பொதுவாக ஆம்னிபஸ் தளம்
புத்தகங்களை வாசிக்க நம்மவர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமே.
இங்கே இருக்கும் சுமார் ஐநூறு புத்தக மதிப்புரைகளில் தேடோ தேடென்று தேடினாலும் ஒன்றோ அல்லது
இரண்டோ மட்டுமே எதிர்மறை விமர்சனங்கள் தேறும். வாசிப்பு தேய்ந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகள்
பரவலாகி வரும் இவ்வேளையில், புத்தகம் வாசிக்க விழையும் அன்பர்களை
மேலும் பதறடித்து ஓட
வைக்கும் வேலையை நாம் பார்க்க வேண்டாம் என்பதே ஆம்னிபஸ் தோழர்களின் ஒத்த கருத்துக்கள்
சிலவற்றுள் பிரதான கருத்து.
நிற்க,
இதையெல்லாம் இப்படி நான் முன்னோட்டமாகச் சொல்ல ஏதும் காரணம் உளது எனின்
உளது. இல்லை எனின் இல்லை.
நேற்று சென்னை புத்தக
விழாவிற்கு சென்று ஒரு பதினைந்து புத்தகங்களை அள்ளி வந்தேன்.
அள்ளி வந்தவைகளில் வாசிக்க நான் முதலில் கையில் எடுத்தது இந்தப் புத்தகமே.
நண்பர்கள் தந்த பத்து புத்தகங்களின் பரிந்துரைப் பட்டியலை வாட்ஸாப்பில்
வைத்துக் கொண்டு அங்கே கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். பரிந்துரைகளுள் இந்தப் புத்தகமும் இருந்தது. "யாவரும்" பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை மட்டும் ஏனோ தலைகீழாய் வைத்திருந்தனர். புத்தகம் தேடித் கொண்டிருந்த என்
கண்ணுக்கு இரண்டரை அடி தூரத்திலேயே புத்தகம் இருந்தும் தென்படவில்லை.
"யாவரும்" பதிப்பகத்தில் எல்லா புத்தகங்களையும்
வாசிக்கவும் செய்யும் ஒரு அண்ணன், "அந்தா உங்க கண்ணெதிர்லயே
இருக்கேத்தா", எடுத்துத் தந்தே விட்டார்.
கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின்
மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
"கவிதை என்றால் என்னவென்று
இப்போது வரை எனக்குப் புரியவே இல்லை. எது நல்ல கவிதை?'
என்பன போன்ற திரேதா யுகத்து அனும வாலை அகற்றும் வலிமையும் என் சிற்றறிவுக்கு
இல்லை",
என்று கவிதை நூலின்
முன்னுரையிலேயே கையை உயர்த்தி விடுகிறார் கவிஞர். அதாவது
கல்யாணத்திற்கு முந்தின நாள் வடவிந்தியர்கள் மாப்பிள்ளையை, தப்பிச்சு போயிடுடா மாப்பு,
என்று குதிரை ஏற்றி விடுவர், அப்படி.
சரி,
அது ஒருபுறம் இருக்கட்டும். எது நல்ல கவிதை என்று
என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்? It depends என்பதுதான்
என் பதில். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல கவிதைகளை அளவிட நான் வெவ்வேறு அளவுகோல்களை
வைத்து இருந்திருக்கிறேன்.
"ஆடிக்குப் பின்
ஒரு ஆவணி;
என்
தாடிக்குப் பின்
ஒரு தாவணி"
விடலைப் பருவத்தில்
கவிதை என்பதற்கு இது போதும் என்று நினைத்ததுண்டு.
கொஞ்சம் விவரம் தெரிந்த
விடலை ஆன பொழுதினில்:
இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்
இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல்
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்
பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்
இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்
இன்னொரு பெயர் காதல்.
(க.சரவணன்
- விகடன் பவளவிழா கவிதைப் போட்டி)
இது போன்ற கவிதைகள்
போதுமாய் இருந்தன.
பின்னர் வாசித்தவைகள்
நா.முத்துக்குமாரின் சில கவிதைத் தொகுப்புகள் மட்டும் எனலாம்.
இணையம் வந்து வாசிக்கத் துவங்கியதும் இங்கே புழங்கும் பலர்
போல் நமக்கும் கவிதை ஒவ்வாமை ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.
"உன்னைப் பத்தியே பேசிட்டு
இருந்தா? கவிதை நூல் பத்தி சொல்லு", எனும் உங்கள் உட்குரல் கேட்கிறது. இன்னும் இரண்டே உதாரணங்கள்
மட்டுமே. முடித்து விடுகிறேன்.
என்னதான் ஆசான் என்றாலும்
அவருக்கு மிகவும் உவப்பான தேவதேவன் கவிதைகளும் எனக்குப் பிடிபடவில்லை.
ஆனால் இது
அப்படியில்லை-
”ஈரமற்ற இரும்பு”
----------------------------
நீளமான முகம்
முகம் முழுக்கக் கண்கள்
கண்முழுக்கத் தூக்கம்.
ஒளிக்க ஒளிக்க
ஓயாமல்
எட்டிப் பார்த்து இளிக்கிறது
இன்னமும் பிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு
ஈரமற்று,
எல்லோரையும் போல் அவளையும்
நகர எல்லையைத் தாண்டி
தரதரவென இழுத்துச் செல்கிறது
மின்சாரக்கம்பியில்
மாட்டிக் கொண்டிருக்கும் ரயில்.
(மாமல்லன்)
இதுபோன்ற நிஜ தரிசனக்
கவிதைகள் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் உள்ளன.
மிகச் சமீபத்தில் மிகமிக
ரசித்து வாசித்தது பிரான்சிஸ் கிருபாவின் "ஞாயிற்றுக்கிழமைகளில்
டீச்சராகும் சிறுமி".
ஆக;
கவிதை என்பது என்ன, நல்ல கவிதைக்கான அளவீடுகள்
என்னென்ன என்பது ஆளுக்கு ஆள் என்றில்லாமல் - ஒரே ஆளுக்கு வெவ்வேறு
காலகட்டத்தில் வெவ்வேறாகவும் இருந்து தீர்க்கிறது.
சரி,
இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வருவோம்:
இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பதற்காக உங்களது
அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு நாள் தள்ளி
வைத்தால்; இந்தக் கவிதைகளின்
வாசகனாக நான் மகிழ்வேன்
புத்தகத்தைப் பற்றி
இப்படி ஒரு பின்னட்டைக் குறிப்பைத் தருகிறார் கவிஞர் வெய்யில்.
நான் இந்தப் புத்தகத்தைக்
கையில் எடுத்தது சனிக்கிழமையான வாரயிறுதி விடுமுறை நாள் ஆகிவிட்ட படியாலும்;
மேலும் நான் ஆதார் கார்டு வாங்கி வைத்தும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டதாலும் வாசகர் வெய்யில் நம்மை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது.
ஆனால்,
எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே தரும்
கடவுளை பற்றி ஒருமுறை சொன்னேன் நினைவுள்ளதா நேற்று ஒரு சமையல் கலைஞரை சந்தித்தேன் (அவரேதான் உருளைக்கிழங்கு பொடிமாஸ்
கவிதையின் நாயகனேதான்) நான் மிகுந்த பசியோடு இரண்டு இட்லிகள்
கேட்டேன் அவர் உருளைக்கிழங்கு குருமாவை ஊற்றினார் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம்
குருமா ஊற்றினார் கடும்பசியில் அதைக் குடித்துவிட்டு ஐயா இட்லி வேண்டும் என்றேன் மேலும்
கொஞ்சம் குருமா ஊற்றினார் குருமா போதும் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா
ஊற்றினார் உனக்கு அறிவில்லையா முட்டாளே என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் பளார்
என்று அறைவிட்டேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கோபத்தில் காறி உமிழ்ந்தேன் மேலும்
கொஞ்சம் குருமா ஊற்றினார் சோர்ந்து போய் கெஞ்சத் தொடங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா
ஊற்றினார் ஏதோ புரிவது போல் இருந்தது ஆனந்தம் பெருக்கெடுக்க நன்றி நன்றி என்று வணங்கினேன்
மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார்
இப்படிப்பட்ட ஒரு வார்த்தைக்
கூட்டத்தை, ஒரு இருபத்தியாறு என்ட்டர்கள் அடித்துக் கவிதை எனும் தோரணையில் கொடுத்திருந்ததை,
எந்த வகையினது இது என்று புரிந்து கொள்ள இயலாதவனாக நான் என்னை உருவாக்கி
வைத்திருப்பதைக் கவிஞர் வெய்யில் எப்படி மன்னிப்பார் என்றுதான் எனக்குப் புரியவில்லை.
No comments:
Post a Comment