சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்
தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த துவக்கப் பத்திகள் என்று ஒரு தொகுப்பு இருக்குமென்றால், அதில் பம்மல் சம்பந்தம் எழுதிய 'என் சுயசரிதை'யின் முதல் இரண்டு பத்திகளும் இடம்பெற வலுவாகப் பரிந்துரைப்பேன்.
என் இளம் பருவ சரித்திரம்
"பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞானசம்பந்தம் 1873ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1ந் தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந் தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்" என்று என் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.
பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம். அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும் அவன் ஒரு நாள் இறக்கவேண்டுமென்பதாம். ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?
இவ்வளவுதான். இந்த இரண்டே பத்திகள்தான் முதல் அத்தியாயம். தன் சுயசரிதையை எழுத முற்படும்போது பிறப்பும் இறப்புமே நிச்சயம், ஆனால் அதைப் பிறரே கூற வேண்டும் என்று சொல்லி தான் தன் வாழ்வைப் பற்றி சொல்வதத்தனையையும் சந்தேகத்தின் நிழலில் இருத்தும் பம்மல் சம்பந்தம் இதை எழுதிய ஒரு காரணத்தாலேயே நம் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிறார். தமிழ் இங்கு ஒரு உச்சத்தை அனாயசமாகத் தொட்டிருக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், திருஞானசம்பந்தம் என்ற தன் பெயரை, "நான் புத்தி அறிந்தவுடன் நமக்கு ஞானம் எங்கிருந்து வந்ததென்று அப்பெயரை சம்பந்தம் என்றே குறுக்கிக் கொண்டேன்,' என்று எழுதுகிறார் (பக்கம் 15). மேலும், "இந்த கட்சி பேதங்களெல்லாம் நீங்கி நமது தேசம் ஐக்கியப்படுவதற்கு தற்காலம் உள்ள ஜாதி பேதங்களெல்லாம் அறவே ஒழிய வேண்டும்! ... இக்கொள்கை பற்றியே நான் என் பெயரின் பின்பாக முதலியார் என்று எப்பொழுதும் கையெழுத்து போடுவதில்லை," என்று எழுதுகிறார் (பக்கம் 56). பெயர் சுருங்கச் சுருங்க பம்மல் திருஞானசம்பந்தம் முதலியார் பம்மல் சம்பந்தமாக நம் பார்வையில் உயர்கிறார், இல்லையா?
ஆனால் அப்படி ஒரேயடியாக உயர்ந்து விடுகிறார் என்றும் சொல்லிவிட முடியாது. நம் சார்புகளை நாம் எவ்வளவுக்கு கொள்கை கோபுரத்தில் ஏற்றி உட்கார்த்தி வைத்திருக்கிறோமோ, அதற்குத் தகுந்த மாதிரி பம்மல் சம்பந்தம் உயர உயர நம் பீடமும் உயர்ந்து அவரை மேலும் மேலும் தாழ்த்திக் கொண்டே செல்கிறது.
என் சுயசரிதை என்று பம்மல் சொல்கிறார். தொழில்முறை வழக்கறிஞர், ஜட்ஜாக ஓய்வு பெற்றவர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றியவர். நாடகாசிரியர், நாடகங்களிலும் திரைப்படங்களில் நடித்தவர். மதுவிலக்கு பிரசாரகர். சுகுண விலாஸ் போன்ற அமைப்புகளில் உறுப்பினர். சுருக்கமாகச் சொன்னால், பொது வாழ்வில் ஈடுபட்டவர், பிரபலர்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும், இந்தியா பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த விஷயம் "தீயின் சிறு திவலை" என்ற நாடகத்தை 1939ஆம் ஆண்டு எழுதி "முன்பிருந்த துரைத்தனத்தாரால் தங்களுக்கு விரோதமாக அச்சிடப்பட்டதென்று எண்ணுகிறார்களோ" என்ற அச்சம் காரணமாக 1947ஆம் ஆண்டு வரை காத்திருந்து இவர் அச்சிட்டார் என்ற தகவலில் மட்டுமே தெரிய வருகிறது!
காந்தியை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை, சுதந்திரப் போராட்டம் பற்றிய பேச்சே இல்லை. பாரதியும் வஉசியும் வாழ்ந்த காலத்தில்தான் பம்மல் சம்பந்தமும் வாழ்ந்திருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தைக் கொண்டு அறிய வழியில்லை.
நம்மைவிட வரலாற்றை நன்கு அறிந்திருக்கக்கூடிய திரு ஞாநி அவர்களும்கூட, "சம்பந்த முதலியார் நாடக உலகில் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரை நடிக்க வைத்து அவர்க்ளுடன் நட்பாக இருந்தபோதிலும், நீதியரசராக பல தேசபக்தர்களுக்கு கடும் தண்டனை விதித்திருக்கிறார். 1857 சிப்பாய் புரட்சியை ஒடுக்கிய கொடுங்கோலன் நீல் என்பவனுக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை அகற்றவேண்டுமென்று தினசரி தனி நபர் சத்யாக்கிரகப் போராட்டத்தில் கடலூர் அஞ்சலையம்மாள் முதலான பல தேசபக்தர்கள் ஈடுபட்டனர். ஒரே ஒரு நாள் சிலை முன்னால் போய் நின்றுகொண்டு முழக்கமிட்டவர்களுக்கெல்லாம் பல மாத சிறை தண்டனையும் பெரும் தொகை அபராதமும் விதித்தார். பத்து வயது சிறுவனைக் கூட தண்டித்தார். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய அவர் கருத்துகளை சுயசரிதையில் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால், அறிய ஆவல்," என்று இலக்கிய விமரிசகர் திரு ஆர்வி அவர்களின் வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேற்கண்ட "தீயின் சிறு திவலை" சமாசாரம் தவிர அப்படி எதுவும் அவர் தன் சுயசரிதையில் எழுதியிருக்கவில்லை என்பதே நம் வருத்தத்துக்குரிய பதில்.
"சற்றேறக்குறைய 1857 வருஷம் காலஞ்சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணி இந்தியாவின் அரசுரிமை ஏற்ற நாள் முதல்தான் தமிழ்நாடானது சண்டை சச்சரவின்றி வாழத் தலைப்பட்டதெனக் கூறலாம். அதுவரையில் அனேகம் அரசர்கள் மாறி மாறி ஆண்டுவந்த நமது தமிழ்நாட்டில், நமது பூர்விகமான ஓலைப் புஸ்தகங்களைப் பரிவுடன் பாதுகாப்பது கடினமாயிருந்தது ஓர் ஆச்சரியமன்று; ஓர் குடியானவன் தன் குடும்பத்தின் ஜீவாதாரத்திற்கு வேண்டிய தான் விதைத்த நெல்லையே அறுவடை செய்து தான் அனுபவிப்பது சந்தேகமாயிருந்த காலங்களில் கல்விப் பயிற்சியின் பொருட்டு, கலைகளை ஓத அவனுக்குக் காலம் எப்படி வாய்த்திருக்கும்?" என்று தன் 'நாடகத் தமிழ்' என்ற நூலில் (பக்கம் 32) பம்மல் சம்பந்தம் எழுதுவதைக் கொண்டு தாஜ் மகால், அஜந்தா, தஞ்சை பெரிய கோவில் போன்ற புராதன கலைச் சின்னங்கள் மட்டுமல்ல, ஓலைச் சுவடிகளும் பிரிட்டிஷாரின் வருகையாலேயே காப்பாற்றப்பட்டன என்ற கருத்துடன் அவர் ஒப்புமை கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
பொதுவாக இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பம்மல் சம்பந்தத்தை ஒரு conservative என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது, அப்படிப்பட்ட ஒரு அரசியல் நிலைப்பாடு இந்தியாவில் இல்லைதான். பம்மலும் எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாதவராக இருந்திருக்கிறார், இந்திய சுதந்திர போராட்டத்தையும் அவர் அமைதியைக் குலைக்கும் அரசியலாகவே பார்த்திருக்கக்கூடும்.
இந்தியாவை உலுக்கிய சுதந்திரப் போராட்டத்தைப் பேசவில்லை என்றால், தமிழகத்தை உலுக்கிய சுயமரியாதை இயக்கம் இவரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஜஸ்டிஸ் கட்சியில் சேரச் சொன்ன நண்பர்களிடம், "என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது' என்கிறார், "நான் எந்த கட்சியையும் சேராதது" என்ற அத்தியாயத்தில்!
சொல்லப்போனால், சுயமரியாதை இயக்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பம்மல் சம்பந்தம்.-
"பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார்கள் எனும் இரண்டு கட்சி பேதங்களைப் பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால் ஒரு கட்சி உயர்ந்தும் ஒரு கட்சி தாழ்ந்தும் இருந்தால் இந்த பேதத்தை நிவர்த்திப்பதற்கு இரண்டு மார்க்கங்கள் உள. ஒன்று உயர்ந்த கட்சியை தாழ்ந்த கட்சியார் தங்கள் நிலைக்கு இழுத்துக் கொள்ளல். இரண்டாவது மார்க்கம் தாழ்ந்த கட்சிக்காரர்கள் தங்களை உயர்த்திக் கொள்வது. இதில் சரியான மார்க்கம் என்னவென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்" (பக்கம் 56).
அநீதி இழைக்கப்பட்ட கட்சிக்காரர்களின் சார்பில் மட்டுமே வாதாடியிருக்கிறார். பாதி வழக்கில் பொய் கேஸ் என்று தெரிந்துவிட்டால், "இந்த வியாஜ்யத்தில் கோர்ட்டார் காலத்தை இன்னும் எடுத்துக் கொள்ள எனக்கிஷ்டமில்லை," என்ற ஒற்றை வாக்கியத்தில் தன் தரப்பை சம் அப் செய்திருக்கிறார். ஜட்ஜாக இருந்த காலத்தில், வாய்தா கேட்கும் வக்கீல்கள் எதிர் தரப்பு வக்கீல்களுக்கு Day Fees தர வேண்டும் என்ற வழக்கம் ஏற்படுத்தி வழக்குகளை விரைவில் முடித்திருக்கிறார். சிவில் கோர்ட்டில் தான் தவறான தீர்ப்பளித்தால் சொல்ப நஷ்டம், ஆனால் கிரிமினல் கோர்ட்டில் வாழ்வே அழியும் என்று சிவில் கோர்ட் ஜட்ஜ் பணியை விரும்பியிருக்கிறார். தன் மனைவி இறந்த அன்றும்கூட, மயான வேலைகளை முடித்துக் கொண்டு பதினொரு மணியளவில் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார் - "என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பதில் என்ன பயன்?"
முதுமையில் தன் பார்வை குறைபட்டபோது பம்மல் சம்பந்தம் ஆங்கில கவி மில்டன் 'Paradise Lost' என்ற கிரந்தத்தை இயற்றியதை நினைவில் கொணர்ந்து ஆறுதலடைகிறார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதிருந்திருக்கலாம், சமுதாயப் புரட்சியில் அக்கறை இல்லாதிருந்திருக்கலாம் - ஆனால், அந்த மில்டனின் "On His Blindness' என்ற கவிதை, பம்மல் சம்பந்தத்துக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். அதிலும் குறிப்பாக, ' They also serve who only stand and waite," என்ற முத்திரைச் சொற்கள்.
என் சுயசரிதை,
பம்மல் சம்பந்தம்,
சந்தியா பதிப்பகம்.
விலை ரூ.65
No comments:
Post a Comment