கடந்த சில மாதங்களாக கிராஃபிக் நாவல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் எதற்கு எனத் தெரியாமல் கைக்குக் கிடைத்தவற்றைப் படித்ததில் நாவல், திரைப்படத்தைத் தாண்டி கிராஃபிக் நாவலில் ஒன்றுமே இல்லாதது போல ஒரு பிரமை. நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு இருக்கும் ஆயிரம் காரணங்களில் ஒன்று கூட கிராஃபிக் நாவலுக்குப் பொருந்தாது போல சந்தேகம். எதற்காக படக்கதை போல ஒரு நாவலைப் படிக்க வேண்டும்? காமிக்ஸ், கார்டூன் போன்றவற்றைப் போல கிராஃபிக் நாவலுக்கு பிரத்யேகத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. படம் பார்த்து கதையைத் தெரிந்துகொள்ள இது திரைப்படமும் அல்ல. அதே சமயம், மொழி தாண்டி படைப்புடன் ஒன்றுவதற்கு வெறும் படக்கதையுமல்ல. கலவையான ஊடகம் போல படமும் உரையாடலையும் சேர்த்துப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தவிர ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து பரிணாமங்களையும் முழுவதும் காட்டிவிட முடிவதும் இல்லை. பிரமிப்பான காட்சியமைப்பின் மூலம் திரைப்படம் சாதிக்கும் விஷுவல் ட்ரீட்டும் கிடைப்பதில்லை. பிறகு எதற்குத்தான் பல நாடுகளில் எழுத்தாளர்களும் ரசிகர்களும் மாங்கா, கிராஃபிக் நாவல் என உருவாக்கித் தள்ளுகிறார்கள்?
கிராஃபிக் நாவல் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி எனப் பட்டியல் போடுமளவுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் நான் படித்த நாவலை முன்வைத்து சொல்ல முயற்சிக்கிறேன்.
கிராஃபிக் நாவலில் இருவகைகள் உண்டு. திரைப்படம் போல , நேரடியாக கிராபிக் நாவலாக எழுதப்படும் கதைகள். மற்றொன்று ஏற்கனவே பிரபலமான நாவலை கிராஃபிக் நாவலாக மாற்றும் பாணி. நேரடியாக கிராஃபிக் நாவலாக எழுதப்பட்டதைப் படிப்பதை விட நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நாவலை கிராஃபிக் நாவல் பாணியில் படித்தால் ஒப்பிட்டுப் பார்க்க சுலபமாக இருக்கும் என நினைத்து , தஸ்தாவெஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்' கிராஃபிக் நாவலை வீட்டருகே இருந்த நூலகத்தில் கடன் வாங்கினேன்.
மிகப் பிரலமான நாவல். குழப்பமில்லாத கதை. கொலை செய்தவன், கொலை செய்யப்பட்டவர்கள் என முதல் சில பக்கங்களிலேயே எல்லாரும் அறிமுகமாகி ஐயம் திரிபுற குற்றம் வெளிப்பட்டுவிடுகிறது. மிச்சமிருக்கும் ஐநூறு சொச்சப் பக்கங்களில் குற்றம் தான் செய்தானா, ஏன் குற்றம் செய்தான், அதற்கான தண்டனையாக அவன் நினைப்பது என்ன, சமூகத்தில் கொலை செய்வது ஒரு குற்றமா, யாரைக் கொலை செய்தால் குற்றமாகாது என ஆன்ம விசாரங்களில் விறுவிறுப்பாகச் செல்லும் நாவல். கொலைகாரன் மற்றும் ஹீரோவான ரஸ்கல்நிகாஃப் போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிடமாட்டோமா என பல எழுத்தாளர்கள் தவிப்பார்கள் என எங்கோ படித்திருக்கிறேன். மிகவும் அற்புதமான கதாபாத்திரம். குறிப்பாக அவனது குழப்பங்களும், மன விசாரங்களும், ரஷ்ய சமூகத்தைக் குறித்த எள்ளலும் அவனது பாத்திரத்தின் தனித்தன்மை. இப்பாத்திரப் படைப்பில் தான் நாவலின் வெற்றி அடங்கியுள்ளது. இருத்தலியக் கொள்கையின் மிகக் கச்சிதமான மாதிரியாக ரஸ்கல்நிகாஃப் பாத்திரத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
படக்கதை பாணியில் சேன் மைரோவிட்ஸ் (Zane Mairowitz) எனும் கதாசிரியர் எழுதி, அலைன் கொர்கோஸ் (Alain Korkos) எனும் கிராஃபிக்ஸ் கலைஞர் வரை உருவங்களாக மாற்றியுள்ள இந்த கிராஃபிக் நாவல் மூலத்தை ஒட்டியே செல்கிறது. பெரிதளவு கதையில் மாற்றம் இல்லையென்றாலும் கூறுமுறையில் சில வித்தியாசங்களைச் செய்துள்ளனர்.
கதை நடக்கும் காலத்தை மாற்றி அமைத்தது கிராஃபிக் நாவலின் முதல் சிறப்பம்சமாக எனக்குத் தோன்றியது. 1860 களின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடக்கும் கதையை காஸ்-புடின் (Gas-Putin) கால 1990 களுக்கு மாற்றியுள்ளனர். இன்றைய காலத்திலும் பீட்டர்ஸ்பெர்க் அப்படியே இருக்கிறது. தெருவில் சண்டைகளும், குடிகாரர்கள், விபசாரிகள் என சகலமும் சர்வ நாசம் என்பதுபோன்ற சமூகத்தில் வாழ்பவனாக ரஸ்கல்நிகாஃப் காட்டப்பட்டுள்ளான். உண்மையில் பார்த்தால் ரஷ்ய நாட்டுச் சமூகச் சித்தரிப்புக்காகவே நாவலைப் படித்த சமூகவியல் அறிஞர்கள் உண்டு. அந்தளவு தத்ரூபமாகவும் சமூக சீரழிவுக்கான நோயை கண்டறிந்து நீக்கும் கருவிகள் தோன்றும் காலகட்டமாகவும் 1860 கள் இருந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி உலகம் முழுவதும் பெரும் பிரமிப்பை தோற்றுவிக்கத் தொடங்கிய காலம். பெரும் அரச குடும்பங்கள் சுரண்டல்கள், அதிக வரி வசூலிக்கும் நிலப்புரபுத்துவ கொடுங்கோன்மையும் நடந்துகொண்டிருந்த காலம். சகோதரத்துவம் சமத்துவம் பொதுவுடைமை பிரகடனங்களும் தனி மனித சிந்தனைகளும் ஐரோப்பாவில் முளைவிட்டு ரஷ்ய சமூகத்தினுள் நுழையத் தொடங்கிய காலம். பல்லாண்டுகால அரசராட்சி, நில உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவற்றை கேள்வி கேட்கத் தொடங்கிய காலம்.
இப்படிப்பட்ட சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள கீழ்மைகளுக்கான காரணத்தை கண்டறிய முற்படுகிறான் ரஸ்கல்நிகாஃப். வாழ்வில் புழங்கும் அடிப்படை அறமின்மை கண்டு திகைக்கிறான். வெறுக்கிறான். சமூகமே புல்லுருவிகளாலும், பகட்டு வேஷக்காரர்களாலும், பிரயோஜனமற்ற களைகளாலும் மண்டியுள்ளது என ஆவேசம் கொள்கிறான். அவனுடைய நாயகன் நெப்போலியன். நெப்போலியன் காலத்திலும் ஐரோப்பிய சமூகம் இப்படித்தான் இருந்தது. மேலான செயல்திட்டங்களுக்காக சில அழித்தொழிப்புகளை நடத்தத் துணிவு வேண்டும் என்பதை அவனது வாழ்விலிருந்து ரஸ்கல்நிகாஃப் கற்றுக்கொள்கிறான். சமூக நலனுக்காக சில தேவையற்ற மனிதர்களை அழிக்கும் உரிமை சிலருக்கு உள்ளதாக நம்புகிறான். அதை நம்பி தனது திட்டத்தைச் செயல்படுத்தவும் தொடங்குகிறான்
மற்றவர்களை விட தான் ஒரு நிலை உயர்ந்தவன் எனும் எண்ணம் அவனுள் உருவாகவே பீட்டர்ஸ்பெர்கில் அநியாய வட்டி வாங்கி சமூக நோயென நினைக்கும் கிழவி அல்யோனாவையும் அவளது தங்கை லிசவெட்டாவையும் கொல்கிறான். ஒழுங்காகத் திட்டம் போட்டால் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பது அவனது எண்ணம். அதுமட்டுமல்லாது கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழப்போவதில்லை, சமூக நலனுக்காக பெரும் திட்டங்கள் தீட்ட வேண்டும் என நினைத்திருந்தான். அதனால் செய்த கொலை குற்றமல்ல ஒரு சமூகத் தேவை என நம்புகிறான். உண்மையில் அவனிடம் ஒரு திட்டமும் கிடையாது. ஆனால் கொலை செய்யும் உரிமை தனக்கு உள்ளதாக நினைத்து ஒரு பத்திரிகையில் அது பற்றி எழுதவும் செய்கிறான். நவீன கால நெப்போலியனாக தன்னை நினைத்துக்கொள்கிறான்.
ஆனால் கொலை செய்த பின் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான். பல மாதங்களாக சரியாக உணவில்லாமல், படிப்பைத் தொடரவும் பிடிக்காமல், தனக்குள் புழுங்கியபடி இருந்ததால் கடும் ஜுரத்தில் தன்னிலை மறக்கிறான். இதற்கிடையே மர்மலாதோவ் எனும் குடிகாரனை சந்திக்கிறான். தனது மகள் தவறான வழியில் சம்பாதிப்பதில் தான் குடும்பம் வாழ்கிறது எனச் சொல்லி ரஸ்கல்நிகாஃபின் பரிதாபத்தை சம்பாதிக்கும் மர்மலாதோவை வீட்டில் கொண்டு சேர்க்கிறான். அவனது மகள் சோன்யாவை சந்தித்ததிலிருந்து அவள் மேல் பரிதாபம் சார்ந்த அணுக்கம் ரஸ்கல்நிகாஃபுக்கு உண்டாகிறது.
எங்கு சென்றாலும் தனது குற்ற உணர்விலிருந்து தப்ப முடியாது என்றுணரும் ரஸ்கல்நிகாஃப் பலமுறை குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல் நிலையம் வரை செல்கிறான். தன்னை கைது செய்ய அவர்களுக்கு சாட்சி கிடையாது எனத் தெரிந்தும், தான் கொலை செய்யவில்லை சமூகத்தின் கீழ்மையை அகற்றியுள்ளவன் என நம்பினாலும் அவனுக்கு விமோசனம் கிடைக்காது எனப் புரிந்துகொள்கிறான். நாவலின் முக்கியமானப் பகுதிகள் இவை . குற்ற உணர்வுடன் போராடுபவனாக அவன் இருந்தாலும் யாரிடமாவது பாவ மன்னிப்பு கேட்டால் மட்டுமே மனதின் அரிப்பு நிற்கும் என உணர்கிறான். கடவுள் நம்பிக்கையிலாத சமூகச் சூழலில், சக மனிதனிடம் மட்டுமே பாவமன்னிப்பு கேட்க முடியும் எனும் முடிவுக்கு வருகிறான். தவறான வழியில் சம்பாதிப்பவளாக இருந்தாலும் சோன்யாவின் உள்ளொளி மீது நம்பிக்கை கொள்கிறான். தூய உள்ளத்தோடு இருக்கும் அவளிடம் தனக்கு விமோசனம் கிடைக்கும் என தனது குற்றத்தை அவளிடம் சொல்கிறான். முச்சந்தியில் அனைவரது முன்னிலையிலும் குற்றத்தை பகிரங்கமாக ஒத்துக்கொண்டால் மட்டுமே ரஸ்கல்நிகாஃபுக்கு மன்னிப்பு கிடைக்கும் என சோன்யா உறுதியாகச் சொல்லிவிட நாவலும் உச்சகட்டத்தை அடைகிறது.
கிராஃபிக் நாவலில் மேற்சொன்ன விமோசனம் எனும் கருத்தியல் வெளிப்படவில்லை. கொலைக்கதை போல ரஸ்கல்நிகாஃபின் குழப்பங்களை அழகாக வெளிப்படுத்தினாலும் அவன் தனக்குள் புழுங்கும் போராட்டம் சரியாக உணர்த்தப்படவில்லை. சோன்யா எனும் பாத்திரத்தின் முக்கியத்துவமும் இதில் இல்லை. கிட்டத்தட்ட நாவலின் மையக்கருத்தை விட்டு விலகி நின்று ஒரு குற்றப்புனைவு நூலாக மட்டுமே அமைத்திருக்கிறார்கள். இது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
ஆனால், கிராஃபிக் நாவல் என்பதால் படக்கதை மூலம் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதே எனது வாசிப்பாக இருந்தது.
படங்களின் கோணங்கள், கதாபத்திரங்களைத் தவிர கதையின் சூழலை ஓரிரு படங்களில் விளக்கிவிடுதல், பாத்திரங்களின் முக பாவங்களை மிகத் துல்லியமாக ஓரிரு சட்டகத்தில் கொண்டு வந்தது, கதைப்போக்கின் தீவிரத்தின் படி காட்சிக் கோணங்களைப் படம்பிடித்தல் போன்றவற்றை வியந்து ரசித்தேன். ஒரு விதத்தில் திரைப்படங்கள் அளவுக்கு காட்சியின் தீவிரத்தை சட்டென உணர்த்தக் கூடிய வடிவமாக கிராஃபிக் நாவல் இருக்கிறதெனத் தோன்றுகிறது. காட்சிக்கேற்ப கேமிரா கோணங்கள் மாறுவது போல ஒவ்வொரு படத்தின் சட்டகத்திலும் காட்சியின் கோணம், வண்ணங்களின் சேர்க்கை, நிழலுருவமாக வரும் கனவுப் பகுதிகள் என ஒவ்வொரு காட்சிக்கும் பல வித்தியாசங்களைக் காட்டியுள்ளனர்.
பல பக்கங்களில் சொல்லப்படும் கதையை ஓரிரு பிரேம்களில் காட்டிவிடுவது போலத்தான் கிராஃபிக் நாவலும் என்றாலும் படக்காட்சியுடன் உரையாடல்களும் வருவதால் மிக உன்னிப்பாக படிக்க வேண்டிய்தாக இருக்கிறது. படங்களில் காட்டியதை உரையாடலில் உணர்த்தக்கூடாது. கூடியவரை படங்கள் வழியாக காட்சியை உணரவைத்திட வேண்டும் என மெனெக்கெட்டிருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டம், சில முக்கியமான உரையாடலக்ள் மட்டுமே வார்த்தைகளாக தரப்பட்டுள்ளன.
கதையை 1990களில் கொண்டு வைத்தது மட்டுமல்லாது சமகாலத்து சூழலையும் கதையோடு பொருத்தியுள்ளார்கள். கொலை செய்யும் இடத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசுவது போன்ற தொலைக்காட்சி, இன்றைய வசை வழக்கமான நடுவிரலை காண்பிப்பது, பாத்திரங்களின் ஆடை அமைப்புகள், ‘Giveme a break’ போன்ற நவீன பிரயோகங்கள், சுவரை அலங்கரிக்கும் ஸ்க்ரீம் (Scream)போன்ற நவீன ஓவியங்கள், ‘God Save the Queen’ போன்ற வாசகங்கள் என பல நவீன சூழல் காட்சியமைப்பினுள் நுழைந்துள்ளது. இது போன்ற மாற்றங்கள் மூலம் கதை நடப்பது இன்றைய காலகட்டத்தில் என உணர்த்த முடிவதோடு மட்டுமல்லாது சமகால சமூக நிலைப்பாடு குறித்த எதிரொலியாகவும் இது உள்ளது.
முதல் முறை கிராஃபிக் நாவலைப் படிக்கும் வாசகர்களுக்கு பல குறைபாடுகள் தோன்றும். முக்கியமாக எனக்குத் தோன்றியது , படிக்கும்போது வாசகனின் கற்பனையில் விரியும் கதைச்சூழல் கிராஃபிக் நாவலில் கிடைப்பதில்லை என்பதுதான். திரைப்படம் போல குறிப்பிட்ட சட்டகத்தினுள் வாசகனை உலாத்த வைக்கிறது. வாசகனின் கற்பனையைத் தூண்டுவதற்கு பதிலாக கிராஃபிக் கலைஞன் உருவாக்கும் பிரேம்களில் மனம் பதிய அவனது திறமை மட்டுமே வெளிப்படுகிறது. அதாவது திரைப்படம் போல பார்வையாளர்களின் பங்களிப்பு கிராஃபிக் நாவலிலும் குறைவுதான். புத்திசாலித்தமான திரைக்கதை தவிர மற்ற வகை திரைப்படங்கள் வாசகனை பங்கேற்க வைப்பதில்லை - அவன் வெறும் பார்வையாளன் மட்டுமே. அதுபோல சிறப்பான பார்வை கோணங்கள், பல செய்திகளை அளிக்கக்கூடிய நல்ல படங்கள், ஆர்வமூட்டும் உரையாடல்கள் இல்லாமல் கிராஃபிக் நாவலை ஈடுபாடோடு படிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
கிராஃபிக் நாவலுக்கென தனி மொழி உள்ளது. ஒரே சட்டகத்தினுள் பல செய்திகளைச் சொல்லக்கூடிய பாங்கும், காட்சிகளைப் பல கோணங்களிலும் செறிவாக காட்டுவதற்கும், சட்டென புரியவைக்கக்கூடிய ஓவிய மொழியும், கதைக்குள் வராத ஆனால் தொடர்புடைய பிற சம்பவங்களை தொடர்புறுத்தவும், வேற்று மொழி நாவல்களை அவற்றின் பண்பாட்டு செறிவோடு காட்சிப்படுத்துவதற்கும் கிராஃபிக் நாவல் நல்ல ஊடகமாகும். இந்த நாவலில் கூட ரஷ்ய கலாசாரத்தை ஓரிரு சட்டகங்களில் புரியவைத்துவிட்டனர். ஒரு சீன அல்லது ஜப்பானிய நாவலில் வரும் நுண்மையான கலாச்சார அடையாளங்களை, பண்பாட்டு குறியீடுகளை இவ்விதம் காட்சியாக மாற்றும்போது நம்மால் உடனடியாக அதனுடன் உறவு கொள்ள முடிகிறது. பல பக்கங்களில் இலக்கிய மொழியில் பூடகமாக புரிய வைப்பதற்கு பதிலாக கிராஃபிக் நாவலில் எளிதாக காட்டிவிடலாம் என்பது கூடுதல் பலம். இதனால் மொழி மற்றும் கலாசார எல்லைகளை ஓரளவு சிரமமில்லாமல் வாசகனால் கடக்க முடியும் எனத் தோன்றுகிறது. சுருங்கக் கதை சொன்னாலும் , இப்படிப்பட்ட தனிமொழியைக் கைக்கொள்வதால் மட்டுமே கிராஃபிக் நாவல்களின் தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியும்.
இணையத்தில் வாங்க: Amazon.com
படிக்கும்போது வாசகனின் கற்பனையில் விரியும் கதைச்சூழல் கிராஃபிக் நாவலில் கிடைப்பதில்லை என்பதுதான். திரைப்படம் போல குறிப்பிட்ட சட்டகத்தினுள் வாசகனை உலாத்த வைக்கிறது.
ReplyDeleteரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே..
ReplyDeleteபைராகியின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.
ஓம்!ஓம்!ஓம்!
'Art spiegelman'-ன் 'maus' என்ற கிராஃபிக் நாவலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
ReplyDeleteகிராஃபிக் நாவலில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'maus'.
இரண்டு பகுதிகள் கொண்டது இந்த கிராஃபிக் நாவல். Art spiegelman-ன் தந்தையும் தாயும் போலந்தில் நாஜிகளிடம் அனுபவித்த கொடுமையை சொல்வது முதல் பாகம்.
பின் அமெரிக்காவில் தன் தந்தையுடன் spiegelman பெற்ற அனுபவத்தை கூறுவது இரண்டாம் பாகம்.
வெறும் படக்கதை அல்ல என்பதை இதைப் படிக்கும் போது கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியும்.
திரைப்படத்திற்கும், நாவலுக்கும் அதற்கென தனித்த ஒரு மொழி உண்டு. அதைப் போலவே கிராஃபிக் நாவலுக்கும் என தனியாக ஒரு மொழி வடிவத்தை கொடுத்திருப்பார் spiegelman.
@விதானம்
Deleteஉங்கள் தளத்தில் உள்ள ஓவியங்கள் அருமையாக இருக்கின்றன.
இதே பாணியில் புத்தக மதிப்பீடுகளும் செய்யலாமே?
ஆம்னிபஸ் தங்களை வரவேற்கிறது!