கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்ற கேடம்பாடி ஜட்டப்பராய் எழுதிய இந்நூலை,
”சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினரின் நிலைமையை அன்றைய சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்குகள், உணவுப்பழக்கங்கள், வேட்டைக்கான சட்டங்கள், ஆங்கிலேய எஜமானர்களுக்கும் உள்நாட்டுக் குடிகளுக்கும் இடையே நிலவிய உறவுகள் என அனைத்தையும் சித்தரிக்கிறது”என்ற அறிமுகத்துடன் என் மகளுக்காகவே ஒரு குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். வாசிக்கத் தொடங்கியதும் இந்நூல் என்னை முழுமையாக இழுத்துக் கொண்டது எனலாம். மலைகள் காடுகள் விலங்குகள் என அது தனி உலகமாக நம்மை மாற்றிவிடுகிறது.
“இப்புத்தகத்தில் நான் விவரிக்கப்போகும் நிகழ்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நடந்தவை. இன்று வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். பண்டைய காலங்களில் மலைப்பிரதேச விவசாயிகளின் பயிர்களையும் கிராமத்தினரையும் காக்கும் பொருட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன.என்று இதன் முகவுரையில் திரு. ராய் குறிப்பிடுகிறார். அது உண்மை. மலைகளும் காடுகளும் விலங்குகளும் நிறைந்த காலத்திற்கு நம்மை இழுத்துச்செல்கிறது இந்நூல். வேட்டையின் நுணுக்கங்களும் பயணங்களும் நிறைந்த சாகசக்கதைகள் என்றாலும் இவை கூறப்பட்ட விதத்திலேயே இலக்கியமாகின்றன. கி. ராஜநாராயணனின் எழுத்துடன் தமிழில் இவரது எழுத்துகளை ஒப்பிடலாம். அத்தகைய அந்தரங்க மகிழ்வினை உணர்த்தக்கூடியவை ராவின் வேட்டை அனுபவங்கள்.
தற்கால நவநாகரீக உலகிலிருந்து, எழிலமிகு இயற்கைச் சூழலுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறேன்,“
தட்சிண கன்னட மாவட்டத்தின் வடக்கு மலைத்தொடர்ச்சியிலுள்ள ‘பிலிமஜாலு’ என்னும் ஊரிலும் அதனைச் சுற்றிலும் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளே இப்புத்தகம்.
அக்காலகட்டத்தில் வேட்டையின் தேவைகளை இவ்வாறு விவரிக்கிறார் ஆசிரியர், எந்த படைப்பையும் அதன் காலகட்ட வாழ்க்கைமுறையை அறிந்து வாசித்தால் இன்னும் சரியாக நாம் உள்வாங்கிக் கொள்ளலாம்:
“அந்நாட்களில் கார், பஸ், ரயில் போன்ற வாகனங்கள் ஒன்றாய்ச் செல்ல வேண்டியிருந்தது. வழியில் கொடிய காட்டு விலங்குகளைக் கடப்பதோடு காட்டாறுகளையும், ஓடைகளையும் கடக்க வேண்டும். வண்டிகளுக்கு முன் கை விளக்குகளுடன் சிலர் நடக்க வேண்டும். வண்டிகளின் ஓசை அருகில் மரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிறுத்தைகளையும், புலிகளையும் எழுப்பிவிடும். காளைகள் மிரண்டு வண்டியிலிருப்பவர்கள் விழ நேரிடும். புலிகள், சிறுத்தைகள் இல்லையெனில் காட்டெருமைகளும் யானைகளும் உலவும்.உப்பினங்குடி போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளும் விலங்குகளும் நிறைந்த சாகசப் பயணங்களே. காட்டு மிருகங்கள் மனிதர்களை விட எண்ணிக்கையில் கூடுதலாய்க் காணப்படும். அச்சமின்றித் திரியும்,”இவ்வாறு விவரிக்கப்படும் அக்காலகட்ட நிலை நமக்கு விறுவிறுப்பனாவை.
“இப்பகுதிகளில் அதிகம் விளைவது நெல். ஒரு விவசாயி 390கிலோ நெல்லைச் சாகுபடி செய்ய நாற்று நட வேண்டுமானால்,அதை இரு மடங்காக்கி விதைக்க வேண்டும். நெல் விளையும் முன்பே புறாக்களும்,, குருவிகளும், பன்றிகளும் அவற்றைச் சாப்பிட்டுவிடும். செடிகள் வளர்ந்த பின் அவை முயல்கள், அணில்கள், எருமைகள், பன்றிகள் மற்றும் மான்களுக்குத் தீவனமாகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக யானைக்கூட்டங்கள் செடிகளையும், மரங்களையும் மிதித்து நாசமாக்கிவிடும். இவை போக விவசாயிக்கு உருளைக்கிழங்கும், வள்ளிக்கிழங்கும், கீரைகளுமே உணவுக்கு மிஞ்சும். ஏழை விவசாயிகளுக்கு கொடிய விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்வதே வாழ்க்கைப் போராட்டமாக இருந்தது. இரவுகள் வேதனை மிகுந்தவை. ஓநாய்கள் குடிசைகளுக்குள் புகுந்து வீட்டு நாய்களைத் தூக்கிச் சென்றுவிடும். புலிகள் புதர்களில் ஓய்வெடுப்பதும் கன்றுக்குட்டிகளையும் நாய்களையும் தூக்கிச் செல்வதும் சாதாரண நிகழ்வுகள். பிலிமஜாலு என்றால் துளு மொழியில் புலி. அக்கிராமத்தில் எவ்வளவு துரத்தினாலும் சுட்டு வீழுத்தப்பட்டாலும் கொடிய விலங்குகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. துப்பாக்கிகள் மட்டுமின்றி கர்ப்பு எனும் பள்ளங்கள் தோண்டியும் விலங்குகளைப் பிடித்தனர்.”
இந்த அறிமுகத்துடன் ஜட்டப்ப ராய் அவர்களின் வேட்டை அனுபவங்களை நாம் வாசிக்கலாம். சிறுவன் ராய் தன் தாத்தா கோரகப்ப ராயுடன் திரு.கௌன் என்னும் ஆங்கிலேய கலெக்டர் தலைமையில் வேட்டைக்கு கிராமத்தலைவர்களும் வேறு பலரும் குழுவாகச் செல்வதே முதல் வேட்டையனுபவம். அவர்கள் வேட்டைக்குத் தயாராவதே மிக சுவையான நிகழ்வு. அந்நாட்களில் இருந்த துப்பாக்கிகள் பற்றியும், அவற்றின் லைசன்ஸ் பற்றியும் விவரிக்கப்படுகிறது. ஐம்பதிற்கும் அதிகமானோர் வேட்டைக்கு செல்கின்றனர். பெல்தா என்ற காட்டுவாசியும், அவர் மனைவி சோமுவும் இவர்களுடன் வருகின்றனர்.
“தாத்தாவின் ஆணைப்படி காசிம் சாகிப் தலைமையில் பத்து அல்லது பதினைந்து பட்டாசு வெடிப்பவர்கள் இருந்தார்கள். அம்பு எய்பவர்களுக்கும் கத்தி கவண் வைத்திருப்பவர்களுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. தப்படிப்பவர்கள் விலங்குகளை எழுப்பும்போது கூட்டமாகச் செல்ல வே்ணடாமென்று எச்சரிக்கப்பட்டனர். பதுங்கு குழியை அடைந்தோம். இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படும் இவ்விடம் வனத்தின் மையத்தில் இருந்தது. எச்சரிக்கை வேட்டு வெடித்தவுடன் பல சத்தங்கள் எழுந்தன. தாத்தா மேலே பார்த்தபோது ஒரு மான் திசையறியாது நின்று கொண்டிருந்தது. குரைக்கும் நாய்கள் பயமுறுத்தியதால் தவித்தது. தாத்தாவுக்கும் மானுக்குமிடையில் முப்பது மீட்டர் இடைவெளி இருந்தது. உடனே தாத்தாவின் துப்பாக்கி புகையுடன் வெடித்தது. அந்த மான் துள்ளலுடன் தன் கால்களைப் பிணைத்து மரண அவஸ்தையில் துடித்தது.”இவ்வாறு விறுவிறுப்பாக வேட்டை அனுபவங்களை விவரிக்கிறார் .
வேட்டையாடிய பின் காட்டில் நடக்கும் உண்டாட்டுகளை இப்படி கூறுகிறார்.
”வேட்டையாடப்பட்ட ஏராளமான மான்கள், காட்டாடுகள், காட்டுப் பன்றிகள், அனைத்தும் ஓரிடத்தில் வடக்கு தெற்காக குவிக்கப்பட்டன. பனை ஓலைகளைப் பரப்பி மரக்கட்டைகளை வைத்தார்கள். பூஜாரி டோலா வனதேவதைகளுக்கு பூஜை செய்தார். பெல்தா தேர்ந்த அறுவை சிகிச்சை செய்பவர் போல பன்றியின் எலும்புகளைத் தொடாமல் நேர்த்தியாக கறியை மட்டும் வெட்டி எடுத்தார். இது முடிந்தவுடன் அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து சமையல் பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அடுப்பு மூட்ட மூன்று கற்கள் கிழக்கு மேற்காக வைக்கப்பட்டன. மிளகும் புளியும் அம்மியில் அரைக்கப்பட்டன. தீ மூட்டப்பட்டது. தோலா மிளகு மசாலாவைக் கறிகளில் தடவியதைப் பார்த்த கலெக்டர், உப்பும் மிளகும் சரியாகக் கலக்காமல் இதை யாரும் உண்ண முடியுமா என்று கேட்டார். அதற்கு தோலா பொறுத்திருந்து வனதேவதைகளுக்குப் படைத்த இறைச்சியை ஏற்ற பின் ருசித்துப் பார்க்கச் சொன்னார்.
"வனதேவதைகளின் பூசாரி சென்னகௌடா கறியுணவில் போதுமான உப்பைக் கொட்டி நீண்ட கரண்டியால் கிளறிவிட்டார். டோலா உதவி செய்ய பாத்திரம் நெருப்பில் ஏற்றப்பட்டது. கௌடா கையைக் குவித்து கடுகு மற்றும் மசாலாப் பொருட்களை சமையலில் போடுவது போல பாவித்தார். இந்த நாடகத்தை வேடிக்கையுடன் எல்லாரும் பார்த்தனர். சிறிது நேரத்தில் கறி சமைக்கப்படும் ஓசை எழுந்தது. மதியம் நான்கு மணி ஆகிவிட்டது. யாரும் சாப்பிடவில்லை. பாத்திரத்தை இறக்கியதும் அதனுள்ளே நிறைய மசாலா சேர்ந்திருப்பதை பார்த்து நீர் ஊற்றாமல் இவ்வளவு மசாலா எப்படி வந்ததென கலெக்டர் ஆச்சரியப்பட்டார். ஆங்கிலேயர் எங்கள் சம்பிரதாயங்களை ஒத்துக் கொண்டனர். ஆனால் கிராம மக்களுக்குத் தெரியும் கறியும் உப்பும் சேர்ந்தால் நிறைய மசாலா வருமென்று. வனதேவதைகளின் ஆசியோ, பசியோ அவ்வளவு சுவையான உணவை நான் ருசித்ததில்லை”
இந்நிகழ்வுகளை என் பள்ளிப் பிள்ளைகளுக்கு கூறும்போது தாமும் காட்டில் அமர்ந்து வேட்டையுணவை உண்ணும் உணர்வினை அவர்கள் முகங்களில் கண்டிருக்கிறேன். இதுவே இலக்கியம் அளிக்கும் நிறைவு என நான் எண்ணுவதுண்டு. என் மாணவர்கள் இத்தகைய கதைகளாலேயே என்னுடன் அதிக பிணைப்புடன் இருப்பதுவும் உண்மை. நான் வாசிக்கும் இலக்கியங்களையே என் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கதைகளாக கூறிவிடுவேன்.
திரு ராய் அவர்கள் ஒரு விவசாயி, வேட்டைக்காரர், புகழ்பெற்ற சொற்பொழிவாளர். புராணங்கள், வேதங்கள் குறித்து இவர் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் பிரபலமானவை. இந்த நூல் இவரை இலக்கிய உலகிற்கு திடீரென்று அறிமுகப்படுத்தியது. பள்ளிப் படிப்பை முழுமை செய்யாத இவர் ஆங்கிலம், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். துளு அவர் தாய்மொழி. அவருடைய வர்ணணைகள் இம்மொழிகளின் நயத்துடன் கலந்து மனங்கவரும் ஒரு அனுபவக் கோர்வையாகும். சில தெளிவான வர்ணனைகள்
“சோமு வேட்டைக்குத் தன் கணவனுடன் செல்வது;பெல்த்தா தன்னுடைய வில்லை தரையில் நிறுத்தி நாணை மீட்டும்போது ஒரு ரீங்காரம் எழும்,” போன்ற வரிகள் கன்னட இதிகாசங்களை நினைவூட்டுவன.
"வேட்டைக்காரன், தன் மனைவி அருகிலிருக்க
கொடிய புலிகளுக்கும் அஞ்சாதிருக்கிறான்ஒரு வெறியுடன் மிருகங்களைத் துரத்துகிறான்
பசியும் தாகத்தையும் மறந்து காட்டில் அலைகிறான்"
இது போன்ற தூய காதலும் அச்சத்திலும் மென்மையாக நடத்தலும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன என இதன் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது. இதன் மொழியினாலும், உளமார்ந்த வார்த்தைகளாலும் இது மேம்பட்ட இலக்கியத்தன்மை பெறுகிறது.
சிறுவன் ராய் தன் கூட்டாளியுடன் சேர்ந்து தன் முதல் வேட்டையாக ஒரு காட்டுக்கோழியைச் சுடுவதும் வயல்வெளியில் நெருப்பு மூட்டி அதனை உண்பதும் ருசிகரமானவை. ராயின் முதல் புலி வேட்டை அனுபவமும் நம்மை சிலிர்க்கவைப்பது.
நான் வளர்ந்த ஜவ்வாது மலைப்பகுதியில் பழங்குடிகள் இவ்வாறு திருவிழாவிற்கென வேட்டையாடச் செல்லும் அனுபவங்களை மூப்பர்களிடம் கேட்டு வளர்ந்ததினாலும், சிறு வயதில் அவர்கள் வேட்டையாடிய மான்கறி, முயல்கறிகளை உண்டதினாலும் இவையெல்லாம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அனுபவங்களாக உணர்கிறேன். எங்கள் பள்ளிக்கால விடுமுறைகளில் ஏரியில் மீன் பிடித்து சுட்டுத் தின்றிருக்கிறோம். ஆட்டுப் பாலைக் கறந்து வெப்பாலை வகையில் ஒரு இலையை அதில் போட்டு பாலாடைக் கட்டிகளாக்கி உண்டிருக்கிறோம். விளா மரங்கள், புளிய மரங்கள், கொய்யா மரங்கள், நாவல் மரங்கள் என்று கிளைகளிலேயே எங்கள் நாட்கள் கடந்திருக்கின்றன. இப்பொழுது எண்ணினால் என் பிள்ளைகளுக்கு அவையெல்லாம் கிட்டாத அனுபவங்களே. அவ்வாறு என்னை சிந்திக்கத் தூண்டுவது ராவின் எழுத்து.
ராவ் புலிகளையும், காட்டெருமைகளையும், மான்களையும் வேட்டையாடும் ஒவ்வொரு நிகழ்வும் இச்சிறிய நூலில் அற்புமாக கூறப்படுகின்றன.
ஜட்டப்ப ராய் கூட்டாளிகளுடன் இணைந்து இரவுகளில் வேட்டையாடுவது வழக்கம்.அப்பொழுது நிகழ்ந்த திகிலான ஒரு நிகழ்வை அவரது பாணியில் விவரிக்கிறார்.
“ஓர் இரவு நானும் சோமையாவும் புத்தூருக்குச் சென்றோம். காட்டுப்பாதையில் முதலில் ஒரு வரிமானைச் சுட்டேன். சோமையா அதனைச் சுமந்து வந்தான். சிறிது தூரம் சென்றதும் இரண்டு பெரிய தீப்பிழம்புகள் புதரில் என்னை வரவேற்றன. சுமார் தொண்ணூறு மீட்டர் தூரமிருக்கும். அது முயலாக இருக்க முடியாது. முயலின் கண்கள் அவ்வளவு பிரகாசமாக இருக்காது. மானின் கண்கள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாய்த் தோன்றும். எருமையோ, வேறு வகை மானோ தெரியவில்லை. அவ்வாறிருந்தாலும் தரையில் படுத்துக்கொண்டு அசைபோடும்போது கொம்புகள் தெரியும். இரு கண்களும் என்னை அச்சுறுத்தின. அது ஒரு முள்ளம்பன்றி எனத் தீர்மானித்து அதன் புருவ மையத்தில் குறிபார்த்துச் சுட்டேன். சோமப்பா விலங்கை நோக்கி ஓடினான். துப்பாக்கியைத் திரும்ப நிரப்பினேன்."ஒரு டயர் வெடித்த சப்தம் வந்தது போலிருந்தது. ஒளியை அத்திசையில் பாய்ச்சினேன்.அங்கு சிவந்த கண்கள் இல்லை. வெள்ளையாக ஒரு விலங்கு,மூங்கில் முறத்தைப் போலிருந்தது. மூச்சிரைத்து மேலே எழும்பியது. பயந்து போன சோமப்பா என் பின்னால் வந்து நின்றான். எலியைத் தொடர்ந்து வந்த அது ஒரு முள்ளம்பன்றி அல்லது மலைப்பாம்பாக இருக்கலாம் என்றெண்ணினேன். அல்லது ஒரு ராஜநாகமாக இருக்கலாம். அதன் விரிந்த படத்தை நோக்கிச் சுட்டேன். அதற்குள் ஆறு அல்லது ஏழடி உயரத்திற்கு எழும்பிவிட்டது. படத்தில் அடிபட்டதால் பெரும் சப்தத்துடன் விழுந்தது. இவற்றை இங்கே விவரித்துக் கூறினாலும் நடந்தது என்னவோ ஓரிரு நிமிடத்திற்குள் தான்."உயிரோடிருப்பதற்கு நன்றி கூறிவிட்டு ஓடத்தொடங்கினோம்.
"ஒரு துளு பந்த்தஸ் குடும்பத்தி்ல் பிறந்து, நாகாரதனை செய்து வரும்போது நான் பாம்பைக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஏற்கனவே கெட்டிருந்த என் பெயருக்கு முன் பல அடைமொழிகள் சேர்ந்து விடும். எனவே யாரிடமும் சொல்லவில்லை. எப்படியாயினும் ஒரு கொடிய வேட்டைக்காரனால் ராஜநாகம் சுடப்பட்டது எனும் செய்தி பரவிவிட்டது. அதற்கென அதிக செலவில் பரிகாரங்கள் செய்யப்பட்டன. அந்நாட்களில் கடவுள் மீதும் தேவதைகள் மீதும் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இதை என் நாட்குறிப்புகளில் கூட எழுதவில்லை. ஒரு நெளியும் பாம்பின் படத்தை மட்டும் வரைந்தேன்”.இவ்வாறு எல்லா நிகழ்வுகளுமே சுவாரசியமாய் கூறப்படுகின்றன.
குதிரை மூக்கு என்னும் மலைப்பகுயில் ஒரு ஆங்கிலேய குடும்பத்துடன் அவரது நட்பு, ரோசலின் என்னும் இளம் பெண்ணுடன் இணைந்து காட்டெருதுகளை வேட்டையாடும் நிகழ்வுகள் என புத்தகமெங்கும் அவரது மலரும் நினைவுகள் தம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
நம் இந்திய சமூகத்தில் நிலவிய பல்வேறு நம்பிக்கைகள், சிறுதெய்வ வழிபாடுகள், தேவதைகளை சாந்தமூட்டும் சடங்குகள், உணவுப் பழக்கங்கள் என பலவற்றை இந்தூலில் அறியலாம். என் வாசிப்பைத் தொடர்ந்து நிலநிறுத்துபவை இத்தகைய புத்தகங்களே.
‘ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள்’
மூலம்:கன்னடம்
தமிழில் :ஜெயசாந்தி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.
வடக்கே திரு ஜிம் கார்பெட், தென்னிந்தியாவில் திரு கென்னத் ஆண்டர்சன் போன்ற வேட்டையாடிகளின் வேட்டை நூல்களை நினைவூட்டும் நிகழ்வுகள்.இவர்கள் ஒரு கடமைக்காக மட்டுமே வேட்டையாடினார்கள். விலங்குகள் கொல்லப்படும்போது அதற்காக வருந்தினார்கள். இதற்கு முன்னால் தேக்கடி ராஜா என்ற கானகக்கதையை பற்றி இதே blog-ல் வெளியானதை நினைவூட்ட விரும்புகிறேன்.அதை மும்முரமாக தேடிகொண்டிருந்த அணைக்கு திரு. சரவணன் அவர்கள்தான் ஒளிநகலை அளித்து உதவினார்கள்.
ReplyDeleteஅருமை
ReplyDelete