கடந்த மாதம் நண்பருடன் சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு, நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வந்ததும் அமளிதுமளியானது. படிமம், உருவகம் என்பதெல்லாம் மொழிப் பற்றாக்குறையின் பக்கவிளைவுகள் என்பது அவரது ஆணித்தரமான நம்பிக்கை. நேரடியாக ஒரு கதையைச் சொல்லத் தெரியாத எழுத்தாளரை ஆதரிக்கவும் பத்து விமர்சகர்கள் பிழைக்கவும் உருவான ஜல்லியடிப்புகள் சூழ்ந்தது தமிழ் இலக்கிய வெளி என்பதும் அன்னாரின் கருத்து. சூடாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, 'தமிழ் சிற்றிதழ்களில் காற்புள்ளி அறைப்புள்ளியின் எண்ணிக்கையைப் போல பலவிதமான தடித்தடி வார்த்தைகள் எதற்கு? நேரடியாகச் சொல்லத் தெரியாததை மறைக்கத்தானே?' எனும் அணுகுண்டை சமாளிக்க முடியாத நிலைமையில் நான் தவிக்கும்போது என் கையிலிருந்த 'புலப்படாத நகரங்கள் (Invisible Cities)' நாவலை சொல்லச் சொல்ல கேட்காமல் பிடுங்கிகொண்டார்.
சிறிது நேரம் புரட்டிப் பார்த்தவர், 'இது என்ன மேஜிக் கதையா?' என அலட்சியம் தொனித்த குரலில் கேட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. 'இது ஒரு கிளாசிக்', எனச் சொல்லி முடிக்கும்போது என் குரல் கம்மிவிட்டது. ஒருவேளை நான் நம்புகிறேன் என்பதற்காக புரியாத புத்தகங்களை ஆணித்தரமாக நிறுவப் பார்க்கிறேனோ எனும் குழப்பம் உருவானது. புத்தகங்களை அல்ல என்னை நிறுவத்தான் இந்த வேடமோ எனும் எண்ணமும் முளைக்காமல் இல்லை. இந்த நாவலைப் பற்றி நண்பருக்கு நான் சொன்னவை கீழே உள்ளது.
மார்க்கோ போலோ எனும் பயணிக்கும், குப்லாய் கான் எனும் சீன அரசருக்கும் நடக்கும் சம்பாஷனை நாவல் வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பயணம் செய்து குறிப்பெடுத்தவர் மார்க்கோ போலோ. அதே சமயத்தில் தனது அரியணையை விட்டு எழும்பாமல் சீனாவின் பல பகுதிகளை ஆண்ட அரசன் குப்லாய் கான். தான் கண்ட நகரங்களையெல்லாம் விவரிக்கும் மார்க்கோ போலோ, அங்குள்ள மக்களின் மொழி, பண்பாடு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் எனப் பல புது தகவல்களை குப்லாய் கானுக்குத் தெரிவிக்கிறான். ஒரு கட்டத்தில் மண்ணில் இருக்கும் எந்தொரு நகரத்தைப் போலவே அவனது விவரணைகள் பொதுப்படையாக மாறுகின்றன. 'இவ்வளவுதானா உலகம்' என குப்லாய் கான் அங்கலாய்க்க, தனது கற்பனை மூலம் புதுவிதமான நகரங்களை உருவாக்குகிறான் மார்க்கோ போலோ. அவனது கற்பனையில் உதித்த நகரங்களை யோசித்துப் பார்க்கும் குப்லாய் கானுக்கு அவை வேறுவிதமான நகரங்களாக காட்சியளிக்கின்றன. மெல்ல, கற்பனையில் இட்டுகட்டி புதுவித உலகைப் படைத்துவிடுகிறான் மார்க்கோ போலோ. அவ்வுலகில் நம்பமுடியாத சாத்தியங்கள் பல உருவாகின்றன. பல ரகசிய குறியீடுகளும், மொழிகளும் உருவாகின்றன. குப்லாய் கானின் உள்ளத்தில் அவை பெரும் மனப்பதிவுகளாக நிரம்பிவிடுகின்றன.
ஒரு பொருளைச் சுட்டுவதற்காக மற்றொன்றை முன்னிறுத்துவது படிமம் என என் நண்பரிடம் முன்னர் சொல்லியிருந்தேன். அதன்படி இந்த கதை என்ன சொல்கிறது என சட்டையைப் பிடிக்காத குறையாக நண்பர் கத்தினார். சாதாரணமாக எதிரெதிர் குணாதிசய மனிதர்கள் உரையாடும்போது அல்லது ஒன்றாக ஒரு கதையில் அமையும்போது சுவாரஸ்யம் கூடும். அதைப் போல ஒரு களத்தை உருவாக்கவே இடாலோ கால்வினோ முயன்றிருப்பார் எனத் தோன்றுகிறது. வெளி நகரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனுக்கு பயணத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவன் சொல்லும் கதைகள் தான் இந்த நாவல். குப்லாய் கானுக்கு எத்தனை பெரிய உலகம் சாத்தியமாகிறது? ஆனால் இதுமட்டுமல்ல கதை.
புலப்படாத நகரங்கள் வழியே வரலாற்றின் இயங்குமுறையை இத்தாலோ கால்வினோ முன்வைக்கிறார். நகர்ந்து நகர்ந்து விரிவடைவதால் நகரம் என உருவாயிற்று என்றாலும் நகரம் என்பது மனிதனுக்கும் ஒரு இடத்துக்கும் உண்டான உறவைக் காட்டும் இயக்கம். காலத்தின் பிடியில் பல நகரங்கள் உருவாகி மறைந்து மண்ணில் உரமாகி தடமில்லாமல் அழிந்திருக்கின்றன. ஹம்பி, மொஹஞ்சதாரோ, மாமல்லபுரம் என நமக்குக் கீழே பலவேறு உலகங்கள் அமிழ்ந்துள்ளன. அவற்றில் இருந்த பெரும் பண்பாடு சித்திரங்களை அகழ்வாராய்ச்சி செய்துதான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், காலத்தில் கொடூர கரங்களையும் மீறி அப்பண்பாடுகளின் எச்சங்கள் இன்றும் நம்மிடையே இருந்துவருகின்றன - அவற்றில் மிக முக்கியமானது மொழி.
இந்த நாவலில் குப்லாய் கான் மற்றும் மார்க்கோ போலோ பேசுவது வெவ்வேறு மொழி என்றாலும் இருவரையும் இணைத்தது கற்பனை எனும் பெரும் சாத்தான். சீனா போன்ற நாட்டின் பண்பாடுகளை அறிந்துகொள்ள நமக்கிருக்கும் பெரும் தடையாயிருக்கும் மொழி, மனிதனின் மூளையிலிருந்து வெளிப்பட்ட வெவ்வேறு சங்கேதக் குறியீடு மட்டுமே என்பதை எண்ணிப்பார்த்தால், இந்த உலகில் இதுவரை இருந்த எந்த நாகரிகமும் நமக்கு அந்நியமல்ல எனும் ரகசியம் புரியும்.
வரலாற்றை ஒரு புனைவாக அணுக முடியும் எனும் வாதத்தை முன்வைத்தவர் இடாலோ கால்வினோ. இது ஒரு சிக்கலான அணுகுமுறையாகத் தெரிந்தாலும், வரலாற்றை முழுவதாகப் புரிந்துகொள்ள முடியாதபட்சத்தில், இது பல சாத்தியங்களை நமக்கு அளிக்கின்றது.
மார்க்கோ போலோ எழுதிய பயணக்குறிப்புகளில் பல முரண்பட்ட குறிப்புகள் உள்ளதாக இக்காலகட்ட வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பறக்கும் யானைகள், நீச்சல் அடிக்கும் மயில்கள் என அவர் எழுதிய சில விவரணைகளிலிருந்து அவரது கற்பனைவளம் நமக்குப் புரிகிறது. அதே சமயம், நம்மால் புரிந்துகொள்ள இயலாத நிகழ்வுகள் எல்லா காலத்திலும் நடந்திருக்கலாம் எனும் சுவாரஸ்யமான சாத்தியமும் உருவாகிறது. புலப்படாத நகரங்கள் அவ்வகையில் ஒரே சமயத்தில் நாம் வாழும் நகரமாகவும் அட்லாண்டிஸ்/லெமூரியா போன்ற கற்பனை உலகமாகவும் இருக்கலாம்.
நண்பரிடம் கடைசியாக ஒன்று சொன்னேன் - நாட்களைக் குறிப்பிடும் நாட்காட்டி போல இலக்கியமும் சில விஷயங்க்களைச் சுட்டி நிற்கும். இங்கு இடாலோ கால்வினோ குறிப்பிடும் புலப்படாத நகரங்கள் நமக்கு வெளியே இருக்கும் நகரங்கள் அல்ல. நமது கற்பனையும், அதன் மூலம் விளையும் வரலாறும் தான் அந்த புலப்படாத நகரங்கள்.
எழுதியவர் - இடாலோ கால்வினோ
பதிப்பகம் - வ.உ.சி. பதிப்பகம்
இணையத்தில் வாங்க - புலப்படாத நகரங்கள்
//invincible//
ReplyDeleteவெல்ல முடியாத??
சங்கரன் அவர்களே
ReplyDeleteஅது எழுத்துப் பிழை. Invisible என்பதே சரியானது. புலப்படாத நகரங்கள்.
படித்ததுக்கு நன்றி..ஆசிர்வாதம்.
பைராகி
Thanks for correcting the post. You are most welcome!
Delete//பறக்கும் யானைகள், நீச்சல் அடிக்கும் மயில்கள் என அவர் எழுதிய// ஒருவேளை பறக்கும் மயில், நீச்சல் அடிக்கும் யானைகள்னு எழுதி அது பிற்காலத்துல மாறிப்போச்சோ?
ReplyDeleteசரி, இந்த ஆம்னிபஸ்ல எழுதறவங்க எல்லாம் நண்பர் கிட்டப் பேசினேன்னு சொல்றீங்களே யாரு அந்த நண்பர்?
நண்பர்ன்னா.... நண்பர்தான்!
Deleteநல்ல கேள்வி!
Deleteநடராஜரே - நண்பேண்டா..
Deleteஇப்படியெல்லாம் கேட்டா ஆம்னிபஸ்ஸில் உங்களை விலக்கி வெக்க வேண்டியிருக்கும்..
ஓம்!ஓம்!ஓம்!
பைராகி
ஆம்னிபஸ் ஒரு ஜனநாயக அமைப்பு தானே?
Delete