பொறுப்புத் துறப்பு: மூளையைப் பற்றிய
கட்டுரைகள், புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் அவற்றிலுள்ள பெயர்களையும்
தகவல்களையும் குழப்பிக் கொண்டுவிடும் ஒரு விசித்திர குணமா வியாதியா என்று
தெரியாத ஒன்று எனக்குண்டு. நான் எழுதியிருப்பதை நீங்கள் உங்கள் வாசிப்பின்
மூலம் சரி செய்து கொள்ளுங்கள். சுருக்கமாக, என்னை நம்பாதீர்கள்.
ப்ளஸ் டூ பயாலஜி பாடத்தில், Human Physiology என்று பல
பக்கங்கள் கொண்ட பாடம் உண்டு. ஜூவாலஜியின் மூன்றில் இரண்டு பங்கு இந்த
Human Physiology. எங்கள் திறமையான ஆசிரியர் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’
இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்துவிட்டார். வேறொரு பாடத்தில் ஆட்டு
மூளையை வரைந்து, பாகங்கள் குறிக்க வேண்டும். நியூரான் படம் வேறு உண்டு.
இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், அன்றைக்கு ஒன்றுமே புரிந்ததில்லை.
ஆனால், பின்னர் ஒரு நாள், இன்றைக்கு நானாக அதைப் படிக்கும்போது ரொம்ப
எளிதாக இருக்கிறது.
