பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
பலமுறை ஜப்பானுக்கு சென்று வந்தவன் என்ற முறையில், இந்த நாவலில் என்னை வசீகரித்த முதல் விஷயம் ஜப்பானில் பிக்பாக்கெட்டுகள் இருக்கிறார்கள் என்ற தகவல்தான். மிக நெரிசலான ரயில் பயணங்களில்கூட என் பாக்கெட்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று நான் கவலைப்பட்டதில்லை. ஜப்பான் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கிறது. இதுவரை என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியாக எதுவும் நடக்கவுமில்லை. எனவேதான் ஒரு ஜேப்படி திருடனை நாயகனாகக் கொண்ட ஃபூமிமோரி நகமுராவின் "The Thief" நாவலைப் படிப்பது ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்தது.
இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தானோ தெரியாது, நிஷிமுரா டோக்கியோவுக்குத் திரும்புகிறான். அவன் அங்கு தனக்கு நன்றாகத் தெரிந்த தொழிலைத் தொடர்கிறான் - பிக்பாக்கெட் அடிப்பது. நிஷிமுராவுக்கே தான் ஏன் டோக்கியோவுக்குத் திரும்ப வந்தோம் என்று குழப்பமாக இருக்கிறது - அவன் தன் தொழிலைத் தொடர்வதர்காகத் திரும்பி வருகிறானா, அல்லது ஒரு காலத்தில் தனக்கு ஆசானாகவும் நண்பனாகவும் இருந்தவன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்கத் திரும்புகிறானா? திரும்பிய நோக்கம் எதுவாக இருந்தாலும், இப்போது கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் கடந்த காலம் சமகால நிகழ்வுகளைக் கைப்பற்றிக் கொள்கிறது - இதனால் நிஷிமுரா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாகிறது.
பல நாடுகளிலும் உள்ள இன்னொரு வகை கிரிமினல் செயல்பாட்டை இந்த நாவல் பேசுகிறது - அரசியல் பெருந்தலைகளின் ஆதரவுடன் அவர்களுக்காக வேலை செய்யும் முகம் தெரியாத மாஃபியா. சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்பவர்கள் இந்த மாஃபியாக்களால் தங்கள் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்போதுதான் இந்த நாவலின் முதுகைச் சில்லிட வைக்கும் கணங்களையும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளையும் நாம் சந்திக்கிறோம்.
பாலியல் தொழிலாளி ஒருவர் சிறுவனாக இருக்கும் தன் மகனை ஜேப்படித் திருட்டுக்குப் பழக்கி வளர்ப்பது நாவலின் ஆகச்சிறந்த ஒரு மானுடத் தருணம். நிஷிமுரா இந்தச் சிறுவன் திருடுவதை கவனிக்கிறான், அவன் தப்பிச் செல்ல உதவுகிறான். அதன்பின் இருவருக்குமிடையே ஒரு வினோதமான பிணைப்பு ஏற்படுகிறது - இதன் விளைவாக நிஷிமுரா தன் ஆற்றல்கள் அனைத்தையும் அவனும் தன்னைப் போலாகி விடக்கூடாது என்று அவனைக் காக்கவே செலவிடுகிறான்.
நகமுராவின் நடை மிகவும் இறுக்கமானது. கதை முழுதும் சஸ்பென்ஸ் தொய்வின்றி வளர்கிறது. ஜேப்படித் திருடர்கள் எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்ற விவரணைகளைச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். பிக்பாக்கெட் அடிப்பது எப்படி என்று செய்முறைக் கையேடு ஒன்றையே எழுதிவிட்டார் என்பது போலிருக்கிறது இந்த நாவலைப் படிக்கும்போது. ஒரு திருடன் தனியாக வேலை செய்யும்போது எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறான், இருவராக ஜோடி சேர்ந்து வேலை செய்யும்போது என்ன உத்தியைப் பயன்படுத்துகிறார்கள், காமிராக்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு எப்படி சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்களைத் திருடுகிறார்கள் என்றும் இன்னும் பலவும் விவரமாக விவரிக்கப்படுகின்றன.
ஆனால் இவரது எழுத்தின் சிறந்த பகுதிகள் மாஃபியா தலைவனின் விவரணைகளில் இருக்கின்றன. மாஃபியாக்கள் திட்டமிட்டு செயல்படுவது எப்படி என்ற விவரங்கள் அருமையாகச் சொல்லப்படுகின்றன. குற்றவாளிகளின் குழப்பம் நிறைந்த நிழலுலகம் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, அந்த அத்தியாயங்களில் உள்ள யதார்த்தம் ஒரு மாதிரி கனவு போன்ற ஒரு தன்மை கொண்டதாக இருக்கிறது. மாஃபியா தலைவனுக்கும் நிஷிமுராவுகுமிடையே நிகழும் உரையாடல் சில்லறைத் திருடர்கள் எப்படி மகா திருடர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அற்புதமாகச் சித்தரிக்கிறது.
நடப்பது அத்தனையும் சுவாரசியமாக நகமுராவால் சொல்லப்படுகிறது. என்றாலும், கதையில் திருப்பம் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லாததுதான் இந்த நாவலைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க ஒரே ஏமாற்றமாக இருக்கிறது. முடிவு எப்படி என்று நாமே தீர்மானித்துக் கொள்ளும்படி கதை முடிவுக்கு வருகிறது என்பதைச் சொல்ல வேண்டும், ஆனால் கதைக்கு தீர்மானமான முடிவு ஏற்படாதது கதையில் நமக்குக் கிடைக்கும் நிறைவை பாதிக்கிறது. இந்த நாவலில் பாராட்டத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன - இதில் உயிர்பெறும் சூழல், தொய்வில்லாமல் சொல்லப்படும் கதை, மனதை நெகிழ வைக்கும் பல நிகழ்வுகள்... ஆனால் ஒரு குற்ற புனைவு என்றால் அதன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று என்று ஆச்சரியமான, ஆனால் அதிர வைக்கும் முடிவைச் சொல்லலாம் - அப்படி எதிர்பாராத எதிலும் கதை முடியாததால், எவ்வளவோ நன்றாக இருந்திருக்க வேண்டிய கதையை இப்படி எழுதிவிட்டாரே என்ற அங்கலாய்ப்பே கதையின் முடிவுக்கு வரும்போது நம் உணர்வாக இருக்கிறது.
The Thief, Fuminori Nakamura,
Soho Press (January 15, 2013),
புகைப்பட உதவி - International Noir Fiction
No comments:
Post a Comment