’ அவர்களின் ஆளுமையையும் வேறு ஒளியில் கண்டுகொண்ட வியப்பு ஏற்பட்டது. இதுவரை அவரது அபுனைவுகளையே படித்திருந்த எனக்கு ‘நைபால்' என்றாலே ஆதங்கத்தோடு அமிலம் கலந்த ஒரு அதிகூர்மையான சிந்தனையாளரின் பிம்பமே மனதிலிருந்தது. அதை வலுப்படுத்தும் வகையில் பரபரப்பான நேர்காணல்கள். கூர்மையான நாக்கிருப்பவர்களை ஊடகங்கள் விட்டுவைப்பதில்லை; எல்லா தரப்பினரும் அவரவர் நிலைப்பாட்டிற்கேற்றவாறு வர்ணம் பூசி மகிழ்வர். அந்தக் குதூகலத்தில் எழுத்தாளர் என்பவர் முதலில் ஒரு கலைஞர், அவரது சிந்தனை அவரது கலையின் தொடர்ச்சியே என்பது மறந்தே போய் விடுகிறது. குறிப்பாகத் தன் கலையைப் பிரதானப் படுத்தும் நைபால் போன்ற ஒரு எழுத்தாளரை அவரது கருத்துக்கள் மூலமாக அல்லாமல் அவரது அகவயமான கலையின் மூலம் அறிந்து கொள்வது ஒரு பெரிய திறப்பாகவே இருந்தது. நிஜத்தில் அவர் தன் முதல் அபுனைவை எழுதும் முன் ஏற்பட்ட தயக்கத்தை ஒரு நேர்காணலில் விளக்கும் வகையில் சொன்னது:
“… எனக்கென்று கருத்துக் கோணம் எதுவுமில்லாமலிருந்தது. என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வந்திருந்தால் ஒரு இளைஞராக உங்களுக்கு எந்தக் கருத்துக்களும் இருப்பதில்லை. நீங்கள் எதையும் வெறுமே ஏற்றுக் கொண்டு கவனிப்பீர்கள். என் வயதை ஒட்டிய சிலரை சந்திக்கும்போது அவர்கள் தமக்குக் காலையுணவில் முட்டைகள் பிடிக்காது, குறிப்பிட்ட அந்த நாளிதழ் பிடிக்காது, வேலைசெய்யும்போது எவரேனும் தொந்தரவு செய்தல் பிடிக்காது எனும்போது, எனக்கு அவ்வகை உணர்வுகள் இல்லாமலே இருந்தது. நான் மிகவும் சகஜமாக, எளிமையாக இருந்தேன். எனவே சொந்த கருத்துக்கள் கொண்டவரைப்போல எழுதுவது எனக்குப் புதிதாய் இருந்தது. அது பெரும் அயர்வான வேலை, ஆனால் அதை எடுத்துச்செய்ததற்காக மகிழ்கிறேன், ஏனென்றால் அது எனது திறமையின் மற்றொரு பக்கத்தை அவிழ்த்து விட்டது.”இந்த அனுபவம் மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த அல்லது நவீன உலத்தின் விளிம்பில், உலகமயமாக்கலின் விளிம்பில் பிறந்த எவருக்கும் புலப்படுவதாகவே இருக்கும். “ஏற்றுக்கொண்டு கவனிக்கும்” அந்த ஆரம்பக் காலகட்டத்தில் எழுதப்பட்ட திரு.பிஸ்வாஸின் கதையும் கருத்துக்களின் சொகுசு கைவரப்பெறும் ஒரு தலைமுறையை நோக்கிய பயணமே. அதற்குத் தேவையான துணிவு திரு.பிஸ்வாசிற்கு எப்படிக் கிடைத்தது?
தனது மிகத் தொய்வான தருணங்களில் திரு.பிஸ்வாஸிற்கு உதவியது சொற்கள். முரட்டு வெளியான துளசி விளைநிலத்தின் கையாலாகாத மேற்பார்வையாளராக ஒரு ஓர் இருண்ட குடிலில் இருந்த போதும் கூட, தன் இருப்பிடத்தின் மெல்லிய அட்டைச்சுவர்கள் முழுவதும் சமயம் மற்றும் இலக்கியத்திலிருந்து எடுத்த பொன்மொழிகளை எழுதி ஒட்டிவைத்துக் கொள்வார், ஒரு கவசத்தைப் போல. தன் மகனுக்கு அவர் அளித்த கவசமும் அதுவே; கூடவே இந்த வாழ்வின் அபத்தத்தை இலகுவாக்கும் எளியவர்களின் அஸ்திரமான நகைச்சுவை. முதன் முதலில் அவர் படித்த பேரிலக்கியம் சார்ல்ஸ் டிக்கென்ஸ், அவரது அன்றாட அவமானங்களைப் பொறுத்துக் கொள்ள அதன் நையாண்டி உதவியது. அதை ஆனந்திடமும் படிக்கக் கொடுத்துப் பகிர்ந்து கொண்டார்; கூடவே கடுஞ்சொற்களை அகராதியில் பார்த்து எழுதவும் பணித்தார். “…இதைக் கறாராகவோ, ஆனந்தின் பயிற்சியின் பகுதியாகவோ பணிக்கவில்லை. ‘நீ என்னைபோலாவதை நான் விரும்ப மாட்டேன்’ என்றார். ஆனந்த் புரிந்து கொண்டான்.’”
அதே சமயம் தந்தை-மகனின் இந்த மிருதுவான இழை, இந்நாவலின் வேறு பல இழைகளின் ஒரு பகுதியே. இதே கூர்மையோடு மனிதன்-மனைவி, தாய்-மகன், விலக்கம், போதாமை, பொறாமை, வேர்களற்ற ஒரு மனிதனின் அத்தனைத் தத்தளிப்புகளும் நகைமுரண்களும் தனிமைகளும் கொந்தளிக்கும் எவ்வளவோ இழைகள். பாசு சாட்டர்ஜியின் ‘சாரா ஆகாஷ்' என்ற ஒரு திரைப்படம் நினைவில் வருகிறது. ஒண்டுக்குடுத்தனத்தில் வசிக்கும் ஒரு மாணவனின் புதுமணத்தைப் பற்றிய கதை அது. எந்த வித தீர்ப்புகளுமின்றி அவனது மிருதுவான அகம்பாவத்தைக் கனிவான, கறாரான நகைச்சுவை மூலம் சுட்டிச் செல்லும் அந்த படம். எந்த நியாயப்படுத்துதல்களுமற்ற அந்தச் சித்திரம் அளித்த அதே உணர்வெழுச்சியை இந்நாவலில் இன்னும் கூர்மையாக வாசிக்க முடிந்தது. முதற்பார்வையில் சாதாரண விக்டோரிய நாவல்களைப் போன்ற எளிமையான கட்டமைப்பே தெரிந்தாலும், போகப் போக அதன் பல்வேறு இழைகளின் பின்னல் ஒரு விசையாய், உணர்வாய், அவதானிப்புகளின் ரசவாதமாய், பிரமிப்பாய் முடிவது ஒரு பேரிலக்கியத்தின் அனுபவம். அதைக் கருத்துக்களாக சுருக்குவதில் எந்தப் பயனும் இல்லை.
* “the house shelters day-dreaming, the house protects the dreamer, the house allows one to dream in peace.”
― Gaston Bachelard, The Poetics of Space
.....................
ஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா
.....................
A House For Mr Biswas
V. S. Naipaul
Pan Macmillan
V. S. Naipaul
Pan Macmillan
ஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா
Naipaul visited India soon after writing this book, not long after. 'India: An area of darkness' grew out of his visit to India in 1962. The book itself was published in 1964.
ReplyDelete