சிறப்பு பதிவர் - கிருஷ்ணகுமார் ஆதவன்
ஆடு மேய்க்கும் இடையனான சிறுவன் சந்தியாகு, புதையலிருக்கும் பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணம் நாவலின் கதைக் கரு. இடையிடையில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிலப்பரப்புகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவனது பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கின்றன. பயண முடிவில் சடுதியில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பௌலோ கொய்லோவின் சிறந்த நாவல்களில் ஒன்று இது. உலக அளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றும்கூட. பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். ரஸவாதி - அடிப்படையில் ஒரு தத்துவார்த்தமான நாவலாக இருந்தாலும் மீயதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையைக் கொண்டுள்ளது. கதையின் மையத்தில் உள்ள தத்துவம் படிம அமைவிலான சுட்டலாய் ஆங்காங்கே பேசப்படுகிறது.

