நண்பர்களுடனான விவாதத்தின்போது, ஒரு நண்பர் சொன்னார், ‘ஒரு நாள் பிறருடைய புலன்களுக்குச் சிறைபடாத ‘ஹாலோ மேன்களாக’ மாறும் வாய்ப்பு கிட்டினால் நாம் செய்யும் முதல் காரியமே நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மிகையான மகானுபாவ பிம்பங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை நமக்கு காட்டிவிடுவதாக இருக்கும்’. அவரை கோபமாக எதிர்த்து விவாதித்து மறுத்தேன், ஆனால் நம் லட்சிய பிம்பங்களைக் கலைக்கும் இந்த அவநம்பிக்கை செருப்பில் ஏறிய முள்ளாக என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தின் தரை நிழல்போல அற்பத்தனங்களும், சல்லித்தனங்களும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை போலும். அவற்றைத் தாண்டி வருவதும், அழித்து எழுவதும் சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் புரிந்து ஏற்றுகொள்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை.

ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலின் முன்னுரையில் நாகராஜன் ஒருமுறை சொன்னதாக ஜெ.பி. சாணக்கியா குறிப்பிடும் ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ எனும் இந்த ஒற்றை வரியை, நாவலை வாசித்து முடித்தது முதல், ஒரு மந்திரத்தைப் போல் மீண்டும் மீண்டும் மனம் உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறது. சல்லித்தனத்தின் மகோன்னதம், மகோன்னதமான சல்லித்தனம், சல்லித்தனமும் மகோன்னதமும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கின்றன.