ஒரு படைப்புடன் வாசகன் கொண்டிருக்கும் உறவு குறித்து பலர் எழுதியுள்ளனர். பெரும்பாலும் சொந்தப் படைப்புகளைப் பற்றி தாங்களே பேசக்கூடாது எனும் எழுத்தாளனின் தேவையற்ற தன்னடக்கம் காரணமாக விமர்சகர்கள் முன்வைக்கும் குறிப்புகள் படைப்பை முந்திக்கொண்டு வாசகனை சென்றடைகின்றன. இது பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நடக்காது. மிகக் குறுகிய வட்டத்துள் புழங்கும் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. விமர்சனத்தைப் பொருத்து துர்பாக்கிய நிலை வாசகனுக்கா படைப்பாளிக்கா எனும் சங்கடங்களும் இதில் அடங்கும். இவற்றைத் தாண்டி வாசகன் படைப்போடு கொள்ளும் நேரடி உறவு மலர்வதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்.
ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’நாவல் மேற்சொன்ன அனைத்து சங்கடங்களையும் மீறி வாசகனை அடைய முனையும் படைப்பாகத் தோன்றுகிறது. முதல் பதிப்பு ஜூன் 1942 ஆம் ஆண்டு கு.ப.ராஜகோபாலனின் ஆசியோடு வெளியானது. பிற்காலத்தில் வெளியான சில விமர்சனங்கள் மூலம் இந்த நாவல் மீண்டும் மீண்டும் பல விதமான வாசிப்புகளைச் சுமந்து வந்துள்ளது.
’கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத் தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்..மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாகவேண்டும்..கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா’, என கு.ப.ராஜகோபாலன் நாவல் முன்னுரையில் எழுதுகிறார். கிராம வாழ்க்கையின் எளிமையில் நற்குணங்கள் இருக்கின்றன, பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது என்பதால் கிராமப் புனருத்தாரணம் செய்வது போல நாவலின் பண்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி தனது விமர்சனத்தில் ‘பாத்திரங்கள் ஆயாசம் எதுவுமின்றித் தம் போக்கில் எழும்பிவருகிறார்கள். வாழ்வு மீது ஆசிரியர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெற்றி என இந்த நாவலைச் சொல்லலாம்..நாகம்மாள் எவ்வித ஒப்பனையும் செய்யப்படாமல் உயிர்ப்புடன் இயங்குகிறாள்’, எனக் குறிப்பிடுகிறார். பெரும்பாலும் நாவலின் எளிமையான உருவாக்கம், செறிவான பாத்திரப் படைப்பு மற்றும் கதையின் இயல்பானப் போக்கு போன்றவை இதன் பலம் என்கிறார்.
அம்பையின் பிரபலமான விமர்சனம் மண்ணாசை கொண்ட பெண்ணின் கதையாக நாகம்மாளை அணுகுகிறது. நாவல் ‘மண்பற்றிய தகவல்களைத் தரும் முனைப்புடன் எழுதப்பட்டது அல்ல..ஒரு பெண் மண்ணுக்கு ஆசைப்பட்டு, அவள் மூலம் பலனடைய நினைக்கும் சில ஆண்களின் திட்டத்தால் ஒரு கொலைக்குக் காரணமாவது பற்றியது’ என அம்பை எழுதுகிறார். ‘பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்திலும் முதன்மைத் தன்மை வாய்ந்தது..சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவாக நாகம்மாள் விளங்குகிறாள்’, என பெருமாள்முருகன் தனது பார்வையை முன்வைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட விமர்சனங்களைப் படிக்கும்போது வாசகர்களான விமர்சகர்கள் நாவலை அந்தந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வாசித்திருக்கிறார்கள் எனப் புலனாகிறது. பெண்ணியப் படைப்பாகவும், உலகின் இயங்குவிதியில் பெண்களின் பங்கு குறித்த கதைக்களனாகவும், கிராம வாழ்வின் புனருத்தாரண வித்தாகவும் நாவல் பலவித வாசிப்புக்கு உள்ளாகிறது. ஒரு விதத்தில் இவை புது வாசகர்களுக்கு பலவிதத் திறப்புகளைத் தந்தாலும் படைப்பை நேரடியாகச் சீர் தூக்கிப் பார்க்கத் தடையாகவும் அமைகிறது.
வெங்கமேடு எனும் கொங்கு மண்ணில் நடக்கும் சந்தைக்கூட்டத்தில் கதை தொடங்குகிறது. வெங்கமேட்டிலிருந்து மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கும் சிவியார் பாளையம் நாகம்மாளின் கிராமம். ‘வறட்சியென்பது அங்கு வெகுதூரத்துக்கில்லை’ என சிறு குறிப்பில் அக்கிராமத்தின் செழிப்பை சொல்லிவிடுகிறார். கதை நடக்கும் சமயத்தில் நாகம்மாளின் கணவன் இறந்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும் அறிமுகத்திலேயே அவள் ஆரம்ப நாளிலிருந்தே கிராமத்தில் ராணி போல நடந்துவந்திருக்கிறாள் எனும் குறிப்பு வருகிறது. சந்தையிலிருந்து சிவியார் பாளையத்து ஊர்க்காரர்கள் திரும்ப வரும் போது நாகம்மாளின் ராணித்தனம் கோட்டோவியமாக வரையப்பட்டிருக்கிறது.
கணவனது தம்பி சின்னைய்யன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் நாகம்மாள் தங்கியிருக்கிறாள். ராமாயியிடம் ‘எக்காளமாகப்’ பேசினாலும் நாகம்மாள் மகன் முத்தாயாவை மிக செல்லமாகவே அனைவரும் வளர்க்கிறார்கள். ஆனாலும் வீட்டிலுள்ளோர் நாகம்மாளிடம் வாய் கொடுக்காமல் இருக்கிறாள். ஊர் சண்டைக்காரனான கெட்டியப்பனுக்கும் நாகம்மாளுக்கும் ரகசிய உறவிருப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஊர் எல்லையில் கெட்டியப்பனின் தோப்புக்குச் சென்று நேரத்தை செலவழிக்கிறாள். ஆனால் அங்கு ராணித்தனம் இல்லாமல் தனது நடத்தைக்கு எவ்விதமாவது காரணம் காட்டும் ஆலோசனை மட்டுமே நடக்கும். மிகவும் தைரியமாகவும் எள்ளலாகவும் ஊராரிடம் பேசினாலும் அவளது தாழ்வு மனப்பான்மையை மறைக்கப் போடும் வேஷம் போலத் தோன்றும்படி கெட்டியப்பனிடம் நடந்துகொள்வாள். தனது நடத்தையின் சாயை கெட்டியப்பனை சந்திக்கும்போதெல்லாம் அசந்தர்ப்பமாக அவளிடம் வெளிப்படுகிறது.
ஆனால், கெட்டியப்பனிடம் நெருக்கம் கொள்ள வேறொரு முகாந்திரம் இருக்கிறதோ எனவும் தோன்றுவதற்கு இடமுண்டு. சின்னய்யன் நடவு செய்யும் வயல்வெளிகள் தனது கணவனின் உழைப்பில் உருவானவை என்பதால் அதில் பங்கு வேண்டும் என நாகம்மாள் உள்ளுக்குள் ஏங்குகிறாள். இத்தனைக்கும் ஒரே வீட்டில் இருந்தாலும், பின் ஒருநாள் சண்டை வரும்போது தனது பங்கைத் தராமல் சின்னய்யன் ஏமாற்றிவிடுவான் எனும் பயம் நாகம்மாளை அரிக்கிறது. அதற்கு முகாந்திரம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ராமாயியின் அம்மா அவர்களுடன் தங்கும் சமயத்திலெல்லாம் நிலம் பற்றியும் பக்கத்து ஊருக்கு பெயர்ந்து போவது பற்றியும் குறிப்பிடுகிறாள். ஊரை விட்டுச் செல்லும்போது நிலத்தையெல்லாம் விற்றுவிடலாம் எனவும் சின்னய்யனுக்கு யோசனை சொல்கிறாள். இதை மறைமுகமாகக் கேட்டுவிடும் நாகம்மாள் தனக்குத் துணை இல்லாமல் போனால் நிலத்தில் பங்கு கிடைக்காது என உறுதியாக நம்புகிறாள். ஊர் சண்டியரான கெட்டியப்பனைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்களது உரையாடல் இதைச் சுற்றியே அமைந்திருக்கிறது.
நாகம்மாள் - கெட்டியப்பன் ஒரு பக்கமென்றால் நாவல் சிவியார் பாளையத்து ஊர்மக்களின் குணாதிசயங்களையும் சில சொற்களில் வடித்துக்காட்டுகிறது. குறிப்பாக மணியக்காரர் நடத்தும் மந்திராலோசனை சபையில் பங்குபெறும் நாராயணசாமி முதலியார், ஊர்ப்பெரியவரான செட்டி எனப் பல முக்கியஸ்தர்களும் கெட்டியப்பன் பக்கம் இருக்கின்றனர். ஆனால் ஊர் சபை கூடும் போது அங்கிருக்கும் வெங்கமேட்டார், ‘அண்ணன் தோன்றி கஷ்டப்பட்டுச் சம்பாதித்தான். அவன் குடுத்துவைக்காமல் போய்விட்டான்..ஏதோ கால், அரை அவளுக்கும் ஒதுக்கிடச் சொல்லிடலாம்’ எனப் பெரியமனசுடன் முடிவெடுக்கிறார்கள். தனது திட்டத்தை இம்முடிவு முழுவதும் தடுத்துவிடும் என கெட்டியப்பன் வருத்தப்படுகிறான்.
இதற்கிடையே சின்னய்யன் தனது மாமியார் சொல்கேட்டு பக்கத்து ஊருக்குச் சென்று வருகிறான். தனது நிலத்தை விற்று புது நிலம் வாங்கப் போனானா எனும் சந்தேகம் நாகம்மாளைத் துரத்துகிறது. நாவலில் இம்முடிவு சொல்லப்படாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. வெளிப்படையாக சொத்தை பங்கிட்டுக்கொள்ள மாட்டேன் என சின்னய்யன் எங்கும் சொல்வதில்லை. மாமியாரும் அவ்ர்களுடனே தங்கிவிட நாகம்மாளுக்கு சந்தேகம் வலுக்கிறது. வழக்கம்போல விறுவிறுவென கெட்டியப்பனிடம் ஓடுகிறாள். கெட்டியப்பனும் அவனது கூட்டாளி செங்காளியும் இரவு முழுவதும் குடித்துவிட்டு விடியலில் தங்கள் நிலத்துக்குச் செல்கிறார்கள். சின்னய்யன் நிலத்தைத் தாண்டும்போது நாகம்மாள் அங்கிருப்பதைப் பார்க்கிறார்கள். சின்னய்யனை ஏறுபிடிக்க விடாமல் நாகம்மாள் சொத்து பற்றி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாள். பேச்சுவார்த்தை தடித்து கெட்டியப்பனை சின்னைய்யன் திட்டிவிட, கையிலிருந்த தடியால் அடித்து சின்னைய்யனைக் கொன்றுவிடுவதோடு நாவல் முடிகிறது.
கிராம மண்ணின் ரகசியங்களைப் போல நாகம்மாள் கதாபாத்திரமும் பல கேள்விகளைத் தாங்கி நிற்கிறது. அவளது ராணித்தனம் என்பது பாவனை மட்டுமே. பிடிப்பில்லாத வாழ்க்கை, கணவனது சொத்துக்களை அடைய முடியாத கோபம் என வெளிப்புற காரணங்கள் இருந்தாலும், கெட்டியப்பனிடம் தணிந்துபோகும் குணத்தில் பதிலில்லாத பல கேள்விகள் நிற்கின்றன. குறிப்பாக தனது தாழ்வு மனப்பான்மை, சமூகத்தில் குறிப்பிடும்படியான நிலை பெறாமை, பாதுகாப்பின்மை போன்றவை சொத்து கிடைத்தும் சரியாகிவிடும் எனச் சொல்லிவிடமுடியாது. ஒரு பக்கம் தன்னை நல்லவிதமாகப் பார்த்துகொள்ளும் ராமாயி-சின்னய்யனை எதிர்க்க காரணம் தேடும் நாகம்மாள் மறுபக்கம் தன்னை உபயோகிக்க நினைக்கும் கெட்டியப்பனிடம் அடங்குவது மிக இயல்பாக அமைந்திருக்கிறது. இதற்காக ஆசிரியர் எதுவும் பிரயத்தனங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே பாத்திர உருவாக்கத்தின் கவனத்தைக் காட்டுகிறது.
ஜெயமோகன் இதை குறுநாவல் என வகுத்திருக்கிறார். நாவலின் எதிர்பாரா முடிவு நாகம்மாளின் வாழ்வை நிர்கதியாக்குவது போல பல கேள்விகளை அந்தரத்தில் நிற்கின்றன. கருவுக்குத் தேவையான அளவு விரிவான பாத்திரங்கள் மற்றும் மிகத் தீவிரமாக முடிவை நோக்கி சென்றதினால் இது குறுநாவல் என வகைப்படுத்துவது சரியெனத் தோன்றுகிறது. எண்ணிலடங்கா புதிர்களின் தொகுப்பாக வாழ்வைப் பார்க்கும் பார்வையை கதையின் எதிர்பாரா முடிவு நமக்கு அளிக்கிறது. அம்பையின் விமர்சனம் சொல்வது போல் இது ஆண்களின் திட்டமிட்ட சதி எனத் தோன்றவில்லை. மண்ணின் மர்மங்களைத் தாங்கியிருக்கும் நிலப்பரப்பு போல எண்ணிலடங்கா ரகசியங்களை தாங்கியுள்ள வாழ்க்கையின் துளியே முடிவில் வெளிப்பட்டிருக்கிறது.
வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி, பெண்களின் வாழ்வைக் காட்ட வந்த முதல் நவீனப் படைப்பு எனப் பல அடைப்புகளுக்குள் இந்த நாவலை வர்ணிக்கலாம். ஆனால், நாவலின் வெற்றியாக நமக்குத் தோன்றுவது அதன் முடிவுதான். ஒரு விதத்தில் ஆசிரியரின் வெற்றியும் அதில் அடங்கியுள்ளது.
நீர்ப்பரப்புக்கு மத்தியிலும் கருமையேறிய மேகத்துக்காகக் காத்திருக்கும் சாதகப்பறவை போல சகல ஆடம்பரங்களுக்கு மத்தியிலும் கலை வாழ்வை மட்டுமே தேடுகிறது. கொடுத்துவைத்த சிலரால் அது கண்டடையப்படுவதும் உண்டு. வாழ்வின் புலப்படாத பாதைகளை காட்டுவதோடு மட்டுமல்லாது அதன் விசித்திரமும் பிரம்மாண்டமும் ஆசிரியர் உருவாக்கும் எந்த பாத்திரத்தை விடவும் பெரியது எனக் காட்டத் தெரிந்த கலையே நாவல். அந்த விதத்தில் நாகம்மாள், கெட்டியப்பன் பாத்திரங்கள் வழியாக வாழ்க்கையின் சிடுக்குகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. மிகச் சுருக்கமான கருவோடு, ஒற்றைத் தீற்றலில் படைக்கப்பட்ட பாத்திரங்களைக்கொண்டு இதை ஆர்.ஷண்முகசுந்தரம் நிறுவியுள்ளார்.
புகைப்படங்கள் நன்றி- உடுமலை.காம்
தலைப்பு - நாகம்மாள்
ஆசிரியர் - ஆர்.ஷண்முகசுந்தரம்
உள்ளடக்கம் - நாவல்
பதிப்பாசிரியர் - காலச்சுவடு பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை
No comments:
Post a Comment