சிறப்புப் பதிவர்: N. Balajhi
”ஸ்னோ" என்ற இந்த நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 2006ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக் எழுதிய நாவல் இது. துருக்கி மொழியில் எழுதப்பட்ட இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்ததே ஒரு பெரிய கதை. புத்தகத்தை வாங்கிய நாள் முதல் திரும்பத் திரும்ப வாசிக்க முயன்று தோற்றுப் போயிருந்தேன், இந்த மாதிரி மூன்று முறை தோற்றபின் நான்காவது முயற்சியில்தான் முழுசாகப் படிக்க முடிந்தது. இதற்கு முந்தைய முயற்சிகளில் ஆரம்பத்திலுள்ள முதல் சில அத்தியாயங்களைத் தாண்டிப் படிக்க முடிந்ததில்லை. புத்தக அலமாரியில் ஸ்னோவை நான் தொலைத்தேனோ, இல்லை அதுதான் என்னைத் தொலைத்ததோ, சென்ற வாரம் வரை அதைப் படிக்கவே முடியவில்லை. போன வாரம், கப்போர்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு வழியாக ஸ்னோ என்னை அடைந்தது - என்ன இருக்கிறது பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன், இந்த தடவைதான் புத்தகத்தினுள் என்னால் நுழைய முடிந்தது.
நாவலின் மையப்பாத்திரம் கா. அவன் ஒரு பிரபல துருக்கிய கவிஞன். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வெளியேறியவன் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக துருக்கி திரும்புகிறான். அங்கு சந்திக்கும் பழைய நண்பன் மூலம் அவன் கல்லூரி நாட்களில் காதலித்த இபேக் இப்பொழுது விவாகரத்து செய்துவிட்டாள் என்றும் தனியாக இருக்கிறாள் என்றும் கேள்வி படுகிறான். இதை அடுத்து அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காவின் மனதை ஆட்டிப் படைக்கிறது. துருக்கியின் எல்லைப் பகுதியில் உள்ள கர்ஸ் நகரை நகரை நோக்கி பஸ்ஸில் கிளம்புகிறான். தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாதவன் கா, அவன் சந்தோஷத்தைத் தேடி கர்ஸ் திரும்புகிறான். அங்கே அவன் காதலித்த பெண் இருக்கிறாள். அவள் பெயர் இபெக். இபெக்கின் காதலைக் கொண்டு தன் வாழ்வில் மகிழ்ச்சியைத் திரும்ப பெற ஆசைப்படுகிறான் கா.
இபெக் ஒரு அழகான பெண். கா அவளுடன் தன் கல்லூரி நாட்களிலேயே நெருங்கிப் பழகியிருக்கிறான். தன் காதலை அவளுக்குச் சொல்வதற்கு முன்னமேயே அவனது நண்பன் ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்ட இபெக் இப்போது தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக இருக்கிறாள். அவளைச் சந்திக்க வேண்டும், அப்புறம் தான் வாழும் பிராங்ஃபர்ட்டுக்கு அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், என்ற எளிய திட்டம்தான் காவை கர்ஸ் நகருக்குக் கொண்டு செல்கிறது. அதனாலேயே அவன் அவள் இருக்கும் கர்ஸ் நகருக்குப் பயணமும் செய்கிறான். அங்கு இளம் பெண்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது குறித்தும், அந்நகர மேயர் தெர்தல்களைக் குறித்தும் செய்தி சேகரித்து ஒரு பத்திரிகையில் கட்டுரைகள் எழுதவிருக்கும் நிருபர் என்ற போர்வையில் கர்ஸ் நகரை நோக்கிப் பயணிக்கிறான் அவன்.
கர்ஸ் நகரம் நீண்ட வரலாறு கொண்டது. அதை ஆட்டோமான்கள், ஆர்மீனியர்கள், ரஷ்யர்கள் என்று பல்வேறு தேசத்தினர் படையெடுத்து வென்று ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சியின் நினைவாகத் தங்கள் பாணி கட்டிடங்களையும் சாட்சிக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். தான் தன் சிறு வயதில் கர்ஸ் நகருக்குச் சென்றபொது அங்கு கண்ட காட்சிகளின் நினைவுகள் இப்போதுள்ள கர்ஸ் நகரின் தோற்றத்துக்கு மாறாக இருப்பதை நாற்பதுகளில் இருக்கும் அவன் பார்க்கிறான். காவின் வயது நாவலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவனைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை வைத்து அவனது வயது நாற்பதையொட்டி இருக்கலாம் என்று யூகிக்கிறேன். அது இப்போது பொலிவிழந்து போய் விட்டதை அவன் கவனிக்கிறான், ஏழ்மை நிறைந்த ஊராக மாறிவிட்டது, அதை மத அடிப்படைவாதம் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.
பாமுக்கின் உயிரோட்டமுள்ள அற்புதமான விவரணைகள் கர்ஸ் நகரை நம் மனக்கண்ணின்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்த நாவலைப் படித்துக் கொண்டிர்ந்த நாட்களில் ஒரு நாள் இரவு கர்ஸ் நகரின் சாலைகளில் நானேகூட அலைந்து கொண்டிருப்பதாக எனக்கு ஒரு கனவு வந்தது! இந்த நகரில் தங்கியிருக்கும் கா, அந்த மூன்று நாட்களில் உச்ச உணர்ச்சிகளைக் கொடுக்கும் அனுபவங்களுக்கு ஆட்படுகிறான். அவன் தன் காதலியைச் சந்திக்கிறான், தன்னோடு சேர்ந்து வாழ அவளது சம்மதத்தைப் பெறுகிறான், தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கிறான், சமயம் சார்ந்த பல்வேறு அனுபவங்களை எதிர்கொள்கிறான், ஒரு தீவிரவாதியைச் சந்திக்கிறான், அங்கு ராணுவப் புரட்சி ஏற்படுவதையும் நேரடியாகப் பார்க்கிறான்.
எர்ஜூரம்' என்ற துருக்கிய நகரை விட்டு பஸ்ஸில் கா கிளம்புவதாக நாவல் துவங்குகிறது. அவன் ஒரு குளிர் நாளன்று தன் பயணத்தைத் துவங்குகிறான், பஸ்ஸின் பயணத்தில் அவனை பனிப்புயல்கள் தொடர்கின்றன. இந்தப் பனிப்புயல்கள் நம் கற்பனையை உடனடியாகக் கைப்பற்றிவிடுகின்றன. பாமுக்கின் வர்ணனையில் காவுடன் நாமும் பஸ்ஸில் அவனுக்கு அருகில் அமர்ந்து பயணிப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது. ஒரு முறை நான் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு இரவுப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர்தான் மிகப்பெரிய ஒரு மண்சரிவில் குன்னூர் - ஊட்டி சாலையின் சில ஹேர்பின் வளைவுகளும் சில பயணிகளும் காணாமல் போயிருந்தனர். கோத்தகிரி சாலையும் மண் சரிவுகளுக்கு பெயர் பெற்றது. பஸ் மலைமீது ஏற ஆரம்பித்ததும், பஸ்ஸின் என்ஜின் சப்தத்தைத் தவிர உள்ளே ஒரு சப்தமில்லை. அனைவரும் விழித்திருந்தோம், ஆனால் மௌனமாக இருந்தோம். நாங்கள் அனைவரும் பயணம் செய்தாக வேண்டிய அவசியத்தில் வந்திருந்தோம், ஆனால் வராமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் எங்கள் நினைப்பாக இருந்திருக்கும். எந்நேரமும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் பூதாகரமாக இருந்தது. எர்ஜூரம் நகரிலிருந்து கர்ஸ் நோக்கி பனிப்புயல்கள் ஊடாக கா பஸ்ஸில் பயணித்ததைப் படிக்கும்போது அந்த ஊட்டி பயணத்தின் அச்சத்தை நான் திரும்பவும் உணர்ந்தேன்.
முழு நாவலும் விறுவிறுப்பாக இருந்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் பல விவரணைகள் பிரமாதமாக இருக்கின்றன, சில சிந்தனைகள் நம் அறிவை எழுப்பி சிந்திக்கும் உற்சாகம் தருகின்றன. தனிப்பட்ட முறையில், என்னை பாமுக்கின் உயிர்ப்புள்ள விவரணைகள் மிகவும் கவர்கின்றன. நம்மால் பனிக்காலத்தைக் கற்பனை செய்து கொள்ள முடியும், ஆனால் குளிரின் தொடுகையை, அந்தச் சில்லிப்பின் உணர்வை வார்த்தைகளைக் கொண்டு நான் உணர்ந்தது இதுதான் முதல் தடவை. கா இபெக்கைக் கலவியில் கூடுவதை வாசிக்கும்போது, பாமுக் விவரிக்கும் பெண்ணைத் தொடும் உணர்வை என் உடல் பெற்றது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உட்பட இம்மாதிரியான கூடல்கள் பற்றி பல கதைகளில் பல விவரணைகளைப் படித்திருக்கிறேன், ஆனால் ஒரு பாத்திரத்தை இவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது இதுவே முதல் தடவை. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன், ஆனால் சொல்லாமல் இருப்பது இந்த நாவலுக்கு நியாயம் செய்வதாக இருக்காது என்று தோன்றுகிறது. அதற்காக இந்த மாதிரி நாவல் முழுதும் இருக்கும் என்று நம்பி தவறான காரணங்களுக்காக ஸ்னோவைப் படிக்க வேண்டாம், பயங்கரமாக ஏமாந்து போவீர்கள். ஒர்ஹான் பாமுக்குக்குக் கதை சொல்லலில் ஒரு தனிப்பாணி இருக்கிறது என்பதைதான் சொல்ல வந்தேன்.
அப்புறம் கதை என்று என்ன சொல்லலாம்? ஏராளமான திருப்பங்கள், சிலவற்றை நாம் எதிர்பார்க்க முடிகிறது, சிலவற்றை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது - படைப்பாளிக்கு என்று ஒரு சுதந்திரம் இருக்கிறது அல்லவா, அவர் எழுதுவதை நாம் ஏற்றுக் கொண்டாகதான் வேண்டும். நீங்கள் உங்கள் காதலியைத் தேடி ஒரு ஊருக்குப் போகிறீர்கள், அவளைச் சந்திக்கிறீர்கள், இஸ்லாமிய மத மாணவர்களை சந்திக்கிறிர்கள், ஒரு கொலைக்கு சாட்சியாகிறீர்கள், ஆன்மிகத் தலைவர் ஒருவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது, தீவிரவாதி ஒருவனைச் சந்திக்கிறீர்கள், நாடகமொன்றைப் பார்க்கப் போகிறீர்கள், அதன் முடிவில் ராணுவப் புரட்சி நடக்கிறது, வீட்டுக்கு வந்ததும் உங்கள் காதலியுடன் உடலுறவு கொள்கிறீர்கள், அதற்கப்புறம் அவள் உங்கள் காதலை ஏற்றுக் கொண்டு உங்களுடன் உங்கள் ஊருக்கு வரச் சம்மதிக்கிறாள், ராணுவப் புரட்சி செய்தவர்கள் உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், மீண்டும் கலவி, மீண்டும் நாடகம். பின் கர்ஸ் நகரைப் பிரிகிறிர்கள்.
ஸ்னோ நாவலின் முடிவில் கா தன் எல்லா அனுபவங்களையும் கர்ஸ் நகரில் விட்டுச் செல்கிறான். ஆனால் நம்மால் நம் அனுபவங்களை புத்தகத்தோடு விட்டுச் செல்ல முடிவதில்லை. படித்துப் பாருங்கள்.
Snow [Paperback]
Orhan Pamuk
Publisher: Faber And Faber (penguin India) (2004)
வகை : நாவல்
விலை : ரூ.301
.
.
.
No comments:
Post a Comment