'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன'
பெருமாள்முருகனின் `நீர் விளையாட்டு` சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல படிக்க வேண்டிய சிறுகதைகள் எனும் கடந்த பத்து வருடங்களில் வெளியான வரிசையில் அவரது நீர் விளையாட்டு, பீ கதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது ஒரு கதையை (`எருக்கஞ்செடிகள்`) சிறுபத்திரிக்கையில் படித்த நினைப்பு இருக்கிறது. அது தவிர வேறெந்த கதையையும் நான் படித்ததில்லை. அவரது சிறுகதைகள் உலகத்தைப் படிக்கத் தொடங்கையில் ஒட்டுதல் இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சகஜம் தான். சிறு நகரில் வளர்ந்த எனக்கு பெருமாள்முருகனின் உலகம் மிகவும் புதிது. கதை சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தில் மன விலக்கம் மறைந்தது. இலக்கியத்தைப் படிப்பதே நமக்குத் தெரியாத உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டும்தான் எனும் எண்ணம் வலுத்தது.
இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவை அல்ல. மாறாக, வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பிந்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்ததால் உருவான கதைகள். இக்கதைகளை எழுதும்போது அவருக்கு படைப்பெழுச்சியை மிகுவித்த செயலாக இதை முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
