சிறப்பு பதிவர் : அஜய்
முதலிலேயே கொஞ்சம் உஷார்படுத்தி விடுகிறேன். டானா டார்ட்டின் முதல் நாவலான "ரகசிய வரலாறு" (The Secret History) மர்மக் கதையோ த்ரில்லரோ அல்ல. நாவலின் பெயரையும் பின்னட்டை 'டயோனிசியச் சடங்குகள்' ('Dionysian rites') என்று ஏதோ பேசுவதையும் பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் வரலாம். வேண்டாம், கலைத்து விடுங்கள்.
ஆமாம், இந்த நாவலின் துவக்கத்திலும் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதற்கு பின் பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிய பின்னர், அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது. அதனால் இந்த நாவலை 'coming of age' நாவல் என்று கூறலாம். மர்மக் கதைக்கு ஆசைப்பட்டு இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாந்து விடுவீர்கள்.
இந்த நாவலின் நிகழ்வுகள் ஒரு உயர்தரக் கல்லூரியில் நடைபெறுகின்றன. முக்கிய பாத்திரங்களில் ஒருவனான ரிச்சர்ட் கல்வி ஊக்கத் தொகை உதவியுடன் கல்லூரியில் இணைந்திருக்கிறான். சிறிய கிராமத்திலிருந்து வரும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த அவனால் அங்கு ஒன்ற முடிவதில்லை, தன் குடும்பப் பின்னணி குறித்து பொய் சொல்லி/அதை மறைத்து மற்றவர்களுக்கு சமமாகச் சேர்ந்து கொள்ள முயற்சி செய்கிறான். அந்தக் கல்லூரியில் ஜூலியன் மாரோ என்ற ஒரு பேராசிரியர் இருக்கிறார், ரொம்பவும் பூடகமான நபர். பண்டைய கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் அவர் தன் வகுப்பில் அதிக மாணவர்களை சேர்ப்பதும் இல்லை. அந்த வகுப்பில் ஒரு ஐந்து மாணவர்கள் (நான்கு ஆண் ஒரு பெண்) எப்போதும் ஒரு குழுவாக இருக்கிறார்கள், தங்கள் குழு தவிர்த்து மற்றவர்களுடன் அவர்கள் அதிகம் பழகுவதில்லை. ஐந்து மாணவர்களின்பாலும் அவன் ஈர்க்கப்படுகிறான், இதில் பண்டைய கிரேக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தைவிட அந்த மாணவர் குழுவிடம் நட்பாக வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, ஒரு முறை அவர்களுக்கு உதவி அதில் வெற்றியும் பெறுகிறான். பின்னர் அவர்கள் வழிகாட்டுதல்படி, மாரோவிடம் மீண்டும் பேசி வகுப்பில் சேர அனுமதி பெறுகிறான், அதைத் தொடர்ந்து ஐவர் குழுவில் இணைந்து அறுவனாகிறான்.