பதிவர் : பாலாஜி
"Crime and Punishment,
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235
"தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது ‘ஒரு லோட்டா இரத்தத்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."
-புத்தகக் காட்சிக்கு எனது “டாப் 10″, பேயோன்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு இளைஞன், ரோத்யா (ரஸ்லோநிகோவ் என்கிற ரஸ்கோல்நிகாவ்). அவனுக்கு ஒரு அம்மா, ஒரு தங்கை. அம்மாவும் தங்கையும் கஷ்டப்பட்டு இந்த இளைஞன் வக்கீலுக்குப் படிக்க பணம் அனுப்புகிறார்கள். ஆனால் இவன் சூதாடுகிறான். மது அருந்துகிறான். அத்தனை பணத்தையும் செலவழிக்கிறான். கல்லூரி பக்கமே செல்வதில்லை.
இந்த நாவலைப் படிக்கும்போது பழைய தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது. எல்லோருக்கும் கஷ்டம், எல்லோருமே ஏழை, யாருமே சந்தோஷமாக இல்லை.
ஒரு நாள் ரோத்யாவுக்கு அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதில் அவனது தங்கை வேலை செய்யும் இடத்தில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாள் என அம்மா எழுதுகிறார். கூடவே, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள் என்றும், அந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிரபு அவளை மணந்து கொள்ள விரும்புகிறார் என்றும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் இருக்கிறது. இதைப் படித்தபின் ரோத்யாவின் மனசாட்சி விழித்துக் கொள்கிறது. இந்தப் பிரபுவை மணம் செய்துக் கொண்டு நமக்காக நம் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்கிறாள், இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொள்கிறான். இங்கே ஒரு திருப்புமுனை. ரோத்யாவுக்கு ஒரு நண்பன், அவன் நல்லவன், வல்லவன். தன் தங்கைக்கு அவனைத் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று ரோத்யாவுக்கு ஒரு எண்ணம்.
மிகையுணர்ச்சியும், அன்றாட வாழ்வில் நாம் பார்க்க முடியாத ஆகிருதி கொண்ட பாத்திரங்களுமாக அந்த காலத்திலேயே ஒரு நாவலை இவர் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையே நாவல் முழுவதும் கடைபிடிக்கிறார். உம் என்றால் உணர்ச்சிகரமான காட்சி, உர் என்றால் சோகமான காட்சி.