தூண்டில் கதைகள்
சுஜாதா
Photo Courtesy/To buy: Tamil books online
...சம்பிரதாயமான
பழைய கால சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இவைதான்
இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா
என்று கவலைப்பட வேண்டியது இல்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க முடியும்...
சுஜாதா (முன்னுரையிலிருந்து)
இது
மாதிரி முன்னாடியே தெளிவாக சொல்லிவிட்டால் இதை இலக்கியமாகப்
பொருட்படுத்தலாமா, இதன் உள் அர்த்தம் என்ன, இதில் படிமங்கள் உண்டா,
உண்டெனில் அவற்றின் பொருள் என்ன, படிமங்கள் எந்த அளவுக்கு படிமப் பொருளைத்
தாண்டிச் செல்கின்றன என்று எல்லாம் கேள்விகளைக் கேட்டு மண்டையைப் போட்டு
பிய்த்து கொள்ள வேண்டாம் பாருங்கள்.
குமுதம்
இதழில் 12 வார தொடராக வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
மொத்தம் 12 சிறுகதைகள் (12 வாரம் என்றால் 12 சிறுகதைகள், இதுகூடவா
தெரியாது!). சுஜாதா முன்னுரையில் சொன்ன மாதிரி, ஒரு சின்ன அதிர்ச்சிதான்
கதையின் நாடி, சில கதைகளில் இவை கதையின் கடைசி வரியில் வருகின்றன, சில
கதைகளில் கடைசி பத்தியாக வருகின்றன. ஒருசில ஆண்டுகள் முன்னமேயே இந்தத்
தொகுப்பைப் படித்திருந்தாலும், யாரைப் படிப்பது என்று குழப்பம் இருப்பதால்,
படித்ததையே மீண்டும் படிப்போம் என்று முடிவு செய்து விட்டேன். இந்த
கதைகளின் முடிவை நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், கதையின்
சுருக்கம் மட்டுமே, இங்கு சொல்ல விரும்புகிறேன்.