பொறுப்புத் துறப்பு: மூளையைப் பற்றிய
கட்டுரைகள், புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் அவற்றிலுள்ள பெயர்களையும்
தகவல்களையும் குழப்பிக் கொண்டுவிடும் ஒரு விசித்திர குணமா வியாதியா என்று
தெரியாத ஒன்று எனக்குண்டு. நான் எழுதியிருப்பதை நீங்கள் உங்கள் வாசிப்பின்
மூலம் சரி செய்து கொள்ளுங்கள். சுருக்கமாக, என்னை நம்பாதீர்கள்.
ப்ளஸ் டூ பயாலஜி பாடத்தில், Human Physiology என்று பல
பக்கங்கள் கொண்ட பாடம் உண்டு. ஜூவாலஜியின் மூன்றில் இரண்டு பங்கு இந்த
Human Physiology. எங்கள் திறமையான ஆசிரியர் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’
இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்துவிட்டார். வேறொரு பாடத்தில் ஆட்டு
மூளையை வரைந்து, பாகங்கள் குறிக்க வேண்டும். நியூரான் படம் வேறு உண்டு.
இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், அன்றைக்கு ஒன்றுமே புரிந்ததில்லை.
ஆனால், பின்னர் ஒரு நாள், இன்றைக்கு நானாக அதைப் படிக்கும்போது ரொம்ப
எளிதாக இருக்கிறது.
மூளையைப் பற்றி எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்?
நமக்குத் தெரியாத, நாம் புரிந்து கொள்ளாத விஷயங்களைக் கட்டுப்படுத்துவதோ,
மாற்றுவதோ நம்மால் ஆகாத காரியம். முதலில் ‘நாம்’ என்பதற்கு பல நிலைகள்
இருக்கின்றன என்பது எனது எண்ணம். கீழே உடல், அதற்கு மேல் மனம். அதற்கு மேலே
ஆன்மா அல்லது அதைப் போன்ற ஒன்று. அதற்கு மேலே இன்னும் பெரிய ஏதோ ஒன்று
இருக்கிறது அல்லது இல்லை. இருக்கிறதோ இல்லையோ, அது பல நம்பிக்கைகளுக்கும்
அவநம்பிகைகளுக்கும் காரணமாக இருக்கிறது.
உடம்பு முழுவதற்குமான ‘தலைமைச் செயலகம்’ மூளை. மனம்
என்பது மூளைதானா அல்லது மூளையின் ஒரு பகுதியா அல்லது வேறு ஏதேனுமா
என்பதெல்லாம் இன்னும் குழப்பம்தான். நம் உடம்பின் ஓவ்வொரு பாகத்திற்கும்,
நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூளையில் ஒரு இடம் பொறுப்பாக
இருக்கிறது. அதைப் படம் வரைந்து பாகமெல்லாம் குறித்து வைத்திருக்கிறார்கள்.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இவ்வளவு இடம் என்று கொடுத்து மூளை அதை
எல்லாம் கவனித்துக் கொள்கிறது. அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மனித
உடலை வரைந்தால் அது இப்படி இருக்கும்.
கை, வாய், மூக்கு அப்புறம் அந்த உறுப்பு - மனிதனுக்கு கையும் வாயும்
மற்றதும் ஏன் சும்மா இருக்க மாட்டேனென்கிறது என்று கேட்டால் மூளை அப்படி
வேலை செய்க்றது என்பதைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டும்.
ஆக, மூளையே நாம்.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர், “இந்த
அபாரமான தலைமைச் செயலகத்தைச் சற்றேனும் புரிந்துகொண்டு அதன் மர்மங்களை
லேசாகக் கட்டவிழ்க்கும்போது, நம்மை நாமே அறிந்துகொண்டு நம் திறமைகளை மேலும்
சிறப்பாகப் பயன்படுத்த உதவி செய்யும் என்கிற குறிக்கோளுடன்தான் இந்தக்
கட்டுரைத் தொடர் எழுதப்பட்டது” என்கிறார். இதற்குத்தான் மூளையைப் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புத்தகத்தின் இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசலாம்.
![]() |
http://io9.com |
ஒன்று
எழுதப்பட்ட விஷயம், மற்றொன்று எழுதப்பட்ட விதம். THE Brain: A User’s
Manual by the Diagram Group’ என்ற புத்தகத்திலிருந்தும் Scientific
American இதழ்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டிருப்பதால், இது எல்லா
புத்தகங்களையும்போல், மூளையின் எடையிலிருந்து தொடங்கி, பார்த்தல், கேட்டல்,
சுவைத்தல் என்று அது செய்யும் வேலை, பிறகு மனம், கடைசியில் மூளைக்
குறைபாட்டால் வரும் நோய்கள் என்று வழக்கமான வரிசையையே தொடர்கிறது. 1993ல்
சுஜாதா எழுதியிருக்கும் விஷயங்கள்தான் இன்னமும் மூளையைப் பற்றி
எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேண்டுமென்றால் தலைமைச் செயலகத்தையும்
Stumbling on Happinessஐயும் அடுத்தடுத்து படித்திப் பாருங்கள். Behavioral
Scienceஐப் பற்றி இப்போது நிறைய எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது.
மூளையின் பல ஆச்சரியங்களில் ஒன்று, நமது கண். நமது கண்கள் நரம்புகளோடு இணையும் இடத்தில் நமக்கு பார்வை கிடையாது. சுஜாதாவின் வார்த்தையில் பொட்டை. ஆனால், சாதாரணமாக அந்தப் பொட்டைப் புள்ளி தெரியாது. அதைப் புரிந்து கொள்ள இந்த Blind spot testஐ முயற்சித்துப்பாருங்கள். புத்தகத்தில் வேறு விதமான டெஸ்ட் இருக்கிறது.
அடுத்தது எழுதப்பட்ட விதம். அறிவியல் விஷயங்களை
அரைகுறையாகத் தெரிந்து கொண்டு அப்படியே எழுதினார் என்று சுஜாதா மீது ஒரு
குற்றச்சாட்டு உண்டு. ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி எழுதினால் பலருக்குப்
புரியாது என்பது, குற்றம் சாட்டுபவர்களுக்கு புரியவில்லை. ஒரு உதாரணம்,
“உலகிலேயே மிக மிக ஆச்சரியம்: மனித மூளை! அதனுள்
பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் – செல்கள் உள்ளன. ஒவ்வொரு
செல்லையும் ஒரு மணல் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால்… ஒரு லாரி
நிரம்பும்!”
இது சுஜாதா எழுதியது. மாறாக நியுரான்கள் 4 முதல் 100 மைக்ரான்கள்
வரையிலான அளவில் இருக்கும் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அது
வாசிப்பவனுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. இது மாதிரி
புத்தகம் முழுக்க நிறைய எழுதிதான் மூளையை நமக்குப் புரிய வைக்கிறார்.
இல்லையென்இறால் 12ம் வகுப்பு பயாலஜி புத்தகம் மாதிரி ஆகியிருக்கும்.
இன்னொன்று,
”ஏதாவது சிந்திக்க வேண்டுமென்றாலோ ஏதாவது தசைநாரை இயக்க வேண்டும் என்றாலோ அட, சும்மா சொறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ... அந்த ஆதார இச்சை, செல்லிலிருந்து கிளம்புகிறது. செல் சுவரின் ஊடுபோகும் தன்மை ’பர்மியபிலிட்டி’ என்பது அதிகமாகி, வெளியே உள்ள எதிர் மின்சாரம் குறைகிறது. இது ஓர் அலைபோல் அடுத்தடுத்து தொடர்ந்து ஆக்ஸான் வழியாகப் போகிறது. வயலில் வீசும் காற்றைப் போல. ஒரு துடிப்பலை சிலிர்ப்பு செல்கிறது. இது தான் ஆதாரமான மெக்கானிஸம்.”
இது மேலோட்டமாக எழுதப்பட்டதில்லை என்பது மூளையைப் பற்றி இரண்டொரு கட்டுரைகளாவது படித்தால் தெரிந்துவிடும்.
தலைமைச் செயலகம் | சுஜாதா | 176 பக்கங்கள் | விகடன் பிரசுரம் | விலை ரூ.110 | உடுமலை.காம் | nhm.in
No comments:
Post a Comment