கடந்த சில மாதங்களாக கிராஃபிக் நாவல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் எதற்கு எனத் தெரியாமல் கைக்குக் கிடைத்தவற்றைப் படித்ததில் நாவல், திரைப்படத்தைத் தாண்டி கிராஃபிக் நாவலில் ஒன்றுமே இல்லாதது போல ஒரு பிரமை. நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு இருக்கும் ஆயிரம் காரணங்களில் ஒன்று கூட கிராஃபிக் நாவலுக்குப் பொருந்தாது போல சந்தேகம். எதற்காக படக்கதை போல ஒரு நாவலைப் படிக்க வேண்டும்? காமிக்ஸ், கார்டூன் போன்றவற்றைப் போல கிராஃபிக் நாவலுக்கு பிரத்யேகத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. படம் பார்த்து கதையைத் தெரிந்துகொள்ள இது திரைப்படமும் அல்ல. அதே சமயம், மொழி தாண்டி படைப்புடன் ஒன்றுவதற்கு வெறும் படக்கதையுமல்ல. கலவையான ஊடகம் போல படமும் உரையாடலையும் சேர்த்துப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தவிர ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து பரிணாமங்களையும் முழுவதும் காட்டிவிட முடிவதும் இல்லை. பிரமிப்பான காட்சியமைப்பின் மூலம் திரைப்படம் சாதிக்கும் விஷுவல் ட்ரீட்டும் கிடைப்பதில்லை. பிறகு எதற்குத்தான் பல நாடுகளில் எழுத்தாளர்களும் ரசிகர்களும் மாங்கா, கிராஃபிக் நாவல் என உருவாக்கித் தள்ளுகிறார்கள்?
கிராஃபிக் நாவல் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி எனப் பட்டியல் போடுமளவுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் நான் படித்த நாவலை முன்வைத்து சொல்ல முயற்சிக்கிறேன்.
கிராஃபிக் நாவலில் இருவகைகள் உண்டு. திரைப்படம் போல , நேரடியாக கிராபிக் நாவலாக எழுதப்படும் கதைகள். மற்றொன்று ஏற்கனவே பிரபலமான நாவலை கிராஃபிக் நாவலாக மாற்றும் பாணி. நேரடியாக கிராஃபிக் நாவலாக எழுதப்பட்டதைப் படிப்பதை விட நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நாவலை கிராஃபிக் நாவல் பாணியில் படித்தால் ஒப்பிட்டுப் பார்க்க சுலபமாக இருக்கும் என நினைத்து , தஸ்தாவெஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்' கிராஃபிக் நாவலை வீட்டருகே இருந்த நூலகத்தில் கடன் வாங்கினேன்.
