நண்பர் எஸ். சுரேஷ் முன்னொரு மதிப்பீட்டில் இப்படி எழுதினார் : "ஒரு கொலை வழக்கின் விடையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, ஸ்காட்லாந்தின் அழகைக் கண்டுபிடிப்பதும்தான் நாவலின் கருப்பொருள். பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட விவரணைகளால் தான் அறியாத இடங்களுக்கும் வாசகர் கொண்டு செல்லப்படுகிறார் - நாவலின் முடிவில், ஸ்காட்லாந்துடன் தனக்கு நெருங்கிய ஒரு பந்தம் இருப்பதான உணர்வு வாசகரின் மனதில் ஏற்பட்டுவிடுகிறது. சிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தே அவர்களில் ஒருவர்."
இதைப் படித்ததிலிருந்தே தே (Josephine Tey) எப்படி எழுதுவார் என்ன என்று அறிந்து கொள்ள ஒரு ஆர்வம் வந்து விட்டது - எனவே அவரது The Daughter of Time கிடைத்தபோது மறுயோசனையின்றி படிக்க எடுத்துக் கொண்டுவிட்டேன். தே ஏமாற்றவில்லை என்பது மட்டுமல்ல, இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லுவேன். பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு, விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள். இத்தனைக்கும் இது நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரிட்டிஷ் அரசர்களைப் பற்றிய கதை. அதுவும் ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய அரதப்பழசான ராஜா ஒருவன் மீது பிரிட்டிஷ் வரலாற்றில் பதியப்பட்ட அவதூறுகளை மறுத்து, அவன் நல்லவன் என்று நிறுவும் கதை. அதிலும் இது சீரியஸ் கதைகூட இல்லை - ஒரு திருடனைத் துரத்திக் கொண்டு ஓடும் இன்ஸ்பெக்டர் ஆலன் கிராண்ட் ஒரு பாதாள அறைக்குள் தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்; அதன்பின் மருத்துவமனையில் படுத்தபடியே தன் புலன் விசாரணையை நடத்தி நடந்தது என்ன என்ற உண்மையை அவன் கண்டுபிடிப்பதாகச் செல்கிறது கதை.
இருந்தாலும், இது இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று.
The Daughter of Time வாசிக்க சுலபமாக இருக்கிறது, கொஞ்சம்கூட தொய்வு இல்லை. ஆரம்பத்திலேயே இதன் நாயகன் மூன்றாம் ரிச்சர்ட் மீது ஒரு பரிவை ஏற்படுத்தி விடுகிறார் தே. அது போதாதென்று அவர் மீதுள்ள அவதூறுகள் ஆதாரமற்றவை என்ற உணர்வையும் கொடுத்து விடுகிறார். அதன்பின் புதிரின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும்போது நாம் நினைத்த இடத்தை நெருங்கும் சந்தோஷத்துடன்தான் கதையைப் படிக்கிறோம்.
அடுத்தபடியாக, மூன்றாம் ரிச்சர்டின் குற்றமின்மையை நிருபிக்க அவர் கையாளும் ஆதாரங்கள் அனைத்துமே உண்மையானவை என்றும் நம்மை நம்பச் செய்கிறார். அதாவது கதைக்காக உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் அல்ல, இவை வரலாற்றுத் தரவுகள், பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட ஆதாரங்கள் என்ற உணர்வைத் தருகிறார். எந்த இடத்திலும் அதீதமான கற்பனைக்கு இடம் கொடுப்பதில்லை - நடந்தது நடந்தபடியே என்று சொல்லும்படியான எழுத்து. முடிவிலும்கூட, இது ஏதோ தானே கண்டுபிடித்த உண்மை என்ற தொனி வராமல் பார்த்துக் கொள்கிறார். இதற்குமுன் மூன்றாம் ரிச்சர்டுக்கு ஆதரவாக எழுதியவர்களின் பெயர்களைக் கதையில், கதாபாத்திரங்கள் வாயிலாகக் குறிப்பிடுகிறார். இது சாதாரண விஷயம் அல்ல - இங்கு சுட்டப்படும் புத்தகங்களின் ஆதாரத்தைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்டே இந்தக் கதை எழுதப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், இன்ஸ்பெக்டர் கிராண்ட்டைக் கொண்டு தே செய்திருப்பது ஒரிஜினல் ஆய்வு என்றும் மற்ற புத்தகங்கள் பிற்சேர்க்கைகள் என்றும் நாம் நம்பத் தலைப்படுகிறோம். இது புனைவுக்கு, அதன் செய்நேர்த்திக்கு ஒரு மாபெரும் வெற்றி.
கதையில் ஆங்காங்கே சின்னச் சின்ன பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் கதையின் தேவைகளுக்கப்பால் தனித்தன்மை கொண்டவர்களாக, நிகழ்வுகளும் எழுத்தாள அவதானிப்புகளும் தனித்தன்மை கொண்டவையாக, இருக்கும் வகையில் எழுதுபவர்கள் வெகுச் சிலரே - தே இந்த மாதிரியானவர். கதையில் வரும் ரொம்பச் சின்ன பாத்திரமும் மனதில் நிற்கும்படி ஏதாவது செய்கிறார், அல்லது சொல்கிறார், அல்லது விவரிக்கப்படுகிறார்.
கடைசியாக. என்றாலும் முக்கியமாக.
ஜோசபைன் தே வரலாற்றாய்வாளர்களைக் கடுமையாக விமரிசிக்கிறார். எந்த ஒரு சம்பவத்தின் சாயலையும்கூட அறியக்கூடிய திறமையற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள், ஒரு சாவித்துவாரத்தின் வழியாகக் காணும் காட்சியாக வரலாற்றைப் பார்க்கிறார்கள் - தொலைதூரப் பின்னணியில் இரட்டைப் பரிமாண உருவங்களைப் பார்ப்பது போல, என்று கிராண்ட் சொன்னால், "நைந்துபோன ஆவணங்களைக் கட்டி அழுது கொண்டிருந்தால் மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள நேரமிருக்காது போல. ஆவணங்களில் உள்ள மனிதர்களைச் சொல்லவில்லை, சாதாரண மனிதர்களைச் சொல்கிறேன். ரத்தமும் சதையுமாக நடமாடும் மனிதர்கள் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற புரிதல்," இல்லாதவர்கள் வரலாற்றாய்வாளர்கள் என்று இன்னொரு பாத்திரம் பதில் சொல்லும்போது தே'வுக்கு அவர்கள் மீது ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று தோன்றுகிறது. வரலாற்றை எழுதுபவர்கள் மனித இயல்பே தெரியாதவர்கள் என்பது மிகக் கடுமையான குற்றச்சாட்டு.
வரலாறு பயில்பவர்கள் உளவியல் வகுப்புகளில் தேர்ச்சி பெறாமல் எழுத அனுமதிக்கப்படக்கூடாது என்று கிராண்ட் வாயிலாக தே சொல்லிவிட்டு இன்னும் மோசமாக அவர்களைக் கண்டனம் செய்கிறார். கிராண்ட் சொன்னதற்கு பதிலாக, "அதனால் அவர்களுக்குப் பிரயோசனமிருக்காது. மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பவர்கள் வரலாறு எழுதிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் நாவல்கள் எழுதுவார்கள், அல்லது ஆவி ஆராய்ச்சி செய்வார்கள், அல்லது மாஜிஸ்ட்ரேட் ஆவார்கள்... " என்று கிராண்டின் சகா சொல்லிக் கொண்டே போகிறார். கிராண்டோ, பித்தலாட்டம் செய்பவர்களாகவோ ஜோசியக்காரர்களாகவோ ஆவார்கள் என்கிறார்- மனிதர்களைப் புரிந்து கொண்டவனுக்கு வரலாறு எழுதுவதில் ஆர்வம் இருக்காது. வரலாறு என்பது பொம்மைகளைக் கொண்டு சண்டை போடுவது. தட்டையான பரப்பில் குட்டிப் பொம்மைகளை நகர்த்தி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விமரிசனம் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் - இரண்டு நாட்கள் முன்னர் வரை.
மனிதர்களின் இயல்பு எப்படி, இந்த இயல்பு உள்ளவன் இப்படி செய்வானா மாட்டானா என்ற எந்த யோசனையும் இல்லாமல் தகவல்கள் இருக்கின்றன என்று ஒவ்வொன்றையும் கோர்த்து ஒரு அபத்த சித்திரத்தை உருவாக்கி அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அதை வரலாறாக்குவதைத்தான் தே இப்படி கண்டிக்கிறார் என்று பொதுப்படையாக நினைத்துக் கொண்டிருந்தேன் - நாவலில் அவரே இது போன்ற சமகால, அந்த ஊர்க்காரர்கள் அனைவரும் அறிந்த நிகழ்வுகள் அபத்த வரலாறானதைச் சொல்கிறார், ஆனால் எதுவுமே நம் வீட்டு வாசலில் நடந்தால்தான் நமக்கு நம்பிக்கை வருமல்லவா?
நேற்று ஒரு நண்பர் மிகுந்த மனவேதனையுடன் இணையத்தில் காந்தி குறித்து எழுதப்பட்ட ஒரு அவதூறை எனக்கு மெயில் செய்திருந்தார் - காந்தி பிறந்தது முதல் சாகும்வரை செல்வத்தில் புரண்டு கொண்டிருந்தார் என்று மிகச் சாமர்த்தியமாக, சொல்லாமல் சொல்லியிருந்தார் வேறொரு நண்பர். காந்தியே இளமையில் தான் எதிர்கொண்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அவ்வளவு எழுதியிருக்கிறாரே, இவர் என்ன இப்படி சொல்கிறார் என்று கூகுள் செய்து பார்த்தேன்.எல்லாருமே காந்தி ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றுதான் எழுதியிருக்கிறார்கள், காந்தி தன் சுயசரிதையில் சொன்னதை எழுதிய எந்த வரலாற்று ஆய்வாளரும் படித்ததாகத் தெரியவில்லை!
நடப்பு நிலவரமே இப்படி இருக்கிறது, நேற்று வரை யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடீரென்று துளிர்த்த நம்பிக்கையில் காந்தியைத் தேடித் தேடி ஏன் இப்படி அடிக்க மாட்டார்கள்? எதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடும் என்ற வரலாற்றுப் படிப்பினை நம் கண்முன் இருக்கிறது - நாளை காந்தி தன் கோவணத்துக்குள் கோட் சூட் அணிந்திருந்தார் என்றும் எழுதுவார்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவுஜீவிகள்.
தே எழுதிய Daughter of Time, "Truth is the Daughter of Time" என்ற 'விவிலிய வாக்கை' மேற்கோள் காட்டித் துவங்குகிறது. ஐநூறு ஆண்டுகளாக வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட ஒரு அரசனுக்கு நியாயம் வழங்க முற்பட்டிருக்கிறார் இந்த நாவலில். இதில் அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, புனைவையும் தாண்டி வரலாறு குறித்த இவரது கருத்துகள் முக்கியமானவை. ஒரு த்ரில்லரைக் கொண்டு மிக சுவாரசியமாக தன் உண்மைகளை உணர்த்தியிருக்கிறார் தே. என்றும் பழசாகிப் போகாத புத்துயிர்ப்பைத் தன்னுள் கொண்ட கதை இது - திரும்பத் திரும்பப் பேசிப் பழகிப் போன பொய்களைக் கலைக்கச் சொல்வதால்.
The Daughter of Time, Josephine Tey,
Arrow Books (1951)
புகைப்பட உதவி : Stewartry
No comments:
Post a Comment