சிறப்பு பதிவர் : அஜய்
எக்காலத்திலும் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் இயல்பு கொண்ட ஒரு தொல்கதையை 'வரலாற்றாய்வாளர்' நவீனப்படுத்துகிறது. பல திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் கதைக்கருவைக் கொடுத்த தொல்கதை இது - ப்ராம் ஸ்டோகர் தன் டிராகுலாவை உருவாக்க அடிப்படையாக இருந்த 'கவுண்ட் டிராகுலா' (Count Dracula) அல்லது 'வ்லாத் தெபஸ்' (Vlad Tepes) என்ற அந்த நிஜ மனிதரைத்தான் சொல்கிறேன். டிவிலைட் (Twilight) தொடரை அதன் வெற்றியின் பாதிப்பில் நகல் செய்து எழுதப்பட்ட நாவல் இல்லை இது. இரத்தக் காட்டேரிகள், vampirism போன்ற விஷயங்கள் அதிக அளவில் இல்லாத, முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை எலிசபெத் கொஸ்தோவாவின் 'வரலாற்றாய்வாளன்'. இது டான் ப்ரௌவுனும் அவரது சகாக்களும் பொங்கலிட்டுப் பரிமாறும் பழகிய சரக்கில்லை. சிறப்பான கதையமைப்பு கொண்ட இந்த நாவலில் அவற்றைவிட தேர்ந்த கதை சொல்லல் உண்டு.
இந்த நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லியின் பார்வையில் இதன் முதல் பகுதி துவங்குகிறது. நாவலின் எந்த இடத்திலும் இவரது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இவர். இந்தப் பகுதியில், ஒரு விடலைப் பருவ மாணவியான கதைசொல்லி தன் தந்தை பால் உடன், ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கிறார். பால் சமூக அமைதி மையம் ஒன்றை நிர்வகிக்கிறார், அது மனிதாபிமான சேவைகளைச் செய்கிறது. சொர்க்கம் போன்ற கதைசொல்லியின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் குறுக்கிடுகிறது - அவரது தந்தையின் நூலகத்தில் ஒரு நாள் அது எதிர்ப்படுகிறது. மரக்கட்டையில் செதுக்கிய வடிவங்களில் மசி பூசி அச்சிடப்பட்ட அதன் ஓவியங்களில் டிராகுலாவோடு தொடர்புடைய டிராகனின் ஒற்றை உருவமும் இருக்கிறது. அது குறித்து தன் தந்தையிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் பேசும் விருப்பம் இல்லை. ஆனால் எப்படியோ தன் தந்தையிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுகிறார். கதை சொல்லியின் தந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் துவங்குகிறார்.
இந்தப் புத்தகமும் அதன் ஓவியமும் ஐம்பதுகளில், அவர் கல்லூரி மாணவனாக இருந்தபோது கிடைத்தவை. அதை அப்போது அவர் தனது பேராசிரியர் ராஸ்ஸியிடம் காட்டியிருக்கிறார். கதைசொல்லி இப்போது காட்டியபோது அவரது தந்தை அதிர்ச்சியடைந்தது போலவே அப்போதும் அந்த பேராசிரியருக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கிறது. ஏனென்று விசாரிக்கும்போது, முப்பதுகளில் ராஸ்ஸிக்கும் தன்னிச்சையாக இப்படி ஒறு புத்தகம் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளிப்படுகிறது. டிராகுலா முடிவுக்கு வந்துவிட்ட ஒரு தொல்கதையல்ல, அவர் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ராஸ்ஸி. அதற்குப் பின் சிறிது நாட்களில் பாலின் பார்வைக்கு சில கடிதங்களை விட்டுச் சென்று காணாமல் போகிறார் ராஸ்ஸி.
இந்த கட்டத்தில்தான் கதை மூன்றாக பிரிகிறது. முதல் பகுதியில், கதைசொல்லி தன் தந்தையின் கடந்த கால நினைவுகளை கேட்டுக்கொண்டே அவருடன் ஐரோப்பா நெடுக பயணிக்கிறார். இந்தப் பகுதியின் முடிவில் பால் காணாமல் போகிறார், கதைசொல்லி அவரைத் தேடிச் செல்ல முடிவு செய்கிறார். இரண்டாவது பகுதியில் ஐம்பதுகளின் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. மூன்றாவது பகுதியில் முப்பதுகளில் நிகழ்ந்த நிகழ்வுகள் ராஸ்ஸி விட்டுச் சென்ற கடிதங்களின் தொகுப்பாக விவரிக்கப்படுகின்றன. பிராம் ஸ்டோகர் கடித வடிவில் எழுதிய கதைக்கு இது ஒரு நன்றியுணர்த்தல் என்று நாம் இதை எடுத்துக் கொள்ளலாம். கதைக்குள் கதைகள் என்ற அமைப்பில் நாவல் எழுதப்பட்டுள்ளது.
இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள ஓர் ஒற்றுமை (டிராகுலா தவிர்த்து), முக்கிய பாத்திரங்கள் அனைவரும் வரலாற்றை ஆய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதுவே அவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது. வரலாறு ஒரு விதத்தில் Pandora's box போல்தான். அதன் ஆராய்ச்சி எதை வெளிக்கொணரும் என்று சொல்ல முடியாது. ஒரு பாத்திரம் சொல்வது போல் -
As a historian, I have learned that, in fact, not everyone who reaches back into history can survive it. And it is not only reaching back that endangers us; sometimes history itself reaches inexorably forward for us with its shadowy claws.
இரண்டாவது பகுதியில் கதைசொல்லியின் கதை ஓரங்கட்டப்படுகிறது. பால் மற்றும் ராஸ்ஸி இருவரின் கடந்த காலமும் முக்கியத்துவம் பெறுகின்றன. ராஸ்ஸியின் மகள் ஹெலனை பால் சந்திக்கிறான். இவர்கள் இருவரும் ஒன்றாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இஸ்தான்புல், பல்கேரியா, புதாபெஸ்ட், ரோமானியா என்று தொடரும் பயணத்தில் வ்லாத் தேம்பெஸ்ஸின் இடத்துக்கும் செல்கிறனர்.
மிகைப்படுத்திச் சொல்லவில்லை, நாவலின் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதியின் சில இடங்களில் நிஜமாகவே அச்சுறுத்தும், முதுகுத் தண்டைச் சில்லிக்கும், பயங்கர கணங்கள் உள்ளன. (உதாரணமாக டிராகுலா விஷயத்தை ஆராயும் ஒரு பாத்திரத்தை எச்சரிக்க அவரது நண்பர் மீது நடத்தப்படும் தாக்குதல்). இரத்த விரயம், வன்முறை என்றெல்லாம் வெளிப்படையாக இல்லாமல் நம்மை கொஸ்தோவா அச்சுறுத்துகிறார். இந்த நாவலின் ஒரு பாத்திரம் தான் பயந்ததைப் பற்றி சொல்வது வாசகராகிய நமக்கும் பொருந்தும்.
It was not the brutality of what occurred next that changed my mind and brought home to me the full meaning of fear. It was the brilliance of it.
இதை ஒரு Road Novel என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் கொஞ்சம் அதிக அளவிலேயே பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுப் பகுதியைக் குறித்த எதிர்பார்ப்பை, பரபரப்பை உருவாக்க கொஸ்தோவா முக்கிய இழையை சற்று புறந்தள்ளி, மற்ற இழைகளை விரிவுபடுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் ஒன்று சேர்க்கிறார்.
இரண்டாம் பகுதியின் மத்தியில், அச்சுறுத்தும் கட்டங்கள் குறையத் துவங்குகின்றன, புதிரின் சிதறிய துண்டங்கள் இணைக்கப்படுகின்றன. பால், ஹெலன் இருவரும் ஹெலனின் தாயைச் சந்திக்கிறார்கள். அவர் சில தகவல்கள் தருகிறார். இஸ்தான்புல்லில் 'துர்குட் போரா'விடம் (Turgut Bora) தேடலுக்கு உதவும் சில தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தப் பயணங்கள் சிலருக்கு அலுப்பாக இருக்கலாம், ஆனால் நான் இந்தப் பகுதிகளை ரசித்துப் படித்தேன். பனி அடர்ந்த, இருண்ட கோட்டைகளும் கட்டிடங்களும் கொண்ட கிழக்கு ஐரோப்பா எனக்கு எப்போதும் வசீகரமானதாகவே இருந்திருக்கிறது. இஸ்தான்புல், கிழக்கும் மேற்கும் சந்திக்கும் வாசல் என்ற ரொமாண்டிக் கற்பனைக்கு நானும் விலக்கல்ல. இந்தப் பகுதியின் தேசச் சித்திரங்களை கொஸ்தோவா நுட்பமான விவரணையைக் கொண்டு உணர்த்துகிறார். இந்த நிலப்பரப்புகளின் வயல்கள், சூர்யாஸ்தமனம், இவற்றில் வெளிப்படும் ஒருவித அமானுஷ்ய அழகு இவை நன்கு பதிவாகி உள்ளன. ஓநாயாக மாறும் மனிதர்கள் (werewolves), இரத்தக் காட்டேரிகள் என்று கிராமப்பகுதிகளில் நிலவும் மூட நம்பிக்கைகளையும் பதிவு செய்திருக்கிறார் கொஸ்தோவா. இந்த இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பதற்கில்லாத என்னைப் போன்றவர்களின் கற்பனைக்கு இந்த விவரணைகள் மிகுந்த நிறைவளிக்கின்றன.
டிராகுலா சவமற்ற நிலைக்கு (Undead state) வருவது குறித்து ஆர்வமூட்டும் வகையில் விவரிக்கிறார் கொஸ்தோவா. அவனது உடல் முன் சாமியார்கள் அமர்ந்திருக்கும்போது நிகழும் திகிலான கணங்களை பரபரப்பாக எழுதியிருக்கிறார் என்றாலும் என்னதான் நடந்தது எனபதைச் சொல்லி விடுவதில்லை.
ஆட்டோமான் (Ottoman) சுல்தான் டிராகுலாவின் சமாதியைச் சூறையாடத் தேடுகின்றான் என்ற அளவுக்கு துருக்கியர்கள் டிராகுலாவின் சக்தி குறித்து அச்சமும் வெறுப்பும் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் என்பது நமக்குத் தெரிவதில்லை. கொஸ்தோவா சில குறிப்புகளை உணர்த்துவதற்கு மேல் டிராகுலாவின் தொன்மத்தை குறித்த மர்மத்தை நமது யூகத்துக்கே விட்டு விடுகிறார். கதையின் கருத்தோட்டத்தை விட்டு விலகிச் செல்லும் இது போன்ற பகுதிகள் ஏன் என்று நமக்கு தோன்றலாம். இதற்கான பதிலை அவரின் ஒரு நேர்முகத்தில் பெறக்கூடும். அதில், முழுக்க முழுக்க நேரடியான த்ரில்லராக இல்லாத ஒரு விக்டோரிய பாணி நாவல் எழுத வேண்டும், என்று தான் நினைத்ததாகச் சொல்லியிருக்கிறார் கொஸ்தோவா. இதை முயற்சி செய்திருப்பதால் கதை அவசரமில்லாமல் நிதானமாக விரிந்து செல்கிறது. பல இழைகள் இருந்தாலும் நாவலில் சொல்லப்படும் நிகழ்வுகள் அத்தனையும் சுவாரசியமானவை.
மூன்றாவது பகுதியில் பல்கேரியாவில் உள்ள ஒரு மடாலயத்தில் டிராகுலா புதைக்கப்பட்டிருக்கிறான் என்று நினைத்து அங்கு தேடிச் செல்கிறான் பால். அவனும் ஹெலனும் அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இங்கு சென்றடைந்ததும் ஒரு உச்சகட்ட மோதல் நிகழ்கிறது. இந்தப் புள்ளியில் ராஸ்ஸி மற்றும் ஹெலன் - பால் கதைகள் இணைகின்றன, கதை எழுபதுகளுக்கும் கதைசொல்லிக்கும் திரும்புகிறது. முப்பதுகளிலும் ஐம்பதுகளிலும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட கதைசொல்லி இப்போது தன் தந்தை எங்கிருப்பார் என்பது குறித்த தெளிவை அடைந்திருக்கிறார். இப்போது அவர் பிரான்ஸில் உள்ள ஒரு மடாலயத்துக்குச் செல்கிறார். கடந்த காலத்து, சமகால பிரதான பாத்திரங்கள் இங்கு வருகின்றனர். டிராகுலாவை எதிர்கொள்கின்றனர், நடந்தவை அனைத்துக்கும் முடிவு காணப்படுகிறது.
இந்த நாவலின் தேடலின் நோக்கமான டிராகுலாவைக் குறித்து என்ன சொல்ல? நாவலின் இறுதியில்தான் அவன் நேரடியாக கதையில் நுழைகிறான், இருப்பினும் நாவல் நெடுக அவனது தீய இருப்பை, அமானுஷ்ய சக்தியை நாம் உணர்கிறோம், நம்மை அச்சம் கொள்ள வைக்கிறான். நாவலின் பாத்திரங்கள் காணாமல் போகும் நிகழ்வுகளுக்கும் அதற்கான காரணங்களும், டிராகுலாவின் செயல்பாடுகளும் அதற்கான காரணங்களும், நம்ப முடியாதவையாக இருக்கின்றன.
ஆனால், இப்படி சொல்வதே தவறோ?
டிராகுலாவின் தொன்மம் உண்மை என்று மனதளவில் ஒப்புக்கொண்டுதான் இந்த நாவலை வாசிக்கிறோம், இதில் சிலவற்றை மட்டும் நம்ப முடியவில்லை என்று சொல்லலாமா என்று ஒரு கேள்வி எழலாம். உண்மைதான். ஆனால் ஒரு புனைவை வாசிக்கும்போது suspension of disbelief தேவைதான் என்றாலும், ஓரளவேனும் நாம் அதில் தர்க்க ஒழுங்கை எதிர்பார்க்கிறோம். அதுவும் நாவலின் மற்ற பகுதிகளில் உள்ள இறுக்கமான கட்டமைப்போடு ஒப்பிடும்போது, டிராகுலாவின் செயல்பாடுகளுக்கான காரணங்கள் எதிர்மாறாக, சற்று தளர்வாக உள்ளன.
டிராகுலா மெத்தப் படித்த, பாண்டித்யம் கொண்ட ஒரு பாத்திரமாக அறியப்படுவது அவனது புதிய, வேறு ஒரு முகத்தை நமக்கு காட்டுகிறது. இதனால் அவன் தீயவன் இல்லை என்றாகி விடுவதில்லை, அவனுக்கு வேறொரு பரிமாணமும் இருக்கலாம் என்பது உணர்த்தப்படுகிறது. வன்முறை நிறைந்த சமகால சூழலே தொல்கதைகளின் டிராகுலாவாக அவன் உருவாகவும் காரணமாக இருந்திருக்கலாம். நிஜ டிராகுலா வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் படித்தால், அப்போதிருந்த போர் சூழல், நிச்சயமற்ற அரசியல் சூழல் நமக்குப் புலப்படுகிறது. வன்முறையின் பின்புலத்தில் பார்த்தால் மற்ற ஆட்சியாளர்களை போல் டிராகுலாவும் இன்னொரு கொடுங்கோலன்தான் என்று தோன்றுகிறது. ஆனால், ப்ராம் ஸ்டோகரின் புண்ணியத்தில் உச்ச அளவில் இரத்த வெறி பிடித்தவனாக மாற்றப்பட்டு சாகாவரம் பெற்றுவிட்டான் இவன். வாசகராகிய நமக்கும் டிராகுலாவையும், இரத்தக் காட்டேரிகளையும் மையமாகக் கொண்ட புனைவுகள் கிடைக்கின்றன.
நாவலின் பின்கதை (epilogue) தான் என்னை ஏமாற்றுவதாக, என்னில் ஒரு விலகலை ஏற்படுத்துவதாக இருந்தது. முதல் மூன்று பகுதிகளில் கொஸ்தோவா எவ்வளவு தெளிவாக திட்டமிட்டு நிகழ்வுகளை அரங்கேற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. கதையின் முடிவில் எதிர்பாராத ஒரு திருப்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் இந்த பிற்சேர்க்கைக்கு காரணமாக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் இதை நினைத்து நாவலைப் படிக்காமல் இருந்துவிட வேண்டாம்.
பொதுவாக சாகசக் கதைகள், மர்ம கதைகளில் சுவை கெடும்படி கதையின் முக்கிய விஷயங்களைச் சொல்லிவிடக் கூடாது அல்லவா?எனவேதான் இதுவரை நான் சொன்ன கதை முழுமையானதல்ல, சில புள்ளிகளை மட்டுமே தொட்டுக் காட்டியிருக்கிறேன். புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு இன்னும் நிறையவே புதிய விஷயங்கள் இதில் உண்டு. ராஸ்ஸி மற்றும் பால் இழைகளில் திகிலோடு காதலும் உண்டு. காதல், பிரிவின் சோகம் , தேடல், ஒன்று சேர்தல்/ நிரந்தர பிரிவு என்று வழமையான அம்சங்கள் இருந்தாலும் எதுவும் துருத்திக்கொண்டு இல்லை. இவை ஒவ்வொன்றும் கதையின் போக்கோடு இணைந்து, சில நேரங்களில் அதை முன்னகர்த்தவும் செய்கின்றன. பொதுவாக நாவல் முழுதும் உறவுகளின் பிணைப்பு முக்கியமான ஒன்றாக உள்ளது. அது காதலாக மட்டுமல்ல, நட்பாகவும் இருக்கலாம், வழிகாட்டி (mentor) மீதுள்ள பற்றாக இருக்கலாம். தங்கள் வரலாற்று ஆர்வத்தை மீறியும், பல பிரச்சனைகளை இந்த பாத்திரங்கள் எதிர்கொள்ள உறவுகளின் பிணைப்பே காரணமாக உள்ளது.
இதுதான் கொஸ்தோவாவின் முதல் நாவல் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இந்த நாவலில் அவர் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை. டிராகுலா ரசிகர்கள், தொன்மத்தில் ஆர்வம் உள்ளவர்கள், சாகச கதை வாசகர்கள் மற்றும் பொது வாசகர்களுக்கு இந்த ஐரோப்பிய சாகச கதை மிகவும் சுவையானதாக இருக்கும் என்பது நிச்சயம்.
ஆனால், ஒரு எச்சரிக்கை - இது 800 பக்கங்களுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான நாவல். முதல் 300 பக்கங்களில் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை பக்கங்களைத் திருப்பிச் செல்லும் கதைக்கு ஆசைப்படுபவர் நீங்கள் என்றால், இந்தப் புத்தகம் உங்களுக்கல்ல. மெல்ல நகரும், அமைதியான கதை. முழுக்க முழுக்க சாகச கதை என்று நினைக்காமல் சாகச தன்மைகள் கொண்ட ஒரு பொது நாவல் என்று வாசிப்பது நல்லது. கொஞ்சம் பொறுமை இருக்கும் வாசகர்களுக்கு இது பிரமாதமான ஒரு நாவலாக இருக்கும்.
The Historian,
Elizabeth Kostova,
Little, Brown Book Group.
No comments:
Post a Comment