பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
காரின் ஃபோஸ்சுவின் "Black Seconds' நாவலின் பின்னட்டை வாசகம், பத்தே வயதான ஒரு பெண் காணாமல் போவதைப் பற்றிய கதை இது, என்று சொல்கிறது - சிறு குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் உலகை விவரித்தாலும் வழக்கமான மர்ம நாவல்களின் பாதையில்தான் இதுவும் பயணிக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் ஃபோஸ்சுவின் கதை வழக்கமான தடத்தில் செல்லவில்லை, மாறாக மிகவும் நிறைவளிக்கும் மாற்றுப் பாதையொன்றினுள் நுழைகிறது.
பின்னட்டை வாசகம் சொன்னபடிதான் கதை துவங்குகிறது - இன்னும் பத்து நாட்களில் பத்தாம் வயது பிறந்த நாள் கொண்டாடப்போகிற ஐடா, தன் அம்மாவுக்கு டாட்டா காட்டி கையசைத்தபடியே சில இனிப்புகள் வாங்கிக் வர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஊரின் மையப்பகுதியை நோக்கிச் செல்கிறாள். மாலை இரவாகிறது, மகள் திரும்பி வருவதில்லை. அவளது நண்பர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள் அம்மா, ஆனால் ஐடா இந்த நண்பர்கள் எவர் வீட்டிற்கும் செல்லவில்லை. அதன் பின் தனது இளைய சகோதரியை அழைக்கிறாள். இருவரும் ஐடா எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளா என்று காரோட்டிக் கொண்டு தேடிச் செல்கின்றனர். அவள் எங்காவது நேரம் காலம் மறந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வீண் தேடல். கடைசியில் காவல்துறையை உதவிக்கு அழைக்கிறார்கள். இதையடுத்து குற்றத்தை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சயிர் இவர்கள் வீட்டுக்கு வந்து தகவல்களைச் சேகரித்துச் செல்கிறார்.
நடந்தது என்ன என்பது பற்றி போலீசுக்கு எதுவும் பிடிபடுவதில்லை. காணாமல் போன சமயத்தில் குழந்தை எங்கிருந்தது என்பதைப் பார்த்தவர்களும் இல்லை. ஐடாவைத் தேடும் காவல் துறைக்கு ஊர் மொத்தமும் உதவி செய்கிறது, ஆனாலும் அவள் எங்கிருக்கிறாள் என்ன ஆனாள் என்பதற்கான தடயம் எதுவும் கிடைப்பதில்லை. சில நாட்கள் சென்றபின் ஊரின் பிரதான சாலையையொட்டிய ஒரு இடத்தில் அவளது பிரேதம் கிடைக்கிறது. அதன்பின் இன்ஸ்பெக்டர் சயிர் ஒவ்வொரு தகவலாகச் சேகரித்து, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகத் துப்பறிந்து கொலைகாரனைக் கைது செய்கிறார்.
நான் சொன்னேன் என்று இந்தக் கதைச்சுருக்கத்தை நம்பி நாவலைப் படித்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள் - நாவலின் கதை நான் சொன்னது போல் இல்லை. அது கொஞ்சம் வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது - கதையின் குவிமையம் பக்கத்துக்கு பக்கம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் ஐடாவின் அம்மாதான் கதையின் மையமாக இருக்கிறாள். மெல்ல மெல்ல அவளது தங்கையை நோக்கி கதையின் கவனம் திரும்புகிறது. அதன்பின், பேச்சு வராத இமீலைச் சுற்றி கதை சொல்லப்படுகிறது. இவ்வளவு நேரமும் போலீஸ்கார சாங்கியங்கள் (police procedurals) கதையின் பின்னணியில் நடந்தபடி இருக்கின்றன - இவற்றுக்கு கதையில் அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. கதை முடிவுக்கு வரும்போதுதான் போலீஸ்காரர்களின் சாகசங்களும் ஆரம்பிக்கின்றன, அப்புறம் மிக அருமையாகச் செயல்பட்டு மர்மத்தையும் முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். அதுவரை நாவலின் குவிமையமாக இந்த மூன்று குடும்பங்களுமே இருக்கின்றன. இந்த் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஒன்றையொன்று ஊடுருவுவதுதான் கதையின் ஆதாரமாக இருக்கிறது.
ஃபோஸ்சு உயிருள்ள, சுவையான பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். குறிப்பாக இமீலும் அவனது அம்மாவும் நம் மனதைக் கவர்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உண்மையான மனிதர்கள் என்று நம்பும்படியான உயிரோட்டம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குற்றத்தையும் அதன் விசாரணையையும் விவரிப்பதில் காரின் ஃபோஸ்சுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவு ஆர்வம் இதிலுள்ள பல்வேறு பாத்திரங்களின் உள அமைப்பை விவரிப்பதிலும் இருக்கிறது. இந்த இரண்டையும் அவர் மிகுந்த தேர்ச்சியுடன் சமன் செய்தபடி கதையைக் கொண்டு செல்கிறார் - ஒன்றுக்குரிய முக்கியத்துவத்தை மற்றொன்று எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வாசகரின் கவனம் கதையை அறுபடாது தொடர்கிறது.
படகொன்றில் டொம்மவும் வில்லியும் எதிர்கொள்ளும் அசம்பாவிதமொன்றைப் போன்ற சம்பவங்களை ஃபோஸ்சு விவரிக்கும் விதம் நம்மை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன. இமீலின் அம்மாவை விசாரிப்பதில் சிமெனொவின் பாணி நிறையவே தென்படுகிறது, உண்மையைக் கண்டறிவதற்காக சயீர் இமீலுடன் பழகுவது மிகவும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
மேலோட்டமான பார்வையில் இந்த நாவல் ஒரு த்ரில்லர் போல் இருக்கலாம், ஆனால் இதன் உணர்வாழத்தில் கதை தாய்மையைப் பேசுவதாக இருக்கிறது. நாவலின் பக்கங்கள் ஹெல்கா, ரூத், எல்சா என்ற மூன்று அம்மாக்களின் கதைகளைச் சொல்கிறது. இந்த நவீன யுகத்திலும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்காகக் கவலைப்படுவதே நாவலின் அடிநாதமாக இருக்கிறது.
ஒரு அம்மா தன் சின்னஞ்சிறு மகளுக்காகக் கவலைப்படுகிறாள், அந்நியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று கற்றுத் தருகிறாள், தன் குழந்தை இந்த உலகைத் தன்னந்தனியளாய் எதிர்கொள்ள வேண்டிய கணங்களும் நேரிடும் எனபதை அவர் அறிந்திருக்கிறார் - தன்னாலான அளவு மகளை ஆயத்தப்படுத்துகிறார்.
மற்றொரு தாய் தன் பதினெட்டு வயது மகனைக் குறித்து கவலைப்படுகிறாள், அவன் நாளுக்கு நாள் சுதந்திரமானவனாக மாறி வருகிறான். இந்தச் சுதந்திரம் அவனைத் தவறான பாதைக்குக் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதே அவளது அச்சமாக இருக்கிறது. அவனது நண்பர்களை நினைத்து அவள் கவலைப்படுகிறாள், 'கெட்ட' நண்பர்களின் தாக்கத்தில் தன் மகனும் கெட்டுப்போய்விடக் கூடாது என்று அவள் அஞ்சுகிறாள்.
மூன்றாவது தாய்க்கோ தன் மகன் ஒரு சுமையாக இருக்கிறான் - பேச்சு வராதவன், சமூகத்தில் நாலு பேருடன் பழகாமல் தனியாக இருப்பவன். இவளுக்கு வயதாகிவிட்டாலும், தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்கிறாள், அவனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறாள்.
மிகச் சுலபமாக இது இருண்மை நிறைந்த நாவலாக மாறியிருக்கக்கூடும். ஆனாலும் காரின் ஃபோஸ்சு தன் பாத்திரங்களை அவ்வளவு நுட்பமான நுண்ணுணர்வோடு படைத்திருக்கிறார் - துயர் தோய்ந்ததாக இல்லாமல், நம்மை ஒளியால் நிறைக்கிறது இந்த நாவல். ஏனென்றால் இது குற்றத்தைப் பற்றிய கதையல்ல, துப்பறியும் கதை மட்டுமல்ல - ஏன், கதை முடிவதற்குமுன் உங்களால் எல்லாவற்றையும் ஊகித்துவிடக்கூட முடியும். உண்மையில் நாவலின் நோக்கம் நடந்த குற்றத்தைக் க்ண்டுபிடிப்பதல்ல. ஒரு குற்றம் நிகழும்போது அது மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதைச் சொல்வதுதான் நாவலின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
காரின் ஃபோஸ்சுவின் கூறுமொழி ஸ்காண்டிநேவிய போலீஸ் சாங்கியத்துக்கும் சிமெனொவின் உளப்பகுப்பு நாவல்களுக்கும் இடைப்பட்ட கலப்பாக இருக்கிறது. இந்தக் கலவை காரின் ஃபோஸ்சுவுக்கு தனித்துவமான குரலைக் கொடுப்பதாக இருக்கிறது. மர்மக்கதைகளையும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனைவுகளையும் விரும்பி வாசிப்பவர்கள் ‘Black Seconds’ நாவலை ஒரு அருமையான இணைப்பாகத் தங்கள் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.
Black Seconds, Karin Fossum
Flipkart, Amazon
Image Credit : Books to the Ceiling
Black Seconds, Karin Fossum
Flipkart, Amazon
Image Credit : Books to the Ceiling
கதை விமர்சனம் வாசிப்பிற்கு தூண்டுதலாக அமைகிறது.
ReplyDeleteநன்றி!
Delete