“வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது." - காஸ்டன் பாஷெலார்ட், இடவெளிகளின் கவித்துவம்.*
பள்ளிப் பருவத்தில் எதேச்சையாக ஒரு முறை தூர்தர்ஷனில் பாலு மஹேந்திராவின் ‘வீடு' படம் பார்க்க நேர்ந்தது. அப்போது வீட்டு மாடியில் இன்னொரு வீடு கட்டிகொண்டிருந்தார்கள். அந்த சூழலில் பார்த்ததோ என்னவோ, படம் தந்த பயமும் மனத்தளர்ச்சியும் இன்றும் நினைவிலிருக்கிறது. மீண்டும் அதைப் பார்க்கவும் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு நடுத்தர வர்க்க சம்பளக்காரருக்கு வீடு கட்டுவதென்பது சென்ற தலைமுறை வரை எவ்வளவு பெரிய பிரம்மயத்தனம்! கடன்கள், கட்டுமானத்தைப் பற்றிய முழு அறியாமையினால் ஏற்படும் பின்னடைவுகள், மனித உறவுகளில் சிக்கல்கள், முன்பின் அறிந்திராத புதிய சிறு- குடும்ப முறையின் பரிச்சயமற்ற தேவைகள், ஆசைகள்; ஒரு வகையில் எந்த வழிகாட்டுதலுமற்ற அசம்பவப் பாதை போன்றது அந்த முயற்சி. பிள்ளைகள் முதன்முதலில் அவர்களது பெற்றோர்களின் சாமர்த்தியமின்மையைக் கணித்து வருந்த ஆரம்பிக்கும் சில வாழ்க்கை நொடிகளில் வீடு கட்டும் படலமும் அடங்கும். இந்த அனுபவங்களிருக்க ‘திரு.பிஸ்வாஸிற்கு ஒரு வீடு' என்ற தலைப்பே ஒரு வகையில் பரிச்சயமாக ஒலித்தது. பெயரும் இந்தியப் பெயர். எழுதிய நைபால், இப்புத்தகத்தை எழுதிய பல வருடங்கள் கழித்துத் தான் இந்தியாவை முதன்முதலில் பார்த்தார் என்பதையே மறக்கச்செய்யுமளவு இந்திய அனுபவத்தை நினைவூட்டும் தலைப்பு. நாவலும் அவ்வளவு நெருக்கமான அனுபவமாகப் படிந்தது; எங்கோ மரகத அட்லாண்டிக் கடலில் மிதக்கும் கரீபியத் தீவுகளின் சாகசக் கதையாகவல்ல.