சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்
நல்ல உரைநடை கொடுக்கும் சந்தோஷமே தனி. Geoff Dyer என்பார் எழுதிய "Zona - A Book About a Film About a Journey to a Room" என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். Tarkovsky என்ற மேதை இயக்கிய Stalker என்ற திரைப்படத்தைப் பற்றிய புத்தகம் இது. 162 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் 142 ஷாட்டுகள்தான் என்பது விசேஷம். படம் செம மொக்கையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறில்லை.
பணம் போட்டவர்கள் படத்தின் ப்ரிவ்யூ பார்த்துவிட்டு, "படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கலாமே, அதிலும் படத்தின் ஆரம்பத்திலாவது...." என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னபோது தார்கோவ்ஸ்கி கோபத்தில் பொங்கி விட்டாராம் - படத்தின் ஆரம்பம் இன்னும் மெதுவாகவும் மொக்கையாகவும் இருந்திருக்க வேண்டும், அப்போதுதான் தெரியாமல் தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஆக்சன் ஆரம்பிப்பதற்குள் ஓடிப் போக நேரமிருக்கும், என்றார் அந்த மேதை.
அதற்கு பணம் போட்டவர்களில் ஒருத்தர், "படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்றுதான் சொல்ல வந்தேன்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்ததை, "ஆடியன்ஸைப் பற்றி எவனுக்குக் கவலை? எனக்கு இரண்டே பேர்தான் முக்கியம். Bresson and Bergman. இதை நீ பைப்பில் நிரப்பி புகைத்துப் பார்" என்று வெட்டிவிட்டாராம்.
அதெல்லாம் வேறு கதை. நல்ல உரைநடை என்று சொன்னனே, இது ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது:
இதைப் படித்தபின் எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆட்கள் தென்படுகிறார்கள். இதுவரை எப்படி இவர்களை கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
பணம் போட்டவர்கள் படத்தின் ப்ரிவ்யூ பார்த்துவிட்டு, "படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கலாமே, அதிலும் படத்தின் ஆரம்பத்திலாவது...." என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னபோது தார்கோவ்ஸ்கி கோபத்தில் பொங்கி விட்டாராம் - படத்தின் ஆரம்பம் இன்னும் மெதுவாகவும் மொக்கையாகவும் இருந்திருக்க வேண்டும், அப்போதுதான் தெரியாமல் தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஆக்சன் ஆரம்பிப்பதற்குள் ஓடிப் போக நேரமிருக்கும், என்றார் அந்த மேதை.
அதற்கு பணம் போட்டவர்களில் ஒருத்தர், "படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்றுதான் சொல்ல வந்தேன்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்ததை, "ஆடியன்ஸைப் பற்றி எவனுக்குக் கவலை? எனக்கு இரண்டே பேர்தான் முக்கியம். Bresson and Bergman. இதை நீ பைப்பில் நிரப்பி புகைத்துப் பார்" என்று வெட்டிவிட்டாராம்.
அதெல்லாம் வேறு கதை. நல்ல உரைநடை என்று சொன்னனே, இது ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது:
He's one of those barmen who has the knack of imbuing the simplest task with grudge, making it feel like one of the labours of a minimum-wage Hercules.
இதைப் படித்தபின் எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆட்கள் தென்படுகிறார்கள். இதுவரை எப்படி இவர்களை கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
தார்கோவ்ஸ்கியின் இந்தப் படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை, இனியும் பார்ப்பதாக இல்லை. ஜோனா படித்தபின் ஸ்டாக்கர் ஒரு ஏமாற்றமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. புத்தகத்தின் அட்டையில் சொன்னபடி, "ஒரு அறையை நோக்கிய பயணத்தைப் பற்றிய திரைப்படத்தைப் பற்றிய புத்தகம்" இது. மந்திர சக்திகள் கொண்ட ஒரு அறை, அதை நோக்கிய துணிகர பயணம், அதை நகரவே நகராமல் விவரிக்கும் திரைப்படம் - என்று மூன்று கூறுகளையும் பேசும் இந்தப் புத்தகத்தைப் புத்தகமாகவே வாசிக்க வேண்டும். காதலிப்பவர்கள் சிலர் மிகத் தாமதமாகவே கல்யாணம் வேறு காதல் வேறு என்று அறிகிறார்கள். ஒரு அனுபவம் சுகமாக இருக்கிறது என்பதால் அது ஆசை காட்டும் இன்னொரு அனுபவமும் சுகமாக இருக்க வேண்டியதில்லை என்ற அச்சம் எனக்குமுண்டு.
புத்தகத்தில் ஒரு பத்தியில் டயர் எழுதியிருப்பதைக் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறேன்:
"சில வகை எழுத்தாளர்கள், சில வகை நாவலாசிரியர்கள், எழுத்தில் தங்களுக்கு இருக்கும் கவனத்தை குலைக்கும் எதிலும் ஈடுபட மறுக்கிறார்கள். பாஷ்யம் என்பது அவர்களுக்கு கவனக்குலைவாக இருக்கிறது. அதற்கு இரண்டாம் பட்ச முக்கியத்துவம்தான் உண்டு, அல்லது அது முக்கியமே இல்லாதது என்பது இவர்களது கருத்து. ஆனால் வேறு சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். நேரடி விமரிசகர்களாக இல்லாத இவர்களது படைப்பூக்க செயல்பாட்டுக்கு உரைகள் மிக முக்கியமாக இருக்கின்றன. ஒரு நாவலாசிரியனின் பிரதான படைப்புக்கு இணையான முதல்நிலை படைப்பாக அதன் உரையும் ஏதோ ஒரு தளத்தில் இருக்க முடியும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். கலையாக்கங்களை உருவாக்கவே இந்த மண்ணில் மானுடம் படைக்கப்பட்டது என்றால், அவர்களின் வேறு சிலர் இந்த ஆக்கங்களுக்கு உரை செய்யப் படைக்கப்பட்டவர்கள், அந்த ஆக்கங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களைப் பேசப் படைக்கப்பட்டவர்கள் என்பதாக இவர்களது எண்ணம். இந்த ஆக்கங்களைக் குறித்து அகவயமான மதிப்பீட்டை அளிப்பதோ இவற்றை விமரிசனப் பார்வையுடன் அணுகுவதோ அல்ல, எவ்வளவு துல்லியமாக சாத்தியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்தியதை பெற்றவர்கள் இந்த உரையாசிரியர்கள் - அர்த்தமற்ற தங்கள் இயல்பையும், ரசனையின் குறைபாடுகளையும், தங்கள் அசந்தர்ப்ப அனுபவங்களையும் மறைக்காமல், குழப்பம், தீர்மானமின்மை, அல்லது -இது போன்ற- குறைவற்ற வியப்பு என்று எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் கடப்பாடு கொண்டவர்களே பாஷ்யக்காரர்கள்".
டயர் இப்படிப்பட்ட ஒரு உரையாசிரியர். தார்கோவ்ஸ்கியின் ஸ்டாக்கர் திரைப்படத்தை ஷாட் ஷாட்டாகப் பேசும்போதும் தன் எண்ணம் போன திசையெல்லாம் செல்கிறார். மற்ற எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, டயருக்கு மேற்சொன்ன உரையாசிரிய தகுதிகள் அனைத்தும் பொருந்தும். பின்மண்டையில் சொட்டை விழுந்த தலை இந்தக் காட்சியில் வெளிப்படுத்திய நடிப்பை உலக சினிமா வரலாற்றில் வேறெங்கும் வெளிப்படுத்தியதில்லை என்று அவர் சொல்லும்போது அதில் அகவயப்பட்ட மதிப்பீடு எதுவும் இல்லை. ஸ்டாக்கர் என்ற திரைப்படத்தை எடுக்கவே சினிமா கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்மை இந்தப் படம் நம்ப வைக்கிறது என்று டயர் எழுதுவதில் விமரிசனப் பார்வை இல்லை.
அர்த்தமற்ற தங்கள் இயல்பை மறைக்க வேண்டியதில்லை (கேவலமான மொழிபெயர்ப்பு : vagaries of their nature என்று ஆங்கிலத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது!). தங்கள் ரசனையின் குறைபாடுகளை மறைக்க வேண்டியதில்லை (இதுவும் பிழை மொழிபெயர்ப்பே - lapses of taste). தங்கள் அசந்தர்ப்ப அனுபவங்களை மறைக்க வேண்டியதில்லை (இதை எப்படி தமிழாக்க? - contingencies of their own experiences). குழப்பமாகட்டும், தீர்மானமின்மை (uncertainty!), குறைவற்ற வியப்பு (undiminished wonder) என்று எதுவாகவும் இருக்கட்டும், அதைத் துல்லியமாக வெளிப்படுத்துவதே உரையாசிரியனின் கடப்பாடு என்பதை இந்தப் புத்தகத்தில் நிலை நிறுத்தியிருக்கிறார் டயர், அதுவும் சுவையான மொழியில், ஆழமான கருத்துகளையும் அபத்த தரிசனங்களையும் பேசுவதில் சமரசம் செய்து கொள்ளாமல்.
தார்கோவ்ஸ்கியின் திரைப்படத்துக்கு ஒரு கோனார் நோட்ஸ் என்றல்ல, இதுவே பிரதியும் அதன் நோட்ஸாகவும் ஆகிறது. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இதைப் வாசிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கலாம். இதை ஒரு கையேடாகக் கொண்டு திரைப்படத்தைக் காண்பவர்களுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவம் கிடைக்கலாம். ஆனால் அந்தக் கவலை எதுவும் இல்லாமல், ஒரு புத்தகமாக, வாசிப்புக்காக வாசிக்கப்படும் ஒரு புத்தகமாக இதை வாசிப்பவர்களுக்கு ஒரு அலாதி அனுபவம் கிடைக்கிறது. இது திரைப்படத்தின் புரிதலுக்கான பாதை என்றில்லாமல், இதுவே பாதையும் பயணமும் அதன் இலக்கும் என்று திரைப்படத்தை மறந்த வாசிப்பாக இருக்கும்போது, டயரின் எண்ணற்ற அலைவுகளில் ஒன்றில் அவர் தார்கோவ்ஸ்கி தன் டயரிக் குறிப்புகளில் Flaubertன் இந்த அவதானிப்பை எழுதியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறபடி (ஆங்கிலத்திலேயே தருகிறேன், இதைத் தமிழாக்குவது அல்லி மலருக்கு வெள்ளி முலாம் பூசுகிற வேலையாக இருக்கும்!) -
"From the standpoint of pure Art one might establish the axiom that there is no such thing as subject - style in itself being an absolute manner of seeing things."
ஸ்டாக்கர் திரைப்படத்தைப் பற்றி என்ன சொல்வது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அந்தப் படத்தைப் பற்றிய டயரின் இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரை அவரது தனிப்பார்வைதான் எல்லாம் என்று தீர்மானமாகச் சொல்லலாம். களமல்ல, நடை, அதன் பரவசமும் அது நமக்களிக்கும் பரவசமும் அன்றி இதில் பேச இருப்பதெல்லாம் இரண்டாம்பட்ச விஷயங்களே. அவற்றை சர்வநிச்சயமாக அலட்சியப்படுத்திவிடலாம்.
Zona - A Book About a Film About a Journey to a Room,
Geoff Dyer,
Canongate Books Limited.
Image Credit : The Iowa Review
No comments:
Post a Comment